CJ for You: Chennai

Chennai

Showing posts with label Chennai. Show all posts
Showing posts with label Chennai. Show all posts

Bharati Mani - Pattaiya


 பாரதி மணி... (Bharati Mani) 


பேஸ்புக்கில் அறிமுகம்

மணி என்பது பெயராகவும், பாரதி என்பது துணைப்பெயராகவும் இருக்கிறது என்பதை யோசித்துக்கொண்டேன்... ஓவியர் ஜீவாநந்தன் தன் நிலை தகவல்களிலும், பிறரது தகவல்களிலும் தனக்கே உரிய பொருத்தமான கேலியில் அந்த தகவலை மேலும் சுவாரசியமாக்குவார். அப்படியாகவே பாரதி மணி அவர்களின், அதற்கு பதிலடியையும், பிறகு அவரின் மண்வாசம் மிகுந்த மனவெளிப்பாடுகளையும் நான் படித்துக்கொண்டு வந்தேன்.

பொதுவாகவே தன்னை, தன் அறிவை, வளர்ச்சியை, அனுபவத்தை, ஆற்றலை, பலமின்மையை, தாழ்ச்சியை, மதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த உலகில் தன் வாழ்நாளில் அலை இல்லாத குளமாக (கடலாக) இருக்கமுடியும். பாரதி மணி அப்படி ஒருவாராக இருப்பார் என்பதை நான் நம்புகிறேன்.

பாரதி மணி என்பவர்தான் பாபாவில் முதலமைச்சராக வருவார் என்பது அப்பொழுதான் தெரியும். இல்லையென்றார் “யார்ரா இவரு?” என்பதாகவே இருந்திருக்கும். பிறகு விசயமறிந்தால் கப்பல் வியாபாரியாக இருந்திருக்கிறார், நீதிபதியாக இருந்திருக்கிறார்... இன்னும் பலபல...

பாரதி மணி அய்யா, சார் என்று சொன்னால் ஒரு அன்னிய பாவம் வரும் :) ஆனால் பாட்டையா என்று பாசத்தோடு அழைக்கின்றனர்... எனக்கோ பாட்டையா என்றால் ரொம்ப வயாதானவரோ என்ற எண்ணம் உருவாவதினால் அய்யா போதுமானது. நிலைத்தகவல் மூலமாக அவரைப்பற்றிய ஒரு முழு வடிவம் அவரின் சினேகிதத்தை உருவாக்கியது. நான் அவரின் நண்பரானேன். என்னுடைய சில நிலைத்தவகலுக்கும் அவர் அவருடைய பாணியிலேயே பதில் தந்திருக்கிறார். 

ஒரு புதியவரோடு குரலால் பேசினால் அதில் தொணிக்கும் குரல் உச்ச, கீழ் ஸ்தாயி எதிராளியையும், நம்மையும் புடம்போட்டு காட்டிவிடும்...பின்னர் விவகாரத்தையும் ஏற்படுத்தும்... நேரில் பார்ப்பதோ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி தள்ளிவைக்கும்... ஆனால் முகம் காணாது எழுத்துக்களால் பேசிக்கொள்ளும்பொழுது நம் மனம்தான் பேசிக்கொள்ளும். நம் அனுபவமே எதிராளுக்காக வடிவம் எடுத்து தானே உருமாறிக்கொள்ளும். அப்படி பாரதி மணி எனக்குள் ஒரு வடிவத்தை ஏற்படுத்தியிருந்தார்...


கேரிகேச்சர் ஓவியம்

நிஜமாகவே பாரதி மணி எழுத்தாளரா, நாடக நடிகரா, கட்டுரையாளரா எனபதாக அவரைப்பற்றி எனக்கு வேறெந்த விசயமும் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் வார்த்தைகள் அந்த நுணுக்கங்களை கொண்டிருந்தன... தமிழோடு வார்த்தைகளால் விளையாடுவது எனக்கு வரும் என்பதால்... அதை யார் செய்தாலும்,அது எனக்கு பிடிக்கும்... பாரதி மணி அய்யாவையும் அப்படி பிடித்திருந்தது... வழக்கமாக என் நண்பர் குழாமுக்கு அவர்களின் பிறந்தாநாளின் அன்று என் பாணியில் ஒரு கேலி சித்திரம் தருவது உண்டு. பாரதி மணி அய்யாவுக்கு தனியாக ஒரு பரிசாக தருவது என்று முடிவெடுத்து அவரின் ஒளிப்படம் ஒன்றை சேகரித்து, அவருக்கே தெரியாமல் அதை வரைந்துமுடித்து என் பக்கத்தில் வெளியிட்டேன்...

