CJ for You

Let Do Art


ஓவியர் அரஸ்

Click the Image, See Bigger View

என் பதின்ம வயதுகளில் தன் ஓவியங்களால் என்னை வசீகரித்தவர். அழகாக வளைந்து நெளியும் கோடுகளாலும்,  வண்ணங்களை வீசி மேலும் அழகு சேர்த்து, கதைக்கு மேலும் மெருகூட்டி அக்கதையை படிக்கத்தூண்டுவார்...

எத்தனை எத்தனை ஓவியங்கள் இன்னமும் என் கண்ணுக்குள்ளே சுழன்றோடுகின்றன. இவர் ஓவியங்களில் ஆண்கள் ஏறக்குறைய “ரஜினி”சாயலிலும், பெண்கள் “ராதா” சாயலிலும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்...

அந்தக்காலம் என்பது சற்றேறக்குறைய முப்பதாண்டு காலம் முன்னேதான். ஒரு ரசிகன் தூர நின்றுதான் தன்னை தன் மனம் கவர்ந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள இயலும், சில வேளைகளில் அதும் நிறைவேறாது... என் வாழ்வில் அப்படி யாரையும் நான் நேரடியாக சந்தித்தது இல்லை... பேஸ்புக், டிவீட்டர் வந்தது... கொஞ்சம் நெருங்கி நான் உங்கள் ரசிகன் என்று அவர்களுக்கு தெரியப்படுத்த முடிகிறது.

நான் முழுநேர ஓவியனாக மாறுவதற்கு முன்னால், சில அடிப்படை ஓவியம் பழக “அரஸ்” அவர்களின் ஓவியங்களை பார்த்து வரைந்திருக்கிறேன். வண்ணங்களும் நிறைத்து பழகியிருக்கிறேன்... ஆனால் எனக்கென நினைத்தபோக்கில்...  ஒரு ஓவியனின் கடினகாலப்பகுதி தனக்கென ஒரு பாணி உருவாக்கும் காலமே... பழகும் காலத்திலேயே இதை கவனத்தில் கொண்டால் சீக்கிரமே தன் பாணியை தக்கவைக்கலாம்...

அந்த பதின்வயதுகளில் நான் ஓவியத்தை பொழுதுபோக்காகவும், நண்பர்களுக்கு வரைந்து தருவதாகவும், சிறு குழந்தைகளை மகிழ்விப்பதற்க்காகவுமே நான் ஓவியம் வரைந்துகொண்டிருந்தேன்... நான் முழுநேர ஓவியனாக மாறிப்போனது அதிசயமே...

நான் அதிசயித்த ஒரு ஓவியரை, நான் வரைந்து என்னை அறிமுகப்படுத்துகொள்வென் என்பதும் ஒரு அதிசய நிகழ்வே...

நான் வருத்தப்படும் நிலை ஒன்றை இங்கே தெரியப்படுத்துகிறேன்... கிட்டதட்ட மூன்று தலைமுறைகள், என்காலத்தில் கிடைத்த ஓவிய அனுபவத்தை இழந்து திரிகின்றனர்... இது இந்தியாவின் சாபக்கேடு... ஓவியம் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கூட மிகச்சரியாக ஓவியம் குறித்த அறிவும், அனுபவமும் இல்லாதிருக்கிறார்கள். தாத்தாவிற்கு ஓவிய அறிவில்லை, அதனால் பிள்ளைக்கும் இல்லை, பிள்ளைக்கு இல்லாததால் அவர் பேரனுக்கும் இல்லை... ஆக பேரனுக்கு இல்லாததால்...

வெளிநாடுகளில் 16 வயதிற்குள்ளாக இருக்கும் இளைஞர்கள், மிக திறமையாக ஓவியங்கள் கற்று தேர்ந்து, அதற்கான அறிவைப்பெற்று, அனுபவ ஓவியருக்கு நிகராக, ஓவியங்களை வரைந்து வெளியிட்டு, வேலையையும், விற்று பணத்தையும் பெற்று, தான் தனக்கு பிடித்தவேலையில் ஈடுபட்டு மிக நிறைவாக வாழ்வதை, கொஞ்சம் வலையில் தேடினால் கண்டுபிடிக்கலாம்...

