CJ for You: soul

soul

Showing posts with label soul. Show all posts
Showing posts with label soul. Show all posts

Kundalini Yoga is meant to be practiced for many years, but it's funny that it is available immediately and a lifetime is enough. Is it also a deception that you can learn without Vasiyogam? Can you explain how mindfulness works?


குண்டலினி யோகம் பல்லாண்டுகாலம் கற்க வேண்டும் என்பதுதான் முறை, ஆனால் உடனே கிடைக்கும் என்பதும், வாழ்நாள் போதும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் வாசியோகம் இல்லாமல் கற்கலாம் என்பதும் ஏமாற்றுவேலையோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. மனவளக்கலை எப்படி என்பதை விளக்குவீர்களா?

நீங்கள் இன்னமும் அந்தக்காலத்து மனிதராகவே இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உண்மையாகவே நீங்கள் உங்களை, இந்த நவீன காலத்திற்கு மாற்றிக் கொண்டீர்களா? இல்லையா? மற்றவர்களை பார்த்தாவது அந்த வாழ்வியல் மாற்றத்திற்கு வரவில்லையா? இன்னமும் பழமையில்தான் வாழ்கின்றீர்களா? என்று கேட்டால் உங்கள் பதில் என்ன? 

சித்தர்கள் வழங்கிய குண்டலினி யோகத்திலும், அவர்கள் வழியாகவே மாற்றமும், எளிய பயிற்சிகளும் வந்துவிட்டது. தீடீரென வேறு யாரும் குறுக்குவழியை, குண்டலினி யோகத்தில் தரவும் முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லை, உங்கள் வந்தடையவில்லை. அதனால் நீங்கள் இன்னமும் பழைய முறையைல், கடினமான வழியில், வீட்டை, நாட்டை, வேலையை, கடமையை, அடிப்படை தேவைகளை விட்டுவிட்டு, சந்நியாசி கோலம் கொண்டு, காட்டிற்கு போய்விட வேண்டும் என்ற காலத்திலேயே இருக்கிறீர்கள்! 

உண்மையை புரிந்து கொள்ள தயாராகுங்கள். குண்டலினி யோகம் என்ற  வார்த்தைதான், வேதாத்திரி மகரிஷியால், எளிய உண்மை அர்த்தம் தரும் ‘மனவளக்கலை’ என்றானது. இந்த, மனவளக்கலை என்பது பயிற்சி மட்டுமல்ல, அள்ள அள்ள குறையாத இயற்கை செல்வத்தை பெற்றிருக்கும் ஒரு பெட்டகம் ஆகும். அந்த செல்வத்தின் வழியாக, உங்களின் அன்றாட வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்ளலாம். உங்களுடைய பொருள்வளத்தையும் உயர்த்திக்கொள்ள தகுதியாக்கிக் கொள்ளலாம்.  எனவே, யோகத்தின் இணைவதால் என்னபயன்? என்ற கேள்விக்கு இடமில்லை.

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இதை நீங்கள் அடிப்படை பயிற்சியிலேயே தெரிந்து கொள்ளலாம். உங்கள் உடலை வளமாக்கும், எளியமுறை உடற்பயிற்சியை கற்றுத்தேரலாம். உயிரை வளப்படுத்தி, வாழும் நாளை சிறப்பாக்கிட, காயகல்பயோக பயிற்சி கற்றுக்கொள்ளலாம். குருவின் அருளாசியோடு தீட்சை பெற்று, தவம் கற்றுக் கொள்ளலாம். இத்தகைய மூன்று முக்கிய அம்சங்களும், உங்களுக்கு கிடைத்துவிடுகிறது.

இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவையுண்டாகும்.

தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை – வினைப் பதிவுகளை மாற்றி விடலாம். ஆசைச் சீரமைப்புப் பயிற்சி செய்யுங்கள். உடல் நலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதி உண்டாகும்.

சினம் தவிர்ப்புப் பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யும் இடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்புப் பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.

