CJ for You: cause and effect

cause and effect

Showing posts with label cause and effect. Show all posts
Showing posts with label cause and effect. Show all posts

Is it necessary to worship God? Can anyone get away from it? What happens if you don't? Give an explanation.


இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறை வழிபாடு அவசியம்தானா? அதிலிருந்து யாரும் விலகிவிட முடியுமா? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? விளக்கம் தருக.

பதில்:

ஒவ்வொரு மனிதனின், வாழ்க்கைச் சூழலிலும் இப்படியான கேள்வி எழுவதுண்டு. காரணம் என்னவென்றால், அவர்கள் இறையை, கடவுளை வேண்டிக் கேட்டுக்கொண்ட பொழுதெல்லாம், எதுவுமே உடனடியாக கிடைக்கவில்லை. கிடைத்ததும் கூட, பற்றாக்குறை ஆகிவிட்டது என்று கருதினார்கள். இதனால், அவர்களுக்கு ஏமாற்றமும், நம்பிக்கையின்மையும் தான் கிடைத்தது. அந்த அனுபவத்தின் வழியிலே, ‘அது’ இல்லையோ? என்ற கருத்துக்கு உடன்பட்டார்கள். இது இயல்புதான். உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம்.

சமீபத்தில் ஒரு மீம்ஸ், நல்லவங்களை, கடவுள் சோதிப்பாரு, ஆனா கைவிட மாட்டாரு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர், அதான் நல்லவங்கன்னு தெரியுதுல்ல, அப்புறம் ஏன் சோதிக்கிறாரு? என்று கேள்வி கேட்கிறார். மேம்போக்காக, இது கிண்டல் கேலி என்று இருந்தாலும், நல்லவனாக இருந்தவன், ஏன் தவறு செய்தான்? எப்போது செய்தான்? என்ற கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய உண்மை விளக்கமாகலாம்.

முதலில், நாம் ஏதேனும் கேட்பதற்காகத்தான், இறை வழிபாடு என்ற எண்ணத்தை கைவிட வேண்டியது அவசியம். கேட்டால் கொடுக்கவும், உடனே கொடுக்கவும் எதிர்பார்ப்பதும் தவறு. பிறந்த பொழுது, நீ அழுதாய், உனக்கான உணவை, தாயின் பாலாக்கித் தந்தது யார்? பதிலாக ‘இயற்கை’ என்பார்கள். அந்த இயற்கைக்கு மதிப்பளித்து, உயர்வாக, இறைநிலை, அதை அறியும் வழி கட உள் (கடவுள்) என்பதாகத்தான் உண்மை இருக்கிறது. ஆனால், இதை நாம், கைவிட்டு விட்டோம். கேட்கும் பொழுதெல்லாம் கொடுக்கவும், கேட்பதெல்லாம் கொடுக்கவும் இறைநிலை எப்படி அசைந்து கொடுக்கும்? உனக்கானது எல்லாமே, உன் வாழ்க்கையோடு, செயல்களோடு, விளைவுகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அது கண்ணுக்கும், வெளிப்படையாகவும் தெரிவதில்லை. ஒரு விதைக்குள் அந்த மரத்தைத் தரும் விதை இணைக்கப்பட்டுள்ளது நமக்கு தெரிகிறதா? ஆனால், கருத்தாக உணர முடியும் தானே?

நம் வாழ்வோடும், செயல்களோடும், விளைவுகளோடும் நமக்கானது எல்லாம் கிடைப்பதை அறியாமல், அதையெல்லாம் மறந்துவிட்டு, கேட்டால் கொடுக்க வேண்டும், அதுவும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இறைநிலையை, நம் அளவிற்கு ஓர் சாராசரி மனிதராகவா நினைக்க முடியும்?

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி, தரும் நேரடியான விளக்கத்திற்கு, மேற்கண்ட முன்னோட்டம் உதவலாம் என்று கருதுகிறேன். இனி, அவர் தரும் விளக்கத்தை காண்போமா? 

‘எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது, அந்தப் பரம் பொருள், இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிற போது, நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும்?’

‘செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. 

உன்னை வாழ்த்திக் கொள். உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.

மன அமைதியைப் பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியை கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம்.’

‘ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும், அங்கே விளைவு, கடவுள் செயல்தான். (That is the cause and effect system). அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு, பொருளுக்குத் தக்கவாறு, உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும், தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ, அதுதான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை, உன்னுடைய செயலின் விளைவாக, காலையிலிருந்து மாலை வரையில் பார்த்தும் மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டு தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம். வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும்,

அந்நோக்கத்திற்கேற்ப, வாழும் முறை என்ன என்பதை அறிந்து கொள்வது ஞானம்.’