மனம் நிறைவில்லாத நிலையில், பக்குவம் கிடைபதில்லை... எங்கே பார்த்தாலும் ஒரே சண்டைக்காடு... தானும் நிம்மதியின்றி பிறரையும் நிம்மதியின்றி கெடுத்து, கெட்டொழுகின்றனர்...

பிறக்கும் பொழுது எல்லோரும் ஓவியரே... ஆனால் அதை காப்பாற்றி தொடர்ந்து முயற்சி செய்பவரே ஓவியராகிறார்... நவீன ஓவிய பிதா “பிக்காசோ” சொன்னதாகும்...

உங்கள் பிள்ளைக்கு ஓவியம் பிடிக்கும், அவன் வரைகிறேன் என்று சொன்னால். அவனுக்கு ஒரு காகிதத்தையும், வரைகோலையும் கையில் கொடுங்கள்... உங்களுக்கு ஓவியம் தெரியுமென்றால், அவனுக்கு கற்றும் கொடுங்கள்... இல்லையேல் அவனிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்...  

Ask a boon


சென்னையிலிருந்து பல்லவன் தொடர் வண்டியில் திருச்சி வந்துகொண்டிருக்கிறேன். மதிய வேளையில் கிளம்பி இரவு திருச்சி வந்து பின்னிரவில் காரைக்குடி வரை செல்லுமாறு நீடிக்கப்பட்டிருக்கிறது... எப்பொதும் நான் தேர்வு செய்வது சாளரம் சார்ந்த இருக்கை... வண்டியின் விரைவில் முகத்தில் மோதிதள்ளும் காற்று தரும் அனுபவம் விட்டுவிட முடியுமா?

என் இருக்கைக்கு அருகே, ஒரு இளைஞன் (டி சர்ட், ஜீன்ஸ்), எதிரே ஒரு பெண் (மடிப்பு பிசகாத சேலை), ஆண் (பேண்ட், முழுக்கை சட்டை).. இடதுபக்கம் நடைபாதைக்கு அப்புறத்தில் இரு பெண்கள் (சாதா பட்டு சேலை), அவர்களுக்கு எதிர் இருக்கையில் இரண்டு ஆண்கள் (கதர் சட்டை வேட்டி). பெண்கள் இருவரும் கிட்டதட்ட ஐம்பதை நெருங்குபவர்களாக இருக்கும். ஆண்கள் அறுபது தொடக்கமாக இருக்கலாம்,

நானாக பேச்சை தொடங்கும் வழக்கம் எனக்கில்லை என்பதால்... என்னை ஆளைவிடுங்கப்பா என்று நினைத்து, என் ஓவிய காகிதங்கள் எடுத்து வெறுமனே வரைந்து பழக ஆரம்பித்தேன். கதர் சட்டை வேட்டியில், கனத்த ஒருவர் “யாரையடா கலாய்க்கலாம்” என்றபடி துறுதுறுத்தது எனக்கு புரிந்தது... தங்களுக்கிடையேயான வியாபாரம் குறித்து இன்னொரு கதர் சட்டை வேட்டியிடம் புலம்பியவாறு வந்தார். இடையே தொடர்வண்டி ஊழியர்கள் விற்கும் சில திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டனர். அதை எங்கள் எல்லோருக்கும் பகிர நினைக்கையில் எல்லோரும் மறுத்துவிட்டோம்.