கடவுளின், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் யாரை வரைந்தாலும் அதில் அவர்களின் முகபாவனையை அப்படியே கொண்டுவரும் தகைமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்... அந்தவகையாகவே பாரதி மணி அவர்களின் ஓவியம் அவராலேயே மிகச்சிறப்பாக பாராட்டப்பட்டது... அந்த ஓவியத்தின் பக்கத்திலேயே மிக அருமையான கலந்துரையாடலும் நடைபெற்றது...

அந்த ஓவியத்தை அவரின் பிறந்தநாளுக்கே பயன்படுத்திக்கொண்டேன்... ஒரு சில நாட்களுக்கு பிறகு ஒரு நன்றியுரை எனக்கு கிடைத்தது.


எனக்களித்த பதில்

---

அன்புள்ள சுகுமார்ஜி: என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் பிறந்தநாளுக்கு யாரும் தரமுடியாத ஒரு பரிசை தந்திருக்கிறீர்கள். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் மனமார்ந்த நன்றி....God bless you!

பாரதி மணி

---

அதற்கு பிறகு என்னையும் அவர் புரிந்துகொண்டிருப்பார் (!?) என்ற நம்பிக்கையில் அவரின் தவலுக்கு நானும் என்பாணியில் கேலியோடு கூடிய பதில்கள் தர ஆரம்பித்தேன். கொஞ்சம் ஒட்டி வந்துட்டோம் அல்லவா... அதான் :)

சென்னை பலநாட்கள் போய்வரும் வேலை எனக்கிருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கிறேன் அய்யா என்றுதான் சொல்லியிருந்தேன். நான் அதிகபட்சமாக ஒருநாளுக்கு மேல் சென்னையில் தங்குவதுமில்லை. சென்றமாதத்தில் ஓவியர் ஜீவாநந்தன் அவரை சந்திந்த வேளை நானும் சென்னையில் வேறு ஒரு அலுவலில் இருந்ததால் பார்க்க இயவில்லை. நான் இருப்பது தெரிந்து “நீங்களும் வந்திருக்கலாமே சுகுமார்” என்றார்...

என்பெயரில் சுகுமார்ஜி என்பதில் சுகுமார்தான் என்பெயர் ஜி என் தந்தையின் ஆங்கிலமுதல் எழுத்து... ஆனால் ஜி ஹிந்தி ஜியை தோற்றுவிக்கும்... பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர் சாமிநாதன் (சாம் விசய் )

“நான் சுகுமார்னுதான் கூப்பிடுவேன்... ஜிலாம் சொல்லமாட்டேன்” என்றார்...

“அய்யா அந்த விளக்கமே வேண்டாம்... உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டேன்...

அதேபோல நண்பர் வட்டாரத்தில் “சுகு”  மட்டும்தான்... நிலைத்தகவலில் இதை தெரிவித்தவுடன் பாரதி மணி அய்யாவும் சுகு என்றே அழைக்க ஆரம்பித்தார்.


முதல் சந்திப்பு

நேற்று (07-01-2013) காலை தாம்பரத்திலிருந்து பாரதி மணி அய்யாவை கைபேசியில் அழைத்தேன்...

என்னை நான் அறிமுகபடுத்திக்கொண்டதும் மகிழ்ந்தார்... ஆனால் “கடவுள் வந்திருந்தார்” சுஜாதாவின் நாடக பயிலரங்குக்கு செல்லவிருப்பதால் நீங்கள் நாளை காலை வாருங்களேன் என்றார். எனக்கும் (!?) நாளை நேரமிருப்பதால் சரி அய்யா என்றேன்.

