The World Community Network
அன்பர்களே,
கேள்வியில் தொடங்குகிறேன்
உங்களிடம், “இப்பொழுது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறேன். உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்பதை ஒரு காகித்தலோ / கைபேசி குறிப்பிலோ எழுதி வைத்துக்கொள்க. இதை நானாக புரிந்துகொண்டவகையில் சில பதில்களை இங்கே தந்து இந்த கட்டுரையை துவங்குகிறேன். அந்த பதில்கள் என்ன?
1) இன்றைய நாளும் பொழுதும் நன்றாக இருக்கிறது
2) ஏன் இன்றைக்கு ஏதோ சோகமாக உணர்கிறேன்?
3) இந்தவேலைக்கு ஏன் வந்தேனோ, ஒரே இம்சையடா!
4) எதிர்பார்த்த மாதிரி பண வரவு இல்லையே என்ன செய்வது?
5) வாங்கிய கடனுக்கான வட்டி ஏறிக்கொண்டே இருக்கே, பிரச்சனை ஆகிடுமோ?
6) கொடுத்த காசை திருப்பித்தராம எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!
7) பூர்வீக வீட்டு பிரச்சனை எப்போதான் தீருமோ தெரியலையே?
8) இந்த சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லியே உயிர் போகுது!
இன்னும் இன்னும், ஆயிரம் மனிதர்களின் பதில்களும் ஒரே மாதிரி இல்லாமல், தனித்தனியாகவே அமைந்திருக்கும். இதுதான் மனிதனின் இயல்பு. ஆணும் பெண்ணும் இருவரும், பொருளாதார வாழ்வில் சமமாக இருக்கும் காலம் இது. எனவே ஆணுக்கு என்னவகையான பிரச்சனைகள் எழுமோ, அதே அளவிலான பிரச்சனைகள் பெண்ணுக்கும் உண்டு.
வேற்றுமையில் ஒற்றுமை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தன்னளவில் இருந்தாலும், உலகம் சுருங்கிய இந்த காலத்தில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். அது சமூகம் தொடர்பானது. சமூகம் என்றால் நீங்கள், உங்கள் இனம், குழு என்று சொல்லுவதற்கில்லை. அதெல்லாம் அந்தக்காலம்.
இப்பொழுது சமூகம் என்றால், இந்த உலகமே சமூகம் என்றாகிவிட்டது. காரணம், எல்லைகளைக் கடந்த தொடர்புகள். ஆம் தகவல் தொடர்பு, இணையம் வழியாகவும், கைபேசி வழியாகவும் இந்த உலகத்தையே ஓர் சமூகமாக மாற்றிவிட்டது. இதனால எண்ணற்ற பயன்கள் உண்டு. அதை நாமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் அந்த அனுபவத்தில் நன்மைகளுக்குப் பதிலாக, நிறைவாக வாழ்வதற்குப் பதிலாக, துன்பத்தையும், நிம்மதி இன்மையையும் அனுபவிக்கிறோமே அது சரியா?
அத்தகைய உலக சமூகம், தகவல் தொடர்பால் தரும் துன்பத்தையும், நிம்மதியின்மையையும், தன்னளவில் தனித்தனியாக பிரச்சனைகளை சந்திக்கும் ஆயிரமாயிரம் மனிதர்கள், ஒருசேர ஒற்றுமையாக ஒரே அளவில் அனுபவிக்கிறார்களே! இது சரியா? இதில் நானுமே ஒருவன், நானும் கூட தப்பிவிடுவதில்லை.
இதில் நல்லது என்ன?
உலகம் சமூகமாகிவிட்டாலும், அங்கே சுயநலமும், தான் என்ற அகங்காரமும், தனது என்ற அதிகாரத்தை அமைக்க விரும்புவதும், குழப்பதை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியை கெடுத்தலும், நாட்டை அபகரித்தலும், எதிரிகளை கூட்டாக அழிக்க விரும்புவதும், அரசை கைபற்ற நினைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேவேளையில் நடக்கும் நல்லது என்ன?
ஆங்காங்கே, மக்கள் ஒன்றுபட்டு நல்ல அரசை அமைக்க விரும்புவதும், தங்கள் பிரச்சனையை தாங்களே கேட்டுப்பெறுவதும், நாட்டின் இறையான்மையை காப்பதும் நிகழ்கிறது. அவற்றை முன்னெடுத்து நடத்திச் செல்லும் நல்ல தலைவர்களையும் அடையாளம் காணமுடிகிறது. நாடு என்ற அளவில், மொழி, மத, இன அடையாளங்கள் மறந்து ஒற்றுமையான மக்களை உருவாக்குகிறது.
நீங்களும், உங்கள் நிலையும்!
இந்த உலகில், இந்த காலகட்டத்தில் வாழ்வதால் நீங்களும், இந்த உலக சமூகத்தில் ஓர் உறுப்பினர். நீங்கள் ஏற்றாலும், மறுத்தாலும் கூட அந்த பாதிப்பையும், நன்மையையும் நீங்கள் பெறுவீர்கள். சில நேரம் மறுக்கலாம், ஆனாலும் எல்லோரும் ஏற்கும் பொழுது நீங்கள் மட்டும் மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை. மீறினால தண்டிக்கவும்படுவீர்கள்.
