CJ for You: genetic center

genetic center

Showing posts with label genetic center. Show all posts
Showing posts with label genetic center. Show all posts

What is the meaning of Genetic Center in the Vethathiriya Yoga?


வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.


பதில்:

கருமையம் என்ற பொருளும், அதன் உண்மையும், வேதாத்திரியத்தின் சிறப்பு ஆகும். கருமையம் நம்முடைய பொக்கிஷம் என்கிறார், வேதாத்திரி மகரிஷி. இந்த பிரபஞ்சத்தில் எப்பொருளுக்கும், கருமையம் உண்டு எனினும், உயிரின பரிணாமத்தின் வழியாக அமைந்த கருமையம், தனிச்சிறப்பு  பெற்றிருக்கிறது. இந்த கருமையமும், ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சயமாக உண்டு என்பதை மறவாதீர்.

        ஒரு மனிதனின், வாழும் காலத்தில் எப்படி அதன் செயல்பாடு இருக்கிறதோ, அதே தன்மையில் எப்போதும் இருக்கும். அதாவது தன்னுடைய பதிவுகளில் இருப்பதை, வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும் என்று அர்த்தமாகிறது. இது எவ்வளவு காலம் என்றால், கருமையத்தின் களங்கள் தீர்க்கப்படும்வரை எனலாம். இந்த களங்கம் என்பதுதான், கர்ம வினைப்பதிவுகள் என்றாகின்றன.

வாழும் ஒருமனிதன், இறந்து போனால், எல்லாம் முடிந்தது என்பதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, ‘வாழ்ந்து மறைந்த அந்த மனிதனின் கருமையமும், அதன் பதிவுகளும் அழிவதில்லை’ என்கிறார். மேலும், அவரின் விளக்கத்தின் வழியாக அறிவோம்.

கருமையம் (Genetic Center) மிக வியப்பான செயல்களை ஆற்றிக் கொண்டிருப்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால் உணர்ந்து கொள்ளலாம். கருமையம் என்பது காந்த அலைத் திணிவு. நுண்ணிய ஜீவ இனங்களிலிருந்து அவை பரிணாமத்தால் உயர்ந்து மனிதனாகும் வரையில் கருமையம் தனது செயலை நிறுத்துவதில்லை; தன்மைகளை இழப்பதும் இல்லை.

உடல் காலத்தால் மாறிக்கொண்டு இருக்கும். அதை உடலுக்கு இறப்பு என்று சொல்கிறோம். ஆனால், அதிலடங்கியிருந்த உயிர்த்துகளோ, பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டு இருக்கும் உயிர்த்துகளோடு கலந்து விடும். உடலை விட்டு வெளியேறிய இந்தக் காந்த அலைக்கு அதன் இயக்க நியதியினாலும், இதுவரையில் இணைத்துக் கொண்ட தன்மையினாலேயும் ஒரு சிறப்பு நிலை உருவாகிவிடுகிறது.

வான் காந்தத்தில் (Universal Magnetism) மிதக்கும் இத்தகையக் கருமையமானது அதன் சிறப்புக்கு ஏற்பச் செயல்படக்கூடிய, விளைவுகளைத் தரக்கூடிய பொருத்தமான ஜீவ இனத்தோடு இணைந்து விடும்.

அது முதற்கொண்டு கருமையம் இணைத்துக் கொண்ட ஜீவனுடைய ஆன்மா, அந்த இணைப்பினாலான சிறப்புக்களையும் பெற்றுவிடும். இவ்வாறு வாழும்போதே சந்ததிகள் மூலம் பல்லாயிரம் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருவதும், உடலை விட்ட பின்னர்கூடத் தனது தகுதிக்கேற்ற ஒரு கருமையத்தோடு இணைந்து கொள்வதும், சாதாரண மன நிலையிலுள்ள மனிதனால் சரியாக உணர்ந்து கொள்ள முடியாது.

எனினும் இறையாற்றலால் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த வியத்தகு கருமையம், பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தையும் அடக்கமாகப் பெற்ற ஒரு இயற்கை நியதியாகும்.

தன்னிலை விளக்கமானாலும் சரி, இறைநிலை விளக்கமானாலும் சரி, இக்காந்தக் "கருமையத்தை" உணர்ந்து கொள்ளாத முன்னம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாது, என்பதாக, விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Any of yoga chakra bottom of the Moolathara? Can we meditate there? What kind of benefits on that?


மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?