“நீங்க இருந்து கண்டிப்பா நாளைக்கு பார்த்துட்டுத்தான் போவனும்” என்றார்.

செவ்வாய்கிழமை காலை எழு மணிக்கு மீண்டும் அழைத்தேன். வணக்கத்திற்குப்பின் உங்கள் இல்ல முகவரியை எனக்கு அனுப்பிவையுங்கள் என்றேன். குறுஞ்செய்தி வந்த சில நிமிடங்களில் வடபழனி பேருந்தில் ஏறிவிட்டேன். அங்கேயிருந்து சாலிகிராமம் கடைசி நிறுத்தம் என்பதை அறியாமல், வேறு ஒரு பேருந்தில் சாயி நகர் இறங்கி மூன்றாவது பிரதான சாலை சென்று ஒரு முட்டுச்சந்தில் (!? - அவரே சொன்னது) இருந்த தங்க (முட்டையிடும்)குடிலை அடைந்து வாசலில் நிற்க...

கைபேசியில் அழைத்தார்... எங்கிருக்கீங்க சுகுமார்?

உங்க வாசலில்...

ஓ... வந்தாச்சா... இந்தாவாரேன்...

கதவு திறந்த அந்த மனிதரை பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமான ஒருவராகவே அவரைக்கண்டாலும், வணக்கம் செலுத்தி உள்ளே நுழைந்தேன்... என் தோளில் கைபோட்டு தன் அன்பை வெளிக்காட்டி தன் அறைக்கு அழைத்துச்சென்றார்...

அமர்ந்ததும் நான் ஆரம்பித்தேன்...

ரொம்பநாளைக்குப்பிறகு என்னை “டேய் சுகுமாரா”ன்னு சொன்னது நீங்கதான் அய்யா என்றேன்.

“ஹே” என்பதாக பாவனை காட்டி சிரித்தார்...

“என்னை அப்படி என் தந்தைமட்டுமே அழைப்பார், நீங்க அப்படி அழைத்தது எனக்கும் சந்தோசமாக் இருந்தது” என்றேன்...


அடேய் சுகுமாரா

இந்த “அடேய் சுகுமாரா” ஒரு பிளாஷ் பேக்...

பாரதிமணி அய்யா தகவல் தந்திருந்தார்...

Bharati Mani ஐயோ.....ஹரன்! நானா?.......எனக்கு கோணல் இல்லாமல் ஒரு நேர்கோடு போடத்தெரியாது! இது ஓவியர் ரஷ்மி வரைந்தது! எனக்கு பார்த்து ரசிக்க மட்டும் தான் தெரியும்!

Caricaturist Sugumarje Bharati Mani Sir... ஒரு படம் வரைந்துதான் பாருங்களேன்!

Bharati Mani சுகு! சில விஷயங்கள் எனக்கு வராதென்ற பிடிவாதமான நம்பிக்கை எனக்குண்டு. காதல் வயப்பட்டபோதே ஒரு கவிதை நான் எழுதியதில்லை. பள்ளிக்கூடத்தில் ட்ராயிங் கிளாசுக்கு மட்டம்.......காரணம் எனக்கு வரையத்தெரியாது! சமீபகாலம் வரையிலும் எழுத்து எனக்கு வராதென்பதை பிடிவாதமாக நம்பினேன்.......இப்போதும் நம்புகிறேன்!

Caricaturist Sugumarje இருக்கலாம்... ஆனால் உங்கள் எழுத்துக்களை தொகுத்தால் அருமையான புத்தகமாக உருவெடுக்கும்... (பிச்சி, பிச்சி எழுதுவதால் அதன் முழுவடிவம் கிடைக்காதிருக்கிறது என்று நினைக்கிறேன்)

Bharati Mani அடேய்......சுகுமாரா! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? நான் One Book wonder! என்பது உனக்குத்தெரியாதா? இரண்டாம் புத்தகம் எழுதி வாசகர்களை துன்புறுத்தமாட்டேனென்று சபதம் வேறு செய்திருக்கிறேன்! தண்டனையாக என் ஒரே புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ தொகுப்பை ஒரே மூச்சில் படிக்கக்கடவது!