என்றவகையில், நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். நமக்குள்ளாக, அமைதியான நிலையில், சிந்தித்தாலும், அந்த சிந்தனையின் வழியில் ஆராய்ந்தாலும், உங்களுக்கு உண்மை விளக்கம் கிடைத்துவிடும். இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையும், எந்த வகையிலும் முரண்படாத செயல்முறைகளும் உண்டாகும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

-

If everything has already been provided, is it okay to ask for it?


எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், கேட்டுப் பெறலாம் என்பது சரியா?


கேள்வி

        ஞானமும் வாழ்வும் என்ற நூல் 3வது பாகம் 4வது பாராவில் மனிதன் தெய்வத்தை வேண்டிப் பெறவேண்டியது ஒன்றுமே இல்லை, அவனுக்கு வேண்டிய அனைத்தும் பிறப்பிலேயே இணைக்கப்பெற்று உள்ளன என்று ஐயா முற்பகுதியில் கூறியிருக்கிறீர்கள்.

        பிறகு 80வது பக்கத்தில் சங்கற்பங்கள் ஓதுவது சிறந்த பயனளிக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இதன் உட் பொருள் விளக்கவும். பயன் சங்கற்பத்தால் எழுவது மறு பிறவிக்கா அல்லது நிகழ்காலத்திற்கு ஒக்குமா?


பதில்

பாமர மக்களின் தத்துவஞானியும், அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த கேள்விக்கான விளக்கம் அளிக்கிறார்.

‘எல்லா உயிர்களுக்கும் தேவையான அனைத்தும் பிறப் போடு இணைக்கப் பெற்றிருக்கின்றது உண்மை. இது இயற்கையின் ஒழுங்கமைப்பு.  எந்த செயலுக்கும் விளைவு உண்டு செயலிலிருந்து விளைவைப் பிரிக்க முடியாத இணைப்பும் இயற்கையின் ஒழுங்கமைப்பே. 

எனவே இனிய வாழ்விற்கு வேண்டியவற்றை மாத்திரம் முயற்சியால் அடைய எண்ணத்தில் வலுவேற்றிக்கொள்வது சிறந்தது. 

மனிதன் நிலை பிறழாதிருக்கவும், முயற்சியை முறைப்படுத்தவும், செயல் பிறழாது காக்கவும் இம்முறை மிகவும் அவசியம். எச் செயலுக்கும் மூலம் எண்ணமே ஆகையால் எண்ணத்தில் உறுதி ஏற்படுத்திக் கொள்வதே சங்கற்பம் ஆகும்.

இயற்கையின் ஒழுங்கமைப்புப்படி மழை பெய்கிறது. அணைகட்டி, குளம், ஏரி, வெட்டி நீர் தேக்கி பயன் காண்கிறோம். இயற்கையின் ஒழுங்கமைப்பு இங்கு ‘விதி’ யாக அமைகிறது. முயற்சி ‘மதி’ யாகிறது, தெய்வச் செயலாகிய விதியை உணர்ந்து கொண்டால், முயற்சியின் ஒழுங்கமைப்பில் தான் வாழ்வு சிறப்படையும் என்ற உண்மை புலனாகும்.

அவ்வொழுங்கமைப்பிற்காக மனதிலே உறுதி பெறவேண்டும். எனவே சங்கற்பம் மனிதனுக்கு மிக்க பயன்தருகின்றது. உயர்ந்த நோக்கத்தில் வகுத்து உருப்போடப்படும் சங்கற்பங்கள், பொருள் துறைக்கும் நல்லது; அருள் துறைக்கும் நல்லது. இம்மைக்கும் நல்லது; மறுமைக்கும் நல்லது.’

வாழ்க வளமுடன்.

-

Why India has that yoga, karma, worship to the divine etc.?


இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?


பதில்:

முகம் மலர்ந்த சிரிப்போடு இந்த கேள்வியை வரவேற்கிறேன். நல்ல கேள்விதான். ஆனால் இதில் மிகப்பெரிய பிழை இருப்பதை அறியாமலேயே நீங்கள் கேட்டுவிட்டீர்கள். தவறில்லை. நாம் உண்மை என்ன என்று அலசி ஆராய்ந்துவிடலாமே?