நான் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு, அனைத்து மறை பொருட்கள், மனம், உயிர், மெய்ப்பொருள் உணர்வு உண்டாம்.

இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக் கல்வியே ‘மனவளக்கலை’ ஆகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்று விட்டால், அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை என்பதில் ஐயமில்லை. 

இத்தகைய மாற்றம், எத்தகையோ பிறவிவழியாக நாம் கைவிட்டுவிட்டோம் என்பதே உண்மை. இன்று, இப்பொழுது கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா? உடனே கைக்கொண்டு, நமக்கு பயனாக்கிக் கொண்டு, நம் பிறவியின் நோக்கத்தையும், கடமையையும் நிறைவேற்றிட வேண்டும். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

My stomach often gets into trouble. There is no interest in food. There is also sluggishness without appetite. What is the solution?


என்னுடைய வயிறு அடிக்கடி பிரச்சனைக்குள்ளாகிறது. உணவில் நாட்டம் இருப்பதில்லை. பசி இல்லாமல் மந்தமாகவும் இருக்கிறது. வீட்டில் சாப்பிட்டாலும், வெளியே சாப்பிட்டாலும் பிரச்சனையே. இதற்கு தீர்வு என்ன?

உணவு என்பது ஜீவன்களின், உயிர்களின் அடிப்படையானது. உயிர்வாழ்வதிலும், உடலை வளர்த்துக் காத்து, மனதையும் உயிரையும் காத்துக்கொள்வதிலும், உணவு தான் முக்கியமானது ஆகும். மேலும் இந்த உணவுதான் ஏழு தாதுக்களாகவும் மாறி, வாழ்வை, வாழும் பொழுது வளமாக்குகிறது. இப்படி முக்கியத்துவமான உணவை, நாம் கையாளும் விதம், சிறப்பாக இல்லை என்பது உண்மை. ஆனால், உணவு கலாச்சாரம், அதற்குரிய மதிப்பு, உலகெங்கும் உள்ளது. அது, ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு உணவு விடுதியிலும் இருக்கிறது.

உணவு என்பதைக் கொண்டே, அதை பரிமாறுபவர்களின் குணாதசியத்தை அறியலாம். அந்த உணவை செய்தவரின் அக்கறையை, அன்பை அறியலாம். அதுபோலவே அந்த உணவை உண்பவரின் நடவடிக்கையைக் கொண்டு, அவரின் குணாதசியத்தையும் அறியலாம். இங்கே ஒரு உணவின் வழியாக, எப்படியான தொடர்புகள் நம்மையறியாமல் உருவாகிறது என்று சிந்தித்து தெரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இதையெல்லாம் அறிந்துக் கொள்ளக்கூடிய சூழலை நாம் கைக்கொள்வதில்லை. ஏனென்றால் அப்படியான அவசர உலகில் நாம் வாழ்கிறோம். அப்படியான நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அதுபோலவே, அமைதியாக, பொறுமையாக, ரசித்து, ருசித்து, அனுபவித்து சாப்பிடுபவர்கள், மிகமிகக் குறைவு. இந்த பிரச்சனை, உங்களுடைய உணவால் வந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது மிக குறைவே. அப்படியென்றால், இந்த பிரச்சனையின் மூலம் என்ன என்றால், உங்களுடைய மனமும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் ஆகும். அப்படியா? என்று திகைக்கிறீர்களா? ஆம், அதுதான் உண்மை.

ஆனால், இந்த பிரச்சனையை, மருத்துவரின் வழியாக தீர்க்கவே நான் வழிமொழிகிறேன். என்றாலும். உங்களுடைய இந்த உணவு தொடர்பான பிரச்சனையை தீர்க்க காயகல்ப யோக பயிற்சி உதவும். இதைக்குறித்த சில உண்மைகளை, இந்த காணொளி வழியாக காணலாம்.

உணவுக்கும் முன்பும், நீர் அருந்தும் முன்பும் காயகல்ப பயிற்சி செய்யவேண்டுமா? ஏன்? Kayakalpa Yoga!