பதில்: 

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும், தன்னளவில் ஒரு மையம் உண்டு. அது எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த அளவிலே இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும் கூட அதன் மையமாக ஒரு நிலை நிச்சயமாக உண்டு. அதுபோலவே எந்த ஜீவன்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் உடலின் நீளம் அகலம் அளவை எடுத்துக்கொண்டு வகுத்தால், அதன் மையத்திலும் ஓர் புள்ளியான நிலை உண்டு. மனிதனுக்கும் அவ்வாறே உண்டு. அதுவே மூலாதாரம் என்று வழங்குகிறோம். இந்த விளக்கங்களின்படி, மூலாதாரத்திற்கு கீழே என்று சொல்லுவதற்கு இடமில்லை. நாம் நிமிர்ந்து நடப்பதால், மூலாதாரத்திற்கு கீழே என்று உங்களுக்கு சந்தேகம் எழுகிறதா? மேலே கீழே என்பதெல்லாம், நம்முடைய விளக்கத்திற்க்காத்தானே தவிர அப்படி எதும் இல்லை என்று சொல்லமுடியும். மேலும் பூவி ஈர்ப்பு ஒன்று இருப்பதால்தான் கீழே என்பது மேலே என்பதும் தோன்றுகிறது. வான் வெளியில், பிரபஞ்சத்தில் மிதக்கும், நாம் வாழும் பூமிக்கே மேலே கீழே என்று எப்படி, எதைச் சொல்லுவது? அதுப்போலவே மனிதனைத் தவிர்த்து, உணர்வன என்ற வகுப்பில் உள்ள, பாம்பு, பல்லி, முதலை, ஆமை இவற்றிற்கெல்லாம் என்ன சொல்லுவது?

மூலம் + ஆதாரம் என்பதுதான் மூலாதாரம் ஆகிறது. எப்பொருளுக்கும் ஓர் மையப்புள்ளி என்ற நிலைபாடு சரியானதுதான். எனவே மூலாதாரத்திற்கு கீழே என்ற சக்கரங்களும், ஆதாரமையங்களும் இல்லை என்பதே சரியானது.

உங்கள் கேள்வியில் உள்ளடக்கமாக இருக்கும், ஓர் சந்தேகத்திற்கும் பதில் சொல்லியாகவேண்டும். தெய்வீக திருவிளையாடல் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்குகின்ற, உயிரின பரிணாமத்தில் இயல்பூக்கத்தின் வழியாகவே, தன்னை மேம்படுத்தி முழுமையான நிலைதான் மனிதன் ஆகும். மனிதன் என்ற நிலையில், அந்த தெய்வீகம் தன்னையே அறிந்து முழுமையும் செய்து கொண்டது. அப்படி இருக்கும்பொழுது, மூலாதரத்திற்கும் மேலே என்று சொல்லுவது தவறு, மூலாதாரத்திற்கு உயர்வான நிலை, ஆதார சக்கரங்களில் தான் நமக்கு, வேலை இருக்கிறதே தவிர கீழே இல்லை. நீங்கள் உங்களை ‘நான் யார்?’ என்ற தேடலின் வழியான உண்மையை அறிய, மூலாதார நிலை தாண்டிய உயர் நிலைகளை அடையவேண்டும்.

மூலாதாரத்திற்கு கீழே அதாவது, மூலாதாரத்திற்கு தாழ்வான நிலைகளில் நீங்கள், தனியாக ஒன்றும் செல்லவேண்டியதில்லை. அதுதான் வழக்கமாக நம் வாழ்நாளில் வந்து கொண்டே இருக்கிறதே? நம்மையும் பாடாய்படுத்துகிறதே? ‘என்னை மிருகமாக்கிறாதே’ என்று தானே நாம் மற்றவர்களிடம் சொல்லுகிறோம் / கத்துகிறோம். உண்மைதானே? இதற்கு வேதாத்திரி மகரிஷியே ஒரு விளக்கம் தருவார். பேசிக்கொண்டிருக்கும் இருவருக்கு, ஏதேனும் வாக்குவதம் முற்றி அடிதடியில் இறங்கினால், ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில், யாரோ ஒருவர் மற்றவரை கடிக்கச்செய்வார், நகத்தால் பிராண்டுவார், கைகளால் தாக்குவார். இதெல்லாம் யார் செய்தது? நாம் பார்க்கின்ற காட்டுவிலங்குகள் செய்யும் செயல்கள் அல்லவா? இது ஏன் மனிதனிடம் வந்தது?

மனிதன் பரிணாமத்தின் வழியே, விலங்குகளின் மூலத்தைக் கொண்டவன். மனிதாக வந்தும் கூட அவனின், கருமையத்தில், விலங்கினத்தின் தன்மைகள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. அவன் அதிலிருந்து விலகி, மனம் இதனான மனிதனாக மாறிட, அவனின் உயிரின் இயக்க மையத்தை மாற்றி அமைத்து, உயர்த்திட வேண்டியது அவசியம். அதைத்தான் குண்டலினி தீட்சை என்று அழைக்கிறோம். மூலாதாரம், உயர்சக்தி மையம், மனதின் மூலமான காந்த மையம், வித்து சக்தியின் மையம் எல்லாமே கருமையம் என்ற ஒரே இடத்தில்தானே இயற்கையாக அமைகிறது. சராசரி மனிதன், நீங்கள் கேட்பது போல, கீழே தாழ்வான நிலையில் இருந்துதான் வாழ்கிறான். அவன் உயர்வடைய, சிறப்படைய, உண்மை உணர, தன்னையறிய, மூலாதாரத்தில் இருந்து உயர்வான நிலையைத்தான் தியானிக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

