Mobile Service
நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில்,
“கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா என்கூட வாங்க ஜி, என் செல்போன் சர்வீஸ் செய்யனும், போய்ட்டுவருவோமே” என்றார்.
“என்னாயிற்று”
“என் கிட்டே இரண்டு போன் இருக்கு. ஒன்றை பேண்ட் பாக்கெட்டில இருந்தபடிக்கு என் மனைவி தண்ணீரில் துவைக்க போட்டுட்டா”
“அட பாவமே”
“ஒரு அரை மணியில் தேடி எடுத்தாச்சி, கவர் கழற்றி, வெயில் காயப்போட்டு(?!) பிறகு இயக்கினால் ஒரே ஒருநாள் மட்டும் உயிரோடு இருந்தது. பிறகு செயலிழந்துவிட்டது”
“நல்லவேளை வெடிக்காமலோ, வேறெதும் ஆகாமலோ இருந்தவரை நல்லது”
“என்ன ஜி, பயமுறுத்துறீங்க!”
“மின் குறுக்கு ஏற்பட்டால் வெடிக்கவும் செய்யுமே, சரி வாங்க, அதன் நிலைமையை சோதித்துவிடலாம்”
நகரில் இருந்த தனிப்பட்ட சோதனை நிலையத்தை அடைந்தோம். அங்கே வரவேற்பாள பெண்ணிடம் விபரம் சொன்னேன். செல்போனுக்கு நடந்ததை கேட்டு அடடா என்று கவலைப்பட்டாள். உள்ளே இருந்த சோதனைச்சாலை அறைக்கு விபரம் சொன்னாள். ஒரு நபர் எட்டிப்பார்த்தார். பிறகு வெளியே வந்தார், புன்னகைத்தவாறே!
“நான் ஒரு ஆர்டிஸ்ட்” என்றேன்.
“ஓ... உங்களை தெரியும் சார்”
“அப்படியா?”
“ஆமா, 6வது கிராஸ்லதானே இருக்கீங்க?”
“ஆமா”
“பாரதிநகர்”
“அட, ஆமாங்க, நீங்க அங்கேதான் இருக்கீங்களா?”
“சார், நீங்க இரண்டாவது வீடு, நான் முதல் வீடு”
அடப்பாவிகளா!!
“ஓ. அந்த மாடிவீடு?” (கிழ்வீட்டின் உரிமையாளரை எனக்குத்தெரியும்)
“ஆமா சார்”
“அடடா. மனிச்சிக்கங்க... நான் உங்களை பார்த்ததில்லே, அதான் யார்னு தெரியலை”
“அப்படியா, பரவாயில்லை சார்”
பிறகு செல்போன் சோதனைக்கு தயாரானது... என் நண்பர்,
“ஜி, சொல்லவே இல்லே. இவர் உங்க ஏரியான்னு”
“ஹே, எனக்கே இப்ப தானய்யா தெரியும்”
பரிசோதனையின் முடிவு: செல்போன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிலைக்கு போய்விட்டது. எரிக்கவோ, புதைக்கவே அது நண்பரின் விருப்பமாகிவிட்டது.
சோதனைக்கூட புதிய நண்பருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நாங்கள் வீடு திரும்பினோம். என் வீட்டில், என் மனைவியிடம் புதிய நண்பரைபற்றி சொன்னேன். செம டோஸ் எனக்கு விழுந்தது.
“வெளியே போனா, வந்தா யார் பக்கத்திலே இருக்காங்க, என்ன பண்றாங்கன்லாம் பேசாம இருந்தா இப்படித்தான் நடக்கும், இனிமேலாவது திருத்திக்கங்க”
“சந்தர்ப்பம் இல்லாம (ஜாமீன் இல்லாம) திடீர்னு போய் நீங்க யாரு, என்ன செய்யறீங்கன்னு கேட்டா பயந்துற மாட்டாங்களா?”
“அதுக்காக... அப்புறம் இப்படித்தான் ஆகும், என்ன நினைப்பாங்க உங்களைபத்தி???”
“அது கவலை இல்லை. நானா போய் பேசுறது ஆகாதவேலை, இப்போதைய காலத்தில், தனக்கான ஆதாயமின்றி யாருமே பேசுவதில்லை. அப்படி பேசுபவர்களில் ஒருவராக என்னை தவறாக எடைப்போடவே வாய்ப்பு அதிகம்”
“அப்போ எப்பத்தான் பேசுவீங்க?”
“நண்பராக இருந்தா!”
“எப்படி நண்பராவீங்க?”
அதானே????
என் பார்வையில் மட்டும் தெரிந்த கொசுவர்த்தி ஒன்று சுழன்று, என்னை முப்பது வருடங்களுக்கு முன்னால் அழைத்துச்சென்றது...
என் நண்பரின் சகோதரி கேட்டார்...
“ஏன்ப்பா சுகுமார்... உன் ஃபிரண்ட் என்னடானா பேசியே கொல்றான். நீ பேசாம கொல்றே. நீ பேசவே மாட்டியா?”
“ஏன் பேசாம, நீங்க பேசினா பேசுவேன், யாராவது பேசினாத்தான் பேசுவேன்”
அவர் முகத்தில் என்ன ரியாக்சன் ஏற்பட்டது என்பதை கவனிக்க தவறிவிட்டேன், அந்தவயதில் வேறெதோ சாலையில் வேடிக்கை பார்த்தபடி...
*image source from istockphoto