CJ for You: tamil

tamil

Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

What is the meaning of அ and உ in the spiritual by Tamil? Truth Explanation


அ நாவும் உ நாவும் சொல்லுவதென்ன? இதை எப்படி ஆன்மீகத்தில் நுழைந்தது? உண்மை விளக்கம்.


தமிழ் மொழிக்கென்று பலதரப்ப சிறப்பியல்புகள் அக்காலம் முதலாகவே உண்டு. தமிழில் இருந்து பிரிந்த மொழி பேசும், ஆய்வாளர்களும், தமிழை சிறப்பித்து போற்றுவதை நாம் காண்கிறோம். சங்க கால இலக்கியங்கள் தமிழிலே கிடைப்பதும், அதை இன்றும் கூட அந்த வடிவத்திலேயே படித்து, விளங்கிக் கொள்வதும் மிக சிறப்பானது ஆகும். தமிழ் மொழியின் காலம், அதன் எழுத்துக்களில் சொல்லப்படுவதுபோல, சந்திர சூரியர் இருக்கும் வரை, என்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதியானது.

மனித வாழ்வியலுக்கு தமிழின் பங்கு அளப்பரியது. மெய்யியல் எனப்படும் இறையறிதலுக்கும், இயற்கை உணர்தலுக்கும், பக்தி வழியிலான வழிபாடுகளுக்கும் தமிழ் என்றும் உயர்வு என்பதில் ஐயமில்லை. தற்கான விஞ்ஞான உண்மைகளுக்கு, சமமான நிறைய உண்மைகள் இருந்தபொழுதும், அவை எல்லாம், பக்தி இலக்கியங்கள் என்று, நாம் தான் ஒதுக்கி வைத்திருக்கோம் என்று சிலர் சொல்லுவதையும் மறுப்பதற்கில்லை. சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் தமிழில் பெரும் பங்கை வழங்கினர். அதுபோலவே சைவ, வைணவ என்று பிரிந்திருந்தாலும், தமிழில் இறை உண்மையையும், விளக்கங்களையும் தருவதில் குறைஏதும் வைக்கவில்லை.

அப்படியாக, மெய்யியலில், மெய்ப்பொருள் இறை விளக்கத்தில் வந்து, கலந்து, சராசரி மக்களின் வாழ்வியலில் நின்றதுதான், இந்த அ நாவும் உ நாவும். அ என்பது அருவம் என்ற மாயமான ஒன்றை சொல்லும் குறிப்பாகும். உ என்பது உருவம் என்ற உணர்தல் வகையில் தரப்படும் குறிப்பாகும். அது ஏன் உணர்தலாக? என்றால், அதற்கு வடிவம் இல்லை என்பது விளக்கமாகிறது. இந்த அருவம், உருவம் என்பது எப்படி அர்த்தமாகிறது என்றால், ஒன்றுமில்லாதது, ஒன்றானது என்று சொல்லப்படுகிறது. அருவமே வெட்டவெளியாக, பாழ் ஆக குறிப்பிடப்படுகிறது. ஆதியாக இருந்தது பகவன் என்றாகி முதலாகவும் ஆனது என்ற திருவள்ளுவரை இங்கே நினைவு கூறலாம். விஞ்ஞானத்தில் மேட்டர் என்ற ஒன்றுமில்லாது, எனர்ஜி என்று ஆற்றலாக சொல்லப்படுவது போல. விஞ்ஞானத்திலும், இந்த மேட்டர், எனர்ஜி பிரிக்கமுடியாது என்கிறார்கள். அதுபோலவே அருவமும், உருவமும் பிரிக்கமுடியாது. 

இந்த உண்மையை, மெய்ப்பொருள் உண்மையை, குறிப்பாக அறிந்துணரும்படி,  அ, உ என்று சொன்னதுபோக, அதை மேலும் குறிப்பாக 8, 2 என்றும் குறிப்பிட்டனர். அதாவது தமிழ் எண்களாக. இப்போது அவை, தமிழ் எண்கள் வழக்கொழிந்து போய்விட்டது. உலகில் எல்லோரும் அரேபிய எண்களைத்தான், பயன்படுத்துகிறோம். எனினும் 0 என்பது இந்தியாவின் பங்கு என்று நிலைத்துவிட்டது.

