Why the enlightenment is late through the yoga? How long it takes?
யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?
பதில்:
உலகில் பிறந்த நாம், பக்தி வழிபாட்டின் வழியாக, இயற்கையின் உன்னதமான பெரும் பொருளை, மெய்ப்பொருளை அறிந்துகொள்கிறோம். நம்மைவிட, நம்மிலும் பெரிய, சக்திவாய்ந்த ஒன்று இறையாக, தெய்வமாக இருக்கிறது என்று நம்புகிறோம். அதற்கு மதிப்பு கொடுத்து வளர்ந்து வந்து, இளைஞர்களாக உலக வாழ்க்கையை ஏற்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறோம். சிலர் அது பொய், இல்லவே இல்லை என்ற ரீதியில் மாற்றுப்பாதையில் சென்றுவிடுகிறார்கள். நாம், இதுவரை வழிபட்டுவந்த அந்த இறையை, தெய்வீகத்தை உண்மையாக அறியும்பொருட்டு, யோகத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம்.
அப்படியான யோகத்தில், எளிமைப்படுத்தப்பட்ட வேதாத்திரியத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இப்படி சொல்லுவதால் மற்ற யோக அமைப்புக்களை குறைசொல்லுவதாக நினைத்திடக்கூடாது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையான சிறப்பை கொண்டதுதான் என்பதால், இங்கே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அப்படி யோகத்தில் பயணிக்கும் பொழுது, குருவின் அன்பினாலும், கருணையாலும், உண்மை தத்துவ விளக்கங்களை பெறுகிறோம். கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் நமக்கு புரிந்தாலும், அது நடைமுறைக்கு எளிதில் வந்துவிடுவதில்லை.
இதற்கு ஒரு மனிதனிடம் உள்ள, மூன்றடுக்கு கர்ம வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் காரணமாகின்றன. கருவழியாக, முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த வினைகள் பதிவாகி, கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அது நமக்கும் பகிரப்பட்டு இருக்கும் நிலையில், நாம் அதை தூய்மை செய்யாது, நமக்கு ஒரு குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கும் பகிரப்படும் என்பது இயற்கை விதி. அத்தகைய கர்மா என்ற வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதை தீர்ப்பதற்காக நம்முடைய, யோக பயண முயற்சி தொடரவேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு 20 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 30 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு 50 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு இன்னும் கூடுதலாக ஆகலாம்.
எனினும், யோகத்தின் வழியாக ஏற்படும் வளர்ச்சியை நாம் முடிவு செய்யவும் முடியாது. கணித்துப்பார்க்கவும் முடியாது. இந்த இடத்தில் நாம் அதை இயற்கையின் வசமும், தெய்வீகத்தின் வசமும் ஒப்படைத்து விட்டு, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். ஆனால், அந்த மாற்றங்களும், உயர்வுகளும் நாம் அறிந்திடவும் முடியும் என்பதே உண்மை. சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்கூட மாற்றம் உண்டாகிக்கொண்டே வருவதை நாம் உணரமுடியும்.
தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள், நிறைவடைவீர்கள்!
வாழ்க வளமுடன்.
-