கர்மா என்பது என்ன?
கர்மா என்றால் சித்தர்கள் இருவினை என்று சொல்லுவார்கள். பழவினை, புகுவினை என்பது சித்தர்கள் வழி, பழவினை என்பது கருவழியெ வரும் வினைகள். புகுவினை என்பது வாழும் காலத்தில் ஒருவன் தானாக பெற்றுக்கொள்வது ஆகும். வடநூலார் மூவினை என்றும், சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று பிரித்தும் சொல்வார்கள். சஞ்சிதம் என்பது கருவழி வினைகள், பிராரப்தம் வாழும் காலத்தில் பெறும் வினை, ஆகாமியம் தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வினைகள் ஆகும்.
கர்மா விதியும் அல்ல, தலையெழுத்தும் அல்ல!
இத்தகைய வினைகள் ஒருவனின் தலைஎழுத்தோ அல்லது விதியோ அல்ல. அவை திருத்தப்பட வேண்டும் என்பதே உண்மை. அதற்காகவேதான் இந்தப்பிறவி செயல்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் பிறக்கும் நாம் வழக்கம்போல வழிமாறிய ஆடுகளாக போய்விடுகிறோம். திருந்து, திருந்து என்று இயற்கை பாடம் புகட்டினாலும் கேட்பாரில்லை. இங்கேதான் இறையாற்றல் நம்மை திசை திருப்புகிறது. ஆனாலும் நாம் அதை உதாசீனப்படுத்துகிறோம்.
குருவை தேடும் காலம் எது?
ஒருவேளை, வாழ்வில் கண்ட ஏமாற்றங்களின் முடிவில் தீர்வு, குழப்பம் தீர வழிதேடல், சலிப்பான நிலையில் வேண்டிய மலர்ச்சி, வாழ்வில் திருப்தியாய் அடுத்து என்ன என்ற கேள்வி இப்படி பலவாறாக காத்திருக்கும் அல்லது அடுத்த நிலைக்கு போக தயாரக இருக்கும் ஓவ்வொரு மனிதனுக்கும் உதவவே வருகிறார் குரு. நாம் தயாராக இருந்தால், நம்மை நோக்கி வர காத்திருக்கிறார் குரு. அப்படியாக நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த ஒப்பற்ற குருவே, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிசி அவர்கள்.
கிடைத்த குருவை பரிசோதிக்க நமக்கு அருகதை இல்லை. ஆனால் அக்குருவை பரிச்சோதனை செய்ய, அந்த குருவின் வார்த்தைகளும், வாழ்க்கையுமே போதும். அப்படியான குருவை சரணடைதலே ஒரே வழி. அதுவே நம்மை நான் யார் என்ற தேடல் நோக்கி நகர்த்தும். மகான் மாணிக்கவாசகர், நிற்பார் நிற்க, நில்லா உலகில், இறைதேடி நாம் செல்வோமே என்று அழைக்கிறார். மேலும், இறைதேடும் அன்பர்களுக்கு ஒருபோதும் கதவைடையாது என்றும் சொல்லுகிறார்.
நாற்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பலன், எளிமை
அந்தக்காலத்திய 12 ஆண்டுக்கால தீட்சைமுறை இன்றி, இன்றே தீட்சை என்ற எளிய முறை குண்டலினி பயிற்சி கொடுத்து, இறை அறியும் வழி சொல்லி, நான் யார் என்ற கேள்வி நோக்கி பயணிக்கச் செய்தவர், வேதாத்திரி மகரிசி. உடலின் வினைப்பதிவுகள் களைய, நோய்கள் தீர, வருமுன் காக்க, எளிய முறை உடற்பயிற்சி, உயிரை காக்க, வாழ்நாள் நீடிக்க காயல்பம், மனதை செம்மை செய்ய, தற்சோதனை, அகத்தாய்வு பயிற்சிகள் இப்படியாக, ஓவ்வொரு தனி மனிதனையும் ஒழுங்குபடுத்தி வாழ்வில் சிறக்க வழிதந்தவர், வேதாத்திரி மகரிசியே ஆகும்.
அடுத்த பிறவிக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்!
எல்லோரும், உலகம் முழுக்க “விட்டுக்கொடுக்காதே” Do not Give Up என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்னடா என்றால், குருவுக்கு விட்டுக்கொடுங்கள் என்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது.
உங்களுடைய இந்தப்பிறவியை, உங்கள் வினைகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். Do Not Give Up for Your Imprints என்று சொல்லுகிறேன் போதுமா? ஆனால் குருவுக்கு உங்களை விட்டுக்கொடுப்பதால் நீங்கள் எந்த வகையிலும் குறைவுபட மாட்டீர்கள். உங்களை குரு தன் தோளில் ஏற்றித்தான் அழகுபார்ப்பார் என்பது உண்மை.
உங்கள் வாழ்வில் நீங்கள் வேதாத்திரி மகரிசியை தவற விட்டால், நீங்கள் இந்தப்பிறவியையே இழந்தவர் ஆகிறீர்கள். ஆம். இந்த உலகில், வாழும் காலத்திலேயே நீங்கள் முழுமை பெற ஒரே வாய்ப்பு தருவது மனளக்கலையே. வேதாத்திரி மகரிசி போல இறை உண்மைகளை, வெட்டவெளி தத்துவத்தை, விளக்கிச்சொல்லி, நான் யார் என்று அறிந்து, அறிவே தெய்வமாக உணரவும், அதற்கு காந்த தத்துவம் என்ற சிறப்பான வழியும் தந்தவர் யாருமே இல்லை. இனிமேலும் அவரைப்போல இறை தத்துவம் விளக்கி நம்மை உயர்த்தவும் யாரும் இல்லை. வேதாத்திரி மகரிசியை சரணடைவோம்.
வாழ்க வளமுடன்.