யோகத்திற்கு வராமல், குருவின் வழியாக தீட்சையும் எடுத்துக்கொள்ளாத மனிதன் இயல்பாகவே தன்னை மறந்து, விலங்கினத்தின் பண்புகளை வெளிப்படுத்தியே வாழ்வான், வாழ்ந்துகொண்டு இருப்பான். இப்போது உங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Why the enlightenment is late through the yoga? How long it takes?


யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


பதில்:

உலகில் பிறந்த நாம், பக்தி வழிபாட்டின் வழியாக, இயற்கையின் உன்னதமான பெரும் பொருளை, மெய்ப்பொருளை அறிந்துகொள்கிறோம். நம்மைவிட, நம்மிலும் பெரிய, சக்திவாய்ந்த ஒன்று இறையாக, தெய்வமாக இருக்கிறது என்று நம்புகிறோம். அதற்கு மதிப்பு கொடுத்து வளர்ந்து வந்து, இளைஞர்களாக உலக வாழ்க்கையை ஏற்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறோம். சிலர் அது பொய், இல்லவே இல்லை என்ற ரீதியில் மாற்றுப்பாதையில் சென்றுவிடுகிறார்கள். நாம், இதுவரை வழிபட்டுவந்த அந்த இறையை, தெய்வீகத்தை உண்மையாக அறியும்பொருட்டு, யோகத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம்.

அப்படியான யோகத்தில், எளிமைப்படுத்தப்பட்ட வேதாத்திரியத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இப்படி சொல்லுவதால் மற்ற யோக அமைப்புக்களை குறைசொல்லுவதாக நினைத்திடக்கூடாது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையான சிறப்பை கொண்டதுதான் என்பதால், இங்கே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அப்படி யோகத்தில் பயணிக்கும் பொழுது, குருவின் அன்பினாலும், கருணையாலும், உண்மை தத்துவ விளக்கங்களை பெறுகிறோம். கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் நமக்கு புரிந்தாலும், அது நடைமுறைக்கு எளிதில் வந்துவிடுவதில்லை.

இதற்கு ஒரு மனிதனிடம் உள்ள, மூன்றடுக்கு கர்ம வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் காரணமாகின்றன. கருவழியாக, முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த வினைகள் பதிவாகி, கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அது நமக்கும் பகிரப்பட்டு இருக்கும் நிலையில், நாம் அதை தூய்மை செய்யாது, நமக்கு ஒரு குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கும் பகிரப்படும் என்பது இயற்கை விதி. அத்தகைய கர்மா என்ற வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதை தீர்ப்பதற்காக நம்முடைய, யோக பயண முயற்சி தொடரவேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு 20 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 30 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு 50 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு இன்னும் கூடுதலாக ஆகலாம்.

எனினும், யோகத்தின் வழியாக ஏற்படும் வளர்ச்சியை நாம் முடிவு செய்யவும் முடியாது. கணித்துப்பார்க்கவும் முடியாது. இந்த இடத்தில் நாம் அதை இயற்கையின் வசமும், தெய்வீகத்தின் வசமும் ஒப்படைத்து விட்டு, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். ஆனால், அந்த மாற்றங்களும், உயர்வுகளும் நாம் அறிந்திடவும் முடியும் என்பதே உண்மை. சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்கூட மாற்றம் உண்டாகிக்கொண்டே வருவதை நாம் உணரமுடியும்.

தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள், நிறைவடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

-

Some of wealthy men living with as atheist, they no need yoga by the way?


உலகில் எல்லா வசதிகளோடு வாழும் ஒருவர், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு யோகம் தேவையில்லையா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகில் எல்லா வசதிகளோடு வாழும் ஒருவர், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு யோகம் தேவையில்லையா?

பதில்:
இந்த கேள்விக்கான  பதிலை நாம் பார்க்கும் முன்பாக, நீங்கள் எப்போதும், இன்னொரு மனிதரோடும், அவர் வாழ்க்கையோடும், பணம், பொருள், வசதியோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது நிச்சயமாக உங்களுக்கு ஒரு பிரச்சனையை, வலியை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை நிறைவான வாழ்க்கையாக உணர்ந்தால் பரவாயில்லை. ஆனால் குறையான வாழ்வாக நினைத்துக்கொண்டால், அதில் நீங்கள் தன்னம்பிக்கை இழந்துவிடுவீர்கள் என்பது உறுதி. எனவே கவனமாக இருங்கள்.

