CJ

Please explain the Realization of the Consciousness by all ways?


இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

அன்பும் கருணையும் மகிழ்ச்சியும் நிறைவும் வேண்டுமானால் இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.  சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதல்ல என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே.  ஆனால் பருவம் வந்த பின் புற வழிபாட்டிலிருந்து அக வழிபாடு தொடங்க வேண்டும்.  அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கருதவ சாதனை அவசியம் வேண்டும். 

அப்போது தான் மனம் ஒரு சமநிலையிலே இருக்கவும் உயர் நிலையிலே அறிவு இயக்கவும் முடியும்.  இங்கே தான் மனம் அமைதி பெரும்.  எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது. 

அதனை எந்தப் பொருளிலும் எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லைகட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையை பெற முடியாது. பொருளில் இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும்.   அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில் இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்று விட்டுவிட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும். 

மேலும் பரநிலையுணர்வும் அதில் அடங்கி இணைந்து நிலைபெறும் பேறும் கிடைக்காத போது அறிவு தான்-தனது, என்னும் தன்முனைப்பில் உணர்ச்சிவயமாகி புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும் சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும்.  தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்புநிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து நிறைவும் அமைதியும் பெறும்

வாழ்க வளமுடன்.
-

How to understand the pattern, precession and regularity?


தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

உலகம் என்று எடுத்துக்கொண்டால், அதன் அளவு என்ன? இரசாயனங்களில் அளவு என்ன? என்பதனை இன்றுள்ள விஞ்ஞானிகள் ஓரளவிற்கு உணர்ந்துள்ளார்கள். அந்தக் காலத்தில் இருந்தவர்களும் ஓரளவிற்கு இந்தக் கிரகத்தில் இன்னின்ன சக்தி அதிகம் என்று சொல்லியிருக்கிறார்கள். எந்தப் பொருளால் ஒன்று ஆக்கப்பட்டதோ அது அதன் தன்மை. 

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரு சுற்று தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனைச் சுற்றும் பாதையில் மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சென்று 365¼ நாளில் அதை வலம் வருகிறது. இது சிறிதும் காலம் தவறாமல் சரியாக அமையும். இதுவே அதன் துல்லியம். 

இரசாயனப் பொருட்களிலுள்ள நுண்ணணுவின் சுழல் விரைவுக்கேற்ப காந்தத் தன்மாற்ற வேறுபாடுகள் உண்டாகின்றன. அதே விண்துகள்களின் சுழல் விரைவுக்கேற்ப அதன் திணிவும் வடிவமும் அமைகின்றன, இதுவே வடிவம். 

        பரமாணு நிலையிலிருந்து அவை கூடி ஒரு சிறு வடிவமாக மாறி, குறிப்பிட்ட விரைவில் இயங்கும்போது ஏற்பட்டு மாறிக்கொண்டே வரும் ரசாயனத் தன்மைகளும் மற்ற சிறப்புகளும் துல்லியம் அல்லது தன்மைகள் ஆகும். 

இந்த இயக்க நியதி மாறாது. பூமி தன்னுடைய மற்ற இயல்பூக்கத்தையும் நடத்திக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. இச்செயல்பாட்டைத்தான் இயக்க ஒழுங்கு என்கிறோம். இதுவே காலம் அல்லது இயக்கச்சீர்மை ஆகும். 

        பூமி அதிக அளவு சூடு ஆகிவிட்டதென்றால் வெப்பக் குழம்பை “எரிமலை” யாக வெளியேற்றுகின்றது. இது காலத்தால் நடக்கும் இயக்க ஒழுங்காகும். இதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்று குணங்களும் உண்டு. 

ஒரு ரோஜாச்செடியை எடுத்துக் கொண்டால் அதன் இலை, தண்டு இவ்வாறுதான் இருக்கும் என்பது அதன் தன்மை. 

        ஒரு விதையைப் போட்டால் இத்தனை நாட்களில் செடி வளரும். இத்தனை நாட்களில் பூ பூக்கும். அந்தப் பூவை உண்டால் இன்னது ஏற்படும். இது விளைவு. இவை துல்லியம். அது பூத்தவுடன் அதன் இதழ்கள் வாழும் காலம், அது குறிப்பிட்ட காலத்தில் தளர்ச்சியுற்று இலையுதிர்வது, அது இத்தனை நாட்கள்தான் வளரும், வாழும் என்பது, அந்தச் செடியின் முடிவு இவையெல்லாம் காலத்தை ஒட்டி நடைபெறுவது இயக்க ஒழுங்காகும். 

இவ்வாறு ஒவ்வொரு சடப் பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும் அதன் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற முத்தன்மைகளையும் காணலாம். 

வாழ்க வளமுடன்.

-

We are supernatural in evolution but why we are struggle on life by simple things?


மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்தாலும் கூட, வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுவது ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்தாலும் கூட, வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுவது ஏன்?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

இந்த உலகத்தில், பரிணாமத்தின் வழியாக, இறையாற்றலின் தன்மாற்றமாகவே ஜீவனாகி,  மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்து வருகிறோம். என்றாலும் அந்த வாழ்க்கையில், நீங்கள் குறிப்பிட்டதுப்போலவே வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுகிறோம். அதுகுறித்து சிந்திப்போம்.

ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும்  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்?  ஏன் அமைதியான  சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம் ?  ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன்.   நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டு போகிறீர்கள்.  போகும் வழியில் விதவிதமாக பூக்களும் பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன,  அவற்றை வாங்கி பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.  பின்னர் கடைத்தெருவுக்குப் போய் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால் அவற்றை வைக்க பையில் இடமில்லை, பையில் தான் ஏற்கனவே நிரப்பிவிட்டீர்களே!  

இப்போது உங்கள் பிரச்சனை என்ன?  ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு  எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ,  அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா?  அல்லது காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா?  கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.  

ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம்.

வாழ்க வளமுடன்.

-

What kinds of benefit will rise when we greets someone?


மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

யாரும் யாரையும் எளிதில் வாழ்த்திவிட மாட்டார்கள். அதற்கென்று ஒரு நிறைவான மனமும், சூழ்நிலையும் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேலும் ஏதேனும் ஒருவகையில் இரண்டுபேருக்குமான நன்மையும் இருக்க வேண்டும், கிடைத்திருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்போதுதான் அவரை / பிறரை வாழ்த்த முடியும் என்று முடிவும் செய்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படியா கணக்கு போட்டுக் கொண்டு வாழ்த்த வேண்டியதில்லை. 

மனதின் நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் ஏற்படுகின்றது.  ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.  இரண்டு தடவை நாலு தடவை வாழ்த்த வாழ்த்த,  நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடரியக்கம் வந்து விட்டதானால் அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக் கொண்டிருக்கும். அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்தத் தொடர் அறுபடாது இருக்கும்.

அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்.  அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.  எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்.  நல்லவர்களாக மாற்றிவிட முடியும். 

நாம் அந்த அளவு உறுதி பெற்று விட்டால் வாழ்த்துவது பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த மனநிலையிலே அந்த எல்லையிலே அந்த மையத்திலே நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் நாம் நினைக்கும் போதெல்லாம் அது வாழ்த்தாக முடியும்

வாழ்க வளமுடன்.

-

What happening between ourselves and our mind when we practice the meditation?


தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

வெறுமனே தியானம் செய்பவர்களுக்கு, ஏதோ அந்த நேரம் மட்டும் அமைதி கிடைப்பதுபோல தோன்றலாம். எனினும் அது உடனே விலகி எப்போதும்போலவே ஆகிவிடும். தகுந்த குரு வழியாக, குண்டலினி தீட்சைபெற்று, உபதேசம் பெற்று தியானம் செய்யும் பொழுதுதான், உயர்ந்த நன்மைகள் பல நிகழும்.

ஆரம்பத்தில் பத்து நிமிடம் குண்டலினி யோக தவம்  செய்தோமானால் தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான். அது மாத்திரம் இல்லை நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் செய்யும்போது Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலைக்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது சாக்கரம் என்று சொல்லுவார்கள். 

அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம்.  அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம்.  ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல் அப்படி மனம் ஓடாமல் இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஒன்று முதல் மூன்று (1-3 cycle/second) வரையுள்ள டெல்டா அலைக்கு தவத்தின் மூலம் மனதை (Mind Frequency) பழகிக் கொண்டோமானால் பேரியக்க மண்டலம் (Universe) இறை நிலையிலிருந்து தோன்றிய காலம் முதற்கொண்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் அங்கங்கே என்னென்ன நடந்ததோ அவற்றை எல்லாம் உணரக்கூடிய இடத்திற்கு மனம் (Mind) வந்து விடும்.

ஆகையினாலே நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Simplified Kundalini Yoga) செய்கிறபோதே நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும். 

அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் எல்லா அம்சங்களிலும் உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

-

Please explain the truth and secret philosophy of the 'Who Am I?'


‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

‘நான் யார்?’ தன்னையறிதலை புரிந்து கொள்வதல்ல, நாமே நமக்குள்ளாக உணர்ந்து கொள்வதாகும், வார்த்தைகளாலும், விளக்கங்காலும் சொல்லி புரியவைத்தாலும், புரிதல் அறிவு என்ற நிலையில் நமக்குள் உள்வாங்கப்படுமே அன்றி, மெய்யறிவாக கிடைத்துவிடாது. கனியை, சுவைத்து சாப்பிடாமல் கையில் வைத்துக்கொண்டு அதன் சுவையை சொல்லுவது போன்றதாகும் என்பதை விளங்கிக்கொள்க. எனினும் உங்கள் கேள்விக்கான விளக்கம் இதோ!

நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே “நான்” என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் “நான்” என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்று வரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது.  ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே “நான்” எனப்படுவது.

ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்பப் பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. ஆகவே “நான்” பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவப் பரிணாமச் சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்பப் பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்பப் பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே “நான்” என்பதாகும். அரூப நிலையில் ஏகமாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே “நான்” என்பதாகும்.

வாழ்க வளமுடன்

How to control the unwanted thoughts that arise in the mind?


மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது தேவையில்லாதது எல்லாம் மவுனத்தில் உட்காரும் போது வெளியில் வரும்.  இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். 

இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன்,  இவரது பேரில் விரோதம் இருக்கிறது அது தேவைதானா? தேவையில்லை எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது. 

அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும்.  அப்போது மனம் தூய்மையாக இருக்கும்.  மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.

மனம் வெளுக்க மருந்து உண்டு:

வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மவுனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.

எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம்.  அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள்.  பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும். 

மவுன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மவுனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்.

-