CJ for You: வேதாத்திரி மகரிசி

வேதாத்திரி மகரிசி

Showing posts with label வேதாத்திரி மகரிசி. Show all posts
Showing posts with label வேதாத்திரி மகரிசி. Show all posts

Positions of the human mind in the world!


 உலகியலில் மனித மன நிலைப்பாடுகள்!

தானும் தனதும்!

பற்றுக பற்றற்றான் பற்றினை -  என்பது ஆசான் திருவள்ளுவர் வாக்கு. பொதுவாகவே மனிதருக்கு, தான் என்ற அதிகார பற்றும், தனது என்ற பொருள்பற்றும் உண்டு. இந்த குறள் சொல்லும் காலமே, இரண்டாயிரம் ஆண்டுகள் என்றால், அதற்கு முன்பே, ‘தான் தனது’ என்ற பற்று இருந்திருக்கிறது என்பதும் அர்த்தமாகிறது அல்லவா?

வேதாத்திரி மகரிசி அவர்கள், தான் தனது என்பதை, தம்பதிகள் என்று சொல்லிவிட்டு, இவர்களுக்கு பிறந்ததே பேராசை, சினம், கடும்பற்று, உயர்வுதாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, வஞ்சம் என ஆறு குழந்தைகள் என்றும் சொல்லுவார்.

இந்த ஆறு களங்களும் நம்மிடமிருந்து நீக்கிடவே, தற்சோதனை என்ற பயிற்சியையும் வேதாத்திரியத்தில் இணைத்து தந்திருக்கிறார். யோக வாழ்வில் சிறக்க இந்த தெளிவு அவசியமாகிறது!


பற்று

வேதாத்திரிய அன்பர்கள் ஓரளவேனும் இந்த விளக்கங்களை பெற்று, தன்னை தன் தற்சோதனை மூலமாக தங்களை காத்துக் கொள்வார்கள் என்று நம்பலாம். ஆனால் உலகில் பெரும்பாலோர் இதில் மூழ்கி தத்தளிக்கிறார்கள் என்றால் மிகையில்லை. தானும், தனதும் தவறல்லவே என்று அவர்கள் நம்மோடு வாதிடவும் செய்வார்கள். மேலும் இது மனிதனுடைய இயல்பு என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். 

தான் தனது என்ற பற்றா மனிதனுக்கான இயல்பு? இல்லவே இல்லை. ஆனால் அதை அறியமுடியாத மயக்கத்தில் மனிதமனம் இருக்கிறது, அப்படியே வாழ்ந்து கொண்டும் வருகிறது.


பற்றில்லாமல் வாழமுடியுமா?

உலகவாழ்வில், இருப்பதையெல்லாம் கொடுக்கும் பரந்த மனப்பான்மையில் யாருமே வாழமுடியாது. வாழும் எல்லோருக்கும், வாழும் காலம் முடியும் வரை எல்லாமும் வேண்டும். ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அது, தேவைக்கும் மேலாக சேர்த்து வைப்பதில் பிரயோஜனமில்லை!

அடிப்படை தேவை என்ன? எவ்வளவு எனக்கும் என் குடும்பத்திற்கும் வேண்டும்? அடுத்தடுத்த பிரச்சனை எழுமானல் இது போதுமானதா? என்ற தெளிந்த அறிவில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, வெறுமனே சேமிக்காமல், அதில் மிகைப்பற்று இல்லாமல், பகிர்ந்தளிப்பது நல்லது தானே?! ஆனால் உடனடியாக யாருமே இந்தக் கருத்துக்கு உடன்பட மாட்டார்கள் என்பது உண்மை!

இந்த உலகில் வரும்போது கொண்டு வருவதுமில்லை, போகும் பொழுது கொண்டு செல்வதும் இல்லை. ஆனால் நம்மோடு, நம் ஆன்மாவோடு எப்போது வந்துகொண்டே இருப்பது, நம்முடைய கர்ம வினை. அவ்வினைகளின் சுமையால் பிறந்தோம். வினை தீர்த்தால் முழுமையில் சரணடைகிறோம். ஆனால், வினை தீர்க்க யோகத்தை அண்டாது, வழக்கம்போல் தான் தனது பற்றில் மூழ்கினால், சுமை கூடுமே தவிர குறைக்க வழி உண்டா?


