Why are poverty and money unrelated to each other?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஏழ்மையும் பணமும் ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறது? எப்படி சரி செய்வது?!
பதில்:
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், தனித்தனியான வாழ்வியலும், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும் வாழ்விலும் இருக்கிறது. அதுதான் இயற்கையானதும், இயல்பானதும் ஆகும். இதில் இரண்டாவது நிலையில் இருக்கும் கலந்து வாழ்தலில் பகிர்ந்து கொள்ளுதலும் உண்டு. கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லலாம். அது பொருளாக இருக்கவேண்டியதில்லை. அறிவாக, அனுபவமாக, முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இங்கே ஒருவருக்கு பொருளை, பணத்தை தரவேண்டும், பெறவேண்டும் என்று நினைப்பதுதான், அந்த ஒருவருக்கு ஏழ்மையை கொண்டுவந்து விடுகிறது! எப்படி?!
நான், என்னால் முடிந்தவரை இப்படித்தான் இருப்பேன். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான், என்னால் செய்யமுடிந்தது இதுதான். இதற்கு மேல் நீதான் உதவவேண்டும். எனவே உன்னிடமிருப்பதை எனக்குத் தா, என்று எதிர்பார்ப்பதுதான் ஏழ்மையை வரவழைக்கிறது.
இந்த உலகில், மூன்று பிரிவில் இருக்கும் மனிதர்கள்தான், பிற மனிதர்களின் உதவியைப் பெற தகுதியானவர்கள் என்று குருமகான் வேதாத்திரி மகரிஷியும் குறிப்பிடுகின்றார். யார் அவர்கள் என்றால், 1) வயதான பெரியோர்கள் 2) 14 வயதுக்குள்ளான குழந்தைகளும், சிறியவர்களும் 3) உடலில், மனதில் ஏதெனும் ஒருவகையில் பாதிப்படைந்தோர் ஆகியோர் மட்டுமே! (சிறப்புப் பெற்றவர்கள்)
ஆனால் உலகில் எல்லாமனிதர்களுமே ஒரு எதிர்பார்ப்பில் சிக்கிக் கொண்டார்கள். ஏழ்மை என்பது தலைவிதி அல்ல என்று எத்தனையோ ஞானிகளும், மகான்களும், அனுபவசாலிகளும் சொன்னாலும் அதை ஏற்பதில்லை. ஒருவர் பிறக்கும் பொழுதும், வளரும் பொழுதும் ஏழ்மையாக, ஏழையாக இருக்கலாம். ஆனால், தன்னால் உடல் உழைப்பையும், அறிவையும், அனுபவத்தையும் இந்த உலகோடு, உலகமக்களோடு, வாழும் சமுகத்தோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்றால், அந்த ஏழ்மையை, இதுவரை இருந்து வந்த ஏழ்மையை மாற்றிவிடலாமே? தனக்கும், தன்னை சார்ந்த சக மனிதர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் தேவையான, அவசியமான, துணையான ஒன்றை செய்து பயன்பெறலாமே?! அது சேவையாக, தொழிலாக, வியாபாரமாக, உதவியாகவும் இருக்கலாம். அதன்வழியாக பணமும் பொருளும் பெறலாம் தானே?!
ஏழ்மையும் பணமும் விரோதிகள் அல்ல, அப்படி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்க்கையூடாக மாற்றத்தை சிந்தித்து, அதை செயல்படுத்தி வாருங்கள். நீங்களும் வாழ்வில் உயர்வீர்கள். நலமும் பலமும் அடைவீர்கள்!
வாழ்க வளமுடன்.