Get ready to live now - Part 01
வாழ்வதற்கு தயாராகுக
இது கரோனா நோய்தொற்றின் இரண்டாம் அலைக்காலம். தற்பொழுது ஜெர்மனி நாட்டில், மூன்றாவது அலைக்காலமும் வந்துவிட்டதாக தகவல். எல்லோருக்கும் கொஞ்சமாவது அடிவயிற்றில் பயம் இருக்கும் என்பது உண்மையே. ஏனென்றால், நம்மை பெற்றவர்களை. உடன் பிறந்தோரை, குடும்ப உறுப்பினர்களை, நம் நண்பர்களை, நமக்கு தெரிந்தவர்களை இழந்திருக்கிறோம் தானே! அதுமட்டுமல்லாது, சமூகத்தில் மிகப்பெரும் பெயர்பெற்ற நபர்களும் இந்த கரோனா நோய்க்கிருமியால் தாக்கப்பட்டும் அல்லது எதிர்பாராத, நிரூபிக்கபடாத பக்க விளைவுகளாலும் தங்கள் உயிரை பறிகொடுத்துவிட்டார்கள்.
கரோனா நோய்தொற்றின் எதிர்காலம்!
இந்த கரோனா நோய்தொற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, மருத்துவ அறிவியல் வல்லுனர்கள் பதில் சொல்லும்போது,
“கரோனா இன்னும் பரவும், மக்களிடையே இருக்கும் ஆனால் காலப்போக்கில் பலமிழந்துவிடும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
குரைக்கிர நாய் கடிக்காது என்பது எனக்கு தெரியும், அது அந்த நாய்க்கு தெரியுமா? என்பதுபோலவே “இது கரோனாவுக்கு” தெரியுமா என்ற கேள்வி எழுகிறது.
தற்காப்பு இழந்த உடல்
உலக ஒரே சந்தை பொருளாதாரம் எல்லா நாடுகளிலும் திறந்துவிடப்பட்டு, சராசரி அல்லது கடைக்கோடி மக்களும் ஏற்று தன் எல்லா வழக்க பழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி வைத்துவிட்டது. கிட்டதட்ட ஒரு 50 வருடம் என்று உதாரணமாக எடுத்துக்கொண்டால் கூட, மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் உணவுப்பொருட்கள், நகரத்தில் கிடைப்பதில்லை. நகரத்தில் கிடைப்பது ஊர்களில் கிடைப்பதில்லை, ஊரில் கிடைப்பது கிராம சிற்றூரில் கிடைப்பதில்லை.
ஆனால் இக்காலத்தில் எங்கோ வெளிநாட்டில் கிடைக்கும் “குப்பை” உணவுப்பொருள், கிராம சிற்றூரில் கிடைக்கிறது. அதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். குப்பையை உலகமக்களெல்லாம் விரும்பு சாப்பிடுவதில் என்ன பெருமை இருக்கமுடியும்?
இப்படியாக, நானும் கெட்டேன், நீயும் கெட்டாய் என்று எல்லோருமே உடலின் குறிப்பிட்ட தற்காப்பு சக்தியையும், உடல் உறுப்புக்களின் நல்ல செயல்பாடுகளையும் கெடுத்துக்கொண்டோம் என்பது பொய்யில்லை. திடகாத்திரமான உடல் என்பது நூலிலும், அகராதியிலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் காலமாகவிட்டது. உணவே மருந்து, மருந்தே உணவு என்பது கேலியாகி விட்டது. அதுபோலவே இதைசொல்லியும் வியாபாரமாக்கும் “வியாபாரிகளும்” பெருகிவிட்டனர்.
அருகிவிட்ட சமைத்தல்
பசிக்கிறதா? சாப்பாட்டை கைபேசி வழியாக ஆர்டர் செய்க என்று என்று எல்லோரும் மாறிவிட்டனர். ஏன்? என்று கேட்டால், சமைக்க நேரமில்லை? ஏன் நேரமில்லை? வேறு நிறைய வேலையிருக்கிறது? அப்படி என்ன நிறைய வேலையிருக்கிறது? இதற்கு நீங்கள் தான் பதில் தரவேண்டும்.
ஒரு வீட்டில் சமையல் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லைதான். ஆனால் உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை, உங்களுக்கு பிடித்த உணவாக, நீங்களே அரிசி, காய் கறிகளை தொட்டு, சுத்தம் செய்து கழுவி, நறுக்கி, போதுமான வெப்பத்தில் சமைத்து, ருசிக்கு கூடுதாலக ஏதேனும் சேர்த்து, இறக்கி, குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து, கையால் சாப்பிட்டால், அது உங்களுக்கும், உங்கள் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் பலன் அளிக்குமே.
ஒரு உணவை உங்கள் கைகளால் பிசைந்து சாப்பிடும் பொழுது, உங்களின் சக்தி அவ்வுணவுக்கு சென்று, உணவைக்கூட திருத்தி அமைக்கும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? அதுபோலவே, நீங்களே உணவை சமைத்தால் எப்படியான பலன் கிடைக்கும் என்று சிந்திக்கமுடிகிறதா?
இங்கே சமைப்பதில் ஆண், பெண் இருபாலருமே இணைந்து கொள்வதுதான் நல்லது. முடிந்தால் இதில் குழந்தைகளைக்கூட கொஞ்சம் பழக்கிக்கொடுக்கலாம் என்பது என் தீர்வு.
உணவால், சரியானபடி உடலை வளர்க்காமல், பாதுகாப்பு அளிக்காமல், வேறு எப்படித்தான் வாழப்போகிறீர்கள்?
பல்லாண்டுகாலமாக, தமிழர்கள் வாழ்வியலில் “உணவு” வியாபாரமாக்கபடவே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் இன்றோ, இயற்கையின் கொடையான, தண்ணீரும் விலையாகிப் போனது. காற்றும் விலையாகிக் கொண்டிருக்கிறது ஆனால் இன்னும் பரவலாக்கப்படவில்லை. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் நகரத்தில் வேலையில்லை, உள்ளே வந்துவிட்டால் உணவு, நீர் வாங்குவதற்கு அவைகளிடம் பணமில்லை. பணமில்லா மனிதனுக்கும் உணவு, நீர், காற்று பணமின்றி கிடைக்காது என்றால், யோசித்துப்பார்க்கையில் பயமாக இருக்கிறது.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்!
--------------
Image Thanks to: Brooke Cagle and shutterstock