தொடர்வண்டி வேகமெடுத்திருந்தது... “என்னாய்யா இது, என்னமோ விழுந்த வீடு மாதிரியா ஊருக்கு போறது, கலகலன்னு பேசி சிரிச்சிக்க வேணாமா?” என்று பேசிக்கொண்டே... என் அருகில் இருந்த இளைஞரை கேட்டார்...
 “என்ன திருச்சிக்கா தம்பி?”
 “ஆமாங்க”
 “படிக்கிறீங்களா?”
 “இல்ல, வேலைக்கி போயிட்டுருக்கேன்... லீவ்க்கு ஊருக்குபோறேன்”
 “எவ்வளோ சம்பளம்?”
நான் குரலாக கேட்டுக்கொண்டிருக்க, எல்லோரும் அந்த உரையாடலை கவனிப்பது புரிந்தது...
 “மாசம் 7500 ரூபாய்”
 “போதுமா?”
 “பத்தாதுதான்... இனி போகப்போக ஏறும்”
 “நம்பலாமா”
 “அப்படித்தான் சொல்லிருக்காங்க”
 “என்ன படிச்சீங்க?”
 “இஞ்ஜினியரிங்”
 “எவ்வளவு செலவாச்சு?”
 “கிட்டதட்ட ஐந்து லட்சரூபா”
 “ஹ்ம். பேசாம அத பேங்கல் போட்டு, நீ தள்ளுவண்டி தள்ளி சம்பாதிச்சா கூட மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கலாமே?!”
 கேட்ட எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்... இளைஞனின் முகமோ தொங்கிப்போக, இந்த ஆள் கிட்ட எதுக்குடா வாய் கொடுத்தோம் என்றிருந்தது...
கதர் சட்டை வேட்டி, எல்லோரையும் பார்த்து...
 “ஏங்க, சிரிக்கிறதுக்காக இத சொல்லலீங்க... நிலவரத்தை சொன்னேன், தம்பி தப்பா நினைக்காத, நாங்கல்லாம் வியாபாரிங்க, எங்களுக்கு காசு போட்டா, காசு வரணும் அவ்வோளோதான் தெரியும்... நல்லா நீயும் யோசிச்சாகூட இதுல இருக்கிற உண்மை புரியும்... அப்புறம், நீங்களும் திருச்சி  தானா?”
 எதிரே அமர்ந்திருந்த இருபெண்களை நோக்கி கேட்டார்.
 “நாங்க ஸ்ரீரங்கம்”
 “அதென்னா, அதும் திருச்சீலதானே இருக்கு”
 மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்...

நகைச்சுவை வழியாக பிறரை கவர்தல் என்பது அவருக்கு வாய் வந்த கலையாக இருக்கும் என்பது தெரிந்தது... இதற்கிடையில் அந்த இளைஞன், எழுந்து வாசல் அருகே நின்று ஓடுகிற மரங்களையும், மலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

ஓவொருவராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே, என்னை நோக்கி, என்னிடம் அதே கேள்வியை கேட்டார்...
 “நான் ஓவியர்”
 “அதான் என்னை ஆளை விடுங்கடான்னு, அப்போ இருந்து என்னமோ பேப்பர்ல கிறுக்க  ஆரம்பிச்சிட்டீங்க, பார்த்தென்... தனி உலகத்திலே இருக்கிறவங்க ஆச்சே”
 நான் புன்னகைத்தேன்...
 “ஓவியம்ன்னா என்னமாதிரியான ஓவியம்?”
 “உங்களை வரைந்தே காட்டிவிடுகிறேன்”
 “பார்த்தீங்களா... நாமலாம் வாய் வலிக்க பேசினா, இவரு பேசாம, ஓவியம் வழியா பேச போறாரு”

கொண்டுவந்திருந்த ஓவிய அட்டையில், கரித்துண்டு (Charcoal) மூலமாக அவரை கேரிகேச்சராக (Caricature) செய்தேன்... ஒரு நிமிடத்திற்குள்ளாக வரைந்து அவரிடம் தந்தேன்.
 “நானா இது... எவனோ மாதிரி இருக்கு?!”
 “அப்படித்தான் உங்களுக்கே தோன்றும்”
 “ஓஹோ... சரி வரைஞ்சி கொடுத்திட்டீங்க... இதை வச்சி என்னா பன்றது?”
எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
 நானும் அவரை நோக்கி புன்னகைத்தேன்...

 மனதிற்குள் “நீங்கள் ஒரு கழுதையாக இருக்கும்பட்சத்தில் அந்த காகிதத்தை சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டேன்.
 “ஒரு ஓவியத்தை என்ன செய்வது என்று கேட்பவருக்கு, நான் ஓவியம் தந்தது தப்புத்தான்... அதை கொடுங்க”
 “அட, ஏன் தம்பி கோச்சுகிறீங்க... உங்க ஞாபகமா வச்சிக்கிறேன்... நன்றி”
 “நல்லது”

 அதற்கடுத்த உரையாடல்களை கவனிக்காது, ஓவியத்தில் நான் கவனம் இழந்தேன். அடுத்து என்ன பேசினார் என்பது என் காதுகளை தூண்டவில்லை... இப்படி இருக்கும் சில சாமனியர்களுக்கு, அந்த கடவுளே கூட கண்ணுக்கு தெரிவதில்லை... ஆனாலும் இத்தகைய மனிதர்களை நான் குறை சொல்லுவதற்கில்லை...

