How to understand the Almighty worship between just human and after realization | CJ

How to understand the Almighty worship between just human and after realization

How to understand the Almighty worship between just human and after realization


சராசரி மனிதனின் இறைவழிபாடும், இறையுணர்வு பெற்ற மனிதனின் இறைவழிபாடும் ஒன்றானதுதானா? எப்படி விளங்கிக் கொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சராசரி மனிதனின் இறைவழிபாடும், இறையுணர்வு பெற்ற மனிதனின் இறைவழிபாடும் ஒன்றானதுதானா? எப்படி விளங்கிக் கொள்வது?


பதில்:

இந்த கேள்விக்கான விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே தருகிறார். அதையே உங்களுக்கு தந்துவிடுகிறேன். முன்னதாக, சராசரி மனிதன், தன்னளவில் இறைவழிபாடு செய்கிறார். அது உண்மை, விளக்கமற்று மறைந்திருக்கிறது. யோகத்தின் வழியாக, தன் முயற்சியினாலும், ஆர்வத்தினாலும்,  பக்தி என்ற வழிபாடு கடந்து, இறையுணர்வு அடைந்தவரின் வழிபாடு, உண்மை உணர்ந்த வழிபாடாக இருக்கும். அந்த வழிபாட்டின் உண்மையை, இதோ அறிவோம்.

ஒருவர் இறையுணர்வு பெற்று விடுகிறார். அவர் பெறும் விளக்கம் என்ன? பேரியக்க மண்டலம் முழுவதும் காணப்படும் காட்சிகள் விண் எனும் நுண்துகள்களும், இறைவெளியும்தான். இந்த இரண்டு தத்துவங்களின் கூட்டு இயக்கம்தான் அனைத்துத் தோற்றங்களும். ஒவ்வொரு தோற்றத்திலும் விண், வெளி இவற்றின் விகித அளவுதான் வேறுபடும். இந்த இரண்டில் வெளியேதான் இறைநிலையாக, பூரணப் பொருளாக, தெய்வமாக உணருகிறார். எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே. ஒவ்வொரு விண் எனும் பரம அணுவைச் சுற்றிலும் இருப்பது இறைவெளியே. 

விண் துகள் சுழற்சி விரைவில் சூழ்ந்துள்ள இருப்பு நிலையாகிய இறைவெளியில் உரசும்போது எழும் அலையே காந்தம். இந்தக் காந்தம் விண் களம், காற்று, அழுத்தக் காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களில் முறையே அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. அதே காந்தமானது சீவ இனங்களில் மனமாக இயங்குகிறது.

இறைநிலையிலிருந்து விண்துகளின் உரசலால் எழுந்த காந்த அலை அதே விண்துகள் கூட்டு இயக்கங்களான பஞ்ச பூதங்களில் பஞ்ச தன்மாத்திரைகளாகவும் உயிரினங்களில் மனமாகவும் இயல்பூக்கம் பெற்று இயங்குகிறது. அதே காந்த ஆற்றல்தான் ஒரு சீவன் உண்ணும் உணவை இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு தாதுக்களாக மாற்றி உடலைச் சீராக நடத்துகிறது.

இவ்வாறு இறைநிலையானது [தெய்வம்] தனது காந்தமென்ற ஆற்றலால் உடலைச் சீராக நடத்தும் போது எனது புலன் உணர் ஆர்வத்திலெழும் செயல்களாகிய உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து செயல்கள் இறையாற்றலின் செயல்களைச் சீர்குலைக்கவோ, தடை செய்யவோ, முரண்படுத்தவோ கூடாது. 

அதற்கு ஒத்த வழியிலேயே என் புலன் மனம் விருப்பச் செயல்களை அமைத்து அந்த இறைநெறி வழிபட்டு அதன் வழியே வாழ வேண்டும் என்ற விளக்கமும், அதற்கேற்ற செயல்களும்தான் இறைவழிபாடு.

எனது உடல், உள்ளம் இவற்றில் இறையாற்றல் அதன் அருட்செயலை ஆற்றுவது போல், எல்லா மனிதரிடத்திலும் செயல் புரிகின்றது. சீவனின் உடலில் மாத்திரமன்று, எல்லாச் சடப்பொருளிலும் அவ்வியற்கை ஆற்றலின் அறிவாட்சித் தரத்தை மதித்து நான் செயல்புரிய வேண்டும் என்ற இறையுணர்வில் தெளிந்த அறிவின் விழிப்பில் வாழும் வாழ்க்கையே உண்மையான வழிபாடாகும்.

என்பதாக, விளக்கமளிக்கிறார். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்

-