Everyone has a end-tip on the Mayarope | CJ

Everyone has a end-tip on the Mayarope

Everyone has a end-tip on the Mayarope


மாயக்கயிறு



நாம் எல்லோருமே ஒரு மாயக்கயிறால் இணைந்திருப்பதை அறியமுடியும். ஆனால் அதற்கென்று தனித்தனியான பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக சொல்லுவதன்றால், 

அன்பு
கருணை
பாசம்
காதல்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஓவ்வொரு கயிறின் முனையும் ஓவ்வொரிடமும் இருக்கிறது. இங்கிருந்து நகர்ந்தால் நாம் அந்த மறுமுனையில் இருப்பரிடம் சென்றுவிடலாம், அவர்களோடு மகிழலாம். ஏன்? சண்டைகூட போடலாம்தான். பொதுவாக நாம், மனிதர்களை, மனிதர்களுக்குள்ளாக இணைக்கும் மாயக்கயிறைத்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லது ஏற்றுக்கொண்டிருக்கிறோம். 

இறையோடும் ஒரு மாயக்கயிறு இருக்கிறது. நம்மில் சிலரே அந்த மாயக்கயிற்றின் முனையை பிடித்திருக்கிறார்கள். சிலர் விட்டுவிட்டார்கள். சிலர் மறந்தும் விட்டார்கள். இதென்னய்யா இறை? அப்படியொன்று இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, பதிலும் இருக்கிறது.

இறை என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் பழைய கருத்துக்களை அப்படியே விட்டுவிடுங்கள். இப்பொழுது சொல்வதை புதிதாக கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்து பிறகு ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு அதில் உண்மையிருந்தால்!

இறை என்றால் இறைந்துகிடக்கும் தன்மையான மெய்ப்பொருள். மெய்ப்பொருள் என்று ஏன் சொல்லுகிறோம்?!, இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்ற தகமை கொண்டதாகும். அந்த இறை என்பதற்கு, ஆழத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுதல்  என்று ஒரு அர்த்தமும் கிடைக்கும். ஆக இறை என்றால் உங்களுக்கு எல்லா பக்கங்களிலும் இறைந்து கிடப்பது என்று தெரிகிறது. ஆம் தெரிகிறது, ஆனால் நம்மால்தான் பார்க்கமுடியவில்லை.

ஆகாயத்தை பார்க்கிறீர்கள், அந்த ஆகாயம் என்ற ஒன்று இல்லை என்றால் ஆகாயத்தை பார்க்க முடியாது. ஆனால் அந்த ஆகாயத்திற்கும், உங்களுக்கும் இடையிலே இருப்பது என்ன? சரி காற்று இருக்கிறது, வெப்பம் இருக்கிறது, தூசுகள் இருக்கிறது... இன்னும் சில. அப்போது அவற்றையும் நீக்கிவிட மீதமிருப்பது என்ன? அதுதான் இறைந்து கிடக்கிறது! ஆம் இதைத்தான் நம் கண்களால் காணமுடிவதில்லை. ஆனால் அது நம்மோடு மாயக்கயிற்றால் பிணைக்கப்பட்டுத்தான் இருக்கிறது. கயிற்றையும், அதன் முனையையும் விட்டுவிட்டோம். இங்கே இந்ததளத்தில், அதை பற்றிக்கொள்ளும் ஒருசில வழிகளை, ஆய்வுகளாக காண்போம், எந்த சுவாரஸ்யத்திற்கு குறைவும் இன்றி.

மாயக்கயிறு என்பதை இன்னமும் உதாரணமாக காண்போமா? 

உங்கள்முன் யாரேனும் சிரித்தால், முதலில் அவரொரு பைத்தியம் என்றுதானே நினைப்பீர்கள், ஆனால் கொஞ்சம் நேரம் செல்லச்செல்ல அந்த பைத்தியக்கார சிரிப்பு உங்களையும் தொற்றிக்கொள்ளும்.

உங்கள் மனைவியோ, கணவரோ, நண்பரோ, நெருங்கிய உறவினரோ தன்னுடைய கஷ்டத்தில் அழுதால், இதுவரை கல்நெஞ்சம் என்று பெயர்வாங்கிய நீங்களும் அழுதுவிடுவீர்கள்.

உங்கள் குழந்தையின் குதூகலத்தை கொஞ்ச நேரம் கவனியுங்கள், அந்த மகிழ்ச்சி உங்களையும் தொற்றிக்கொள்ளும்.  

ஆக, இதெல்லாம் மாயக்கயிற்றின் இணைப்பில்லாது நிகழுமா? இது போக இன்னும் எதுவெல்லாம் நிகழும் என்பதை தொடர்ந்துவரும் பதிவுகளில் காண்போமா? வாருங்கள், இணைந்திருங்கள்.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.