Today's world in people's sharing! 2
மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 2
இரண்டாம் பகுதி
பகிர்தலின் வளர்ச்சி
ஒரு தனி மனிதனின் கருத்துப்பகிர்வு தடைசெய்ப்பட்டிருந்த காலம் ஒன்றும் உண்டு. அதாவது கருத்து சுந்ததிர தடை. இத்தடை இருந்தால்தான் அரசை விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்று ஒரு கண்டிப்பு அல்லது மக்களிடம் பயம். ஆனாலும் கால மாற்றம் எல்லாவற்றையும் கடந்துவிட்டது.
குழுவாக வாழ்ந்து வந்த மனிதர்கள், பிறர் அறிய முடியாத ரகசிய மொழிகளில் தங்கள் கருந்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இன்றும் கூட சில கிராமங்களில் நடப்பதுண்டு. மேலும் இப்போது, குழு அமைப்பு சிதைந்துவிட்டது. கூட்டுக்குடும்ப அமைப்பும் சிதைந்துவிட்டது. தனித்தனியாக, நான்கு நபர்கள், மூன்று நபர்கள் என்று குடும்பம் சுருங்கிவிட்டது. ஆனால் இது எவ்வளவு மோசமான விளைவுகளைத்தரும் என்பது யாருக்குமே புரியவில்லைதான். அத்தை மாமா என்ற உறவும், கூட்டமும் இனிவரும் காலத்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், குடும்பத்தை விட்டு வெளி நபர்தான் உதவிக்கு வரக்கூடிய சூழல். இனிவரும் காலத்திலாவது மாறவேண்டும் என்று விருப்பம் கொள்வோம்.
இப்படியாக தன் குழுவிடமும், குடும்பத்தாரிடம் மட்டுமே, கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்த மனிதன், கடிதங்கள் வாயிலாக, தன்னை கடந்து தூரத்தில் இருப்பவரிடமும் தன் கருத்தை பகிர முனைந்தான். தொலைத்தொடர்பு புரட்சியில், எழுத்தை தவிர்த்து, தன் குரல் வழியாகவே கருத்தைப் பகிரும் நிலைக்கு உயர்ந்தான். மனிதனின் சிந்தனையில் எழுந்த உச்ச நிகழ்வாக, இணையம் (Internet, Worldwide web)வந்துவிட உலகமே சுருங்கி, தற்போது உள்ளங்கையில், கைபேசி அளவில் அடங்கிவிட்டது. அடேங்கப்பா, என்ன ஒரு அசுர வளர்ச்சி!
பகிர்வோரின் நிலை
இந்த வளர்ச்சிக்கு ஈடாக, சமமாக மனிதன் தன்னை உயர்த்திக் கொண்டானா? என்றால் இல்லை. அவன் அவனளவில் அப்படியே இருக்க, சும்மா சொரிந்து கொண்டிருந்தவனுக்கு கையில் கத்தியை கொடுத்தாக மாறிவிட்டது. அவன் தன்னையே, தன் இனத்தையே வெட்டி வெட்டி ரத்தக்களரி ஆக்கிக்கொண்டு இருக்கிறான். தனக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு உதித்த, இணையம், எல்லோரையும் அள்ளி அணைத்து பினைத்துக்கொண்டது. ஆனால் மனிதன், இன்னொரு மனிதனை இணைத்துக்கொள்ள தவறிவிட்டான்.
இவ்வளவு காலத்திலும் கூட, வரப்பு சண்டைகள் போல எல்லைச் சண்டைகள் ஓவ்வொரு நாட்டிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. எல்லைகள் இல்லா இணையம் சாத்தியமாயிற்று. ஆனால் எல்லைகளில்லா மனோநிலை சாத்தியப்படவில்லை. இதற்கு யார் காரணம்? உலகில் உள்ள பொறுப்புடைய தலைவர்கள் தான்.
உலகின் வல்லரசு யார் என்ற போட்டியில், மார்தட்டிக்கொண்டு, ஒரு கேக்கை இரண்டாக வெட்டுவது போல, உனக்கு பாதி, எனக்கு பாதி என்று நாடுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இன்று, இணைந்து கைகோர்த்து, விண்வெளியில் 400 கிலோமீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து திடல் அளவான, விண்கப்பலில் (International space station-ISS) ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு விண்ணில் எல்லைகள் இல்லை, ஆனால் மனித சமூகம் வாழும் பூமியில் எல்லைகள், “இவர்கள்மாதிரியான “ தலைவர்களுக்கு தேவையாக இருக்கிறது. தலைவர்கள் எவ்வழியோ தொண்டர்கள் என்னும் நிலை என்று மாறுமோ தெரியவில்லை. அது மாற வேண்டும் என்றும் விருப்பம் கொள்வோம்.
அன்பர்களே இதன் நிறைவு பகுதி, நாளை வரும்.