உலகில் பிறந்த ஓவ்வொருவரும் வாழவேண்டும். உலகநடைமுறையில் வாழ பணமும் சம்பாதிக்க வேண்டும். அது சம்பளம் வழியாக, தொழில் முலமாக, வியாபாரத்தினால் இன்னபிற வழிகளால் கிடைக்கவும் வேண்டும். ஏழையாக இருந்தாலும் தன் தேவைகளை தானே நிறைசெய்ய உலகில் பலப்பல வழிகளும் உண்டு. ஏற்கனவே பரம்பரைவழி, பெற்றோர்வழி செல்வந்தர்களாக இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் அச்செல்வம் தொடரும். ஏழையாகவே இதுவரை இருந்தாலும், இப்பொது பிறக்கு குழந்தை அந்த நிலையை மாற்றியும் அமைக்கலாம், ஏழ்மை என்பது விதியும் அல்ல.

குறுகிய காலத்தில் நியாயமாக முன்னேறுவோரும் உண்டு, குறுக்குவழியில் முன்னேறுவோரும் உண்டு. குறுக்கு வழியில் பணம் பொருள் ஈட்டவேண்டும் என்பதற்காக, தவறான வழிகளை தேடி பயணிப்பார்கள், அதில் வெற்றியும் அடைவார்கள்.

நம்முடைய பார்வைக்கு அவர்களின் வளர்ச்சியும் தெரியும், அதில் இருக்கும் ரகசியமும் தெரியும் என்பது உண்மைதான். அதோடு அவர் தன்னை கடவுள் மறுப்பாளராகவும் காட்டிக்கொள்கிறார் என்றும் சொல்லுகிறீர்கள். கடவுள் மறுப்பாளர்களை கடவுள் என்ற இறையாற்றல் கைவிட்டுவிடுமா? இல்லையே, நம்மை காப்பதுபோலவே அவர்களையும் காக்கும். ஆனால் ஓவ்வொரு மனிதனுக்குள்ளாக, கடந்து உள்ளே இருக்கின்ற மனமும், அதன் முடிவில் இருக்கும் கருமையமும் எல்லாவற்றையும் பதிவு செய்கிறது. அதுவே கர்மா என்ற வினைப்பதிவாகவும் மாறிவிடுகிறது. மேலும் அவர்களிடைய அறிவு களங்களோடும் இருக்கிறது. அந்த கர்ம வினைப்பதிவுகளும், களங்கமும் காலத்தால் தீர்க்காது அவர்களின் பிறவிக்கடமை முழுமையும் அடையாது. பிறவி வழியாக தொடரவும் செய்யும்.

ஆனால் நாம் யோகத்தின் வழியாக, நம்முடைய களங்கங்களை தூய்மை செய்து, கர்ம வினைகளை தீர்த்து, பிறவிக்கடனான ‘நான் யார்?’ என்று உண்மையறிதலை நோக்கி செயல்படுகிறோம். நமக்கு கிடைத்த வரம் அல்லவா இது?!

இந்தப்பிறவியில் அவருக்கு கடந்து உள்ளே போக ஆர்வமில்லை. அதனால் யோகமும் அவசியமில்லை. அவருக்குப் பின் அவர்வழியாக வரும் பேரனோ பேத்தியோ, ஏதோ ஒரு தலைமுறையினரோ தீர்க்க முயற்சிப்பார்கள் என்பது காலமே முடிவு செய்யும். எனவே நம் கவலை அதுவல்ல.

நாம் நம்முடைய வாழ்வில் எப்படி இருக்கிறோம்? என்று ஆராய்ந்து, வாழ்க்கைக்கு நிறைவான பணம், பொருள், அதை பெறுகின்ற வகையில் வாழ்வேண்டும். இந்த வாழ்வை வீணாக்காது, யோகத்தின் வழியாக தன்னையும் அறியவேண்டும். மெய்ப்பொருள் உண்மையையும் உணரவேண்டும். இப்படி அடுத்தவர்களை ஆராயவேண்டியதில்லை, முடிந்தால் அவர்களையும் வாழ்த்தி மகிழ்வோம். 
வாழ்க வளமுடன்.
-

Please explain the Kundalini yoga makes problem or will fix the problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பிரச்சனைகளை தீர்ப்பதற்க்கு யோகமா? அல்லது யோகத்திற்கு வந்தால் பிரச்சனையாகி விடுமா?


பதில்:

நீங்கள் மிகவும் சாதுர்யமான கேள்வியை என்னிடம் கேட்பதாக நினைக்கிறேன். முதலில் யோகம் என்றால் என்ன? என்ற விளக்கத்திற்கு வந்துவிடுங்கள். அதுதான் சரியானது. யோகம் என்றால் வாழும் உலக வாழ்க்கையில் திருத்தங்களைப் பெற்று அறவழியில் வாழ்ந்து, இன்பத்தை மட்டுமே  அனுபவித்து மகிழ்ந்து சிறப்படையும் பயிற்சியாகும். அதில் தன்னையறிதலும், இறையுணர்தலும் இணைந்திருக்கிறதும் உண்மை!