அ என்பது தமிழ் எண்களில் 2 என்றும், உ என்பது தமிழ் எண்களில் 8 என்றும் எழுதப்படுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, குறிப்பிடும் பொழுது, ‘எட்டும் ரெண்டும் அறியா மூடருக்கு, எதைச் சொன்னாலும் விளங்கிவிடுவதில்லை’ என்ற சொல்வழக்கு இருந்தது என்கிறார். அந்த அளவிற்கு இது, சாராரி மக்களின் பேச்சு வழக்கிலும் கலந்துதான் இருந்திருக்கிறது. இன்றோ அப்படியில்லை.

இன்றும் கூட சில வயதான, அக்கால வாழ்வியலில் இருந்து மாறாத பெரியவர்கள். ஏதேனும் காகிதத்தில் எழுதும் பொழுது, உ என்று எழுதி தொடங்குவதை காணலாம். சிறுவயதில் நானும், இது என்ன உ? என்று கேட்டிருக்கிறேன். ‘இது பிள்ளையார் சுழி, இப்படி எழுதுவது, கடவுள் வணக்கம் போல’ என்று பதில் தருவார்கள். தமிழ் எழுத்தில் ஆரம்பம் என்றால், அ அல்லவா எழுதவேண்டும், இது என்ன உ? என்று அப்போதே குழம்பியதும் உண்டு. மனவளக்கலையில் இணைந்துகொண்ட பிறகுதான் உண்மை தெரியவந்தது. உ என்பது உருவம். இந்த உருவம், அருவத்தில் இருந்து ஆரம்பித்தது. ஐம்பூத தோற்றங்களால் மலர்ந்தது என்பதும் உண்மையாகிறது. இந்த ஐம்பூத தன்மையின் வெளிப்பாடாகவே, பிள்ளையார் (ஐந்து கரம்) என்றும் நின்றது உண்மைதானே? அருவம், உருவாமாகி, ஐம்பூதங்களாக மாறியது, பிரபஞ்சமாக, சூரியனாக, பூமியாக, சந்திரனாக, இயற்கையாக, தோற்றங்களாக, புல், செடி, மரமாக, ஜீவனாக, மனிதனாக எழுந்து நின்ற எழுச்சியும், பரிணாமமும் இங்கே காட்சியாக நிற்கிறது அல்லவா?

இதுதான் அந்த அ நாவும் உ நாவும் உணர்த்தும் உண்மைகளாகும். இவ்வளவு எளிமையாக, விளக்கமாக, அறிந்து, உணர்தலாக இருந்த வாழ்க்கை, திசை மாறி, எங்கெங்கோ சிக்கி சின்னாபின்னமாகி நிற்கிறது எனினும், அவ்வப்பொழுது, இதுதான் உன்பாதை என்று இழுத்து வந்து நிறுத்தும் உண்மைகள்தான், நம்மை காக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

What is the truth and meaning of Culture?


கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன், ஐயா, கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கத்தை நாங்கள் அறியலாமா?


பதில்:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்குகிறார், 

நம்மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை"  "ஆச்சாரம்"  என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word).  இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால், இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக அறிவின் நுட்பத்தினாலே,  கைத்திறனாலேயே உருமாற்றி,  அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள்,  அது தான் கலை. 

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு  தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால்,  அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்".  துன்பம் எழாமல் காக்கக்கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு,  இது எல்லாம் பார்த்தோமானால்,  அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள்.   அதனால்,  கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்;  நல்ல அழகான சொல்லாக இருக்கிறது,  நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள்.  "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி,  அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.    

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


What is the truth of Tamil new year and will it help for meditation?


தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.

பதில்:
யோகசாதனையில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு நாளும் கிழமையும் திசையும் ஒரு கணக்குமல்ல, தடையுமல்ல. ஆனால் புதிதாக யோகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ள நபர்களுக்கும், சித்திரைத்திங்கள் எனும் தமிழ் புத்தாண்டு நாள் சிறப்பாக இருக்கும் எனலாம்.

