Why some of best chances missing in my life?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு ஏன் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது?!
பதில்:
இதற்கு பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது எனலாம். எப்படி தெரியுமா? இதோ, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஏன் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறது? என்று சொல்லலாம். ஆம், ஒருநாளில், நீங்கள் கண்விழித்தது முதல் என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்விழித்ததே நல்ல வாய்ப்பு தானே? உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே?! உண்மைதானே?!
எனவே நீங்கள் கண்விழித்தது நல்ல வாய்ப்பு, முதலாவதாக கிடைத்துவிட்டது. பிறகு இயற்கை கடன்களை தீர்த்துவிட்டீர்கள். அதுவும் இயற்கை உங்களுக்கு வழங்கிய வாய்ப்புத்தான். இல்லை என்று மறுத்துவிடுவீர்களா? அடுத்ததாக நல்ல காஃபி, தேனீர் உங்கள் வாழ்க்கைத்துணைவர் தருகிறார். நீங்கள் அவருக்கு தயாரித்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். திருமணம் ஆகாதவர்களுக்கு, தாயோரோ, உடன்பிறந்தோரோ தயாரித்து தரலாம். சரியான நேரத்திற்கு காலை உணவும் கிடைத்துவிடுகிறது. உணவகத்திற்குப் போய் சாப்பிட்டாலும் கூட, யாரோ ஒருவர் உங்களுக்காக சமைத்து தருகிறார். யாரோ ஒருவர் உங்களுக்கு பரிமாறுகிறார். இப்படி எல்லாவகையிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறதுதான்.
ஆனால் இதையெல்லாம் நாம், நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை, அப்படி கருதிக்கொள்வதும் இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், நான் கேட்டது, நான் எதிர்பார்த்தது கிடைக்குமா? கிடைக்கவில்லையே என்று இந்த எதிர்பார்ப்பினால், ஏற்கனவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் கவனம் செலுத்தாமல் இழந்து விடுகிறோம். இகழ்ந்தும் விடுகிறோம்.
இதற்கு காரணம், நாமும், நம்முடைய மனமும், அதில் எழுகின்ற எண்ணங்களும், இதனோடு தொடர்புடைய மூளையும் பரபரப்பாகவே இருக்கிறது. அமைதியும் பொறுமையும் இல்லை. இந்த அமைதியையும், பொறுமையையும் உங்களுக்குள்ளாக கொண்டு வாருங்கள். உண்மையை அறிவீர்கள். உங்களைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்!
வாழ்க வளமுடன்.