Caricaturist Sugumarje ஏற்கனவே ஒரு சபதம் போனமாதம் சொன்னீர்கள்... (முதல்வராக மாட்டேன் என்று) இப்பொழுது இன்னொன்று... நீங்கள் புத்தகம் போடவேண்டாம்... நாங்கள் தொகுத்துக்கொண்டாலே ஆயிற்று

Caricaturist Sugumarje புத்தகம் படிப்பது தண்டனையல்ல... அது ஒரு ஆத்மாவோடு வாழ்வது

Bharati Mani அடாடா! மெச்சினோம்! எம் வீட்டுக்கு வந்தால், எனது புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ ஒரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை இந்த நல்ல நேரத்தில் அறிவித்துகொல்கிறோம்!

Caricaturist Sugumarje கொடைக்கு நன்றி அய்யா!


 பதிவின் முடிவாக

ஆக நேற்று காலை ஒருமணிநேரத்திற்கும் மேலாக அவரோடு முடிவே இல்லாது கலந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மதிய ஊர்திரும்பும் எண்ணம் அப்போதைக்கு முடித்துவைத்தது... இன்னும் நிறைய அவரோடு பேச விசயங்களும், நேரமும் காத்திருக்கின்றன...

வரும்பொழுது அவரின் வார்த்தைபடியே தண்டனையாக (பரிசாக) புத்தகமும் வாங்கியாயிற்று... இனி ஒரே மூச்சில் படிக்கனும்... தண்டனையின் அடுத்த சாராம்சம் அதானே :)

இதற்கு துணை நின்ற முகநூலுக்கு நன்றி!


facebook - http://on.fb.me/VkzC2I


மறுபதிப்பு சோகம்

இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு, இப்பதிவை மறுபதிப்பாக தருவதில் காரணமிருக்கிறது. ஆம், பாட்டையா பாரதி மணி, கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் தேதி கொண்டாட்டத்திற்குப் பிறகும் கடந்த அக்டோபர் 26 வரை பேஸ்புக் பதிவுகளிலும் இருந்திருக்கிறார். பிறகான நாட்கள் உடல் பிரச்சனைகளோடு இருந்து, அவற்றை தனக்கே உரித்தான இயல்பில் ஏற்று போராடி, நேற்று மாலை (17-10-2021) 5 மணி அளவில், தன் வாழ்க்கையை 84 வயதில், நிறைவு செய்துகொண்டார்.

இந்த பொருளாதாரத்தில் தூணாக விளங்கும் Birla தனியார் துறை நிறுவனத்தில் CEO ஆக பணியாற்றி, ஓய்வு பெற்று அதை தன் பழக்கத்தில் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாதவர். அதைப்பற்றி கேட்டால் கூட பேசாதவர். அத்தகைய எளிமை அவரிடமிருந்தது. 

அவர் இல்லத்திற்கு செல்லும்பொழுதெல்லாம் சுடச்சுட, அவர் கைகளாலேயே அரைத்த காப்பி கிடைக்கும், சரியான நேரத்திற்கு போனால், அவரே சமைத்த சாப்பாடும் கிடைக்கும். ஒரு தந்தைக்கு சமமாக என்னோடு பழகியவர். எனக்காக என் வேலைகள் குறித்து, என் வாடிக்கையாளர்களிடம் “நான் பேசுகிறேன்” என்று உதவியாக நின்றவர். 

இறையின் விருப்பமான,  உலக பிறப்பிலும் வாழ்விலும் மகிழ்ந்திருந்தவர் பாட்டையா பாரதி மணி அவர்கள், இப்பொழுது இறப்பிலும் மகிழ்வாகவே சென்றிருப்பார். இறையின் அரவணைப்பில், இந்த பிரபஞ்சம் முழுமையில் இருந்து, கலந்திருக்க நான் “பாட்டையாவை” வாழ்த்தி வணங்குகிறேன். 