நான் தியானம் கற்றுணர்ந்தபொழுது... அன்பொளி மாத இதழில் படித்தது...

வேதாத்திரி மகரிஷியிடம்...
 “ஐயா, பிறவிப்பயன் போக்க, தன் பிறப்பை உணர்ந்து, தவமியற்றி தன்னை தூய்மை செய்துகொள்ளும் வாய்ப்பாக நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். ஆனால் இது அறியாமல் வறுமையிலும், இது பற்றி ஒன்றுமே அறியாத ஒரு குடியானவன் இருக்கிறானே, சொன்னாலும் உதாசீனம் செய்கிறானே அவனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது... என்ன செய்வது” என்று கேட்க...
 “இந்தபிறவியில் நீங்கள் உங்களை தூய்மை செய்துகொள்ளவேண்டும் என்பது உங்களுக்கு கிடைத்த வரம். அந்த குடியானவனுக்கு அது இன்னமும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கிடைக்கலாம், அல்லது அவன் வழி வருவோருக்கு கிடைக்கலாம். அவனை அப்படியே விட்டுவிடுதல் நலமே”

நான் ஓவியத்தை மதிக்காதவர்களையும் அப்படியே விட்டுவிடுகிறேன்...


Move now


ஆ, ரம்பம்...

யாரோ ஒருவர் நம்மை கவனித்துகொண்டே இருப்பதுபோலான எண்ணத்தின் அடிப்படையில் இங்கே சுயவிளக்கம் தரவேண்டிதாகிறது... இது ஏளத்திற்குரியதுதான்...

எழுதுவதை நிறுத்தியதற்கு காரணம் கிடைத்தது போலவே எழுத ஆரம்பிக்கவும் காரணங்கள் கிடைக்கிறது. கடந்த பத்து மாதங்களுக்குப்பிறகு அதே தளத்தில் வேறாக நிற்கிறேன்... அதனால் என் எழுத்துக்களில் ஓவியப்பின்ணணி கலந்திருக்கும் என்று நம்பலாம். என் ஓவிய வேலைகளின் அனுபவம் சார்ந்த நிகழ்ச்சிகளை தருவேன்... முன்சொன்னதுபோலவே எழுத்துக்கள் மூலமாக கொஞ்சம் என்னை நிறுத்திச்செல்லும் நிகழ்வாக ஆரம்பித்திருக்கிறேன்.

இதுமுடிவாக
நினைத்த மறுகணம்
வேறென்றின் நுனி
பற்றியிருந்திருக்கிறேன்...
பின்னது மறந்து
கடந்துசெல்ல
ஏதேனும் ஒன்றின் ஆரம்பம்
ஓவியனுக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்
தேவையாகவே இருக்கிறது...
சுவாசித்தல் அற்றுப்போகும்வரை.

Stay Tuned with Art


ஓவியத்தோடு கலத்தல்...


ஒரு குறிப்பிட்ட செய்திகளை உள்வாங்கிக்கொண்டு தனக்குரிய பாணியில் எழுத்தில் தரவல்லவர்கள் நிறைய நபர்கள் இருக்கும் இந்நாட்களில், நானும் அதில் ஒருவனாக சிறப்பிக்க ஆர்வமாக இதுவரை எழுதிக்கொண்டிருந்தேன் என்பது உண்மை. ஆனால் ஒரு ஓவியனாக நான் நிலைத்திருப்பதும், அந்த ஓவிய திறமையினாலே நான் என் வயிற்றுப்பாட்டை நடத்திக்கொண்டிருப்பதும் உண்மை. இதை நினைவுக்கு கொண்டுவரும் வேளையில், இதுவரை நான் மறந்திருந்தேனோ என்று நினைக்கிறேன்.

இப்பொழுது எனக்கு நன்கு தெரிந்தது எது என்னும் நிலையில் ஓவியமே என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இதுவரை நான் என் வட்டத்தைக்கடந்து என் பெருவெளி என நினைத்து எழுத்திலும், பிறவகையான துறைகளிலும் ஒரு காலைப்பதித்து, என்னை ஒரு நிலையிலும் நிறுத்திக்கொள்ளாதிருக்கிறேன்.