இப்போது நாம் ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு போய்விடலாமா? நார்வே (Norway) என்ற நாட்டை தேர்ந்தெடுத்து  ஓஸ்லோ என்ற நகரத்திற்கு (Oslo) பயணித்துவிடலாம். இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் இருந்து கிட்டதட்ட 7700km தூரம் இருக்கிறது. விமானத்தில் செல்ல 13Hr நேரம் ஆகலாம். பயணச்சீட்டிற்கு 60k ஆகலாம். நாம் எண்ணித்தின் வழியாக செல்வதால் ஒரு செலவும் இல்லை. இன்றைய நாளில் அங்கே, கால நிலை, குறைபனி -2 என்று சொல்லுகிறார்கள் (March 13'2024). அங்கே வாழ்கின்ற மக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள்? அங்கே காற்று இருக்கிறது. தினமும் ஒரு நாளில், நாம் காண்பதுபோலவே சூரியனின் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் வெப்பமில்லை. சந்திரன் ஒளிர்கிறது. காலையும் உண்டு, இரவும் உண்டு. அங்கே வாழும் மக்களுக்கு உடலும் உண்டு, குடலும் உண்டு, மனமும் உண்டு. பசி எடுக்கும் சாப்பிடுவார்கள். மனமிருப்பதால், வாழ்க்கையின் இன்பம் துன்பம், மகிழ்ச்சி வருத்தம், கவலை, சினம் வந்துகொண்டுதான் இருக்கும். காதலும் உண்டு, காமமும் உண்டு, திருமணமும், இணைந்த குடும்ப வாழ்க்கையும் உண்டு, அதில் பிரச்சனைகளும், சண்டைகளும் உண்டு, பிரிவும் உண்டு, 

தங்கள் வாழ்க்கையையும், குழந்தையின் எதிர்காலத்தையும் திட்டமிட்டு உழைப்பார்கள், பணமும் பொருளும் சம்பாதிப்பார்கள். உழைப்பின் மிகுதியால் சோர்வும், அசதியும், தூக்கமும் வரலாம். குளிரை தாங்கமுடியாமல், சூடாகவும், சூட்டை ஏற்படுத்தி தாங்கிக்கொள்ள, அவர்கள் புகைக்கலாம், மதுபானங்கள் குடிக்கலாம். காய்கறிகள் சாப்பிடலாம். மாமிசம் மட்டுமே முழுநேர சாப்பாடாகவும் இருக்கலாம். அது அந்த நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரம். அதன்வழியே இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம், பிரச்சனைகளும், நோய்களும், பெரும் செலவும் வரலாம்தானே? குணப்படுத்தலாம், அதுமுடியாமல் இறக்கவும் நேரலாம்.

ஆக அங்கேயும் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. சிலருக்கு இறை வழிபாடு இருக்கலாம். யாருக்குமே நம்பிக்கையின்றி அதில் ஏமாற்றமும் இருக்கலாம்.  எனினும் தெய்வீகம் என்ற மெய்ப்பொருள் அதன் இயல்பில் மாறிக்கொள்வதில்லை. அவர்களும் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறார்கள். வேறெரு கோளிலோ, கிரகத்திலோ இல்லை. அவர்களுக்கும், காலநிலை, பருவமாற்றம் எல்லாமும் உண்டு.

அவர்கள் எதைச்செய்தாலும் நல்லவிளைவுகள் மட்டுமே வருமா? விளைவறிந்து தான் எதையுமே செய்வார்களா? உணர்ச்சியும், சிந்தனையும், நோக்கமும் எப்போதும் நேர்மையாக தெளிவாக இருக்குமா? சினம், கோபம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பார்களா? தங்களுக்குள் தாக்கிக் கொள்ளாமல், மரியாதையாக நடந்துகொள்வார்களா? எப்போதும் அன்போடும், நட்போடும், கருணையோடும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா? இப்படியாக எத்தனையோ கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? 

இவ்வளவு இருக்கும் பொழுது எப்படி அவர்கள், மனிதப்பிறவியின் நோக்கத்தில் இருந்தும், மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தில் இருந்தும் தப்பிவிடுகிறார்கள் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பார்வைக்கு ஒரு உண்மை தெரியவில்லை என்றால் அது இல்லவே இல்லை என்று கருதிவிட முடியுமா? எங்கும் நிறைந்துள்ள, உலகையும், சந்திரனையும், சூரியனையும், அவைகளைப்போல பலதுமாக இருக்கும் கிரங்களையும், நட்சத்திரங்களையும், மண்டலங்களையும் மிதக்கவிட்டு, தாங்கிக்கொண்டிருக்கும் அந்த மெய்ப்பொருளை, கண்ணால் பார்க்கமுடியவில்லை என்பதால், இல்லை என்று சொல்லுவது பொருந்துமா?