ஒரு வகையில் சூரியன், தன்னை புத்துணர்வாக்கிக் கொண்டு, தன்னொளியில் பிரகாசிக்கத் தொடங்கும் நாளாக, தமிழ் சித்திரை மாதம் ஒன்றாம் நாளை எடுத்துக்கொள்ளலாம். வானியல் அடிப்படையிலும், ஜோதிட அடிப்படையிலும் இது சரிதான். மேலும் சூரியனின் உச்சவீட்டாக இருக்கக்கூடிய மேஷ ராசிக்கட்டத்திற்கும் வருகிறது. இந்த மேஷ வீட்டில்தான் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆகிய நட்சத்திரங்களும் அதன் பாதங்களும் இருக்கின்றன. இதன்படி நாம் கவனிக்கும் பொழுது, அசுவினி என்ற நட்சத்திரத்தின் பாதையில், சூரியன் வரும் நாளே ‘சித்திரை மாதம்’ ஆகும். சூரியன் உச்சம் பெறுவது தனிப்பட்ட பாகையில் ஆகும்.

எனினும் சூரியனை, ஆத்மகாரகன், ஆத்மாவுக்கு உரியவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அதேபோல சந்திரனை மனோகாரகன், மனதிற்கு உரியவன் என்று சொல்லப்படுகிறது. சூரியன் எப்படி புத்துணர்வோடு, சித்திரை மாதத்தில் நுழைகிறதோ, அதே போன்றதொரு ஆத்ம புத்துணர்வு, நம் ஆன்மாவுக்கும் கிடைக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில்தான், தமிழ்புத்தாண்டு நாள், யோகத்திற்கும், தவத்திற்கும் உதவலாம். 

மேலும் இது கோடைக்காலம். நீங்களே பார்க்கலாம். பெரும்பாலான மரங்கள் கடந்த மாதங்களில், தன்னுடைய எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு, பூரிப்பாக இளம்பச்சை இலைகளை தன்னுடைய கிளைகளில் படரச்செய்வதை காணலாம். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிதான பச்சைபசேல் என்ற மரங்களை இந்த கோடைகாலத்தில்தான் காணமுடியும். மாமரம் தன் பூக்களோடு மாங்கனிகளை தரும் காலமும் இதுதான். புளியமரம் தன் புளியங்கனிகளை தருவதும் இக்காலமே.

புதிதாக யோகத்தில் இணைவோடுக்கு இது சிறந்தகாலம் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, ஏற்கனவே யோகத்தில் பயணிப்போருக்கு, தங்களின் தவ ஆராய்ச்சிக்கு இக்காலம் உதவும் என்பது நிச்சயமே. நீங்கள் தன்னையறிதலில் உயர்வு பெற இறைநிலையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்
-

What is the need of truth of Pongal festival?


பொங்கல் பண்டிகை குறித்த உண்மை என்ன? இது தேவைதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொங்கல் பண்டிகை குறித்த உண்மை என்ன? இது தேவைதானா?

பதில்:
மனிதர்களாகிய நமக்கு தேவைதான். பண்டிகை என்றால் பண்டு+ஈகை= பண்டிகை என்றாகிறது. சமூகத்தில் இருக்கின்ற மனிதர்கள் ஒருவருக்கொருவர் பொருட்களை, முழுமனதோடு பகிர்ந்து அளிப்பது என்று பொருள்தரும். இங்கே ஈகை என்பது, எதிர்பார்த்து கொடுப்பது அல்ல, தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலும் அல்ல. தன்னிடம் இருக்கின்ற மிகுதியை பிறருக்கு அளிப்பது என்று அர்த்தமாகிறது. இது தமிழர்களின் சிறப்பம்சம், சித்தர்கள் வகுத்த வாழ்க்கை நெறியின் அடிப்படையில் மலர்ந்தது என்றும் சொல்லமுடியும். ஏனென்றால் சித்தர்கள், தங்களுடைய வாழ்வில், ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று நிலைகளின் அடிப்படையில்தான் வாழ்ந்தார்கள், அதையே மக்களுக்கும் தந்து முறைப்படுத்தினார்கள்.