பல ஆண்டுக்கால பயணத்தில், ஒரு குறிக்கோளுடன் தொடங்கிய பயணத்தில் என் நிறுத்தம் வந்துவிட்டதை அறியாமல் அல்லது அந்த நிறுத்தத்தில் மனமோ, உடலோ, நினைவோ எதோ ஒன்றை வைத்துவிட்டு அந்த பயணத்தை தொடங்கி போய்க்கொண்டிருப்பதாக என்னை கருதுகிறேன். தொடர்வண்டி பயணத்தில் தன் ஊர்வந்ததை அறியாது, மற்றவர்களிடம் கேட்டு அறியாமலும், தன் தூக்கத்தை தொடர்ந்தும், தன் பயணத்தை தொடர்ந்தும் பயணிக்கும் பயணி போல...

என் வாழ்வில் பல ஆண்டுகளை பலவகையான தேடல்களிலும், கற்றுக்கொள்ளலிலும், நிலைப்படுத்தி, அதன்மூலமான வேலைவாய்ப்பு தேடலிலும் என்னை இழந்திருக்கிறேன், இப்பொழுதைய கால கட்டத்தில், ஒரு ஓவியனாக என்னை நிலைபெறச்செய்யும் முயற்சியில் கொஞ்சம் வெற்றியோடு நின்றிருந்தாலும், இன்னமும் இதில் கவனம் செலுத்தவேண்டி இருப்பதாலும் இனிமேலும் சிதறி பறக்கலாகாது என்பது என் முடிவு.

அரசுத்துறை, தனியார் பணியாளர்கள் எப்போதும் தன் மேஜை எல்லைக்குள் மட்டுமே செயல்படுவதை பார்த்து வியந்திருக்கிறேன். ஒருவித மனக்குவிப்பு இதில் வரும் என்பதும், வேலைகளில், தன் செயல்களில் கவனம் வரும், தேவையில்லாத பிறரது செயல்களில் தலையிடுவதும், அதன்மூலமாக வரும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் என்பதும் உண்மை.

ஏற்கனவே ஓட்டைபானையாக இருக்கிற நான், ஓவியம் முதலான எல்லா ஓட்டைகள் வழியாக என் கவனங்களை செலுத்திக்கொண்டிருந்தது மகா விரயம் என்பது என்புத்திக்கு இப்பொழுதான் தெரியவருகிறது. இனி ஓவியத்துக்கான ஓட்டையில் மட்டும் விரயச்செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.

ஓவியம் தொடர்பான தகவல்களில் என்னை நிறுத்தினால், பிறருக்கு கண்டிப்பாக உதவுமா என அறியாத நிலையில், அது என் வயிற்றுக்கு உதவும் என்பது தெளிவு. இதோடு நான் இன்னும் ஓவியம் குறித்தான அனுபவத்தில் என்னை மேம்படுத்தவும் உதவும்....

இந்த ஓவியன் இதையும் செய்தான் அல்லது எழுதினான் என்றால்... ஓவியத்தையாவது நன்றாக செய்தானா என்ற கேள்வி எழுப்பப்பட்டால்... இவன் இரண்டையுமே சரியாக செய்யவில்லை என்ற பதில் எனக்கானதாக இருக்கவேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

இதனால் இழப்பொன்றும் யாருக்கும் இல்லை. இப்போது வரை என் நிலை, என் அனுபவம், என் ஆர்வம் என்று ஆய்வு செய்தால் “ஓவியம் தவிர ஏதுமில்லை” என்பதே முடிவாக இருக்கும் என்பதால் நான் அந்த நிலையிலேயே நின்று என்னை சிறப்பித்துக்கொள்ள விரும்புகிறேன்...

ஆனால் என் கற்றுக்கொள்ளலும், மேம்படுத்திக்கொள்ளலும் என்றும் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்... 

Caricature for Gift


Caricature for Birthday Gift

This one is done  for New Style -
Caricature with Real Photos on a Background...  Really it look nice!

