Why need important of exercise before the practice Kundalini Yoga Part 01 | CJ

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 01

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 01


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 01


        வாழ்க வளமுடன். உலகில், அக்காலம் முதல் இக்காலம் வரை, பொதுவாகவே உடலை வளமாக்கும் வேலைகளும், ஆசனங்களும், உடலுக்கான பயிற்சிகளும் நடைமுறையில் இருந்தன. கால மாற்றத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும், வேலைகள் எளிதானதாக மாறிவிட்டது, மனிதனுக்கு நடைப்பயணம் என்பது கூட இல்லை, இதனால், உடல் தன் இயக்கங்களில் பெரும் மாற்றம் பெற்றுவிட்டது. வேலை, வியாபரம், தொழில் ஆகியன எல்லாமே, உட்கார்ந்து செய்யக்கூடிய நிலைக்கு மனிதவாழ்வு மாறிவிட்டது. எனினும் கடின உழைப்பாளிகள் இருப்பதை மறுக்க முடியாது. உடலுக்கு எப்போதும் அசைவுகள் தேவை.

ஏனென்றால், உடல் பஞ்சபூத தோற்றங்களால் ஆனது. மண் என்ற கெட்டிப்பொருள் உடலாகவும், உடல் உறுப்புகளாகவும். நீர் என்பது உடலெங்கும் ஓடும் ரத்தமாகவும், வெப்பம் என்பது, உடல் நடத்திட உதவும் மின்சாரமாகவும், காற்று என்பது உயிர்காற்றாகவும், சுவாசமாகவும், விண் என்பது மனிதனுக்கும், ஜீவன்களுக்கும் உயிராகவும் இருக்கிறது. இவை எல்லாமே அணுக்களின் கூட்டு என்பதை மறந்துவிடக்கூடாது. அணுக்கள் என்றாலே, எப்போதும், என்றும் இயக்கமும் இருக்கும். அந்த இயக்கங்களில், தடை ஏற்படாத நிலையில், பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்.

முக்கியமாக, உடலாக நாம், நம்மை அறிகிறோம். அது நிலையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால், உடல் செல்கள் அன்றாடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதியது உருவாகவும், பழையது உதிரவும் செய்கிறது. இதை நாம் அறிவதில்லை. உடலுக்குள் காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம் சீராக, ஓடிக்கொண்டே வருகிறது, இதனோடு உயிரோட்டமும், ஜீவகாந்தம் என்ற அலை இயக்கமும் ஓடுகிறது. காற்று, வெப்பம், ரத்தம் இவைகளின் ஓட்டத்தில், எந்த தடை வந்தாலும், அங்கே வலி உண்டாகும். வலி தேக்கமுற்றால், அது நோயாக மாறிவிடும். நோய் உறுப்புக்களை சிதைக்கும்.

வலி, நோய், உறுப்புகளின் சிதைவு ஆகிய எல்லாமே, மனதையும், உயிரையும் தாக்கும். மருந்துகளால் சரி செய்யமுடியும் என்றாலும் கூட, பழைய நிலைமைக்கு கொண்டு வருவதிலும், திருத்தி அமைப்பதிலும் சிக்கல் உண்டு. இயந்திரங்கள் போல, மாற்று உறுப்புக்களும் உடனடியாக பொருந்துவதும் இல்லை. எனவே, மனிதன் வருமுன் காப்பதில், கவனமும், அக்கறையும் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. உடலியக்கம் சுருங்கிவிட்ட இக்காலத்தில், உடற்பயிற்சி மிக முக்கிமானதாக அமைகிறது. உடல், மனம், உயிர் என்ற இணைப்பு சிறப்பாக இருந்தால்தான் வாழ்நாளும் நீடிக்கும்.

உடற்பயிற்சி என்பதை விட, குறிப்பிட்ட நேரம், நடந்தால் கூட நல்லதுதான் என்ற நிலைக்கு, மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், வெறுமனே நடப்பது மட்டும், முழுமையான உடல், உடல் உறுப்பு மாற்றங்களை, நலத்தை உருவாக்கி விடுவதில்லை. இதனால், உடலுக்கும், உடலுறுப்புக்கும், தனித்தனியான பயிற்சிகள் அவசியமாகிறது. பருவ வயதில் இருந்து, உடற்பயிற்சியை செய்துவர ஆரம்பித்தால், உடல், மன, உயிர் இயக்கம் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி. உடல் இல்லாமல் உணர்வு ஏது? இன்பங்கள் ஏது? உலக வாழ்க்கையும் ஏது? இன்னும் தொடரும்.

வாழ்க வளமுடன். 

-