How do you want to live in this World? Upgrade of the human enlightenment! | CJ

How do you want to live in this World? Upgrade of the human enlightenment!

How do you want to live in this World? Upgrade of the human enlightenment!


நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


இந்த உலகில், மனிதன் தனித்த ஒருவன் அல்ல. குடும்பம், உறவுகள், சமூகம் என்ற உறவுகளை அடிப்படையாக கொண்டுதான் பிறக்கிறான். ஒருவன், தன்னை அனாதையாக கருதவும் முடியாது. ஏனென்றால், அவனுக்கு, இந்த சமூகம் உதவிகளை தானாகவே, விரும்பி செய்யும் என்பது உண்மை. அதுபோலவே, தன்னை அனாதையாக கருதியவனும், இந்த சமூகத்திற்கு உதவவேண்டிய வகையிலும் இருப்பான். இந்நிலையில், ஒரு மனிதனின் வாழ்வு அமைந்துவிடுகிறது. எனக்கு யாரும் தேவையில்லை. எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நானும் யாருக்கும் உதவ தயாரில்லை. என்பதாக தனக்குள்ளாக வட்டம் போட்டுக்கொண்டு வாழ்வது, பொருத்தமற்றது ஆகும். அது மனித பிறவிக்கே இழுக்கு என்று கருதலாம். அதுபோல, அப்படி வாழ்வது, இயற்கைக்கும் விரோதமானது. மனிதன் என்பவன், இதமான மனதைக் கொண்டவன், மன+இதன் என்பதுதான், மனிதன் என்றாகிவிட்டது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். 

இப்போதுள்ள வாழ்க்கைமுறை, ஒரு தனி மனிதனை, எல்லாவகையிலும், இந்த உலகம் பிணைத்திருக்கிறது. அதாவது விட்டு விலகிடாத அளவுக்கு இணைத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இதை உலகம் சுருங்கி விட்டது என்று, சமூக ஆய்வாளர்கள் சொல்லுவார்கள். மேலும் கைபேசி என்ற, தகவல் தொடர்பு சாதனம், உலகவே ஒரு சமூகம் என்ற மாயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த மாயம், சிலவேளைகளில் நிஜமாகவும் வந்து நிற்கிறது. இது விஞ்ஞானத்தின் கட்டாயமும், வளர்ச்சியும் என்பதாகவே அமைந்துவிட்டது. இதிலிருந்து, சராசரி மனிதனும் தப்பிக்கமுடியவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்பொழுது, இந்த உலகம், ஒன்றாக, ஒரே சமுகம் என்ற நிலைபாடுக்கு வந்துவிட்டதை, நாம் நம்பித்தான் ஆகவேண்டும். என்றாலும் கூட, எங்கோ ஏற்படும் மாற்றம், உடனடியாக, நமக்கும் நேர்ந்துவிடுவதையும், அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், தடுமாற்றமே ஏற்படுகிறது. ஏனென்றால், மனிதன், தன்னையும், சமூகத்தையும் பார்க்கிற பார்வை, நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு ஏற்பான ஒன்று, எல்லோருக்கும் ஏற்பாக இருப்பதும் இல்லை. ஆனால், திடீரென்று, அவருக்கு நிகழ்ந்தது, எனக்கும் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டாகிவிடுவதை காணலாம். நாமும் கூட சில நேரங்களில், சில நிகழ்வுகளில் அப்படி நினைப்பதுண்டு, விரும்புவதும் உண்டு.

இந்த நிலைகளை எல்லாமே, வாழ்ந்து அனுபவம் கண்ட முன்னோர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவ ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மக்களின் வாழ்வியலுக்கு, ஒரு நடைமுறை அமைத்து தந்திருக்கிறார்கள். அதனோடு, தன்னையும், மெய்ப்பொருளையும் உணர்ந்த ஞானிகள், ஒரு தனிமனிதனை, இப்படி வாழ்க என்று அறிவுறுத்துகிறார்கள். அதையே இயற்கைக்கும், தனக்கும், குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வாக கருதுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியும், ‘தனிமனிதனின் அமைதியே, உலக அமைதிக்கு வழியாகும் ’ என்று சொல்லுகிறார்.

இந்நிலையில், ஒரு மனிதன் எப்படி வாழலாம்? எப்படி வாழவேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பாகும். இதை யாரிடமாவது கேட்டால், என்ன பதில் சொல்லுவார்? நமக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய பதில், ‘நான் நன்றாக வாழவேண்டும். இன்பமாக வாழவேண்டும். நோய் நொடி இல்லாமல், எல்லாம் அனுபவத்தி வாழவேண்டும். நீண்ட ஆயுட்காலமும் வேண்டும், சுகபோகமாக, உலகில் மதிப்பாகவும் வாழவேண்டும்’ என்று தன்னலம் கருத்தாக சொல்லுவார். இந்த பதில் எபோதும் பொதுவானது. இன்னும் சிலர், ‘தானும் நன்றாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு உதவியாகவும் இருப்பேன்’ என்ற வார்த்தையை, இணைத்துக் கொள்வார்கள்.  கூடுதலாக‘நானும், என்குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்’என்று சொல்லுவார்கள்.

முரண்பாடானவர்கள் ‘மற்றவர்கள விட, நான் நன்றாக வாழவேண்டும்’ என்று சொல்வார்கள். அதையே வாழ்வில் கடைபிடிக்கவும் செய்வார்கள். ஒவ்வொரு மனிதனுடைய இந்த எண்ணங்கள்தான், அவனின் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறது. ஒரு குறிபிட்ட வட்டத்திற்குள் நீங்கள், ‘சுயநலமாக, எனக்கு மட்டும்’ என்று எதையாவது நினைத்தால், அது உங்கள் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுகிறது என்பது உறுதி. அது இயற்கையின், நீதிக்கு எதிரானது என்பதை மறவாதீர்கள். ஒரு சுவறில் எறிந்த பந்து, திரும்ப உங்களிடமே வருவதுபோல, உங்களை தாக்கும். இதை பெரும்பாலோர் தன் வாழ்நாளிலேயே, உணர்ந்திருப்பார்கள்.

ஒரு மனிதன், எப்படி வாழவேண்டும் என்பதையே, இன்றைய யோககல்வி முறைகள் போதிக்கின்றன. இதை பக்திவழியிலான கதைகள், ஓர் அளவில் தடுமாறுகின்றன. காரணம் என்னவென்றால், அக்கால மனிதர்களின், அறிவுநிலை, வாழ்க்கைமுறை, செயல்பாடுகள், தகவல் தொடர்பு என்ற குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நிலையில் இருந்தது. இன்றோ உலக மக்கள் அனைவருமே, தன் அறிவிலும், வாழ்விலும் மிக உயர்ந்திருக்கிறார்கள். பக்தி என்ன உண்டோ, அதில் அடிப்படை மாறாமல், எடுத்துக்கொண்டு, கூடுதலாக யோகம் என்ற மெய்ப்பொருளும், இயற்கையோடு தன்னையும் அறியும் பயிற்சி (Upgrade of the human enlightenment) தேவைப்படுகிறது.  இதை அறிவறிந்தோர் உணர்வார்கள். அவர்கள் தன் வாழ்விலும் அதை கடைபிடிக்கிறார்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுகிறார். உங்களுக்குள்ளாகவும், ‘நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’என்ற இந்த கேள்விக்கு, ஆராய்ச்சியை தொடங்குங்கள், உண்மை அறியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-