Today's world in people's sharing! | CJ

Today's world in people's sharing!

Today's world in people's sharing!


மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்!



கால மாற்றம்

மக்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல், கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வேகமாக மாறிவிட்டது. அறிவியல் முன்னேற்றமும், தொடர்பு சாதனங்களை எளிமையாக்கி மக்களிடம் கிடைக்கச் செய்ததின் மாற்றமே இது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்தகாலம் போய், குரலாலே பேசி கருத்து பரிமாற்றம் மாறி, முகம்பார்த்து பேசிக்கொள்ளும் மிக எளிய முறைக்கு வந்துவிட்டோம். 

அதுவும் இந்த கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இன்னும் கூடவே மாற்றம் பெற்றுவிட்டது.  வாயிலே சில வார்த்தைகள் மட்டுமே பேசத்தெரிந்த, கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாத, தன் வீட்டு ஆட்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கத் தெரிந்த, வெளி உலகமே தெரியாத, ஆனால் ஒரு சின்ன, பெரிய LED திரையில் மட்டுமே பார்க்கத் தெரிந்த நான்கு வயது குழந்தைக்கு (?!) ஆரம்ப கல்வி பயிலும் நிலை, ஆன்லைனில் வந்துவிட்டது. அந்த குழந்தையிடம் கைபேசி வாயிலாக குரலாக பேசினால் “வீடியோ காலில் வரத்தெரியாதா?” என்று எதிர்கேள்வி கேட்கிறது.

ஆனால் இந்தக் கட்டுரை அலசல் அக்குழந்தைகள் எதிர்காலம் பற்றியதல்ல, எனவே யாரும் கவலைப் படவேண்டம் :P


கடமை

ஒரு பெரும்பான்மையான மக்களுக்கு, தான் அறிந்ததை சமூகத்திற்கு தரவேண்டும் என்ற உந்துதல் எப்போதுமே இருக்கும். அது உண்மையாகவே இயல்பான கடமை. பணம் வாங்கிக்கொண்டு தருதல் என்பது பின்னால் வந்த பிசினஸ் ரகசியம். தான் அறிந்ததை பிறருக்கு தராது இருந்தால், நாம் இந்த உலகில் இன்றுவரை காட்டுமிராண்டியாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, மனித சமூகம் அற்புதமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தது என்பதை, தமிழ்சங்க கால நூல்கள் வழியாக அறியலாம்.

அப்படியான காலத்தில், இந்த உலகின் பல பகுதிகளில், “ஒரு சில மக்கள்” வாழ்க்கை முறை அறியாமல், பிறர் வளம் பறித்து கொள்ளையர்களாக, கொலைக்கார்களாக, பச்சைக்கறி திண்ணும் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே.

தன் அனுபவத்தை, அறிவை இன்னொருவருக்கு பகிர்வதால், பெற்றுக்கொள்ளும் மனிதர், கற்றுத்தரும் மனிதருக்கு அறிவில், ஏறக்குறைய சமநிலை அடைவார். அவருடைய வாழ்வின் உயர்ச்சிக்கு அது உதவும். இந்த அறிவு அனுபவ பகிர்வு, மனிதன் உடல் அசைவுகளை, சைகைகளை, சப்தங்களை மொழியாக கொண்டபோதே வந்திருக்கும். உதாரணமாக, அந்தபக்கம் போகாதே காட்டுயானை இருக்கிறது, புலி இருக்கிறது என்று, எதிர்படும் மனிதனை எச்சரிக்கை செய்திருப்பார்கள். இந்தப்பக்கம் நல்ல பசி போக்கும் பழம் தரும் மரம் இருக்கிறது, நீ சாப்பிட்டுக்கொள் என்று வழிகாட்டி இருப்பார்கள்.

பேசும் மொழி வளர்ந்த பிறகு, மிக எளிதான வேலையாகிவிட்டது. எழுத்தும் வளர்ந்தபிறகு, அறிவு, அனுபவ பகிர்வு எல்லைகளை கடந்துவிட்டது. கடல் கடந்து மனிதர்கள் செல்லச்செல்ல உலகம் சுருங்கி, இப்பொழுது கையடக்க கைபேசியில் அமைந்துவிட்டது. இந்த மாற்றங்கள் எல்லாமே, ஒருவர் தன் அறிவை, அனுபவத்தை பிறருக்கு, பிரதிபலன் பாராமல் பகிர்ந்து கொண்டதால் மட்டுமே. 


பகிர்தலின் வளர்ச்சி

இத்தலைப்பில் அடுத்த பதிவில் காண்போம். காத்திருங்கள்.

வாழ்க வளமுடன்!