உழைக்காமல் ஏதுமில்லை!

இந்த உலகில், யாருமே யாரிடமும் கையேந்த மாட்டார்கள் என்பது உறுதியானது. காட்டில் வாழும் மனிதனுக்கு பசியெடுத்தால், மரத்தின் கனிகளை பறிப்பானேயன்றி, கையேந்த மாட்டான். ஆனால் காட்டை அழித்து நகர அல்லது நரக வாழ்க்கைக்கு வந்துவிட்டபிறகு, காடும், வனமும், வயலும், மரமும் அடுத்தவர்களின் சொத்தாகிவிட்டதே. இன்னும் சிலர் எத்தகைய ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்களே தவிர ஏதும் கேட்கமாட்டார்கள். 

ஒருவித இயலாமை என்ற சூழல் வருத்தமில்லாமல், அடுத்தவரை எதிர்பார்க்கும் நிலைக்கு வரவே மாட்டார்கள். தன்னுடைய உடலை விட மனம் அவர்களுக்கு பெரும் பாரமாக இருக்க, யாரேனும் எனக்கு உதவ முடியுமா என்று வாய்திறக்காமல், கண்களால் கூட பேசக்கூடும். 

ஆனால், மிக முக்கியமாக, இந்த உலகில் உழைக்காமல் ஏதும் உனக்கு கிடைக்காது என்ற அறிவுறுத்தல் பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. ஏதாவது உனக்கு வேண்டுமென்றால் உழைத்து அதை கூலியாக பெற்றுக்கொள் என்று அறிவுறுத்தப்பட்டுவிட்டது. இதனால் உலகில் சோம்பேறிகள் இருக்கமாட்டார்கள் என்பது மேற்கத்திய பாலபாடம்!

ஆனால், குழந்தைமுதல் 14 வயது பாலகர்களும், 60 வயதைக் கடந்த முதியவர்களும் என்ன செய்வார்கள்? இவர்களுக்கு உழைக்கும் வலு உள்ளவர்கள் உறுதுணையாக அல்லவா இருக்கவேண்டும்? ஆனாலும் எப்படியோ குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோரால் ஆதரவு கிடைத்துவிடும் என்பது உண்மைதான்.

ஆனால், மனிதர்களில் ஓவ்வொருவரும், தனித்தனியாக திறமை பெற்றவர்கள் அல்லவா? ஒரு நிறுவனத்தின் கார் போல, கைபேசி போல ஒரே மாதிரி இயங்கும் தன்மை இல்லையே?! அதேபோல, அவர்களின் உடலும், வலுவும், ஆர்வமும் வித்தியாசமானதே. இவர்களை எப்படி ஒருமுகப்படுத்தி உழைக்க வைக்கமுடியும்? மேற்கத்திய நாடுகளின் கல்வி அவர்களை ஒரே வடிவான தன்மைக்கு கொண்டுவருகிறது. ஆனாலும் கல்விக்குப்பிறகு, பொதுவாழ்வில் வரும்பொழுது ‘அது’ வேலை செய்வதில்லை என்பது உண்மை.


சுயம் - தன்மானம்

நான் உழைக்காமல் எதும் பெற மாட்டேன் என்பது சிலரின் நிலைப்பாடு. என்னால் முடிந்ததை செய்கிறேன், பெறுவதை பெறுகிறேன் என்பது சிலரின் நிலைப்பாடு. இதுதான் என்னால் முடியும், ஏதேனும் கொடு என்பது சிலரின் நிலைப்பாடு. என்னால் முடியாத சூழ்நிலை, அதை அறிந்து ஏதேனும் கொடு என்பதும் சிலரின் நிலைப்பாடு. உழைக்கின்ற எண்ணமே இல்லாதவனின் நிலைப்பாடு இருப்பதை தட்டிப்பறிப்பது. 

தட்டிப்பறிப்பதுகூட தானாக வரவில்லை, அப்படியான நிலைக்கு அவனை தள்ளிவிட்டதில், முந்தைய சமூகத்திற்கு பொறுப்பு உண்டு என்று வேதாத்தி மகரிசி தன்னுடைய,

‘குற்றவாளி பாவியென்று ஏதுமில்லை உலகிலே, குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்’

என கவியில் சொல்லியுள்ளார்.