இதில் உங்கள் நிலை என்ன என்பது, உங்களை வந்தடையும் உலக சமூக பிரச்சனை / நல்லது இவற்றைப்பொறுத்துத்தான் அமையும். அதில் சந்தேகமே இல்லை. அது நல்லதா, கெட்டதா என்பதை, உங்களை வந்தடையும் நேரத்தில் கணிக்கவும் முடியாததாக இருக்கலாம். மேலும் உங்களையும் தன்பக்கம் இழுக்கக்கூடிய, உங்களுக்கு நன்மை தரதக்க ஒன்றாகவும் இருக்கலாம். முற்றாக உங்களுக்கு அவசியமற்ற, உங்கள் வாழ்க்கையும் பறிக்கலாம், நீங்கள் இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையையும் பறிக்கலாம்.
உங்கள் வீடும், குப்பைகளும்!
இந்த உலகத்திலேயே மன நிம்மதி தரும் இடம் என்றால், உங்கள் வீடுதான். அந்த வீடு ஆடம்பரம் இல்லாமல் இருக்கலாம். 1BKH முதல் 6BHK வரைகூட இருக்கலாம். நேற்று உடுத்திய துணிகள் எங்கும் பரவிகிடக்கலாம், வீடெங்கும் குப்பைகள் நிறைந்திருக்கலாம். ஆனாலும் அது உங்கள் வீடு, உங்களுக்கு அமைதிதரும் வீடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இப்பொழுது உங்கள் வாசல், எப்படி இருக்கிறது என்ற கவலை உங்களுக்கு இல்லை. என் வீடு என்வாசல் எப்படி இருந்தாலும் எனக்கு சரிதான் என்ற நிலைதான் உங்களுக்கு. நல்லதுதான். ஆனால் யாரோ உங்கள் வாசலில், வந்து குப்பையை கொட்டிவிட்டு போகிறார்கள் என்றால், என்ன ஆகும்?
நீங்கள் வெகுண்டு எழுந்து, “எவண்டா அது என்வீட்டு வாசலில் குப்பையை கொட்டுகிறவன்?” என்று வீட்டை விட்டு, வாசலில் நின்று கொண்டு சத்தம் போடுவீர்கள். பக்கத்தில் இருக்கும் நான் உங்களிடம் “சரி, விடப்பா, எவனோ போட்டுட்டு போயிட்டான், நீ நிம்மதியா இரு” என்று சொன்னாலும், “அதெப்படிங்க, என் வீட்டு வாசலில் எவனோ ஒருத்தன் குப்பை கொட்டலாம், இது நியாயமா?” என்று என்னிடம் சொல்லுவீர்கள். அதற்கு மேல் நான் பேசினால், நம் இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிடும். கடைசியில் நான் தான் குப்பையை கொட்டினேன் என்று திருப்பிவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.
மறுநாள், உங்கள் வீட்டிற்குள்ளேயே குப்பையை யாரோ கொட்டிவிட்டார்கள். இப்பொழுது என்ன நடக்கும்? பார்த்த உடனே, கெட்டவார்த்தையில் கூட யாரையோ திட்டிக்கொண்டே வாசல் வரை வந்து கத்துவீர்கள். இன்றோ நானும் உங்களிடம் ஒருகருத்தும் சொல்லவில்லை. நான் வெளியே வரவேஇல்லை. நீங்களாகவே கொஞ்சம் கத்திவிட்டு அடங்கிவிட்டீர்கள்.
மூன்றாவது நாள், நீங்கள் அறியாமல், உங்கள் படுக்கை அறையிலேயே யாரோ ஒருவர் குப்பையை கொட்டுவிட்டார். அவ்வளவுதான், உங்கள் சினம் எந்த அளவுக்கு எகிரும் என்பதை அளவிடவே முடியாது என்பதுதான் உண்மை.
கூட்டி அள்ளி வெளியில், போட்டுவிடுகின்ற குப்பைக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு வருமென்றால்... அடுத்த தலைப்பையும் படியுங்கள்!
உங்கள் மனமும், குப்பையும்!
உலக சமூகம், தகவல் தொடர்பில் மிக எளிதாக எல்லோரையும் ஒரே கயிறில் கட்டி இணைத்துவிட்டது. யார் எங்கே இருந்தாலும், யாரோடு யாரும் பேசலாம், பழகலாம், விரும்பலாம், இணையலாம், கூடலாம், விலகலாம், எதிர்க்கலாம், சண்டையும் போடலாம், பழியும் வாங்கலாம் என்றாகிவிட்டது தானே?!
மேலும் தினம் தினம், இணையம் வழியாக, கைபேசி வழியாக, யார் யாரோ குப்பைகளை, உங்கள் மனதில் கொட்டி விட்டு போகிறார்களே? உங்கள் மனம், நீங்கள் வாழுகின்ற வீட்டை விட கேவலமானதா? ஏகப்பட்ட குப்பைகளோடு வாழ்ந்து பழகி, இன்னும் பல மடங்கு குப்பைகளை ஏற்றுக்கொள்ளும் மனதைத்தான் நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? ஒரு போதும் நீங்களாக, உங்கள் குப்பைகளை சரிசெய்ததில்லை அப்படியே வாழ்ந்து பழகிவிட்டீர்கள் என்றால், யார் யாரோ போடும் குப்பைகளை ஏற்றுக்கொள்ளவும் செய்வீர்களா? அந்த குப்பைகளோடும் உங்கள் வாழ்க்கையை தொடர்வீர்களா?
உங்கள் பதிலும், நிலையும் என்ன?
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!