What happening between ourselves and our mind when we practice the meditation?
தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
வெறுமனே தியானம் செய்பவர்களுக்கு, ஏதோ அந்த நேரம் மட்டும் அமைதி கிடைப்பதுபோல தோன்றலாம். எனினும் அது உடனே விலகி எப்போதும்போலவே ஆகிவிடும். தகுந்த குரு வழியாக, குண்டலினி தீட்சைபெற்று, உபதேசம் பெற்று தியானம் செய்யும் பொழுதுதான், உயர்ந்த நன்மைகள் பல நிகழும்.
ஆரம்பத்தில் பத்து நிமிடம் குண்டலினி யோக தவம் செய்தோமானால் தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான். அது மாத்திரம் இல்லை நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் செய்யும்போது Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலைக்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது சாக்கரம் என்று சொல்லுவார்கள்.
அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம். அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம். ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.
அந்த நிலையிலேயே நாம் தவம் செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல் அப்படி மனம் ஓடாமல் இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?
ஒன்று முதல் மூன்று (1-3 cycle/second) வரையுள்ள டெல்டா அலைக்கு தவத்தின் மூலம் மனதை (Mind Frequency) பழகிக் கொண்டோமானால் பேரியக்க மண்டலம் (Universe) இறை நிலையிலிருந்து தோன்றிய காலம் முதற்கொண்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் அங்கங்கே என்னென்ன நடந்ததோ அவற்றை எல்லாம் உணரக்கூடிய இடத்திற்கு மனம் (Mind) வந்து விடும்.
ஆகையினாலே நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Simplified Kundalini Yoga) செய்கிறபோதே நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும்.
அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் எல்லா அம்சங்களிலும் உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.
வாழ்க வளமுடன்.
-