Are you out from Vethathiriya?
Are you out from Vethathiriya?
வணக்கம் அன்பர்களே,
உங்களுக்காக ஒர் கவிதை:
யோசி யோசி
-----------
புலன்கடந்த உணர்வொன்று இருப்பதை
தவம்செய்யும் யோகியென்றும் அறிவாரே
வேடதாரிபலர் முளைத்துவிட்ட உலகிலே
போகியேதகு யோகியென்று நிலைத்தனர்
ஐம்புலனும் தன்மனமும் மயக்கமுற்று
பொருளுலகில் மக்களையும் குழப்பினர்
பலபிறவி வேண்டுமென சொல்லிச்சொல்லி
இப்பிறவியை வீண்செய்தல் கண்டீரோ!
மௌனியாய் இருப்பவனை பேசிப்பேசி
விலக்கிடல் இனிதகுமோ யோசியோசி
-
நீங்கள் வேதாத்திரியாவை விட்டு விலகிவிட்டீர்களா?
நீங்கள் வேதாத்திரியாவில் இல்லையா?
இந்த கேள்விகளை யாரும் என்னிடம் கேட்டதில்லை. நான் விலகவும் இல்லை, விலக்கப்படவும் இல்லை. ஆனாலும், இந்த கேள்விக்கான பதிலை, தரவிரும்புகிறேன். இது என்னுடைய சுய விளக்கப்பதிவாக அமையும்.
வேதாத்திரி மகரிஷி அவர்களின், வேதாத்திரியத்தை உங்களுக்கும், மற்றவர்களுக்கும், புதியவர்களுக்கும் எடுத்துச்செல்லும் சேவையில், 1993ம் ஆண்டில், மகரிஷி அவர்களின் நேரிடையான விளக்கமும், ஆசிரியர் பயிற்சியும் பெற்ற நாளிலே இருந்து தொடர்கிறேன். அன்றைய கால கட்டத்தில், அனுபவ விளக்கம் என்பதற்கு பதிலாக, கற்றறிந்த, சொல்லக்கேட்ட, படித்தறிந்த விளக்கம் மட்டுமே என்னிடம் இருந்தது. இந்த இடத்தில் மகரிஷி அவர்கள் சொல்லுகின்ற, ‘உணர்ந்து ஓதுதல், ஓதி உணர்தல்’ என்ற வகையில், தன்னை உணர்ந்து, இவ்வுலகம் முழுதும் வாழும் மனிதர்களின் உடலும் மனமும், வாழ்வும் செழிக்க, தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட, வேதாத்திரி மகரிஷியின் ‘உணர்ந்து ஓதுதலை’ கேட்டுக்கொண்டதும், ‘ஓதி உணர்தலாக’ எனக்கு உதவியது என்பதை நான் அறிவேன்.
‘ஒருகையில் என்னை பற்றிக்கொள்ளுங்கள், இன்னொருகையை இறைநிலை பற்றிக்கொண்டிருக்கிறது’ என்ற மனநிலையில், புதிய அன்பர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் என்று வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதன்படியே நானும் என் சேவையை வழங்கிட தயாரானேன், அப்போதைய ‘Master’ என்ற ஆசிரிய பயிற்சியை, மகரிஷியிடமே கற்றேன். அந்த நிகழ்வில், அங்கே வரைந்த, வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை, அவரிடமே காட்டி, பாராட்டு வார்த்தைகளை பெற்றதும் அனுபவமாக இருந்தது.
அன்றைய மனவளக்கலை மன்றத்தின் வழியாக, சேவைகளை நான் கொடுத்துவந்தாலும் கூட, முழுமையாக, அனுபவமாக, அனந்தமாக அறியாத ஒன்றை, பிறருக்கு பயிற்றுவிப்பதில் எனக்கு நேர்ந்த சங்கடம், அந்த சேவையை தரமுடியாமல், விலக்கிக் கொண்டேன். Pass Through என்ற வகையில், நெருப்பை, இன்னொரு நெருப்புக்கு தருவதில் எந்தக்குறையும் இருக்கப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால், ‘உனக்கு இது தெரியுமா? நீ உணர்ந்திருக்கிறாயா?’ என்று கற்றுக்கொள்பவர் கேட்டால் என்னிடம் பதில் இல்லையே. ‘உங்களைப்போல நானும் தேடிக்கொண்டுத்தான் இருக்கிறேன்’ என்றா பதில் சொல்லமுடியும்?