யாருக்கு பகிரலாம்?!

தன் தேவை போக,  நிறைவில் இருக்குமானால், உண்மையிலேயே யாருக்கு தேவை என்ற நிலையில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பகிர்ந்தளிக்கலாம். பொருள் இல்லாதோரின் வருத்தம், எவ்வகையிலேனும் உங்களையும், இந்த சமூகத்தையும் பாதிக்கும் என்பது இயற்கையின் விதியே! 

இருப்பதை கொடுப்பது தேவையில்லை. உங்களுக்கே பற்றாக்குறை என்றால் கொடுக்க வேண்டாம். ஆனால் மிகையை தருவதில், தன்னளவில் இது போதும் என்றால், மீதியை கொடுக்கலாமே?

ஆனாலும் இன்னும் வேண்டும், வேண்டும் என பெற்றுக்கொள்ளும் மனநிலையில், இருப்பவர்களுக்கு, பகிர்ந்து கொடுப்பதற்கு ஆர்வம் எழுவதே இல்லை!


இயற்கை நீதி

ஒருவகையில் உங்கள் தேவையை நிறைவேற்றியதில், உங்கள் உழைப்பு இருந்தது எனினும், அதை தந்ததில் இயற்கையின் நீதியும் உண்டு. சரியான உழைப்புக்கு சரியானதும், தவறான உழைப்புக்கு தவறான நீதியும் அமைவதுண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, நீங்கள் ஒருவருக்கு பகிர்ந்தளிக்கும் பொழுது, அதுவும் இயற்கை நீதியில் வரவு வைத்துக்கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு சூழலில் அது திருப்பி அளிக்கப்படுவதும் உண்டு என்பதை மறவாதீர்கள்!


இரட்டை மன நிலை!

நம் வேதாத்திரிய சானலில், கடந்த இரண்டு நாட்களாக, தினமும் நடத்தும் வாக்குப்பதிவில் கிடைத்த பதில்கள் பார்க்கலாமா?!

உங்களிடம் பணம் இருக்கும் பொழுது உங்கள் நிலை; போனா போகுது என்று பத்து ரூபாய் கொடுப்பேன் 58%

அதே பணம் என்னிடம் இருக்கும் பொழுது உங்கள் நிலை; எப்படியும் 50 ரூபாய் தந்தால் எனக்கு நல்லது 60%

இது எப்படி இருக்கிறதென்றால், உனக்கு வந்தா தக்காளி சட்னி, எனக்கு வந்தா ரத்தம்! என்று வேடிக்கையாக சொல்லுவதைப்போல உள்ளது. என்னிடமிருப்பதை நான் ஏதோ கொஞ்சம் தருவேன், ஆனால் உன்னிடமிருப்பதில் பாதி எனக்கு வேண்டும் என்பதாக அன்பர்களின் கருத்து இருக்கிறது!


ஆய்வின் முடிவில்!

பாவமும், புண்ணியமும் இக்காலத்தில் கட்டுக்கதை ஆகிவிட்டது. யார் எப்படிவேண்டுமானலும் வாழமுடியும், வாழலாம் வாழ்நாள் முடியும்வரை என்ற பெரும்போக்கான மனநிலை சூழ்ந்த காலம் இது!

சிலர் இயற்கை எனக்கு என்னதருமோ அதை ஏற்பேன் என்றும், நானே உழைத்து பெறுவேனே தவிர கேட்டுப்பெறவோ, தருவதைப்பெறவோ மாட்டேன் என்றும் பதில் தந்திருக்கிறார்கள். 1) இயற்கை எப்படித்தரும்? ஏற்கனவே நீங்கள் கொடுத்திருந்தால் தானே கொடுக்கும்?! 2) நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் பொழுது சரி, உடல் வளு இழந்த நிலையில் என்ன செய்வீர்கள்?

உலக நாடுகள் பலவும், முதியோர்க்கு சலுகைகள் வழங்குவதற்கு என்ன காரணம்? அவர்களின் தள்ளாமை உணர்ந்து தானே? ஆனாலும் சில முதியவர்கள் உழைக்கத்தான் செய்கிறார்கள். எப்படி? இந்த சமூகம் முன்னேற தாங்கள், வாழ்ந்து கண்ட அனுபவ அறிவின் அடிப்படையில், ஆலோசனை சொல்லி உதவுகிறார்கள் அல்லவா? அதுவே அவர்களின் உழைப்பு.

