Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now? | CJ

Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now?

Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now?


முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


பதில்: 

இந்த கேள்வியில், நல்ல புரிதல் ஒன்றை நான் அறிகிறேன். அதுகுறித்து நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். நமக்கு மேலான சக்தி, ஆற்றல் என்று குறிப்பிட்டது சிறப்பு. இப்போது கேள்விக்கு வரலாம். முன்னோர்கள், தங்களின் சிந்தனையாலும், தொடர்ந்த ஆராய்ச்சியாலும், குண்டலினி எனும் யோகத்தின் வழியாகவும், உண்மையான ‘இறையாற்றலை’ உணர்ந்து அறிந்தார்கள். அதனுடை தன்மாற்றத்தையும், பரிணாமம் என்ற சிறப்பையும் அறிந்தார்கள். அதன்வழியாக, மனித பிறப்பின் மூலத்தையும், முடிவையும் அறிந்துணர்ந்தார்கள்.

இதை ஏன் மறைபொருளாக வைத்திருந்தார்கள்? அப்படி சொல்லிவிட முடியாது. யார் வேண்டுமானாலும், ஆர்வம் கொண்டு, உணர்ந்து அறிய விரும்பினால்,  அதற்கான வழியையும் சொல்லிக்கொடுத்து, அவர்களே குருவாகவும் இருந்து, வழிகாட்டியாகவும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்படியான குருவின் துணை, இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அல்லவா? நாமும் கூட அப்படியான, மறைபொருள் அறிந்து உணர்ந்திட விருப்பம் கொண்டுதான், வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் இணைந்திருக்கிறோம். எனவே ‘மறைபொருளாக’ வைத்திருந்தார்கள் என்று சொல்லுவதற்கில்லை.

ஆனால், அந்த உண்மையை அறிய ஆர்வமில்லாத, சொல்லாலும், விளக்கங்களாலும் புரிந்துகொள்ள முடியாத, விளிம்பு நிலை மக்கள் எப்போதும் உண்டுதானே? அவர்களுக்கு அன்றாட பிழைப்பே போதுமானது என்ற நிலையில்தான் வாழ்வார்கள். அவரவர் அளவில் உண்டு, உறங்கி இன்பம் துய்த்தால் போதும் என்ற நிலையில்தான் வாழ்வார்கள். மற்ற வேறெதிலும் ஆர்வமின்றியும் இருப்பார்கள். எனக்கு தேவையில்லை என்று மறுப்பார்கள். இன்றும் இப்படியான மக்கள், நம்மோடு கலந்துதான் இருக்கிறார்கள் என்பது, உங்களுக்கே தெரியும் அல்லவா?

இப்படியான மக்களுக்கு, அவர்கள் அளவிலான, அறிவு நிலைக்கு ஏற்றவாறு, 'மெய்ப்பொருளான’ உண்மையை, உயர்ந்ததாக கருதும் அளவிலே,  ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று சொல்லி வைத்தார்கள். அதை வழிபடவும், மனதிற்குள் கருத்தாக கொண்டுவரவுமே, ஆலயம் என்ற ஆன்மா லயமாகும் இடம் என்றும் அமைத்தார்கள். கடந்து உள்ளே அறிவதுதான் ‘மெய்ப்பொருள் உண்மை’ என்பதாகத்தான் கடவுள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது வார்த்தையாகவும், வழிபாடு என்பது கொடுக்கல், வாங்கல் சடங்குகளாகவும் மாறி, அதுவே இன்றும் நிலைத்திருக்கிறது.

உங்கள் கையில் ஒரு மதிப்புமிக்க பொருளைக் கொடுத்தால், அது மதிப்பானது என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? கொடுப்பவர் அதைக்குறித்து சொல்லவேண்டும். ஒருவேளை நீங்களாக அதை உணர்ந்திருந்தாலும், அதற்கான் மதிப்பை கொண்டிருப்பீர்கள். அப்படியில்லை என்றால், அந்தப்பொருள் உங்களிடம் இருக்கும் பொழுது, ‘மதிப்பற்று’ போய்விடும் அல்லவா? அப்படித்தான், சராசரி மக்களிடம், நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக சொல்லி விளக்கம் பெற வழி செய்தனர். காலமாற்றத்தில், வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘பருவம் வந்த அனைவருக்கும், பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் விளக்கம் கிடைக்கும்’ என்பது நிகழும்.

வாழ்க வளமுடன்.

-