இதற்குப்பிறகு அவர் கேட்பார். ‘நீ அறிந்திராத ஒன்றை என்னிடம் எப்படி சொல்லுவாய்? எப்படி வழி காட்டுவாய்? வேடிக்கை! ’ என்றுதான் கேட்பார். இத்தகைய காட்சி எனக்குள் வந்துவிட்டதால், முற்றிலுமாக மன்ற சேவையிலும், கற்றுத்தருவதிலும் என்னை விலக்கி, தனியே என்னளவில் ‘வேதாத்திரிய வழியை’ அன்றாட காயகல்ப பயிற்சி, உடற்பயிற்சி, தவம், ஆராய்ச்சி என்று தொடர்ந்தேன்.
அந்த வழியே பல்வேறு அனுபவங்களுக்குப்பிறகு, 2016ம் ஆண்டில், ஒரு விபத்து நிகழ்ந்த நாட்களில், கூடுதலாக கிடைத்த ஓய்வில், முழுமையாக ஆராய்ச்சியில் இறங்கினேன். அடுத்ததடுத்த நாட்களில், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய மனம் என்ற நூலில் சொல்லியிருப்பதைப்போல, எனக்கும் இறைவிளக்கம் அனுபவமாகியது. ‘நான் யார்?’ என்ற உண்மை விளக்கமும் கிடைத்தது. இதற்குப்பிறகுதான் எனக்கு ‘உணர்ந்து ஓதுதல்’ கைவசம் ஆகியது. அதனால்தான், பிறருக்கு ‘ஒதி உணர்தலை’ தருவதற்கு தயாரானேன். ‘வேதாத்திரிய சானல்’ என்ற YouTube சேவை 2018ல் ஆரம்பிக்கப்பட்டது.
-
பொதுவெளியில் பல்வேறு குப்பைகளுக்கு இடையே, ரத்தினங்களை தேடுவதுபோலவே கடினமான நிலையிலும், எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியத்தை நான் என்னுடைய அனுபவத்தில் தந்து கொண்டு இருந்தேன். நேரடியாக, வேதாத்திரி மகரிஷியின் விளக்கத்தை சில வகைகளில் நாம் புரிந்து கொள்வது கடினமே. இதை வேதாத்திரி மகரிஷியே சொல்லியுள்ளார். அதனால் நான் எப்படி புரிந்து கொண்டிருக்கிறேனோ அந்த வகையிலும், அதன் உண்மைத்தன்மை மாறாமலும், பதிவாக கொடுத்தேன். பல்லாயிரக்கணக்கான ‘வேதாத்திரிய சானல் அன்பர்கள்’ இந்த உண்மையை அறிவார்கள்.
என்றாலும் கூட, சில அன்பர்களின் தனிப்பட்ட கருத்து மோதலும், வார்த்தை தாக்குதலும் எனக்கு சோர்வை தந்தன. பொதுவாகவே, ஆன்மீகம் என்பதை, ‘கேட்காமல் பெய்த மழையாக’ இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனக்கு எப்போது தேவையோ, அப்போது அந்த மழைநீரை பயன்படுத்திக் கொள்வேன். ஆனால் நீ பெய்துகொண்டே இரு, அதுதான் உன்னுடைய ஆன்மீக அனுபவத்தின் லட்சணம் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். ஏறக்குறைய, பல்வேறு ஆன்மீக ஞானிகள், யோகிகள் அப்படித்தான் இருந்தார்கள். இப்போதும் சிலர் அப்படியாக இருப்பதை காணவும் முடியும்.
உண்மையறிந்த சில ஞானிகள் ‘இவர்களோடு எதற்கடா வம்பு’ என்ற நிலையில், யாருக்கும் எந்த விளக்கமும் கூறுவதே இல்லை. மௌனமாக இருந்தே கடந்துவிடுவார்கள். வேதாத்திரி மகரிசி, இந்தக்கருத்தையும் அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளார். ‘உண்மை அறிந்த பலர், இந்த உலகத்தில் நம்மிடையே உண்டு. அவர்களை அடையாளம் காட்டாமல், நம்மோடு கலந்து இருக்கிறார்கள்’ என்கிறார்.