இங்கே பொங்கல், என்பது இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி போற்றும் விதமான ஒரு வழிபாட்டு நிலை என்பதையும் நாம் குறிப்பிடவேண்டும். பொதுவாகவே மனிதன் தன்னளவில், இயற்கையக் போற்றி வந்தவன். தன்னை காப்பதும் இந்த இயற்கைதான் என்று அறிந்துகொண்ட மனிதன், இயற்கையை தெய்வமாக வணங்குவதில் தவறு இல்லையே? அந்த நிலையில், தினமும் எழுந்து மறைந்து, மீண்டும் தோன்றும் சூரியனுக்கு வணக்கமும், நன்றியும் தெரிவிக்கும் நாளாக, பொங்கல் அமைந்திருக்கிறது.

இது தமிழர் திருநாள் என்று சொல்லுவதற்கு சான்றாக, பழங்கால சங்கப்பாடல்கள் நமக்கு உதவுகிறது எனலாம். இங்கிருந்து மக்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்ததில், இந்த பொங்கல் பண்டிகையும் பலவேறாக திரிபு பெற்று வெவ்வேறு நிலைகளிலும், பெயர்களிலும் மாறி இருக்கவும் வாய்ப்புள்ளது.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த பொங்கல் நாளில், அதன் சிறப்பு குறித்தும், யோகத்தோடு இணைந்து நிறைய கவிகள் படைத்துள்ளார். 

“பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற."
"பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க
பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."

இன்னொரு சிறப்பு என்னவென்றால், சூரியனின் வானியல் நகர்வு முக்கியமானது. ஒருமாத காலம், தனுசு ராசி நட்சத்திர கூட்டத்தில் இருந்துவந்த சூரியன், மார்கழி மாதம் என்ற தெய்வீக தன்மைகொண்ட காலம் முடித்து, தன்னை மீண்டும் பொலிவோடு, மகர ராசி நட்சத்திரக் கூட்டத்திற்கு நகர்கிறது. அதுவே தை மாதம் முதல் நாளாகிறது. இன்னொரு சிறப்பாக, சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வும், நின்று இனி தெற்கு நோக்கி நகர்ந்திடும். இதை உத்தராயணம், தெட்சினாயணம் என்றும் சொல்லுவார்கள். அதையும் அறிந்துணர்ந்த தமிழ் முன்னோர்கள், சூரிய வழிபாட்டு நாளாகவும், பொங்கல் பண்டிகை நாளாகவும் அமைத்தார்கள். மேலும் அந்த நாளின் சூரியன், மனிதர்களின் உயிருக்கும், அதே நேரத்தில் சந்திரன் மனிதர்களின் மனதிற்கும் ஊட்டமளிக்கிறது.

எனினும் இதையெல்லாம் மறுத்து, அதெல்ல, இதெல்ல, அப்படி, இப்படி என்று மறுத்துப்பேசுபவர்களை விட்டுவிடலாம். அவர்களின் உரிமையில் அது தேவையில்லை என்றால் விட்டுவிடோம். உங்களுக்கு விருப்பம் இருக்கும் நிலையில், உண்மை அறிந்த நிலையில் கொண்டாடுவது தவறில்லை. இந்த பண்டிகை வழியாக, இந்த ஒரு நாளில், உங்கள் மனதை மாற்றியமைக்கிறீர்கள் என்ற உண்மையையும் புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
-

Build-up bulwark around me


நீண்ட நாட்களுக்குப்பிறகு தொடர்கிறேன்...

எல்லோருமே என்னை விட அறிவாளிகளாகிக்கொண்டிருப்பதாகவும், நான் முட்டாளாகிக்கொண்டே இருப்பதாகவும் (ஏற்கனவே அப்படித்தானோ) தோன்றுகிறது. இந்த 48 வயதை நெருங்கும் நேரங்களில் காலம் நன்கு பாடம் நடத்திக்கொண்டிருப்பதால் இருக்கலாமோ?!

போதுமப்பா என்று எல்லாவற்றிலும் ஒரு நிறைவு, புதிய பொழுதுபோக்கு முயற்சிகளில் ஆர்வமின்மை. என் கடந்த உலகை விட்டுக்கொடுக்க இயலாமல், கண்ணால் காணும் புதிய உலக நோக்கம்.  காதை தீய்க்கும் இசையிலிருந்து பாதுகாக்க புதியஇசை கேளாமை,  சில வரி ஆரம்பத்திலேயே விசயம் சொல்லாமல் இழுக்கும் கதை தவிர்த்தல், அதீத ஆர்ப்பாட்ட கவிதை, எழுத்து, குளத்தில் பாறாங்கல்லை போட்டதைப்போல குழப்பவாதிகளின் கட்டுரைகள் விட்டு ஓடிவிட தோன்றுகிறது.