இருப்பதை பகிர்ந்தளிப்பது என்ற உண்மையை, மனிதர்களை விடவும், ஐந்தறிவு விலங்குகள் மிகச்சரியாக வெளிப்படுத்துகின்றன. காகம் ஒன்று உதாரணம் போதுமே?!


சப்பைக்கட்டு!

சிலர் மிக மோசமான புரிதலில், ஆனால் திடமாக, பொருளாதார நிபுணராக வாதிடுவார்கள்! அதெல்லாம் சரிதான், ஆனால் பற்றில்லாமல் வாழவே முடியாதே, நான் எதற்காக பிறருக்கு பகிரனும், கொடுக்கனும்? என்றுதான் மல்லுக்கு நிற்பார்கள். இவர்கள் தான், எனக்கு ஒன்று, என்வீட்டு ஆளுக்கு ஒன்று என இரண்டாக, முதலில் எடுத்துச் செல்வார்கள்!

இத்தகைய, உழைக்காமல் ஏதும் வராது, நாங்கள் கொடுக்கமாட்டோம். பகிரமாட்டோம் என்ற கருத்து கொண்ட மக்கள்தான், அக்காலம் முதல் இருந்து வந்த, திண்ணை வீடுகளை ஒழித்தார்கள். தண்ணீர் பந்தலை அகற்றினார்கள். சத்திரம் சாவடிகளை இடித்தார்கள். அன்னதானத்தை சிற்றுண்டியகம் ஆக்கிவிட்டார்கள். 

பூகம்பம் ஏற்பட்டு வீடிழந்த மக்களுக்கும், வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கைத் தொலைத்த மக்களுக்கும், புயலால், சுனாமியால், இப்படி பலப்பல இயற்கை பாதிப்பினால் பாதிக்கப்பட்டோர்க்கு, தீடீரென கருணைக் கைகள் முளைத்து உதவி செய்யும். ஆக, இவர்களை பொறுத்தவரை, தாங்கள் ஏதேனும் செய்யவேண்டும் என்றால், பிறர் குறிப்பிட்ட சூழலில் இருந்தாக வேண்டும். அதுவரை நாங்கள், தான் தனது என்ற பற்றில்தான் இருப்போம். பகிரத்தயாராக மாட்டோம் என்ற நிலைப்பாடுகளில் இருக்கிறார்கள்!


முடிவுரை

அன்பர்களே, இது சிந்தனைக் கருத்துக்கான கட்டுரையே, எந்தவகையிலும் இது முடிவான கருத்தாக இருக்கவேண்டும் என்பதில்லை. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் அலசுவோம்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Corona Prevention Game


 கரோனாக்கு எதிரான தடுப்பாட்டம்



தடுப்பாட்டம்

அன்பர்களே, கரோனா நோய் தொற்றுக்கு எதிராக நாம் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் தனக்கு தெரியாமலேயே சிக்கி, தன்னையே இரையாக கொடுத்தவர்கள் நமக்கு பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களை இழந்து தவித்தபடியும், தற்காப்பு செய்துகொண்டும் இரண்டாவது அலையில் சிக்கியுள்ளோம். 

கரோனா இயற்கையின் முரண் என்று சொல்லுவதற்கில்லை. ஏனென்றால் எப்போதோ நாம் இந்த இயற்கையை பழித்ததின் விளைவாக வெகுண்ட இயற்கை, இப்படி நோய் தொற்றாக எழுவதுண்டு. நோயும் ஒருவகையில் நமக்கு நன்மை பயப்பதுதான், எப்படியெனில், குப்பையிலும், மண்ணிலும் விளையாடும் குழந்தை ஒருவித நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்த்துக் கொள்கிறது. இந்த கரோனா நோய்தொற்று அப்படியானதுதான், ஆனால் அதை தாங்கி, திருப்பித்தாக்கும் வலிமையை நாம் இழந்துவிட்டோமோ என்று கருதவேண்டியுள்ளது. 


