What is the purpose of the Human Birth? Why it is not spread worldwide? | CJ

What is the purpose of the Human Birth? Why it is not spread worldwide?

What is the purpose of the Human Birth? Why it is not spread worldwide?


பிறப்பின் நோக்கம் என்று சொல்லப்படுகிறதே? அது உண்மைதானா? அப்படியொன்று இருக்குமானால் அது ஏன் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரவில்லை?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! பிறப்பின் நோக்கம் என்று சொல்லப்படுகிறதே? அது உண்மைதானா? அப்படியொன்று இருக்குமானால் அது ஏன் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரவில்லை?


பதில்: 

மனிதனின் பிறப்பு, பரிணாமம் என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது. அதன் ஆராய்ச்சியில், மனிதனும் கூட விலங்கினங்கள் போலவே வாழ்ந்து வந்திருந்த நிலையை, பல்வேறு அகழ்வாராய்ச்சி மூலமாக அறிந்துகொண்டது. உலகம் முழுவதும் அப்படியான கற்கால மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிரூபணமும் செய்கிறது. இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் ‘நம்முடைய’ வளர்ச்சி நிலையையும், சிந்திக்கும் ஆற்றலையும், இயற்கையை பயன்படுத்திக் கொள்வதையும், சில நேரங்களில் அந்த இயற்கைக்கு மாற்றாகவும் செயல்படுவதையும் ‘ஆறாவது அறிவு’ என்று எடுத்துக்கொள்கிறது இன்றைய நவீன விஞ்ஞானம்.

கனவாக கண்ட காட்சிகளை நிஜமாக்கிடவும் செய்கிறது, என்றாலும் சிலவற்றிற்கு விடை அறியமுடியாமல் தவிக்கிறது. மனிதர்களிடையே கலந்து உலவி வரும் கற்பனை கதைகளை அகற்றிடவும் செய்கிறது. நிலவுக்கும் மனிதர்களை அனுப்பி, நிஜமாக்கியது. அப்படியாக கோள்களை மட்டுமல்ல, சூரியன் முதலான எல்லா நட்சத்திரங்களை எல்லாம் ஆராய்ந்து உண்மை தெரிவிக்கிறது. பூமிக்கு மேலே துணைக்கோள் போலவே, ஒரு விண்வெளி கப்பல் (Internation Space Station) உண்டாக்கி, அதில் மனிதர்குழு பயணித்துக்கொண்டும், ஆராய்ச்சி செய்துகொண்டும் இருக்கிறதையும் நாம் அறிவோம். என்றாலும், மெய்ஞானத்தில் சொல்லப்படுகின்ற உண்மையினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆதாரம் கேட்கிறது.

விஞ்ஞானத்தின் பார்வையில், பூமியில் இருக்கும் நாம், பூமியின் ஈர்ப்பு விசையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறோம். இந்த பூமி, வான்வெளியில் தானும் சுற்றி, சூரியனையும் சுற்றி உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை என்று சொல்லுகிறது. இங்கே சூரியன், பூமி, நிலவு, சூரியக்குடும்ப கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாமே வான்வெளியில் மிதந்துகொண்டிருக்கிறதே? அது எப்படி என்று கேட்டல் அது ஒரு ஆற்றல் சக்தியினாலும், பிரபஞ்ச ஈர்ப்பினாலும் என்று சொல்லுகிறது. Matter and Gravity என்ற இரண்டுக்குமேல் விஞ்ஞானத்தில் பதில் ஏதும் இல்லை.

மெய்ஞானம் இதையெல்லாம் கடந்து, மூலமான ஆற்றல் எது? அது எப்படி இருக்கிறது? இந்த பிரபஞ்ச பரிணாமம் எப்படி உருவானது? அந்த பிரபஞ்சத்தில், உருவான சூரிய குடும்பத்தில் உள்ள, பூமியில் உயிரின பரிணாமம் எப்படி வந்தது? மனிதன் என்பவன் யார்? என்று உண்மை அறிந்த விளக்கம் கண்டது. அதை அறிவதற்கான வழியை யோகம் என்றது. ‘நான் யார்?’ என்ற கேள்வியோடு பயணிக்கச் சொன்னது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தியை வழங்கியது. மெய்ஞானம் கருத்துக்களால் ஆனது, விஞ்ஞானம் கண்களால் பார்க்கும் பொருளால் ஆனது. அதனால் விஞ்ஞானம், மெய்ஞான கருத்துக்களுக்க மதிப்பளிக்கவில்லை. பொய் என்கிறது.

ஆனால், உண்மை மறுப்பதால் மாறுவதில்லையே? விஞ்ஞானத்தின் மறுப்பு பரவலாகப்பட்டதால், மெய்ஞானத்தின் முழுமை விளக்கம், மனிதர்களிடம் பரவினாலும் மக்கள் அதை ஏற்று, உண்மை பெறவில்லை, ஒதுக்கிவிட்டார்கள்.

இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இப்படியாக விளக்குகிறார். ‘ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம் அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும்.  எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை மனதால் உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.  இதுதான் பிறவியின் நோக்கம் (This and this alone is the purpose of life). போனபோக்கிலே பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை பழக்கம் சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்) இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம்.  இவற்றிலிருந்து விளக்கம் பெற்று விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது.  பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடவும் முடியாது’ என்கிறார்.

என்றாலும், மனிதர்களின் வாழ்வில், இயற்கையே வாய்ப்பு தந்து, உண்மை அறிக என்று சொல்லுகிறது. வெகு சிலர் அதை ஏற்று, உண்மை விளக்கம் பெற பயணிக்கிறார்கள். சிலர் கொஞ்ச காலம் கழித்து, நிச்சயமாக வருவார்கள்.

வாழ்க வளமுடன்.

-