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இருப்பது மட்டுமல்ல, எல்லோருடைய வாழ்க்கையிலும் அவரவர் அளவில் பிரச்சனைகள் இருக்கிறது. காரணம், அவர்கள் வாழ்க்கைமுறையில், இயற்கைக்கும், இயல்புக்கும் மாறான செயல்பாடுகளின் விளைவு. இயற்கையின் வினை விளைவு நீதி அறியாமை என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் வழிவழியாக மனிதர்களின் கருமையம் களங்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் இந்த உலகில் நேர்மையாக, உண்மையாக, நட்பாக இருந்தாலும் கூட, சந்தர்ப்பவசத்தால், சூழலால் தானாகவே பிரச்சனையில் சிக்கி விடுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்.

எனவே பிரச்சனைகளை தீர்ப்பதற்கு யோகம் உதவாது, ஆனால் உங்கள் பிரச்சனைகளின் மூலகாரணம் என்ன என்பதை அறிந்து, முற்றிலும் அதைபோக்கி, உங்கள் வாழ்வை சீரமைக்க யோகம் உதவிடும், அதன்வழியாக உங்களின் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்ற வழியும் உங்களுக்கு சிந்தனையில் உருவாகும். அதை திட்டமிட்டு சரி செய்து தீர்க்கலாம் என்பதே உண்மை.

யோகத்திற்கு வந்தால் பிரச்சனையாகிவிடுமா? என்றும் கேட்கிறீர்கள். உலகில் நிறைய நபர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். மேலும் யோகத்திற்கு போகாதீர்கள், தேவையுமில்லை, அவசியமும் இல்லை என்று அவர்களை தடுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையும், உங்கள் வாழ்வையும் சீரமைத்து, உலக அனுபவங்களில் அளவோடும் முறையும் வாழ்ந்து இன்பமும், நிறைவும், அமைதியும் பெறவேண்டும் என்றால், யோகம் அவசியம் வேண்டும். அப்படியில்லாது யோகத்தை விட்டுவிட்டால் வேறு வழியில்லை என்பதே உண்மையாகும். இனி முடிவு உங்கள் வசம்!

வாழ்க வளமுடன்.

Why we need to worship ancestors and is it a nonsense?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

Rameshwaram, Tamilnadu, India / image by Dinamalar


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முன்னோர்களை நினைப்பதும், அவர்களை  வணங்குவதும், வேண்டிக்கொள்வதும், இறந்துபோன அவர்கள் நற்கதி அடையவும் வேண்டிக்கொள்வது அவசியம் தானா? நவீன அறிவியல் உலகில் வாழும் நமக்கு, அது ஒரு முட்டாள்தனம் இல்லையா?


பதில்:

மனித வாழ்வு குறித்து, எந்த சிந்தனையும் அக்கறையும், ஆராய்ச்சியும் இல்லாத நிலையில் வாழக்கூடிய மனிதனுக்கு தோன்றக்கூடிய கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். மனிதன், இயற்கையின் முழுமையாக, பரிணாமத்தின் வழியாக வந்தவன். திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரோ தீடீரென்று உருவாக்கி உலவ விடவும் இல்லை. ஏதுமற்ற ஒன்றாக இருந்து, கருவாகி, பெண்ணுக்குள், கருப்பையில் உருவாகி, வளர்ந்து, முழுமைபெற்று, அவள் பிரசவித்து, வளர்த்து ஆளாக்கி, மூன்று வயதிற்கு பிறகுதான், தான் யார்? என்ற நிலைக்கே ஒரு குழந்தை நிலைத்து வருகிறது. அதன்பிறகு, நான் என்ற தன்முனைப்பில் ஊறித்திழைக்கிறது.

அந்த குழந்தைக்கு, இதற்கு முன் எங்கிந்தோம் என்று நினைவில் இல்லை. அக்குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி, உலக இன்பங்களெல்லாம் அனுபவித்து, வயோதிகமடைந்து இறந்தும் போகிறது, எங்கே போகிறோம் என்றும் தெரியாது. அதை பிறருக்கு சொல்லவும் வழியில்லை. வாழும் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும் தெரிந்து கொள்வதில்லை. எதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறக்கிறோம் என்று மூன்றே நிலைபாடுகளில் தன் வாழ்வை சுருக்கிக்கொள்கிறோம். உண்மைதானே?

ஆனால், உண்மை அப்படியில்லையே! மனிதன் ‘நான் யார்?’ என்று கேட்டு விடையறியும் வரை அவனுக்கு/ அவளுக்கு பிறவிப்பயணம் தொடரும். தன்னையறிதலும், அதன் வழியாக தனக்கு மூலமான இறையாற்றலை உணர்வதும் கடமையாகிவிடுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானம் இதை ஏற்பதில்லை.