வாழ்க வளமுடன்.

chennai-live-caricature-and-rainy-day


சாலிக்கிராமம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். வெளியே நல்ல மழை, நானும் ஏற்கனவே இங்கே வரும் வழியில் நனைந்திருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பேருந்து கிளம்ப அது மைலாப்பூர் செல்வதாக சொன்னார்கள்.

அடிக்கடி சென்னையை சுற்றியதில் ஓரளவு இடம் யூகிக்கமுடியும் என்பதால், மைலாப்பூர் எங்கே, RK சாலை எங்கே என்று மனதிற்குள் ஓடியது... பனகல்பார்க், தி.நகர், TTK சாலை இதில் இறங்கலாம் என் யோசித்தேன்.

நடத்துனரிடம் கேட்டேன்...
“RK சாலை போகணும், ஹோட்டல் சவேரா”
“டைரக்டா அங்க போக பஸ் இல்லை சார்.. மைலாப்பூர் போய்ட்டு, இன்னொரு பஸ்ல TTK ரோடு போய் போய்டுங்க...”
“வழில வேறே எங்கயாவது இறங்கமுடியுமா”
“நீங்க எங்க வேனாலும் எறங்கிக்கங்க... சவேரா போகமாட்டீங்க”
“ஆட்டோல”
“சார் ஏன் சார், காச வீண் பண்றீங்க...”
பதினைந்து ரூபாய் சீட்டு கொடுத்தார்... இந்த பேருந்தும் வழியெல்லாம் நீந்தியது... சாலை, தொகுப்பு குடியிருப்பின் தளங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது மழை நீரால்...CIT காலனி கடந்து TTK சாலை என்று ஒரு பெயர்பலகைகாட்டியது. ஆனால் பேருந்து வலதுபக்கமாக திரும்பியது...
“சார், இங்கே இறங்கலாம் போல இருக்கே”
“என்ன?”
“TTK சாலை தானே அது?”
“சார்ர்ர்ர்ர்ர்ர்ர், அது இங்கதான்தான் ஸ்டார்ட் ஆகுது... இங்கே இருந்து RK சாலைக்கு இன்னிக்கி நீங்க போய் சேரமாட்டீங்க”

நான் அமைதியானேன்... புனித மேரி சாலை வந்து, மைலாப்பூர் வந்து சேர்ந்தேன்...

-----------------
மைலாப்பூரில் ஆட்டோ பிடித்தேன்... மீட்டர் இருந்தது, தூறிக்கொண்டிருந்த மழையில் நனையாமலிருக்க துணியால் சுற்றப்பட்டிருந்தது.
“ஹோட்டல் சவேரா”
“உட்காருங்க”
“மீட்டர் போடலை?”
“மழைக்கு பிராப்ளமா இருக்குசார்... ஓடல”
“பொய்யெல்லாம் சொல்லாதீங்க, சண்டேனா லீவா? சரி. எவ்வளவு?”
“நாற்பது ரூபாய்”
“முப்பதுதாரேன்...”
”மீட்டர்ன்னா இந்த மழைல ஜாஸ்தியாவே வரும் சார்”
“சரி கிளப்பு”
தேங்கி கிடந்த மழை நீரில் ஆட்டோ மட்டுமில்லாமல் எல்லா வாகனங்களும் நீந்தி வந்தன. நெரிசலில் தாமதமும் ஆகிற்று. TTK சாலை வந்து, RK சாலை வந்தாயிற்று... நாற்பது கொடுத்தேன்...

“கண்டிப்பா முப்பதுதான் தரனும். ஆனா நீந்தி வந்தீங்கல்ல... அதான் நாற்பது” என்றேன் நான்!

boon-from-friendship


சென்னை, மாம்பலம்...காலை,
பாரதிமணி அய்யாவுக்கு  அழைப்புவிடுத்தவுடன், “சந்தோசம், ஆனா நான் நாரதகான சபாவிலே நாடகத்துக்கு போறேன். அதுக்கு பிறகுதான் வீடுக்கு வருவேன்”
“ஓ. அப்போ நான் கொஞ்சம் லேட்டாவே வரேன் அய்யா”
“உங்களுக்கு அது பக்கம் தானே, சபாவுக்கே வந்துடுங்க... அங்கே பார்த்துக்கலாம். நம்ம நண்பர்களையும் பார்த்துபேச வாய்ப்பு கிடைக்கும்”
“சரி, என் லைவ் கேரிகேச்சர் ஈவண்ட் எப்படியும் 6 மணி ஆகிடும்னு நினைக்கிறேன்... முடிஞ்சதும் சபா வந்துடறேன் அய்யா”