If you need "Caricature" like this?
Make call +91 9442783450 or
Whatsapp me: +91 9442783450 or
Mail to: caricaturelives@gmail.com


Visit: www.caricaturelives.com


Music and Me


ராஜேஷ் வைத்தியா
திருச்சியில் ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு ஒரு நண்பரின் அழைப்பின்பேரில் செல்ல நேர்ந்தது. வழக்கமான ஆடம்பர நிகழ்வு. உள்ளே நுழைந்ததுமே வீணைவாத்திய இசை ஒலித்தது. அரங்கு முழுதும் குளிர்பதனமிட்டிருந்ததால் வெளியே நிசப்தமாக இருந்திருக்கிறது.


வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா சில திரைப்பாடல்களை வாசித்துக்கொண்டிருந்தார். இப்படியான ஒருவிழாவில் இசையை ரசிப்பதற்காகவும் ஒரு கூட்டம் வருமென்று நம்பி, நிறைய இருக்கைகள் போட்டிருக்க, அவற்றில் ஒரு சிலரே அமர்ந்து அந்த பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தனர். நானும் அதில் ஒருவனாக இருந்தேன்...

ஓவ்வொருபாடலாக நான் வரிசைப்படுத்தவில்லை. ஆனால் இந்த கட்டுரை எழுதத்தூண்டிய பாடலுக்கு முன்பு வாசித்தபாடல்களை மட்டும் சொல்லிவிடுகிறேன். தன் பாணியில்...
ஆறிலிருந்து அறுபதுவரை - திரைப்பட பாடலான ”கண்மணியே காதல் என்பது...”
அடுத்து
கரகாட்டகாரன் - திரைப்பாடலான “இந்தமான் உந்தன் சொந்தமான்...” இதனை அடுத்து... இசைத்த அந்த பாடலின் ஆரம்ப இசை, ராஜேஷ் வைத்தியாவின் கீபோர்ட் கலைஞர் வாசிக்க ஆரம்பித்ததும், எனக்கு சிலிர்ப்பாகியது... கிட்டதட்ட மறந்துவிட்ட அந்தபாடல், அதோடு கூடிய நினைவலைகளை எனக்குள் மீட்டியது... ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசை.


வெள்ளைரோஜா - 1983
“வாவ்” மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். அந்தப்பாடலை கேட்டதும் வேறெதும் தோன்றாமல் வெறுமனே அந்த இசையை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்... அந்தபாடல் இதுதான்....

“சோலைப்பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்...” எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி ஆகியோர் பாடிய பாடல்...
ராஜேஷ் வைத்தியா அதற்குபிறகு என்னை அந்த 1983 ஆண்டுக்கு அனுப்பிவைத்துவிட்டார்... நிகழ்வில் என்ன அடுத்துவாசித்தார் என்பது நினைவிலில்லை.

வெள்ளை ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் அது. மறுநாளே இந்தபாடல் குறித்து கூகுளில் தேடினேன், உடனே யூடியுப் சென்று, அந்த பாடல் காட்சியை இயக்கினேன். நடிகை ராதாவும், நடிகர் சுரேஷும் ஒரு பூங்காவில் இந்தபாடலை பாட தயாராகினர். சட்டென நிறுத்தி, இந்த பாடலின் ஒலி வடிவம் இருக்குமா என்று தேடி, அதை என் கணிணிக்கு எடுத்துக்கொண்டேன்.  நல்லவேளையாக இந்த திரைப்படம் அந்த 1983 லேயே நான் பார்க்கவில்லை. இந்த காட்சியையும் பார்த்து என் உன்னத கற்பனையை அழித்துக்கொள்ள விரும்பவில்லை.

இன்றும் அந்தபாடல் பற்றிய தகவல்கள் முழுமையாக இல்லை எனினும் எனக்கு கிடைத்த தகவல் இது.... பாடலாசிரியர் வாலி. இயக்குனர் ஏ. ஜெகன்நாதன்,  அந்தக்கால இலங்கை வானொலி தமிழ்ச்சேவை ஒன்றும், இரண்டும் இந்த திரைப்பாடல்களையும், வசனங்களையும் ஒலிபரப்பிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

பாடலை படிக்கவிரும்புவோர் இங்கேசெல்லவும்
http://thenkinnam.blogspot.in/2011/02/blog-post_2688.html


1983ல் நான்...
1983... இந்த திரைப்படம் வெளிவந்த வருடத்தில் என்வயது 13, பள்ளி இறுதியாண்டு மாணவன். திரைப்படம் மட்டுமின்றி, கொஞ்சம் உலக விசயங்களும் அறிந்துகொண்டிந்த காலம் அது. தினத்தந்தி நாளிதழ் வழக்கமாகவும், தினமும் மாலை நூலகம் சென்று நூல்கள், கட்டுரை இதழ்கள், தனி விருப்ப உறுப்பினர் நூல்களும் படித்துக்கொண்டிந்தகாலம்.