உண்மையாக, நவீன விஞ்ஞானம், தன்னையறிந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாக்கித்தந்த பாதைக்கு எதிர் திசையில் அழைத்துச்செல்கிறது என்று சொல்லலாமா என்றால், அதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் உண்மை நோக்கித்தான் செல்கிறது என்பது உண்மை, அந்த உண்மை எது என்பதை, தெரிந்துகொள்ளும் அதற்கு நிறைய இழப்பும், காலமும் ஆகலாம். அதுவரை இப்படியான கேள்விகள் வரும்.

நம் முன்னோர்கள் இன்றி நாம் இல்லை. இறந்துபோனவர்கள் குறித்த அக்கறையும், கவலையும் நமக்கு இல்லை எனினும், அவர்களின் நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் என்பது உண்மைதானே? அதுபோல அவர்களின் இனமறியாத ஏதோ நம்மிடம் தங்கி இருக்கவும் வாய்ப்பு இருக்கலாமே? அதை ‘கர்மா என்ற வினைப்பதிவு’ என்று மனிதனின் வாழ்வை, முழுமையை நோக்கி திருப்பிட ஆர்வம் கொண்ட ஞானிகள் சொல்லுகிறார்கள். அதை தீர்க்கவும், போக்கிடவும் நமக்கு வாய்ப்பு உள்ளது. நாம் அதை தீர்க்காவிட்டால், நம் வழியாக, நம்முடைய குழந்தைக்கும் அது கடத்தப்படும் என்பது இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

அதனால்தான், முன்னோர்களை நினைப்பதும், அவர்களை வணங்குவதும், அவர்கள் நற்கதி அடைய வேண்டுவதும் தேவை என்ற கருத்தியல் உருவானது. ஒருவகையில் யோகத்தில் இணைய ஆர்வமில்லாதவர்களுக்கு உதவும் என்பதே உண்மை. எனினும் இது முட்டாள்தனம் என்று நினைத்தால், அது அவரவர் விருப்பமே. ஏனென்றால் வாழும் வாழ்க்கை என்பது அவரவர் உரிமை.

வாழ்க வளமுடன். 

Why always mislead with Karma? Being with positive is good in life! Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதானே? அப்போது ஏன் கர்மா குறித்து அடிக்கடி சொல்லி எல்லோரும் பயமுறுத்துகிறார்கள்?


பதில்:

ஆங்கிலத்தில் Positive x Negative என்பதை ‘மெய்மை x பொய்மை’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால் யாரோ, நேர்மறை x எதிர்மறை என்று மொழி பெயர்த்துவிட்டார்கள். இனி அதை மாற்றிடவும் வழியில்லை. இனி உங்கள் கேள்விக்கு வரலாம், வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால் அப்படி வாழ்பவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? அல்லது நீங்களே அனுபவித்தீர்களா? என்பதையும் சொல்லி விடுங்கள்.

தான் எப்போதும் நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு, அதாவது நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு, அதன்படி வாழ்வதாக இருந்தால், உங்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும், மற்றவர்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும் என்பது உள்ளர்த்தம் ஆகிறது. இதில் கிடைப்பது, நடப்பது எல்லாமே ‘இன்னும் வேண்டும்’ என்ற நிலையில்தான் இருக்கும். அதாவது பற்றாக்குறை என்ற அளவில்தான் இருக்கும். எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு நிகழ்ந்தாலும் இன்னும் வேண்டும் என்ற தேவை அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை. ஏனென்றால் இங்கே முழுமையற்ற நிலைதான் நிகழ்கிறது, கிடைக்கிறது எனலாம்.

ஆனால் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்து, மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறீர்கள். அது அவர்களின் வழக்கம். உங்களை பயமுறுத்தி அதன்வழியாக தங்களை நிலைநிறுத்திட முயற்சிக்கிறார்கள். நாம், வேதாத்திரியத்தில், கர்மா என்ற வினைப்பதிவு குறித்து விளக்கம் மட்டுமே தருகிறோம். புரிந்து கொண்டு, உங்களின் எண்ணம், சொல், செயல் வழியாக திருத்தம் பெறுக என்றுதான் வழிகாட்டுகிறோம். ஆனால் வேதாத்திரியமும் பத்தோடு பதினொன்று என்பதாக நீங்கள் நினைத்து ஒதுக்குகிறீர்கள். நல்லது அது உங்கள் உரிமையும், விருப்பமும் ஆகும்.