ஹோட்டல் சவேராவில் அன்றைய நிகழ்வின் கடைசி ஓவியத்தை வரைந்துமுடித்து வெளியே வர மாலை 6.30 ஆகிற்று. என் கைபேசி மூலமாக, கூகுள் மேப்பில் சபாவின் இடத்தை தெரிந்துகொண்டேன். காரில் போனால் 7 நிமிடம் ஆகும் என்றும் காட்டியது. நடந்தா 15 நிமிடத்தில் போகலாம் என்று கணக்கிட்டு, TTK சாலை வந்தேன். வழியில் ஒரு ஏலக்காய் தேனீர்... மழைத்தூறலாக இருந்ததில் சாலையில் நெரிசலும் இருந்தது... கவனமாக சாலை கடந்து, நாரதகான சபாவிற்குள் நுழைந்தேன்...
பெருங்கூட்டம் இருக்கலாம் என்று நினைத்தால் அளவான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளேயும் அளவான பார்வையாளர்களே இருக்கலாம்... அங்கேயிருந்த சிற்றுண்டி கடையில் இருந்தவரிடம் விசாரித்தேன்...
“சும்மா போலாம் சார். திரையில் நடிக்கிறவங்கள பார்க்கனும்னா பின்னாடி உள்ள அறைக்கு போய்டுங்க... ஆனா இன்னும் அரைமணி நேரத்தில் இடைவேளை விட்டுடுவாங்க..”
“அவங்களை தொந்தரவு செய்ய விரும்பலை... வெளியே காத்திருக்கிறேன்” என்றேன்...

அழுத குழந்தையை சமாதானம் செய்யும் பொருட்டு ஒரு பெண் தன் இரு குழந்தைகளோடு வெளியே வந்தார்... நாடக சப்தம் அறை விட்டு வெளியே கேட்டது...
அடுத்து ஒரு தம்பதி நேரமாச்சி, கிளம்பலாம் என்ற வகையில் வெளியே கிளம்பிவந்தனர்...
இதற்கிடையில் நான் பாரதி மணி அய்யாவுக்கு ஒரு அழைப்பும், இரு குறுஞ்செய்தியும் அனுப்பிவிட்டேன்... அதன் வாயை அப்போதைக்கு அடக்கி வைத்திருப்பார் என்பது தெரிந்தும்...
நான் வெளியே எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று தெரியாதவகையில், உள்ளே நாடகத்தை பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தேன்...

கடைசி இருக்கைகள் வழியாக, திரை பக்கம் பார்த்ததும், சினிமாவோ என்றெண்ண தோண்றியது... அவ்வளவு அருமையான செட்... ஆஹா... உள்ளே வந்தபோதே, உள்ளேயும் வந்திருக்கலாமே என்று வருந்தினேன்...  கடைசிக்கு மூன்று வரிசை முன்பாக உட்கார்ந்து நாடகத்தை ரசித்தேன்... இது ”சிலிக்கன் வாசல்” என்பதும், இரா. முருகன் எழுதியது என்பதனையும் நான் அறியேன்... நாடகம் பார்த்துக்கொண்டே, பாரதிமணி அவர்களின் தலை தெரிகிறதா என்றும் பார்த்துக்கொண்டிருந்தேன்... அரைமணி ஆனதே தெரியாத நாடக ஓட்டம்... அருமை... எல்லோருமே பாராட்டிவிட்டதால் நான் தனியாக சொல்ல ஏதுமில்லை... எனக்கு ஒரு நல்ல அனுபவமாக உணர்ந்தேன்...

