கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.
பதில்:
யோகசாதனையில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு நாளும் கிழமையும் திசையும் ஒரு கணக்குமல்ல, தடையுமல்ல. ஆனால் புதிதாக யோகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ள நபர்களுக்கும், சித்திரைத்திங்கள் எனும் தமிழ் புத்தாண்டு நாள் சிறப்பாக இருக்கும் எனலாம்.
ஒரு வகையில் சூரியன், தன்னை புத்துணர்வாக்கிக் கொண்டு, தன்னொளியில் பிரகாசிக்கத் தொடங்கும் நாளாக, தமிழ் சித்திரை மாதம் ஒன்றாம் நாளை எடுத்துக்கொள்ளலாம். வானியல் அடிப்படையிலும், ஜோதிட அடிப்படையிலும் இது சரிதான். மேலும் சூரியனின் உச்சவீட்டாக இருக்கக்கூடிய மேஷ ராசிக்கட்டத்திற்கும் வருகிறது. இந்த மேஷ வீட்டில்தான் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆகிய நட்சத்திரங்களும் அதன் பாதங்களும் இருக்கின்றன. இதன்படி நாம் கவனிக்கும் பொழுது, அசுவினி என்ற நட்சத்திரத்தின் பாதையில், சூரியன் வரும் நாளே ‘சித்திரை மாதம்’ ஆகும். சூரியன் உச்சம் பெறுவது தனிப்பட்ட பாகையில் ஆகும்.
எனினும் சூரியனை, ஆத்மகாரகன், ஆத்மாவுக்கு உரியவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அதேபோல சந்திரனை மனோகாரகன், மனதிற்கு உரியவன் என்று சொல்லப்படுகிறது. சூரியன் எப்படி புத்துணர்வோடு, சித்திரை மாதத்தில் நுழைகிறதோ, அதே போன்றதொரு ஆத்ம புத்துணர்வு, நம் ஆன்மாவுக்கும் கிடைக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில்தான், தமிழ்புத்தாண்டு நாள், யோகத்திற்கும், தவத்திற்கும் உதவலாம்.
மேலும் இது கோடைக்காலம். நீங்களே பார்க்கலாம். பெரும்பாலான மரங்கள் கடந்த மாதங்களில், தன்னுடைய எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு, பூரிப்பாக இளம்பச்சை இலைகளை தன்னுடைய கிளைகளில் படரச்செய்வதை காணலாம். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிதான பச்சைபசேல் என்ற மரங்களை இந்த கோடைகாலத்தில்தான் காணமுடியும். மாமரம் தன் பூக்களோடு மாங்கனிகளை தரும் காலமும் இதுதான். புளியமரம் தன் புளியங்கனிகளை தருவதும் இக்காலமே.
புதிதாக யோகத்தில் இணைவோடுக்கு இது சிறந்தகாலம் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, ஏற்கனவே யோகத்தில் பயணிப்போருக்கு, தங்களின் தவ ஆராய்ச்சிக்கு இக்காலம் உதவும் என்பது நிச்சயமே. நீங்கள் தன்னையறிதலில் உயர்வு பெற இறைநிலையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கின்றேன்.
வாழ்க வளமுடன்
-