அன்றும் ஆடினோம்

கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், இன்று நாம் உயிரோடு இருப்பது நிஜம் என்றால், இந்த மனித உயிரினம் தோன்றி, இத்தனை ஆண்டுக் காலமாக எந்தவித நோய்க்கும், நோய்தொற்றுக்கும் ஆளாகாமல், தப்பித்து தொடர் தொடராக, தாய் தந்தை வழியாக பிறந்து வந்திருக்கிறோம் என்பது உண்மைதானே?! பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால் நாம் தடுப்பாட்டம் ஆடித்தான் உயிர் பிழைத்திருக்கிறோம். எனவே கவலைப்படாதீர்கள். கரோனா தொற்றுக்கு எதிராகவும் சரியான தடுப்பாட்டம் ஆடுவோம் என்பது உறுதி. நம்பிக்கை இழக்காதீர். அதேநேரத்தில் அசட்டு தைரியம் கொள்ளாதீர்.



இறப்பும் பிறப்பும்

வேதாத்திரி மகரிசி சொல்லுவார், “இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும், இரண்டு கடவுட்சீட்டு தரப்பட்டுள்ளது. ஒன்றில் நம் வந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொன்றில் தேதி குறிப்பிடப்படவில்லை. அந்த திரும்பும்சீட்டை யாருமே நீக்க முடியவில்லை, இந்த தேதிதான் என்று நாம் குறிப்பிடவும் முடியாது. பயணத்தை ரத்து செய்யவும் முடியாது”

உண்மைதானே?! நாம் பிறந்தபோதே, இறப்பு நிச்சயம் என்று தெரியாது போனாலும், நாம் வாழும் காலத்தில், நம்மை சுற்றி நிகழும் இறப்பின் வாயிலாக, இறப்பு நிச்சயம் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். மிக நெருக்கமானவர் இறந்தாலும், காலப்போக்கில் அதை, அந்த இழப்பை இயல்பாக்கிக்கொண்டு சராசரி வாழ்வுக்கும் வந்துவிடுகிறோம். அவர் இறந்துவிட்டாரே, நான் ஏன் வாழவேண்டும் என்று நாமும் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை. (சில ஜோடிகள் விதிவிலக்கு)

இறப்பு வரும்போது வரட்டுமே, என்று மனதை தேற்றிகொண்டு “மரண பயமின்றி” வாழ்க்கை கடன்களை செய்துவருவோம். அதுபோலவே கரோனாவும் பிறரின் உயிரைபறித்தாலும் நமக்கு பயமில்லை என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்துவருகிறோம்.


கரோனாவின் அறிவு மற்றும் வலிமை

கரோனா தனக்கென்று அறிவு கொண்டுள்ளது. எந்த பொருளுக்குமே உள்ளடக்கமாக அறிவு என்பது உண்டு. அது கல் ஆகட்டும், கல்கண்டு ஆகட்டும், ஆப்பிள் ஆகட்டும், ஆரஞ்சு ஆகட்டும் அறிவு உண்டுதான். கரோனாவிலிருக்கும் அறிவு தன்னை, ஓவ்வொரு சூழலிலும் தன்னை மேம்படுத்துகிறது என்பதை நுண்கிருமி ஆய்வாளார்களும், மருத்துவர்களும் சொல்லுகிறார்கள். குறிப்பாக நுரையீரல் சுவாசம் தொடர்பான மருத்துவர்கள் மிக விளக்கமாக கரோனாவின் செயல்பாடுகளை சொல்லுகிறார்கள்.

தற்போது வந்திருக்கும் இரண்டாம் அலை கரோனா, மறைந்திருந்து தாக்குகிறது என்று “எதிரி ராணுவத்தினரை” சொல்லி விளக்குவது போல விளக்குகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் அல்லது தடயத்தை மாற்றி மாற்றி தன்னை பரப்பிக்கொள்கிறது என்கிறார்கள்.


தடுப்பாட்டம் பலன் தருமா?

இந்திய அரசின் கோவாக்சின், கோவிட்ஷீல்ட் இரண்டும் போதுமான அளவில் தாக்குதலை தடுக்கும் ஆற்றலை மேம்படுத்தி தருகிறது என்கிறார்கள். முற்றிலும் கரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்துகள் இன்னும் ஆராய்ச்சியில்தான் உள்ளது. காலத்தாலும், ஆராய்ச்சியாளர்களின் முயற்சியாலும் சீக்கிரம் உலக மக்களுக்கு கிடைக்கவேண்டும். அதை நாம் இந்த இயற்கையிடமே வேண்டுவோம்.