வாழ்கின்ற மனிதன், தனக்குள்ளாக, ஏற்கனவே வாழ்ந்த அவனின் முன்னோர்களின் வினைப்பதிவுகளை பெற்றிருக்கிறான். அவனின் எண்ணம், சொல், செயலில் அது விளைவாக வருகிறது. அது ஏன் எனக்கு வருகிறது? என்று கேட்கமுடியாது. காரணம், மனிதன் தனியாக உருவாகி, வந்துவிடவில்லை அல்லவா? இதை, இந்த வினைப்பதிவுகளை மிகச்சாதாரணமாக, நேர்மறை எண்ணம் கொண்ட வாழ்வால் மாற்றிவிட, தீர்த்துவிட முடியாது என்பதே உண்மை. முதலில் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்தான உண்மை விளக்கங்களை பெற்றுக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்,

வாழ்க வளமுடன்.

Explain the someone says, kayakalpa yoga will reduce the happiness of life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா?


பதில்:

காயகல்பம் கற்றுக்கொண்டவர்கள் அப்படி சொன்னார்களா? காயகல்ப யோகபயிற்சியின் உண்மை அறியாதவர்கள், அதை கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள், அதை விரும்பாதவர்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைதான் அது. லட்டு இனிப்பானது என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள். இல்லவே இல்லை இனிப்பு என்று நிச்சயமாக சொல்லுவீர்கள். ஏன்? எப்படி? ஏற்கனவே லட்டு சாப்பிட்டு இனிப்பை சுவைத்த அனுபவம் இருக்கிறது அல்லவா? அதன் வழியாக அந்த பதிலை சொல்லுவீர்கள். யாரேனும் ஒருவர், உங்களிடம் ‘லட்டு சாப்பிடாதே கசக்கும்’ என்று சொல்லியிருந்தால், இன்று நீங்கள் லட்டின் சுவையை சொல்லமுடியுமா?

காயகல்ப யோகக்கலை, வேண்டாத, முரண்பாடான, காம இன்ப நினைவுகளை, அந்த ஊக்குவித்தலை தடுக்கிறது. சரி செய்கிறது. ஆனால் இயற்கையாக இருக்கின்ற, எழுகின்ற காம இன்பத்தை குறைக்கிறது என்று உங்களை ஏமாற்றுகிறார்களே, அதற்குப் பதிலாக, இன்னமும் நிறைவாக, முழுமையாக அனுபவிக்க துணை செய்கிறது என்பதுதான் உண்மை. எனவே கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

காம இன்பதை அதிகப்படுத்தினாலும் நோய்வரும், இயற்கைக்கு முரணாக குறைத்தாலும் நோய்வரும் என்பதை நீங்கள் அற்வீர்களா? அப்படி இயற்கையாக உள்ளபோது எப்படி, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பை, தானும் பெறாமல், உங்களையும் பெற விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு இடமளிக்காமல், நீங்களே நேரில் மனவளக்கலை மன்றம் சென்று, வேதாத்திரிய காயகல்ப யோகப்பயிற்சியின் உண்மை அறிந்து, உடனே கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.

Is it true that they say that we were born to solve karma?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கர்மாவை தீர்க்கவே பிறந்தோம் என்று சொல்லுகிறார்களே அது உண்மையா?


பதில்:

கர்மாவை தீர்க்கவே பிறந்தோம் என்பதை விட, கர்வால்தான் பிறந்தோம் என்று சொல்லுவதே மிக பொருந்தமாக இருக்கும். இந்த கர்மா என்பதை புரிந்து கொள்வதில் பல குழப்பங்கள் இருந்துவருவதால், கரமா என்பதை வினப்பதிவுகள் என்றே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். ஒரு வினை, அதன் விளைவு ஆகிய இரண்டும் சேர்ந்து பதிவாக மாறிவிடுகிறது. அதுவே வினைப்பதிவு, கர்மா என்று அழைப்படுகிறது!

இயற்கையோடு ஒட்டிவாழும் உயிரினங்களுக்கு, கர்மா என்ற வினைப்பதிவு எழுவதில்லை, பதிவாகவில்லை, மறுபடியும் எழுவதில்லை. உதாரணமாக ஐந்தறிவு விலங்கினங்கள் மற்றும் பறவைகள். ஆனால், ஆறறிவான மனிதன், அவனின் விரிந்த ஆற்றலாலும், இயற்கையின் ஒர் அங்கமாகவே பரிணாமத்தில் வந்ததால், அவன் எது செய்தாலும் அது வினையாக பதிவாகிறது. நல்லது என்றால் அது நல்ல பதிவையும், தீயது, ஏற்பில்லாதது என்றால் அதுவும் வினைப்பதிவாகவும், அதை சரி செய்யும் பொருட்டாக, திருத்தம் பெறும் வழியிலும் மறுபடி மலர்கின்றது. சரியாக புரிந்து கொண்டு, திருத்தாவிட்டால், மறுபடியும் எழும் மற்றொரு விளைவோடு கூடுதலாக பதிவாகிவிடும். 