இந்தபாடலோடு  தொடர்புடைய, இதே திரைப்படபாடலான “தேவனின் கோவிலிலே யாவரும்..” நடிகர் திலகத்திற்காக, மலேசியா வாசுதேவன் பாடிய பாடலின், ஆரம்பத்தில்...
“உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்” வரிகள் தனிப்பாடலாக இருக்கும். நூலகத்தில் சில நூல்கள் தேடி புரட்டும் வேளையில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றிய அறிமுக நூல் ஒன்றும் கிடைத்தது. அதில் சில பாடல்களை அங்கேயே படித்துக்கொண்டிருந்தபொழுது இந்த பாடலின் வரிகள் காணக்கிடைத்ததில் மகிழ்ந்தேன். ஆனால் வேதாத்திரி மகரிஷின் முழுமை 1990ம் ஆண்டு இறுதிகளில்தான் எனக்கு கிடைத்தது

இளையராஜா...
இந்த 1980 ஆண்டுக்காலங்களில் இளையராஜாவின் இசை மிக உயரங்களை அடைவதாக இருந்தது.

இசை
இளையராஜா

என்று எங்கே தோன்றினாலும் கரவொலி ஒலிக்கும். இளையராஜாவின் பாடல்களில் இருக்கும் இசை நுணுக்கங்களை, சுகா, கலைச்செல்வன், விஜி கனெக்ட், இன்னும் பெயர் நினைவில்லாத பலர் சமூக வளைத்தளங்களில்  குறிப்பிட்டுச்சொல்லும் பொழுது, இந்த நுணுக்கங்களையெல்லாம் அந்தந்த பாடல்கள் வெளிவந்த நாட்களிலேயே நானும், என் அரை, குறை காதுகளை வைத்து கேட்டு அனுபவித்திருக்கிறேன், இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே நான் தெரியப்படுத்துக்கொள்கிறேன்.

இளையராஜாவின் இசைகுழுவிலிருக்கும் இசைகலைஞர்களையும் இப்பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. அவர்களில் சிலரை என் நண்பர்களாகக்கூட இணைத்திருக்கிறேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்று ஏற்புதந்திருக்கிறார்கள்... பேஸ்புக் என்ற சமூக வலைத்தளத்தில்....


இசை கேட்டல்
இந்த “சோலைப்பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்...” இன்று கேட்கும் பொழுது, இன்னமும் சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. என் கணிணியில் பாடல் ஒலிக்க நிறைய பிளேயர்கள் இருந்தாலும் நான் தேர்வு செய்திருப்பது...  Jet Audio...

5.1 என்கிற நம்மைச்சுற்றி ஒலிக்கும் முறையிலிருந்து மாறி, வழக்கமான “ஸ்டீரியோ” வாக கேட்கவேண்டும் என்று அலைந்து, இறுதியாக Edifier 2.1 மியூசிக் சிஸ்டம் முறைக்கு மாறி இந்த பாடலை கேட்கிறேன்.

வானொலி, டேப் ரிக்கார்டர், ஒற்றை, இரட்டை ஸ்பீக்கர்களில் நான் கேட்டு மகிழ்ந்த இந்த பாடல் இப்பொழுது வேறுமாதிரி ஒலிக்கிறது, காரணம் “Jet Audio” தரும் சிறப்பு ஒலி அமைப்பு. பாஸ்கிதார் மற்றும் பாஸ் தொடர்பான ஒலிகளை தனியே பிரித்து பெரிதுபடுத்தி தருவதாக அமைந்திருக்கிறது.

பாடல்
இந்த பாடலை இங்கே கேளுங்கள். உங்கள் வாழ்வின் முந்தைய காலகட்டத்திற்கு பைசா செலவில்லாமல் சென்றுவாருங்களேன்...
http://tamiltunes.com/ilayarajas-evergreen-hits-207-songs.html

இதன் தொடர்ச்சியாக அடுத்தும் எழுத நினைக்கிறேன்...