இதற்கிடையில், நாம் ஒருவகையில் இந்த இயற்கையிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மனிதனும் இயற்கையின் பிரதிதான். ஆனால் மனிதனுக்காக இயற்கை படைக்கப்பட்டது எனும் “தன்முனைப்பு” மிக அதிகமாகிவிட்டது. எந்தவகையிலாவது இயற்கையை கெடுத்துக்கொண்டே இருப்பது என்பது மனிதனுக்கு வழக்கமாகிவிட்டது. 


இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை. மனிதனுக்காக (?!) இயற்கை பணியும் என்பது அர்த்தமில்லாதது. தன்னை முன்னிறுத்தி தன்னையே இல்லாதது ஆக்கிவிடும் பெரும் சக்தி அதனிடம் உண்டு. கொஞ்சமாவது இயற்கையின் முன் நான் அற்பம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.



முன்னெச்சரிக்கை

எப்படியாயினும், எங்கே சென்றாலும், யாரோடு சென்றாலும் முக கவசம் அணிந்து பழகுங்கள். மூக்கையும், வாயையும் மூடவேண்டுமே தவிர, உங்கள் தாடையை மூடவேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எதிரிலிருப்பவர் நண்பராக இருந்தாலும், காதலராக இருந்தாலும் முகமுடி தேவையில்லாது பழகுங்கள் ஆனால் முக கவசம் மறக்காதீர்கள்.

கண்ட இடங்களில் கைவைத்து, கைபிடித்து நடக்காதீர்கள், தேவையற்ற பொருட்களை தொடாதீர்கள். கடையில் பொருட்கள், காய்கறிகள், அசைவ வகைகள் நேரடியாக கை பட்டால் உடனே, அவ்வப்பொழுது 20 நொடி “கை கழுவும்” நீரால் கழுவிக்கொள்ளுங்கள். கையோடு அந்த பாட்டிலையும் எடுத்துச்செல்வது நல்லதே.

தேவையற்ற பயணம், பொழுதுபோக்கு, ஆட்டம், ஆர்ப்பாட்டம் தவிர்த்து விடுங்கள். உங்களுக்கும் பிறருக்குமான இடைவெளி மூன்று அடிதூரம் வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக ஒரு அடியாவது தள்ளி நில்லுங்கள்.

வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் கை கால்களை மீண்டும் அதே 20 நொடி கழுவிக்கொள்ளுங்கள். பிறகு ஆடைகளை தனி அறையில் வைத்துவிட்டு, புதிய ஆடைகள் உடுத்திக்கொண்ட பிறகே யாரோடு அருகிலும் செல்லுங்கள். குறிப்பாக வளர்ப்பு பிராணிகளிடமும் இந்த பாதுகாப்பு பிறகே கொஞ்சுங்கள். 

கவனம், கவனம், கவனம்!


உடலும் இயற்கையே

எப்போதும், தூங்கும் நேரம் தவிர இந்த உடலுக்கும், மனதிற்கும், புலன்களுக்கும் வேலை அளித்துக்கொண்டே இருப்பது மிகக் கொடுமையானது. சுழற்றிய சக்கரம் தானாக நின்றாலும் கூட ஒடு, ஓடு என்று உதைத்து தள்ளிக்கொண்டே இருந்தால் எப்படி? 99% மக்களின் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறது. “அது யார்யா அந்த 1% சதவீகிதம்?” என்று கேட்டால் அதை பிறகு சொல்லுகிறேன். 

இந்த உடலும் நீங்களும் தனித்தனிதான் என்பதை இனிமேலாவது புரிந்துகொள்வீர்களா? இந்த உடலை எவ்வளவு கவனமாக, உங்கள் காதலரைவிடவும் மேலாக, வாழ்க்கை துணைவரை விடவும் மேலாகவும், உங்கள் செல்லத்தை விடவும் மேலாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை எப்போது உணர்வீர்கள்?

யார் சொன்னதையும் கேட்பதில்லை, சொல்வதில் அர்த்தமிருக்கிறதா என்றும் சிந்திப்பதில்லை. பொறுப்பற்ற வகையில் “வதந்தி” பரப்புவர்களும் உண்டுதான் என்றாலும், கிடைக்கும் தகவலின் உண்மை உங்களுக்கு தெரியாதா என்ன? அக்காலம் முதல், உணவே மருந்து என்பது உள்ளது. 