இதுபோலவே, நாமும் பிறமக்களும் வாழும், இந்த பூமியில் இருக்கின்ற எந்த ஒரு வெளிநாட்டையும், மனிதர்களையும் சிந்தித்துப்பாருங்கள். உங்களால் முடிந்தால் கடல்கடந்து, வான்கடந்து சென்று, நேரிலே, நிஜமாக அவர்களோடு பேசி பழகி கேள்விகள் கேட்டு, உண்மையை அறியுங்களேன்.

மனிதனின் மூலம் என்ன? அவன் யார்? என்பதை தானாகவே அறியும் வழிதானே ‘கடவுள்’. அதை உலகில் பிறந்த ஆறாவது நிலை அறிவைக்கொண்ட மனிதன் அறியவேண்டும் என்பதுதானே அந்த பரிணாமத்தில் பொதிந்துள்ள உண்மை. அதை மறந்து, மறுத்து வாழ்ந்துவிட்டால், தப்பிப்பதாக அர்த்தமா?

அப்படித்தானே நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தார்கள், இன்னும் சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் இந்த முயற்சியை விட்டுவிடலாமா? இருக்கும் நவீன விஞ்ஞான அணுவியல் கருவிகளை அனுபவித்துக்கொண்டு, உண்டு, உறங்கி, எழுந்து, வாழ்ந்து மடிந்து போகலாமா? அப்படியானால், நமக்கும் நமக்கு கீழான உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் பார்வையை மாற்றி, வெளிநாட்டு மக்களை, உள்நோக்கி அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். உண்மை தானாகவே உங்களுக்கு புரியும். அவர்களும் விதிவிலக்கல்ல. உலகில் எந்த மனிதர்களுமே விதிவிலக்கல்ல. அவர்கள் உங்களைவிட, யோகம் குறித்த உண்மையை அறியாது இருக்கலாம் அல்லவா? உங்களால் முடிந்தால், அவர்களை, அவர்களின் மனதின் தரத்தை இன்னும் உயர்த்தலாமே? அப்படியொரு உயர்ந்த வேலையும், பொறுப்பும் சக மனிதாகிய உங்களுக்கும் இருக்கிறதே? யோகத்தில் உயர்ந்த பிறரைப்போல நீங்கள் உயரவேண்டும் என்று நினைப்பது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டலாமே? சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க வளமுடன்

-


In our life mind is very problematic, any easy solution for that? can we live without mind?


வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!

பதில்:

உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. மேலும் நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவர் என்பதும், ஏதோ ஓர் ஆர்வத்தில் உள்ளே காலடி எடுத்து வைத்துவிட்டதும் தெரிகிறது. விட்டால் வேறே எங்கேயாவது தப்பி ஓடிவிடவும் யோசனையாக இருப்பதும் யூகிக்க முடிகிறது. உங்களுக்கான தெளிவான பதிலாகவே தருகிறேன்.

மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன் என்று அர்த்தமாகிறது. மனதையும், மனிதனையும் பிரிக்கவே முடியாது. பிறக்கும் பொழுது இல்லாத மனம், மூன்று வயதிற்குப் பிறகு துணையாக நின்று, நாம் வாழும் காலம் வரை கூடவேதான் இருக்கும் பிரிவதே இல்லை. பிரிக்கவும் முடியாது.

வேதாத்திரிய யோகத்தில் இருக்கின்ற நீங்கள், உங்கள் மனதைக் கொண்டுதான் தியானமும், தவமும் செய்யமுடியும். அதே மனதைக் கொண்டுதான் புலன்களை கடந்து நிற்க முடியும், மனமே மனதை அறியச்செய்யவும் முடியும். அந்த மனதால்தான் நம்முடைய உயிரையும் அறியமுடியும். அதே மனதால்தான் உயிருக்குள்ளாக நிற்கின்ற அறிவை, மெய்ப்பொருள் நிலையாகவும் உணரமுடியும். அத்தகைய மனதை விட்டு விலகிவிடவும், சும்மா இருக்க வைக்கவும், தள்ளிவைக்கவும், தூரவைக்கவும் விரும்பினால் எப்படி அது நியாயமாகுமா?

