We are supernatural in evolution but why we are struggle on life by simple things?
மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்தாலும் கூட, வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுவது ஏன்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்தாலும் கூட, வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுவது ஏன்?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
இந்த உலகத்தில், பரிணாமத்தின் வழியாக, இறையாற்றலின் தன்மாற்றமாகவே ஜீவனாகி, மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்து வருகிறோம். என்றாலும் அந்த வாழ்க்கையில், நீங்கள் குறிப்பிட்டதுப்போலவே வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுகிறோம். அதுகுறித்து சிந்திப்போம்.
ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும் வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்? ஏன் அமைதியான சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம் ? ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன். நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டு போகிறீர்கள். போகும் வழியில் விதவிதமாக பூக்களும் பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன, அவற்றை வாங்கி பையை நிரப்பிக் கொள்கிறீர்கள். பின்னர் கடைத்தெருவுக்குப் போய் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால் அவற்றை வைக்க பையில் இடமில்லை, பையில் தான் ஏற்கனவே நிரப்பிவிட்டீர்களே!
இப்போது உங்கள் பிரச்சனை என்ன? ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ, அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா? அல்லது காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா? கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.
ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம்.
வாழ்க வளமுடன்.
-