CJ for You: no idea

no idea

Showing posts with label no idea. Show all posts
Showing posts with label no idea. Show all posts

What is the meaning of Layman?


‘பாமரன்’ என்றால் என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ‘பாமரன்’ என்றால் என்ன?

பதில்:
பாமரம் என்பதுதான் பாமரன் ஆனது. பாய் + மரம் = பாமரம். காற்றடித்த திசையில் இலக்கின்றி செல்லும் தன்மையுள்ளது பாய்மரம். அதுபோல் குறிக்கோள் இல்லாமல் மனம் போன போக்கில் செல்பவன் ‘பாமரன்’ ஆவான். அறிவின் வழியில் செல்லாதவன்; அறிவற்றவன் என்று பொருள்.

மேலும் விளக்கமாக,
இத்தகைய பாமரன், வாழ்வில் நோக்கம் ஏதுமின்றி, தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வதற்கு தயாராவான். அவன் தன் விருப்பத்திலும், எதிர்பார்ப்பிலும் செயல்கள் செய்துவருவான். அந்த செயலின் விளைவில், தனக்கு நன்மை கிடப்பதாக கருதினாலும் கூட, தனக்கும், பிறருக்கும், இந்த இயற்கைக்கும் பொருந்தாத விளைவை காலத்தால் உருவாக்கிக் கொள்கிறான்.

அதுவே பின்னாளில் அவனுக்கு கர்மா என்ற வினைப்பதிவாக வெளிவந்து, இன்னும் துன்பத்திலும் சிக்கலிலும் வருந்த வைத்துவிடும்!

இந்த பாமரன், ஏற்கனவே தன்னுடைய கர்ம வினைப்பதிவுகளின் தாக்கத்தால்தான், குறிக்கோள் இல்லாத, மனம்போன போக்கில் செல்ல தயாராகின்றான் என்பதை எளிதில் நாம் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் விளக்கம் பெறாத பாமரன், விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். இதனால் அவனுடைய பிறவியும் வீணாகப் போய்விட வாய்ப்புள்ளது. 

அவனின் வழியாக வரும் வாரீசுகளும், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்ற வகையிலும் இது தொடரும். என்றாலும் கூட ஏதேனும் ஒருவழியில், இறையாற்றல் ஒரு பாடத்தை நடத்தி திசை திருப்பும் என்பது உறுதி. அந்த பாடத்தை ஏற்று, வாழ்க்கையில் திருத்தம் அமைத்துக்கொண்டால், பாமரன் என்ற நிலையில் இருந்து விலகி, நன்மையை நோக்கியும், பிறவி உண்மையையும் அறிய வாய்ப்பு கிடைக்கும். இல்லையே திசையற்ற, நோக்கமற்ற வாழ்க்கைபயணம் நீண்டகாலம் தொடரவே செய்யும்.
வாழ்க வளமுடன்.

Why i not interested in yoga and no one do not follow this then why me?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது? பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும்?


பதில்:

தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது போலவும் பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு, இந்த உலகில் மனோநிலை மாறிவிட்டது என்பது உண்மைதான். காரணம், மனிதன், தன்னையும், தன்னுடைய ஆதாரமூலம் எது? என்பதையும் ஆராயக்கூடிய நிலையில் இருந்து விலகிவிட்டான். அவனுக்கு, இந்த உலகில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் இவற்றில் கவனம் கொண்டு வாழ்வதற்கு பழகிவிட்டான். வாழும் வரை இதுவே போதும் என்ற நிலைக்கும் நிறைந்துவிட்டான்.

பிறந்த குழந்தைகூட இயல்பான நிலையில் வளர்கிறதா? என்பதை நீங்கள் பார்த்து பரிசோதிக்கலாம் அல்லது உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகளையே கவனிக்கலாம். மூன்று வயது வரைதான் அந்த குழந்தைத்தனம் என்ற இயற்கையோடு ஒன்றிய செயல்பாடு இருக்கும், மூன்றுவயதை தாண்டிவிட்டால், குழந்தைகளும் பெரியவர்களோடு போட்டிபோட பழகிவிடுகிறார்கள். பெரியவர்களையே அடக்கிடவும் பழகிவிடுகிறார்கள். இயற்கை குறித்து ஏட்டளவில் தான் உள்ளது, தன்னைப்பற்றிய அறிவும் அங்கே இல்லை. நான் யார்? என்ற தேடலுக்கும் இங்கே இடமில்லை. இயற்கையை மதிப்பதும் இல்லை, இறைநம்பிக்கையும் இல்லை. இதனால் பக்தியும், யோகமும் அவசியமற்று போய்விட்டது. செயல் விளைவு குறித்து அக்கறை இருந்தாலும், கர்மா என்ற வினைப்பதிவு குறித்தும் விளக்கமில்லை. இதனால் ஏதோ பிறந்தோம், வாழ்கிறோம், போய்ச்சேருவோம், இதுதான் மனித இயல்பும், வாழ்க்கையும் என்று வாழப்பழகிவிட்டார்கள்.

ஆனால், நாம், நமக்கு நம் முன்னோர்களால் ஏற்பட்ட உந்துதலால், துன்பம் தீர்க்கவும், தன்னை அறியவும், இயற்கையை உணரவும், இறையுணர்வு பெறவும் ஆர்வம் கொண்டு யோகத்தில் இணைந்திருக்கிறோம். அதை நினைவில் கொண்டு, மற்றவர்களை பார்க்காமல், அவர்களை அவர்கள்போக்கில் விட்டுவிட்டு, உங்கள் பாதையை மாற்றாமல், யோகத்தில் பயணியுங்கள். உண்மை உணர்ந்து, நிறைவான, முழுமையான மகிழ்ச்சியான உலக வாழ்க்கை வாழலாம். அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். வாழும் வாழ்வில் உயரலாம். மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கலாம். சமூகம் மதிக்கும் உயர் நிலையும் அடையலாம்.

வாழ்க வளமுடன்.