உங்கள் வாழ்நாளில் உங்களை குழப்புவதே உங்களின் மனம் தான். ஏன் குழப்புகிறது? நீங்கள் அப்படி அதை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால், நான் எங்கேய்யா அதை வளர்த்தெடுத்தேன்? என்று என்னிடமே எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி நீங்கள் அதை செய்யவில்லை என்றால், உங்கள் தாய் தந்தையர், அவர்களின் தாய் தந்தையர், அவர்களின் அவர்களின் தாய் தந்தையர் இப்படி, பரம்பரை பரம்பரையாக செய்திருக்கலாம் அல்லவா? அதெல்லாம் எனக்கு ஏனய்யா வந்தது? என்கிறீர்களா? நீங்கள் தானே வாரீசு? உங்களிடம் தானே அது வந்து தங்கி நிற்கும்? சரிதானே?

அந்தவகையில் தங்கி நிற்பதெல்லாம், கர்மா என்ற வினைப்பதிவாக இருக்கிறது. அது எல்லாமே தீர்க்கவேண்டிய, அகற்றவேண்டிய, கழிக்கவேண்டிய பதிவுகள். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். அது இயல்பு. இயற்கையின் வினை விளைவு நீதி அதுவாகும். அதை நீங்கள், இந்த யோகத்தின் வழியாக, அறிந்து, திருத்தி அமைக்கவேண்டும். அதற்காகத்தான் தற்சோதனையும், அகத்தாய்வும் இருக்கிறதே? அதைச் செய்யலாமே?

இப்படி எதுவுமே முயற்சிக்காமல், மனதை புரிந்தும் கொள்ளாமல், வெறுமனே ஒதுக்கி வைக்கிறேன், தள்ளி வைக்கிறேன், சும்மா வைக்கிறேன் என்றால் அது நகர்ந்துவிடுமா? நீங்கள் விலக்க விலக்க இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். மேலே சொன்ன பயிற்சிகளை தொடருங்கள், தவத்தையும் தொடருங்கள், மனம் தெளிவு பெறும், நீங்களும் தெளிவு பெறுவீர்கள்.

வாழ்க வளமுடன்
-

Why not any changes on my worries in life after yoga?


யோகத்திற்கு வந்தபிறகும் கூட வாழ்க்கைக் குறித்த கவலை மாறவில்லையே? எப்போது மாறும்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்தபிறகும் கூட வாழ்க்கைக் குறித்த கவலை மாறவில்லையே? எப்போது மாறும்?


பதில்:

பெரும்பாலான மக்களின் நிலை அதுதான். சிலர் வெளியே சொல்லுவார்கள், சிலர் தனக்குள்ளாக புலம்பி தவிப்பார்கள். சிலர் அதை மறக்க நினைத்து புகை, குடி, போதை போன்ற இன்னும் பல தவறான பழக்கங்களுக்குள் சிக்கி விடுவார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி, யோகத்திற்கு இவர் வந்துவிட்டார் என்பது ஓர் ஆறுதல்தான். ஒரு மனிதன் யோகத்தில் இணைவதற்கு என்ன தகுதி வேண்டும்? என்று, வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்ட பொழுது, அவர் ‘உடல், மனம், உயிர் வேண்டும்’ என்றுதான் பதில் தந்தார். அதனால் உங்கள் கவலையால் ஏற்பட்ட, தவறான பழக்க வழக்கம் சூழல் என்றாலும், அது யோகத்திற்கு தடையை ஏற்படுத்தாமல், விட்டு விலக்கி விடாமல்  இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் யோகத்தின் வழியாக உங்களை நீங்களே, நல்லவழியில் செல்ல திருத்திக்கொள்ள முடியும் அல்லவா?

யோகத்தில் வழியாக, நாம் நம்முடைய மனதைத்தான் முதலாவதாக சீர் செய்கிறோம். இதுவரை நாம் நம்முடைய உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும், ஆன்மாவுக்கும் செய்துவந்த தவறுகளை திருத்துகிறோம். ஏற்கனவே நம்மோடு கலந்து இருக்கும், பிறவி வழியாக வந்த கர்மா என்ற வினைப்பதிவுகளை திருத்தி அமைக்கிறோம். வாழும் வாழ்க்கையில் நம்கூடவே வாழும் இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் நன்றிக்கடனையும் செலுத்துகிறோம். இயற்கையை மதித்து அதனோடு நல்லுறவு பேணுகிறோம். இந்த பயணத்தில் உடனடியாக நமக்கான மாற்றம் வந்துவிடுவது சாத்தியமில்லை.