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். (குறள் 942) 


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.  (குறள் 941)


அறியாதவர்களா நீங்கள்? நாம்தான் தாத்தா பாட்டியை எல்லாம் ஓரம்கட்டி வைத்து விட்டோமே? மேற்குலக வெள்ளை ஆராய்ச்சி அறிஞர்கள் சொன்னால்தானே எல்லாம் நம்புவோம்?! அப்படித்தானே?!

உணவு முறை, உணவுப்பொருட்கள், உணவு பழக்க வழக்கம் மாற்றத்தொடங்குக. உடலை பழக்கினால், எந்த நோய்த்தொற்றுக்கும் நீங்கள் தடுப்பாட்டம் ஆடவேண்டாம். உங்களுக்காக உங்கள் உடலே ஆடிக்கொள்ளும்.


சுவாசம் சுருங்கிட்டது?!

இந்த பொருளாதார உலகில் நீங்கள் மற்றவர்களைபார்த்து, பெருமூச்சு விட்டு விட்டே பழகிக்கொண்டீர்கள். அந்த பெருமூச்சை மட்டும் எப்படியோ கற்றுக்கொண்டீர்கள். ஆனால் எப்படி மூச்சு விடுவது? சுவாசிப்பது என்பதை மறந்தே விட்டீர்கள். அதனால்தான் கரோனா நோய்தொற்று காலத்தில், உங்களுக்குப்பதிலாக, இரு இயந்திரக்கருவிகள் சுவாசிக்கின்றன. இந்தக்கொடுமை உங்களுக்கு தேவைதானா?

உள்ளே இழுத்த மூச்சு ஒன்று என்றால் வெளியிடும் மூச்சு மூன்று என்ற அளவில் இருந்தால்தான் அது மிகச்சரியான சுவாசம்.  நுரையீரல் மட்டும் சுவாசம் என்பதில்லை, உதரவிதானம் என்ற வயிற்றின் மேல்பகுதி, ஏறி இறங்கி, காற்றை உள்ளிழுத்து வெளியே தள்ள வேண்டும். 

கை தூக்குக எத்தனை பேர் இப்படியான சுவாசம் செய்கிறீர்கள் என்று!

எல்லா குறைகளையும் நாம் செய்துகொண்டு இயற்கையை பழிப்பதில் ஏதும் அர்த்தமில்லை.


வந்தவேலை என்ன?

இந்த உலகில் பிறந்த நமக்கு வந்த வேலை என்ன என்று தெரியுமா? உங்கள் தாத்தாவைப்போல, அப்பாவைப்போல இருமடங்கு சொத்து சேர்ப்பதா? அல்லது ஏழையாக பிறந்த நீங்கள் கோடீஸ்வரனாக மிளிர்வதா? இல்லவே இல்லை. வாழ்க்கைக்கு பொருள் தேடல் மிகமிக அவசியமே. தேவை என்ற அளவில் நின்றால் போதுமானது. பொருள் தேடலில் வாழ்க்கை வீணடித்தால், எப்போது இன்பமாக வாழ்வீர்கள்?

உங்கள் கண்களால், அடுத்தவரின் வாழ்க்கையை பார்த்து அளவீடு செய்யாதிருங்கள். உங்கள் அடிப்படை தேவை போதுமானதா என்று சிந்தனை செய்யுங்கள். அடுத்தபடியாக உங்கள் வாழ்வை கொண்டாடி வாழ பழகுங்கள். 

நமக்கு வந்த வேலை இரண்டு. 1) தன்னை அறிதல் 2) இன்புற்று வாழ்தல் 

இந்த இரண்டையும் நாம் விட்டுவிட்டோம். ஆனால் இன்புற்று வாழ்வதற்காகத்தான் நான் உழைத்துக்கொண்டே இருக்கிறேன் என்று பதில் தருவார்கள் என்பதே உண்மை.


எப்படி இறப்பது?