சில அன்பர்களை பொறுத்தவரை, ஆன்மீக விளக்கங்களை, யோக விளக்கங்களை தருபவர்கள் ‘முற்றும் துறந்தவர்களாக’ இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தோற்றத்திலும் அப்படி இருந்தால் மதிப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஒரு பைத்தியக்காரனாக, விட்டேத்தியாக, பணத்தையும், பொருளையும் மதிக்காதவனாக, பிச்சைக்காரனாக, யாசகம் கேட்பவனாக, கொடுப்பதை எதிர்க்காமல் வாங்கிகொள்பவனாக, ஜடாமுடி கொண்டவனாக, அடர்ந்த, அழுக்கடைந்த தாடியும், மீசையும் வைத்தவனாக, காவியும், வெள்ளையும், பச்சையும் அணிந்தவனாக, ஒரு அடித்தனம் நிறைந்தவனாக, திட்டினாலும், அடித்தாலும் எதிர்ப்புக்காட்டாதவனாக என்று இத்தனை தகுதிகளையும் கொண்டவனாக இருந்தால் மிக மிக நல்லது. அப்போதுதான் அவர்கள் ‘இவன்’ சொல்லுவதை ஏற்றுக் கொள்வார்கள்.
இத்தனை தகுதிகளும் எனக்கு இல்லை. அதனால் என்னால் முடிந்தளவு, பதிவுகளையும், எழுத்துக்களையும் பகிர்ந்து கொண்டுவந்தேன். அப்போது எனக்கு மற்றுறொரு உண்மை, ஒரு சொற்பொழிவு வழியாக தெரியவந்தது. அந்த உண்மை என்ன தெரியுமா? எவரொருவர் உயிரோடு இல்லாத ஒருவரைப்பற்றி பேசுகிறாரோ, அவர் சொன்னதாக சொல்லுகிறாரோ, அது ஏமாற்றுவேலை. இல்லாத ஒரு மனிதரின் நிழலில் இவர் வாழ்கிறார். இது மக்களை ஏமாற்றி பிழைக்கும் வேலை. இது நல்லதல்ல, என்ற உண்மைதான் அது. இந்த உண்மை என்னை பல்வேறுவகையில், சரியா, தவறா என்று சிந்திக்கவைத்தது. என் அனுபவமாக சொன்னாலும் கூட, இன்னொரு நிழலில்தானே நிற்கிறேன் என்று நினைக்கத்தோன்றியது. இந்த காலகட்டத்தில்தான், பதிவுகளை தொடர்ந்து தருவதற்கு தாமதம் ஏற்பட்டது.
-
எனினும் காலமாற்றத்தில், எனக்கு கிடைத்த வாழ்வியல் ஏற்றம், இறக்கம் கூடி, பதிவுகளை தொடர்ந்து தரமுடியாமல் போய்விட்டது. அதோடு, வேதாத்திரிய உண்மைகளை சொல்லும், கவிதைகள், கட்டுரைகள், விளக்கங்கள் ஆகிய எழுத்துப்பணியும் பாதிக்கப்பட்டது. இதை என் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கும், வினைக்கழிவு என்று புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால், இதை அந்த வகையில், அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
இந்த சிக்கலான காலகட்டத்தில் எனக்கு 2023ம் ஆண்டில் நேர்ந்த மற்றொரு விபத்து, முற்றிலுமாக என்னை உண்மை உணர்வில், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவிட, இனி இப்பாதையில் அடுத்த இலக்கு இல்லை, இதுதான் உன்முடிவான நிலை என்ற விளக்கம் கிடைத்துவிட்டது. வேதாத்திரி மகரிஷியிடம், ‘நீங்கள் இறைநிலையை உணர்ந்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு. ‘நாம் பேசாத போது, இறைவன் பேசுகிறான் என்று முன்னோர்கள் சொன்னார்கள். என் மனதிற்குள்ளாக, மௌனம் என்ற நிலையில், அந்த தெய்வீகத்தை உணர்ந்திருக்கிறேன். அந்தக்குரலை கேட்கிறேன்.’ என்கிறார். இதையே என்னக்குள்ளும் உணர்ந்தேன். ஆனாலும், இந்த வார்த்தைகளின் உண்மையை, சராசரி நிலை மனிதர்களுக்கு விளங்கிக் கொள்வது கடினம் என்றே கருதுகிறேன். ஏனென்றால், எதற்கெடுத்தாலும் நிருபணம் கொடு என்று கேட்கும் உலகமல்லவா?! இறைநிலை என்பது எடுத்துக்காட்டி விளக்கும் பொருளல்ல, அது, தனக்குள்ளாக விளங்கிக் கொள்ளும் உண்மை உணர்வு!