ஏனென்றால் நம்முடைய சுமை, கர்ம வினைகளினால் ஆன சுமை, எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. எத்தனையோ தலைமுறைகளாக, நம்முடைய பரம்பரையினர் தீர்க்காத நிலையில், இப்பொழுதான், நாம் இந்த முயற்சியை எடுத்து, முடிவாக யோகத்தில் இணைந்து பயணிக்கிறோம். அந்த வகையில், இதற்கான ஒரு உந்துதலை உருவாக்கித்தந்த அந்த முன்னோர்களை வாழ்த்தியும் வணங்குவோம்.

இப்படியான, வாழ்க்கைக் குறித்த கவலை,  வாழ்க்கை சிக்கல் என்பதெல்லாம், நாம் யோகத்தில் இணைந்த உடனே மாறிவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு. அது தானாக நிகழும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். மனதோடு வாழும் நாம், என்றுமே ஒர் எதிர்பார்ப்பிலேயே வாழ்வதற்கு பழகிவிட்டோம். அதை நாம் திருத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்கு யோகசாதனையில் தவம் நன்கு உதவிடும். நம்முடைய மனம் என்றுமே, கடந்த காலத்தையும், நாளைய நாளையும் இணைத்துக் கொண்டே, காட்சியாக காட்டிக் கொண்டே, இன்றை நாளை மறுத்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம்.

அந்த நிலை மாறி, இன்று, இப்பொழுது என்று விழிப்படைவதற்கு மனம் பழகவேண்டும். அப்படி பழகிவிட்டால், உங்களுடைய கவலை, வாழ்க்கை சிக்கல் அகன்று, அதை தீர்ப்பதற்கான வழிகளும் பிறப்பதை காண்பீர்கள். இதற்கு அன்றாடம் நாம் செய்யும் தவம் உதவுகிறது. அந்த தவத்தின் வழியாகவே முன்னேற்றமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது. தீர்வுகளும் உருவாகிறது. மனம் தளராமல் தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Nothing miracle not happen by joining and way of yoga, then way?


யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?


பதில்:

இந்த கேள்விக்கு எதிர்வினையாக, நான் புன்முறுவல் செய்கிறேன். உங்கள் கேள்வியை, அதனுள் இருக்கும் ஏக்கத்தை வரவேற்கிறேன். அதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதையும், அதனால் எழுந்த ஏமாற்றமும் கலந்திருப்பதை அறிகிறேன். 

உங்கள் கேள்வியின் வழியாக, நீங்கள் மிகப்பெரும் உண்மையை, பிரமாண்டத்தை, ஏற்கனவே நிகழ்த்தப்பட்டு இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிசயத்தை, மாயாஜாலத்தை அறியாமல் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதில் பயணிக்கிறீர்கள் என்றும் சொல்லுகிறீர்கள். ஆனால் பயணம் எத்தகையது என்று உங்களுக்கே புரியாமலும் இருக்கிறீர்கள். நேரிலே நாம் பார்த்துக் கொள்ளாததால் அந்த நிலையை என்னாலும் சொல்ல முடியவில்லை, எனினும் யூகிக்க முடியும்.

சரி, இப்போது உங்கள் அளவிற்கு நானும் இறங்கி நிற்கிறேன். உங்களுக்கு என்ன அதிசயம் நடக்கவேண்டும்? 

நினைத்த உடனே அந்தப்பொருள் உங்கள் கைகளில் தோன்றவேண்டுமா? ஒரு மலர் வேண்டுமென்றால், மலர் வேண்டும். பணம் வேண்டும் என்றால் பணம் வேண்டும். யாராவது வந்து உங்கள் கைகளில் திணித்துவிட்டு, 

‘இதை உங்கள் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள், திருப்பித் தரவேண்டாம்’ என்று சொல்லவேண்டுமா?

‘உங்களைப்போல ஒரு நல்ல மனிதர், உயர்ந்த மனிதர், என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை’ என்று யாராவது பாராட்ட வேண்டுமா?

’உங்களை என் வாழ்க்கத்துணைவராக பெற்றது என் பாக்கியம்’ என்று வாழ்க்கைத்துணைவர் போற்றி வணங்க வேண்டுமா?

‘அப்பா, என் வாழ்வில் நீங்கள் பெரும் அதிசயம், உறுதுணை, நன்றி’ என்று பிள்ளைகள் பாராட்ட வேண்டுமா?

