Following the Karma Yoga is easy, so no need any other yogas!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கர்ம யோகம் மிக சுலமானதாக, திருப்தியாக இருக்கிறது, அதனால் மற்ற யோகங்கள் அவசியம்தானா?
பதில்:
மிக நல்ல விஷயமாக, முதலாவதான பக்தியோத்தில் இருந்து, கர்மயோகத்திற்கு, உயர்ந்திருக்கிறீர்கள் என்பது சிறப்பு. உண்மையாகவே, யோகம் எளிமையாகவும், புரிந்துகொள்ளும்படியும் இருக்கவேண்டும் என்பதற்காகவும், அதற்கு மக்கள் பழகிக் கொள்வதற்காகவுமே யோகம், பல நிலைகளாக உருவாக்கப்பட்டது. இதனால் கர்ம யோகம் எளிதானதுதான் என்பதில் ஐயமில்லை. இது அடிப்படை நிலையில் இரண்டாவது ஆகும்.
உலகில் நாம் காணும் பல்வேறு வகையிலான கருத்துக்களும், விளக்கங்களும், அறிவுரைகளும் இந்த கர்ம யோகத்தின் வெளிப்பாடுகள் தான். அதாவது பக்தி யோகம் என்பதில் ஏதேனும் திருத்தம் பெற்று, தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டவர்கள், மக்களின் நலன் சார்ந்து, இந்தமாதிரி நல்ல விசயங்களை கடைபிடியுங்கள். நல்லதே நினையுங்கள், அதன்வழி நல்லதே செய்யுங்கள், மனதை இப்படியாக பக்குவப்படுத்துங்கள், உடலை இப்படி பேணிகாத்திடுங்கள் என்று சொல்லுவதும் கூட, கர்ம யோக நிலைதான். ஒருவகையில், நம்முடைய அடிப்படை பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதாகவும் அமையும். பிறருக்கும் அது விளக்கமாகவும் அமையும். அதாவது நம்முடைய செயல் வெளிப்பாடுகளைப் பார்த்து, பிறர் திருத்திக் கொள்கின்ற அளவில் உதவலாம். எனவே கர்ம யோகம் என்பது, பிறருக்கு நேரடியாக உதவி செய்வதுதான் என்ற அர்த்தத்திலிருந்து விலகி, தன்னை திருத்திக் கொண்டு இயங்கினாலும்கூட அது பிறருக்கு உதவும் என்ற நிலை இங்கே அமைந்துவிடுகிறது.
இதுதான் உங்களுக்கும், பெரும்பாலோருக்கும் மிக சுலபமானதாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. அப்படியானால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும், கர்ம யோகத்தை தொடரலாம். அதில் எந்த குறையுமில்லை. இந்த கர்ம யோகத்தின் நிலையில், நானும் பிறமக்களும் சமம் என்ற உணர்வு தோன்றும். அது மிகவும் அற்புதமானதுதான். இந்த நவீன, இணைய தொழில்நுட்ப காலத்தில், இந்த கர்ம யோகம்தான் முதன்மையாக இருக்கிறது எனலாம். எல்லோருமே தனக்குத் தெரிந்ததை, தான் கற்றதை, தன் அனுபவத்தை பிறருக்கு அறியத்தருகிறார்கள். அதை மற்றவர்கள் அறிந்துகொள்கிறார்களோ, கடைபிடிக்கிறார்களோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்கு இடமின்றி, தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ‘ஏன்யா? இதெல்லாமா கர்ம யோகம்?’ என்கிறீர்களா? இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, அப்படி கேள்வி கேட்கும்படியாகத்தான் இருக்கிறது! ஒன்று செய்யுங்கள், நீங்கள் அவரிடம் சென்று ‘ஏன்யா நீங்கள் இதையெல்லாம் பகிர்கின்றீர்கள்?’ என்று கேள்வி கேளுங்கள். அதற்கு அவர் ‘கர்ம யோகம்’ என்ற விளக்கத்தில்தான் பதில் தருவார்.
ஆனால் இங்கே, இப்படியான கர்ம யோகத்தில் பெரும் சிக்கல் இருக்கிறது. கர்ம யோகம் என்ற புரிதலில் வரும் சிக்கல் அது. கர்ம என்பது, எண்ணம், சொல், செயல் இந்த மூன்றின் வழியாக தோன்றுவது ஆகும். இதனூடாக, கர்ம வினைப்பதிவும் நமக்குள்ளாக அமைந்தது வெளிவரும், புதிதாகவும் நமக்குள் பதியும் என்பது இயற்கை நீதி. எனவே கர்ம யோகத்தை நீங்கள் செயல்படுத்திவரும் பொழுது, இந்த கர்ம வினைப்பதிவு குறித்த விழிப்புணர்வு அவசிமாகிறது. இல்லையேல் அது உங்களுக்கும், பிறருக்கும் தடையை ஏற்படுத்திவிடுமே?! மேலும் இதன் வழியாக உயர்வதுதான் முறையானது, இங்கே நின்றுவிடுவது உங்கள் விருப்பமாக இருக்கலாம், எனினும் அது பிறவி நீள்வதற்கான காரணமாகிவிடும்! இதனால், பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம் என்று அடுத்த நிலைகளுக்கு மாறியே ஆகவேண்டும்.
வாழ்க வளமுடன்.