வாழ்க வளமுடன்

-

What is the Truth of Vethathirya Kayakalpa yoga and how it come to this form as exercise?


ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி என்பது சித்தர்களின் புதிரா? அதை எப்படி இப்போதுள்ள பயிற்சியாக மாற்றம் பெற்றது என்று விளக்குவீர்களா?

சிவ வாக்கியர் என்ற சித்தர் பெருமகான், அம்மை அப்பன் என்று தொடங்கும் ஒரு கவியில், இப்படியாக ஒரு கவி இருக்கிறது.

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே!

இந்த கவி, காயகல்ப பயிற்சி உண்மையை, தெளிவாக தெரியப்படுத்துகிறது. ஆனால், அதை நாம் முழுமையாக தெரிந்துகொள்ள முடிகிறதா? இல்லை. ஆனால், தமிழ் படிக்கத்தெரிந்த அனைவரும், இதை படித்து ஏதோ புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான். இந்த கவிதையின் கருத்துரை, விளக்கம் அறியமுடியாது. என்றாலும்கூட, நமக்கு புரிந்த அளவில் விளக்கம் சொல்ல வாய்ப்பு உள்ளது. அதை தனியே விளக்க வேண்டியதில்லை எனினும், ஒர் உதாரணமாக பார்க்கலாமே? 

மூலமாம் என்றால், மூலாதாரம் என்று அறியமுடிகிறது. அந்த மூலாதாரத்தில் கோரப்புல் விளைகிறது. அதை அதிகாலை எழுந்து, நாலு கட்டு கட்டுமளவுக்கு அறுக்கலாம். அப்படி அறுத்துக் கொண்டே வந்தால், பாலன் போல, இளவயது சிறுவன் சிறுமி போல, வாழலாமாம். பரப்பிரம்மம் என்று முழுமுதற்ப் பொருளையும் அறிந்து அதைப்போலவும் ஆகலாமாம். ஆலம் என்ற விஷத்தை உண்ட சிவனின் அடிசேர்ந்த வகையிலும், சக்தியை சரணடைந்த வகையிலும் இது உண்மை என்று இந்த கவிதை விளக்குகிறது’ என்று நாம் சொல்லிவிடலாம். ஆனால் இதன்படி செய்தால் அது காயகல்பம் ஆகிவிடுமா?

மூலாதாரம் எங்கே? என்று அறியவேண்டும். அங்கே கோரைப்புல் எப்படி இருக்கிறது? என்பது அறியவேண்டும். இதற்கு முன்பாக கோரைப்புல் அங்கே எப்படி வந்தது என்பதையும் அறியவேண்டுமே? நாலுகட்டு அறுக்கவேண்டும் என்றால் எப்படி? எதனால் அறுக்கவேண்டும்? அறுத்து எங்கே வைக்கவேண்டும்? இப்படி கேள்வி கேள்வியாக பிறக்கும்தானே?

        இப்படியாக பல நூறு சித்தர்கள், இத்தகைய காயகல்பம் என்ற தத்துவத்தை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இதன் அவசியம் அவர்களுக்கு, தங்கள் வாழ்நாளை மெய்பொருள் ஆராய்ச்சியில் செலவழிக்க அவசியமாகவும் இருந்ததுதானே!

இந்த சித்தர்கள் ஏனய்யா இப்படி குழப்புகிறார்கள்? என்று நமக்கு அங்கலாய்ப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால், இதுதான் சித்தர்களின் வழிமுறை. ரகசியம் காக்கும் குழூஊகுறி பாடல்கள் என்று சொல்லுவார்கள். மேலோட்டமாக ஒன்றும், உள்பொதிந்த அர்த்தத்தைக் கொண்டும் அதை வார்த்தைகளால் சொல்லுவதாகும். மேலும் முக்கிய காரணம், இந்த உண்மைகள், உண்மையை அறிந்து தேடுபவர்களுக்கு மட்டும் கிடைக்கவேண்டும் என்ற காரணமும் ஆகும்.

இதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆராய்ந்தார், பல்லாண்டுகள் அதை தேடித்தேடி, உணர்ந்தறிந்து, ஒழுங்குபடுத்தி, தானே செய்து பார்த்து, திருத்தங்கள் ஏற்று முழுமை செய்தார். அதுதான் நமக்கு, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சியாக நமக்கு கிடைத்திருக்கிறது. இதைக் குறித்த விரிவான காணொளி பதிவை இங்கே காணலாம். உண்மை அறியலாம்.

வாழ்க வளமுடன்.

Can we receive within ourselves the cosmic energy energy? What is the way out? Does meditation and penance help with that? Give an explanation.


பிரபஞ்ச ஆற்றல் சக்தி என்பதை நாம் நமக்குள்ளாக பெற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி என்ன? தியானம் தவம் அதற்கு உதவுகிறதா? விளக்கம் தருக.


பிரபஞ்சம் ஆற்றல் சக்தி, என்றுமே எப்போதுமே குறைவுபடமால் இருக்கக்கூடியது ஆகும். நாம் காணும், காணமுடியாத தொலைவில் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய அனைத்தும், தனக்குள்ளிருந்து, ஆற்றல் சக்தியை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. எப்படி நமக்கு, காலையில் சூரியனின் ஒளியும், இரவில் சந்திரனின் ஒளியும் நமக்கு துணையாகி, உதவுகிறதோ, அதுபோலவே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியும் துணையாகிறது, உதவுகிறது எனலாம்.

இந்த உண்மையை, உங்கள் பிறந்த நேர ஜாதக குறிப்பின் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும். ஜாதகம் என்பது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆனால், ஜாதகம் என்று சொன்னதுமே, எனக்கு எதுவுமே நல்லது நடக்கவே இல்லையே? என்றுதான் சொல்லுவார்கள். அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. அதை தேர்ந்த ஜோதிடர், உங்கள் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லுவார். நாம் இங்கே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியை மட்டும் கவனிப்போம்.


நாம் வாழ்கின்ற இந்த பூமியும் கூட, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பூமிக்கு அருகிலும், தூரமாகவும், வெகு தொலைவிலும் பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றின் ஆற்றலும் சக்தியும் பூமியையும் வந்தடைகின்றன. கூடவே, நம் பூமியின் அண்டை வீட்டார்களான, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கோள்களின் ஆற்றல் சக்தியும் இணைந்துதான் கிடைக்கின்றன. இதனினும் மேலாக, ராகு கேது என்ற நிழலான, ஆற்றல் சக்தியும் கிடைக்கின்றன. ராகு கேது என்பதை, நாம் தனித்து பார்க்கவும் முடியாது. ஆனால், அவற்றின் ஆற்றல் சக்தி அபரிதமானது என்பது, பொதுவாகவே உங்களுக்கு தெரியும் அல்லவா?

இந்த பிரபஞ்ச ஆற்றல், ஓவ்வொரு, கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து வந்தாலும்கூட, தனித்தன்மைகளை பெற்றிருந்தாலும் கூட, எல்லாமே அதன் அதன் அளவில், ஒன்றாகவே கலந்துதான் வருகின்றன. எங்கெங்கே, எந்தெந்த பொருளில், உயிரில் மோதுகிறதோ, அந்த அளவில் தூண்டுதலை உண்டாக்குகின்றன. அவை நம்மை பொறுத்தவரையில், நன்மை தருவதாக இருக்கலாம். தீமை தருவதாகவும் இருக்கலாம். அது நம்முடைய குணாதசியம் என்ற அடைப்படை நிலையை பொறுத்தது ஆகும். அப்படியானால், இந்த அடிப்படை நிலையை மாற்றிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தால், அதற்கு தியானம் என்ற தவம் உதவுகிறது.