ஒரு மனிதனால், தன் ஆயுட்காலத்தில் தீர்க்கமுடியாத, கர்மா என்ற வினைப்பதிவுகளை, கருத்தொடர் வழியாக அவர்களின் வாரிசுகளுக்கு கடத்தப்படுகிறது. இங்கே இறையாற்றலே செயல்படுகிறது. அப்படி கடத்துவதற்காகவே, பிள்ளைகள் பிறப்பும் நிகழ்கிறது எனலாம். எனவே பிறவின் நோக்கம், கர்மாவை தீர்க்க மட்டுமில்லாமல், ஏற்கனவே தீர்க்கப்படாத கர்மாவால்தான் அந்த பிறப்பே நிகழ்கிறது என்பதுதான் உண்மை.

இந்த கர்மா என்ற வினைப்பதிவு இருப்பதால்தான், ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி சிறப்புத்தன்மையும் அமைகிறது எனலாம். ஓவ்வொருவருடைய செயல் ஒன்றாகவே இருந்தபொழுதும், விளைவு என்பதில் வேறுபட்டு அமைகிற உண்மையை எல்லோரும் அறிவார்கள். அந்த விளைவை தருவதில் ‘கர்மா என்ற வினைப்பதிவு’ முதன்மையாக அமைகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Why should I carry someone's karma? Want to solve?


யாருடைய கர்மாவையோ நான் எதற்காக தூக்கி சுமக்கவேண்டும்? தீர்க்கவும் வேண்டும்?


வேதாத்திரியத்தில் ஆழ்ந்து விட்டால் தானாக தெரியக்கூடிய உண்மைகள், வெளிப்பார்வைக்கு பொருத்தமாக இருப்பதில்லை, புரிவதும் இல்லை. முன்னோர்கள் என்னுடைய முன்பிறவி, என்குழந்தைகள் என்னுடைய பிற்பிறவி என்பது, கர்மா என்ற வினைப்பதிவுகளின் அடிப்படையில் சொல்லுவது மட்டுமே. ஒருவர் முன்னாலும் பிறப்பதில்லை, பிற்பாடும் பிறப்பதில்லை. வாழ்வது ஒருமுறை, இறப்பதும் ஒருமுறையே.

ஆனால் கர்மா என்ற வினைப்பதிவு அப்படியல்ல. ஒரு சட்டையில் ஒட்டிய தூசி போல. யார் அதற்கு உரிமையாளரோ அவர் துடைக்கவேண்டும். அல்லது யார் அதை உரிமை கொண்டாடுகிறார்களோ அவர் துடைக்கவேண்டும். இந்த சட்டைதான் நம் உடல், சட்டையின் தூசி கர்மா. யாருமே தனியா வானத்திலிருந்து குதித்து பிறப்பதில்லையே! தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்றால், தாத்தாவின் கர்மா பேரனுக்கு வராமல் போகுமா? வேண்டாம் என்றாலும் இறைநிலை விடாது. (இறையே இல்லை என்றால் இயற்கை என புரிந்துகொள்க)

மேலும், மனிதனின் பிறப்பு ‘நான் யார்?’ என்று அறியவே மலர்ந்தது. அதற்கு தடையாக இருப்பது கர்மா என்ற வினைப்பதிவுகள். அந்த தடையை,  ஒருவர் அதை தீர்க்காதவரை, மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி இப்படியே, ‘இந்தா, தீர்க்கப்படாத இந்த கர்மாவை தீர்’ என்று ஒவ்வொரு பிறவியிலும், இறை அல்லது இயற்கை  கொடுத்துக் கொண்டே இருக்கும்.

எவருடைய கர்மாவோ எனக்கெதற்கு? நான் ஏன் சுமக்கவேண்டும்? தீர்க்க வேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அது நம் மூளையின் அறிவு சார்ந்தது. ஆனால் கர்மா கருமையம் சார்ந்தது, மூளை மண்ணோடு மண்ணாகலாம், சாம்பலும் ஆகலாம். கருமையம் அப்படியே நகர்ந்து விடும், ஆண், பெண் வித்தின் வழியாக!

நீங்கள் மனம் விரும்பி வைத்திருக்கும் பொருளில், கறை இருந்தால் அதை அப்படியே விட்டுவிடுவீர்களா? 

கர்மா எனக்கில்லை என்று சொல்லுவதாக இருந்தால், ஏன் உங்கள் நடவடிக்கைகள், உங்களின் முன்னோர்கள் மாதிரி, தாத்தா மாதிரி, பாட்டி மாதிரி இருக்கின்றன? உங்கள் சொந்த வழக்க பழக்கங்களை ஏன் நீங்கள் செயல்படுத்துவதில்லை?! கற்றுக் கொள்ளவில்லையா?! கற்றது பதியவில்லையா? செயல்படுத்த முடியவில்லையா?! 

இன்னமும் யோசிக்கலாம், ஆராயலாம்! வாழ்க வளமுடன்.