Please explain the truth and secret philosophy of the 'Who Am I?' | CJ

Please explain the truth and secret philosophy of the 'Who Am I?'

Please explain the truth and secret philosophy of the 'Who Am I?'


‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

‘நான் யார்?’ தன்னையறிதலை புரிந்து கொள்வதல்ல, நாமே நமக்குள்ளாக உணர்ந்து கொள்வதாகும், வார்த்தைகளாலும், விளக்கங்காலும் சொல்லி புரியவைத்தாலும், புரிதல் அறிவு என்ற நிலையில் நமக்குள் உள்வாங்கப்படுமே அன்றி, மெய்யறிவாக கிடைத்துவிடாது. கனியை, சுவைத்து சாப்பிடாமல் கையில் வைத்துக்கொண்டு அதன் சுவையை சொல்லுவது போன்றதாகும் என்பதை விளங்கிக்கொள்க. எனினும் உங்கள் கேள்விக்கான விளக்கம் இதோ!

நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே “நான்” என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் “நான்” என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்று வரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது.  ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே “நான்” எனப்படுவது.

ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்பப் பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. ஆகவே “நான்” பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவப் பரிணாமச் சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்பப் பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்பப் பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே “நான்” என்பதாகும். அரூப நிலையில் ஏகமாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே “நான்” என்பதாகும்.

வாழ்க வளமுடன்