எதற்கு சிரிக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ள இயலாத நகைச்சுவையில் தொலைக்காட்சி, திடீர் திடீர் என அழுவாச்சி அல்லது நெஞ்சு பூரிப்பு அப்படியே எதிர்பதமாக வில்லத்தன்மை, போட்டி, பொறாமை கூடவே ஆவிகளும் பேய்களுமாக தொலைக்காட்சி தொடர்கள்...

செய்தி திரித்து நாடி பிடிக்கும் செய்தி தொலைகாட்சிகள், நிம்மதியை குலைக்கும் விளம்பரங்கள்...

எதைபோட்டாலும் புரிந்துகொள்ளாமல் ஆளைக்கவ்வும் பேஸ்புக் நடைமுறை

கீச்சிலும் வன்மம் கொடுக்கும் வல்லூறாக அப்டேட்கள்

தலைப்பில் நிர்வாணம் காட்டும் யுடுயூப் பதிவுகள்...

போதும்... எனக்கான சுதந்திரத்திற்காக நான் போராட வேண்டியதில்லை. என்னைச்சுற்றி ஒரு சுவர் அமைத்துக்கொண்டால் போதும்போலிருக்கிறது... என்ன ஒரு முரண்?!

Emperor Rajendracholas Cholieshwaram


கிட்டதட்ட பதிமூன்றுவருடங்களுக்குப்பிறகு கங்கைகொண்ட சோழபுரம் நேற்று, தை மாதம் 3ம் நாள் சென்றுவந்தேன், கங்கைகொண்டான், சோழப்பேரரசன் இராஜேந்திரனின் (கிபி. 1014 ) ஆயிரமாண்டு பெரும் விழாக்காலம் இது,,,

அப்போதைய நாட்களில் இவ்வளவு கூட்டமும் இல்லை, வெளியே இருந்த கடைகளும் இல்லை. பொதுவான மரபுப்படி சுற்றுலாத்தலம் வியாபரத்தலமாகவும் மாறிக்கொண்டிருக்கண்டேன்.

நல்ல வெயிலும், வெளிச்சமும் கிடைத்தமையால் நல்ல ஒளிப்படம் கிடைத்தது... அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஒரு ஓவியனாக வரையும் நான் அங்கே ஓவியம் வரையவில்லை. அங்கே வந்திருந்த கட்டிடவரையியல் பயிலும் மாணவி, மாணவச்செல்வங்களும் ஆங்காங்கே உட்கார்ந்து, வாட்ஸாப்பும், பேஸ்புக்கும் பார்த்து, ஆண்ட்ராய்ட் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்தனர்.

வேறு சில துடிப்பான இளைஞர்கள், கிடைத்த புல்வெளியில் படுத்தும், உட்கார்ந்தும் காதுக்குள் பாடலை ஒலிக்கவைத்துக்கொண்டிருந்தனர்.  புது கணவன்மார்கள் தங்கள் மனைவியரை அழகாக கைபேசியில் பதிவு செய்துகொண்டிருந்தனர். குழந்தைகளில் சிலர் கைபேசியிலும், சிலர் நிஜமாகவே ஓடியும் விளையாடிக்கொண்டிந்தனர்,

காலம் மாறிக்கொண்டிருக்கிறது... பேரரசன் ராஜேந்திரனின் கற்படைப்போ எல்லாவற்றையும் பார்த்துகொண்டு நிலைத்து நிற்கிறது,,,, இன்னும் நிற்கும்.

தை மாத இறுதியில், சோழீஸ்வரருக்கு குடமுழக்கு நடக்கவிருக்கிறது...
















வண்ண ஓவியத்தில் மலர்களும், கொடிகளும்...

சிற்பக்கலையோடு கொஞ்சம் வண்ண ஓவியமும்



உச்சியாக இருந்தாலும் சிற்ப செதுக்குதலில் நிறைவான பணி




இப்போதும் படிக்கக்கூடிய தமிழ் எழுத்து - கல்வெட்டில்