இந்த நிலையில், எனக்கு நேர்ந்த, நானே உண்டாக்கிக் கொண்ட பிரச்சனைகளை சமாளித்து சரி செய்வதற்கு கிட்டத்தட்ட, இரண்டு ஆண்டுகள் ஆகின. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில்தான், என்வழியிலே, நான் அறிந்ததை, பொதுவெளியில் தருவதற்கு, தனித்த அடையாளம் தேவை என்பதை விளங்கிக் கொண்டேன். அதனால்தான். சரேவியோ என்ற பெயரில் (SEREVIYO - SELF REALIZATION WITH VIRTUE AND YOGA) என்ற அமைப்பை உருவாக்கினேன். இந்த அமைப்பை என்னுடைய தனி சேவை நிறுவனமாக AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUCATION உருவாக்கி, MSMEல் (Ministry of Micro, Small and Medium Enterprises of India) பதிவு செய்துகொண்டேன்.
இதற்குப்பிறகு, வேதாத்திரிய உண்மைகளை, என் வழியில் மட்டுமே தருவதற்கு தயாரானேன். எந்த வகையிலும் மற்றொரு சங்கத்தையோ, அமைப்பையோ, மன்றத்தையோ சார்ந்த தர விரும்பவில்லை. அவர்களின் பதிவையும் நான் பகிர்வதை நிறுத்திவிட்டேன். சிலவேளைகளில், இது வேதாத்திரிய உண்மைதானே? பகிர்ந்தால் என்ன? என்று நினைத்தால், இது எங்களுடையது, நீ எப்படி பகிரலாம்? என்று கேள்வி கேட்டு தடுக்கின்றனர். தடையும் செய்கின்றனர். அது என்னுடைய தனிப்பட்ட பகிர்வுகளையும் பாதிக்கும் என்பதால், முற்றிலுமாக ‘தனிவழியில்’ பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.
அது குறித்த விளக்கம் தரவே, இந்த பதிவும் எழுதப்பட்டது. எனினும் உடனடியாக, எல்லா சேவைகளையும் இப்போதே ஆரம்பித்துவிடவில்லை. ஒரு ஆரம்ப நிலையிலே, என்னளவிலே என்ன செய்யமுடியுமோ அதை நான் செய்து கொண்டு வருகிறேன். என்னுடைய அன்றாட பணிகளுக்கு இடையிலே இதுவே போதுமானது என்றும் கருதுகிறேன். ஆனால், என் கைகளை விரித்து ‘வாருங்கள்’ என்றுதான் அழைக்கிறேன். ஏற்புடையோருக்கு நெருப்பை பற்றவைக்க தயாராக இருக்கிறேன், அவ்வளவுதான்.
‘எந்தவொரு பெரும் நெருப்பும்
தானாக பரவுவதில்லை, அருகில்
பற்றிக் கொள்ளும் பொருட்கள்,
அதன் இரையாக இருத்தல்நன்று.
அந்நெருப்புப் பொறியை காற்று
எடுத்துச் சென்றாலும் இதேதான்.
இரையில்லா நெருப்பு தானாகவே
நிறைவாகவே அனைந்தும் விடும்.
இங்கே இழப்பு யாருக்குமில்லை
தானாக இனுமொரு பொறிவரும்’
வாழ்க வளமுடன்.