எனக்கு இருக்கும் நோய், துன்பம், பிரச்சனை உடனே தீரவேண்டும், அதுபோல மற்றவர்களின் நோய், துன்பம், பிரச்சனை என் மூலமாக தீர வேண்டும், அதன் வழியே உலகப்புகழ் பெறவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

ஊரும், உலகமும் உங்களுக்கு மட்டுமே உதவவேண்டும், போற்றவேண்டும், மரியாதை செலுத்தவேண்டும், வணங்கவும் வேண்டும் என்கிறீர்களா?

கோடிக்கணக்கான சொத்தும், எண்ணற்ற வைரம், தங்க கட்டிகளும், ஆபரணங்களும், நிலமும், வீடும், தோட்டமும், காரும், ஹெலிகாப்டரும், விமானமும், தனித்தீவும் வேண்டும் என்கிறீர்களா? இல்லை இந்த பூமி போல வேறேதும் உங்களுக்கென்று வேண்டுமா?

இப்படி எல்லாம் நடக்கவேண்டும், அதற்கு இந்த இறையாற்றல் உதவவேண்டும், அதற்காகவே நான் யோகத்தில் இணைந்துகொண்டேன். வேறெதும் எனக்கு தேவையில்லை என்று எதிர்பார்ப்போடுதான் நீங்கள் இங்கே, இந்த உலகில், இந்தப்பிறவியில் வாழ்கிறீர்களா?

போதுமா?

இப்போது இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள், பதில் தெரியவில்லை என்றால் சிந்தித்து பதிலை திரட்டுங்கள். கேட்கலாமா?

இந்த உலகில் எப்படி பிறந்தீர்கள்?

அதில் உங்கள் ஆர்வமும், முயற்சியும், உழைப்பும், விருப்பமும் என்ன?

வேறு எதற்காக பிறந்தீர்கள்?

பிறப்பதற்கு முன்னால் எங்கிருந்தீர்கள்?

பிறந்தபொழுது ஒரு முழம் இருந்த நீங்கள் இன்று கிட்டதட்ட ஆறு அடிக்கு வளர்ந்தது எப்படி?

நீங்கள் பிறந்தது, தவழ்ந்தது, நடக்கமுயற்சித்த மூன்று வயதுக்கு முன்னதான நினைவுகளை ஏன் சொல்லமுடியவில்லை?

உங்கள் தாத்தா, பாட்டி, அவர்களின் தாத்தா, பாட்டி இப்போது எங்கே?!

இதற்கு முன் பேரரசர்களும், மன்னர்களும், கோடீஸ்வர்களும், பெரும் உலக பணக்கார்களும் என்னவானார்கள்? எங்கே போனார்கள்? அவ்வளவு பெரிய நாட்டையும், பொன்னும், பொருளும்,  பணமும், தன் சொத்துக்களையும் எடுத்துக்கொண்டுதான் போனார்களா?

வாழும் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என்னவாக மாறப்போகிறீர்கள்? எங்கே போவீர்கள்?

இந்த அதிசயத்தை, மாயாஜாலத்தை நிகழ்த்துவது யார்? இதைவிட பெரிய அதிசயம், மாயாஜாலம் உங்களுக்கு வேண்டுமா?

சிந்தித்துப்பார்த்து விடை தேடுங்கள், விடை கிடைக்கவில்லை என்றால் ‘யோகத்தின்’ வழியாக முயற்சியுங்கள்.

உடனே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ்வதுதான் யோகமா? என்று குறுக்கு கேள்வி கேட்காமல் மேலே கேட்டவற்றிற்கு முதலில் சிந்தனை செய்யுங்கள். அதிலே இந்த கேள்விக்கான விடையும் இருக்கிறது!

வாழ்க வளமுடன்.

Following the Karma Yoga is easy, so no need any other yogas!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கர்ம யோகம் மிக சுலமானதாக, திருப்தியாக இருக்கிறது, அதனால் மற்ற யோகங்கள் அவசியம்தானா?


பதில்:

மிக நல்ல விஷயமாக, முதலாவதான பக்தியோத்தில் இருந்து, கர்மயோகத்திற்கு, உயர்ந்திருக்கிறீர்கள் என்பது சிறப்பு. உண்மையாகவே, யோகம் எளிமையாகவும், புரிந்துகொள்ளும்படியும் இருக்கவேண்டும் என்பதற்காகவும், அதற்கு மக்கள் பழகிக் கொள்வதற்காகவுமே யோகம், பல நிலைகளாக உருவாக்கப்பட்டது. இதனால் கர்ம யோகம் எளிதானதுதான் என்பதில் ஐயமில்லை. இது அடிப்படை நிலையில் இரண்டாவது ஆகும். 

