Is it true to say that there is a purpose in the birth of man?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு நோக்கம், மனிதனின் பிறப்பில் இருப்பதாக சொல்லுவது உண்மையா?
பதில்:
இந்த கேள்விக்கான பதிலை நீங்கள், உங்களுடைய வாழ்க்கையிலேயே புரிந்துகொள்ள முடியும் என்பதே உண்மை. நான் தனியாக விளக்கிச் சொல்வதற்கு தேவையே இல்லை என்று நினைக்கிறேன். உங்களைப்போலவே எல்லோருமே இந்த சந்தேகத்தில்தான் இருந்திருப்பார்கள். நாளடைவில், தங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்கள், அது தொடர்பான துன்பம், இன்பம், குறை, நிறை இப்படி பலவகைகளில் அனுபவம் பெறும்பொழுது, நம்முடைய வாழ்வில், இப்படியான சராசரி வாழ்வையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்ற கேள்வி பிறந்துவிடும்.
ஒருசிலர் தானாகவே அதற்கான பதிலை கண்டுபிடித்து அதற்கான வழியில் செல்ல தயாராகிவிடுவார்கள். ஒருசிலர் பக்தி, வேதாந்தம், ஆன்மீகவாதிகள், மகான்கள், ஞானிகள் தருகின்ற விளக்கங்களின் வழியாக தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். சிலர் தன்னுடைய வாழ்வில் கிடைக்கக்கூடிய விளக்கத்திற்காக, யோகத்தில் தன்னை இணைத்துக் கொள்வார்கள்.
ஆனாலும் பெரும்பாலோர், நம்முடைய பிறப்பில் எது இருந்தால் என்ன? இப்போது வாழ்வோம், அதெல்லாம் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்து, வழக்கமான வாழ்வையே வாழ்ந்து அனுபவிக்க தயாராகிவிடுவார்கள். நான் பிறந்தே தப்பு, நான் பிறந்த நேரம் சரியில்லை, என் ஜாதகம் பிரச்சனை, கிரகக்கோளாறு, போன பிறவியில் நான் செய்த பாவம், தெய்வத்திற்கு என்மீது இரக்கமே இல்லை, கடவுளே இல்லை, எல்லாம் பொய், வாழ்க்கையும் பொய் என்பதாக அப்படி இப்படி என்று புலம்பிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களை வேறொன்றும் செய்யவேண்டாம், அவர்கள் தேர்ந்தெடுத்தது அது என்றால் நாம் என்ன செய்யமுடியும்?
நீங்கள் இந்த கேள்வி கேட்டதே ஒரு நல்ல நகர்வு என்று சொல்லலாம். அதற்காக உங்களை பாராட்டுகிறேன்.
மேலும் தெளிவான விளக்கம் பெற, இந்த காணொளியில் கேட்டு அறியலாம். உண்மைகளை அறிய குரல்வழி விளக்கம் போதுமானது என்பதால், குரல்பதிவாக தந்திருக்கிறேன்.
வாழ்க வளமுடன்.
-