How to understand the pattern, precession and regularity? | CJ

How to understand the pattern, precession and regularity?

How to understand the pattern, precession and regularity?


தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        நாம்  வாழும் இந்த நவீன அணுவியல், வானியல் விஞ்ஞான உலகில், மேட்டர் என்ற நிறையையும், எனர்ஜி என்ற ஆற்றலையும், தனிப்பட்டு விளக்கிட முடியாமல், இருப்பதை அப்படியே ஏற்று, எல்லாவகையான முன்னேற்றங்களையும் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆன்மீக வழியில், உண்மை உணர்ந்த மெய்ஞானிகள், இந்த மேட்டர் மற்றும் எனர்ஜியில் என்ன உள்ளது என்பதையும், அதை எப்படி உணர்ந்தும் கொள்ளலாம் என்றும் விளக்குகிறார்கள். இதோ வேதாத்திரி மகரிஷி, அதனில் இருக்கும் உள்ளடக்கத்தை விளக்குகிறார்.

உலகம் என்று எடுத்துக்கொண்டால், அதன் அளவு என்ன? இரசாயனங்களில் அளவு என்ன? என்பதனை இன்றுள்ள விஞ்ஞானிகள் ஓரளவிற்கு உணர்ந்துள்ளார்கள். அந்தக் காலத்தில் இருந்தவர்களும் ஓரளவிற்கு இந்தக் கிரகத்தில் இன்னின்ன சக்தி அதிகம் என்று சொல்லியிருக்கிறார்கள். எந்தப் பொருளால் ஒன்று ஆக்கப்பட்டதோ அது அதன் தன்மை. 

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரு சுற்று தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனைச் சுற்றும் பாதையில் மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சென்று 365¼ நாளில் அதை வலம் வருகிறது. இது சிறிதும் காலம் தவறாமல் சரியாக அமையும். இதுவே அதன் துல்லியம். 

இரசாயனப் பொருட்களிலுள்ள நுண்ணணுவின் சுழல் விரைவுக்கேற்ப காந்தத் தன்மாற்ற வேறுபாடுகள் உண்டாகின்றன. அதே விண்துகள்களின் சுழல் விரைவுக்கேற்ப அதன் திணிவும் வடிவமும் அமைகின்றன, இதுவே வடிவம். 

        பரமாணு நிலையிலிருந்து அவை கூடி ஒரு சிறு வடிவமாக மாறி, குறிப்பிட்ட விரைவில் இயங்கும்போது ஏற்பட்டு மாறிக்கொண்டே வரும் ரசாயனத் தன்மைகளும் மற்ற சிறப்புகளும் துல்லியம் அல்லது தன்மைகள் ஆகும். 

இந்த இயக்க நியதி மாறாது. பூமி தன்னுடைய மற்ற இயல்பூக்கத்தையும் நடத்திக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. இச்செயல்பாட்டைத்தான் இயக்க ஒழுங்கு என்கிறோம். இதுவே காலம் அல்லது இயக்கச்சீர்மை ஆகும். 

        பூமி அதிக அளவு சூடு ஆகிவிட்டதென்றால் வெப்பக் குழம்பை “எரிமலை” யாக வெளியேற்றுகின்றது. இது காலத்தால் நடக்கும் இயக்க ஒழுங்காகும். இதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்று குணங்களும் உண்டு. 

ஒரு ரோஜாச்செடியை எடுத்துக் கொண்டால் அதன் இலை, தண்டு இவ்வாறுதான் இருக்கும் என்பது அதன் தன்மை. 

        ஒரு விதையைப் போட்டால் இத்தனை நாட்களில் செடி வளரும். இத்தனை நாட்களில் பூ பூக்கும். அந்தப் பூவை உண்டால் இன்னது ஏற்படும். இது விளைவு. இவை துல்லியம். அது பூத்தவுடன் அதன் இதழ்கள் வாழும் காலம், அது குறிப்பிட்ட காலத்தில் தளர்ச்சியுற்று இலையுதிர்வது, அது இத்தனை நாட்கள்தான் வளரும், வாழும் என்பது, அந்தச் செடியின் முடிவு இவையெல்லாம் காலத்தை ஒட்டி நடைபெறுவது இயக்க ஒழுங்காகும். 

இவ்வாறு ஒவ்வொரு சடப் பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும் அதன் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற முத்தன்மைகளையும் காணலாம். 

வாழ்க வளமுடன்.

-