உலகில் நாம் காணும் பல்வேறு வகையிலான கருத்துக்களும், விளக்கங்களும், அறிவுரைகளும் இந்த கர்ம யோகத்தின் வெளிப்பாடுகள் தான். அதாவது பக்தி யோகம் என்பதில் ஏதேனும் திருத்தம் பெற்று, தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டவர்கள், மக்களின் நலன் சார்ந்து, இந்தமாதிரி நல்ல விசயங்களை கடைபிடியுங்கள்.  நல்லதே நினையுங்கள், அதன்வழி நல்லதே செய்யுங்கள், மனதை இப்படியாக பக்குவப்படுத்துங்கள், உடலை இப்படி பேணிகாத்திடுங்கள் என்று சொல்லுவதும் கூட, கர்ம யோக நிலைதான். ஒருவகையில், நம்முடைய அடிப்படை பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதாகவும் அமையும்.  பிறருக்கும் அது விளக்கமாகவும் அமையும். அதாவது நம்முடைய செயல் வெளிப்பாடுகளைப் பார்த்து, பிறர் திருத்திக் கொள்கின்ற அளவில் உதவலாம். எனவே கர்ம யோகம் என்பது, பிறருக்கு நேரடியாக உதவி செய்வதுதான் என்ற அர்த்தத்திலிருந்து விலகி, தன்னை திருத்திக் கொண்டு இயங்கினாலும்கூட அது பிறருக்கு உதவும் என்ற நிலை இங்கே அமைந்துவிடுகிறது.

இதுதான் உங்களுக்கும், பெரும்பாலோருக்கும் மிக சுலபமானதாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. அப்படியானால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும், கர்ம யோகத்தை தொடரலாம். அதில் எந்த குறையுமில்லை. இந்த கர்ம யோகத்தின் நிலையில், நானும் பிறமக்களும் சமம் என்ற உணர்வு தோன்றும். அது மிகவும் அற்புதமானதுதான். இந்த நவீன, இணைய தொழில்நுட்ப காலத்தில், இந்த கர்ம யோகம்தான் முதன்மையாக இருக்கிறது எனலாம். எல்லோருமே தனக்குத் தெரிந்ததை, தான் கற்றதை, தன் அனுபவத்தை பிறருக்கு அறியத்தருகிறார்கள். அதை மற்றவர்கள் அறிந்துகொள்கிறார்களோ, கடைபிடிக்கிறார்களோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்கு இடமின்றி, தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ‘ஏன்யா? இதெல்லாமா கர்ம யோகம்?’ என்கிறீர்களா? இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, அப்படி கேள்வி கேட்கும்படியாகத்தான் இருக்கிறது! ஒன்று செய்யுங்கள், நீங்கள் அவரிடம் சென்று ‘ஏன்யா நீங்கள் இதையெல்லாம் பகிர்கின்றீர்கள்?’ என்று கேள்வி கேளுங்கள். அதற்கு அவர் ‘கர்ம யோகம்’ என்ற விளக்கத்தில்தான் பதில் தருவார்.

ஆனால் இங்கே, இப்படியான கர்ம யோகத்தில் பெரும் சிக்கல் இருக்கிறது. கர்ம யோகம் என்ற புரிதலில் வரும் சிக்கல் அது. கர்ம என்பது, எண்ணம், சொல், செயல் இந்த மூன்றின் வழியாக தோன்றுவது ஆகும். இதனூடாக, கர்ம வினைப்பதிவும் நமக்குள்ளாக அமைந்தது வெளிவரும், புதிதாகவும் நமக்குள் பதியும் என்பது இயற்கை நீதி. எனவே கர்ம யோகத்தை நீங்கள் செயல்படுத்திவரும் பொழுது, இந்த கர்ம வினைப்பதிவு குறித்த விழிப்புணர்வு அவசிமாகிறது. இல்லையேல் அது உங்களுக்கும், பிறருக்கும் தடையை ஏற்படுத்திவிடுமே?! மேலும் இதன் வழியாக உயர்வதுதான் முறையானது, இங்கே நின்றுவிடுவது உங்கள் விருப்பமாக இருக்கலாம், எனினும் அது பிறவி நீள்வதற்கான காரணமாகிவிடும்! இதனால், பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம் என்று அடுத்த நிலைகளுக்கு மாறியே ஆகவேண்டும்.

வாழ்க வளமுடன்.