வேதாத்திரி மகரிசி “உங்களை அறியாமல் உங்கள் உயிர் போகக்கூடாது என்பது சித்தர்களின் வாக்கு” என்று சொல்லுகிறார். அதாவது, எப்படி நீங்கள் தூங்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, படுக்கையில் தன்னை மறந்து தூங்குகிறீர்களோ அப்படித்தான் நீங்கள் இறக்கவும் வேண்டும்.


உங்களால் முடியுமா?

அதற்கு என்ன வழி? 

சிந்தனை செய்க! வாழ்க வளமுடன்!! 


 -----------------


Photo thanks to: Fusion Medical Animation & News Cn




வேதாத்திரி மகரிசி பிறப்பின் ரகசியம் அறிந்த அவரின் தந்தை




வேதாத்திரி பிறப்பின் ரகசியம்

தன் தந்தையாரின் வார்த்தைகளின்படியே, வேதாத்திரிக்கு;

கடவுள் என்பது எது?

வறுமை என்றால் என்ன?

மனித வாழ்க்கையிலே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன?

என்ற மூன்று கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக, ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். தனது 48ம் வயதில் உலக அமைதிக்காக உலக சமாதானம் (World Peace) எனும் நூலாக, 200 பாடல்களை இயற்றி 1957ம் ஆண்டு வெளியிட்டார்.


அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களுடைய பிறப்பின் ரகசியத்தை, ஓவிய நூலாக நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். படித்து இன்புறுக.

இலவசபதிப்பு மின்னூல் : வேதாத்திரி ரகசியம்

வேதாத்திரி மகரிசி மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து தத்துவங்கள்


வேதாத்திரிய தத்துவங்கள்: Vethathiriya Philosophy Collection (Tamil Edition) Kindle Edition

 
அருட்தந்தை வேதாத்திரி மகரிசி, எளிய மக்களின் ஞானி. தன் வாழ்நாள் முழுதும், மக்களுக்காகவே, மக்களையே இறையாக பாவித்து தொண்டு செய்து உய்வித்தவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற அற்புத மந்திர வார்த்தைக்கு சொந்தக்காரர். எவரொருவரும் தன்னை அறிந்து, உணர்ந்து, அந்த வழியாகவே இறையை அறிந்து கொள்ளும், எளிய யோக சாதனையை, மனவளக்கலை மூலம் இந்த உலகுக்கு தந்தவர். உலக சமுதாய சேவா சங்கத்தின், நிறுவனர்.

ஓவ்வொரு தனி மனிதனும், தன் களங்கங்களை போக்கி, தன்னை மனதை, தன் அறிவை உயர்த்திக்கொள்வதன் மூலமாகவே, எல்லைகளில்லா ஓர் உலகமும், கூட்டாட்சியும், அதன் வழியாக உலக சமாதானமும் மலர வழி அமைத்து, எல்லோரையும் வழி நடத்துபவர். அவரின் தத்துவங்கள், கல்லூரி பாடமாகவும், பாடநூலாகவும் இளைய சமுதாத்தினரை சென்று சேர்ந்திருக்கிறது.

மனம் என்றால் என்ன என்பதற்கும், இறை என்றால் என்ன என்பதற்கும் தெளிவான விளக்கம் கொடுத்தவர். அந்த மனதை அறிந்தாலே அதனுள்ளே உறைந்திருக்கும் இறையையும் அறிய வழி கொடுத்தவர்.

இருபத்தைந்து ஆண்டுகளாக, 1953 ம் ஆண்டு முதலாக, அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களில் துணைவியார், வாசலில் கோலமிடும்பொழுது, மகரிசி சொல்லும் அருளுரைகளையும் எழுதுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த அருளுரைகளை நூலாக பதிவு செய்து, “மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து” எனும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்க அன்பர்கள், வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அருளுரைகளின் சாரத்தை, இங்கே தத்துவமாக விரித்து, கருத்தாக்கம் செய்திருக்கிறேன். அருட்தந்தை வேதாத்திரி மகரிசியின் வார்த்தைளில் கண்ட உண்மைகளை, அவர் சொல்லிச்சென்ற வார்த்தைகளின், அனுபவங்களின் வாயிலாகவே தர முனைந்திருக்கிறேன்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிசி வழி செல்லும் அன்பர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், தேடலை துவங்கும் தனிமனிதருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களை, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

அமேசான் மின்னூல் வரிசையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

https://amzn.to/38ewMWY