அடுத்த “எழுத்துக்காரர்” இடைவேளையில் கொஞ்சம் முன்னே நடந்து பாரதிமணி அவர்களை தேடினேன்...
”சுகுமார்ஜி” அழைத்த குரல் புதிது... ஹா.. இது யாரு? என்று பார்க்க... நம்ம வெங்கட சுப்பிரமணியன் ராமமூர்த்தி... (இவர் பெயரை டைப் செய்தாலே ஒரு சோடா குடிக்கவேண்டும் என்று நண்பர் பரணிராஜன் சொல்லுவார்)
“ஆஹா. சந்தோசம்... எப்படி இருக்கீங்க?” நல விசாரணைக்குப்பிறகு
“பாரதிமணி அய்யாவை தேடிட்டிருக்கேன்”
“இதோ இங்கே தான் என்கிட்டே உட்கார்ந்திருக்கார்... வந்துடுவார்”
என்னைப்பற்றி, என் ஓவியம் பற்றி பேசியவாறே எல்லோரிடமும் கைகொடுத்தேன்... சந்திரமொளலீஸ்வரன் விஸ்வநாதனும் அருகில் அமர்ந்திருந்தார்...
“சுகுமார்ஜி, பாரதிமணி வர்றார் பாருங்க”
“ஓகே... இருங்க அவர்ட்ட சொல்லிட்டு வந்துடறேன்”

பாரதிமணி அய்யாவை பார்த்து பேசிக்கொண்டிருக்கையில்...
“ஏன் அங்கே போய் உட்கார்ந்திருகீங்க, இங்கே வந்துடுங்க..” என் இருக்கையை மாற்றி, அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்தேன்...
எழுத்துக்காரர் நாடகத்தை அருகில் இருந்து ரசிப்பதும் சுகமாக இருந்தது... நிகழ்கால நடப்பினையும், அதிலே ஒரு செய்தியையும் வைத்திருந்தது அருமை.

நாடகம் முடிந்து எழுகையில், திரை நட்சத்திரங்களையும் காணமுடிந்தது... ஆனால் யாரோடும் பேசமுயலவில்லை... ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு நடிகர் நாசரை பார்த்துப்பேசி, ஒரு ஆட்டோகிராப் கேட்டதில்... மனுசன் என்னை மேலும் கீழும் பார்த்த பார்வையில் நான் அங்கேயே கரைந்துபோய், இனி யார்கிட்டயும் இந்தமாதிரி கேட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்...

நாடகவாயிலின் வெளியே எழுத்தாளர், கட்டுரையாளர் ஞானி நின்றிருந்தார்... ஒரு யோசனையோடவே அவரிடம் என்னை அறிமுகபடுத்திக்கொண்டு,“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்... தன் நண்பர்களிடம் பாரதிமணி என்னை அறிமுகப்படுத்திவைத்தார்...மிகுந்த கொடுப்ப்பினையாக உணர்ந்தேன்... போட்டோ பிடிக்கும் வைபவம் அப்போதுதான் நிழந்தது... முடிந்தளவு ஒதுங்கியிருந்தாலும், அந்த ஃபிரேமுக்குள் நானும் இருப்பதை அறிந்தேன்...

எல்லோரும் கிளம்ப சபா காலியானது... நானும், பாரதிமணி அய்யாவும் மட்டுமே... இதற்கிடையில் இன்னொரு சுவரஸ்யமான மனிதரும் சேர்ந்துகொண்டார்... அவர் பற்றி தனியாகக்கூட ஒரு கட்டுரை எழுதலாம்...

திடீரென்று கொட்ட ஆரம்பித்த மழைக்கு இரண்டு சேர்களை தூக்கிக்கொண்டு ஓரமாக நான் ஒதுங்க, பாரதிமணி அய்யாவும் வந்தார்... அடை மழை, அரைமணி நேரம்... இடைப்பட்ட நேரத்தில் எத்தனைமுறை பைப் பற்ற வைத்தார் என்றெல்லாம் எண்ண முடியவில்லை... கால் டாக்சிக்காக, பேசிக்கொண்டே காத்திருந்ததில் நேரம்போனதே தெரியவில்லை...

என் இரவு ஜாகை பாரதிமணி அய்யா வீட்டில்தான்... நட்பு கொடுத்த வரம்...