நம்முடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் இத்தகைய, பிரபஞ்சம் ஆற்றல் சக்தி அன்றாடம், நொடிக்கு நொடி கிடைக்கிறது. அதை நாம் தனியாக உணர்ந்து கொள்வதற்கும் வழி இல்லாத நிலையில்தான், நம்முடைய சராசரி வாழ்க்கை நகர்கிறது. தியானத்தின் வழியாக, தவத்தின் வழியாக, மன ஓர்மை பெற்றவர்கள் மட்டுமே, இதை அனுபவ பூர்வமாக உணரமுடியும். அதுவரை அப்படியெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்துத்தான் பேசுவோம்.

மேலும் நம்முடிய வாழ்வின் அடிப்படைக்குக்கூட, இந்த பிரபஞ்சம் ஆற்றல் சக்தி உறுதுணையாக இருக்கிறது என்பதை, சித்தர்களும், அவர்வழி வந்தவர்களும், வேதாத்திரி மகரிஷி அவர்களும் உண்மை விளக்குகிறார்கள். பிரபஞ்சம் ஆற்றல் சக்தி இருக்கிறது, அது நமக்கு கிடைக்கிறது. நமக்குள்ளாக ஊடுறுவி நிறைகிறது. நம்மைக்கடந்தும் செல்கிறது என்பது உண்மையே!

வாழ்க வளமுடன்.

-


Does a dead soul leave immediately? Where is it going?


இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


பதில்:

கருவிலே தொடங்கிடும் நம்முடைய உயிரின் பயணம், பிறந்து வாழ்கின்ற காலமுழுவதும் கூடவே பயணித்து, குறிப்பிட்ட காலத்தில், வாழ்நாளின் முடிவில் உடலை விட்டு பிரிந்துவிடும். இது இயற்கையின் நியதியாகும். எந்த மாற்றத்திற்கும் உட்பட்டதல்ல. இது எல்லா ஜீவன்களுக்குமே உரித்தானதுமாகும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, ‘இது இயற்கையின் நீதி. இதில் தப்பித்தோர் யாருமில்லை. ஒரு நூறாண்டு என்று எடுத்துக்கொண்டால், அன்று வாழ்ந்தவர்கள் இன்று இல்லை. இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அடுத்த நூறாண்டுகளில் இருக்கப்போவதும் இல்லை’.

நம்முடைய உடல், உயிர், மனம் கூடவே இன்னொன்றான ஆன்மா (ஆத்மா) இதில் நாம் யார்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்த நாம் யார்? என்று நான் சொல்லுவதை விட, ‘நான் யார்?’ நீங்களே உங்களுக்குள்ளாக கேட்கும் பொழுதான் அங்கே உங்களுக்கான ஆராய்ச்சி தொடங்கும். எனவே அதில் நான் குறுக்கே நிற்கப்போவது இல்லை. ஆனால் நாம் உயிர் அல்ல என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

‘ஆனால் நாம் உயிரால்தானே வாழ்கிறோம்’ என்று சொல்லுவீர்கள். ஆம் அது உண்மைதான். நாம் + உயிரால் = வாழ்கிறோம். இங்கே நாம் தனித்து நிற்பதை அறிவீர்களா? உயிரால் வாழ்கிறோம்,. உயிரில்லையேல் நாமும் இல்லை. அப்படியென்றால் நாம் யார்? அதுதான் ‘நான் யார்?’ என்ற கேள்வியில் கிடைப்பதாகும்.

உயிர், தினமும் நம்மைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் காலையில் இருக்கும் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சோர்ந்துபோய், களைத்து உறங்கிவிடுகிறோம். சிலர் மயக்கமே அடைந்துவிடுகிறார்கள். அதை சரிசெய்யவே, காற்று, தண்ணீர், உணவு, பூமியின் மையப்பகுதியில் இருந்து வரும் சக்தி அலைகள் நமக்கு உதவுகிறது. என்றாலும், ‘ஒரு நாள் என்பது உயிரை அறுத்தெறியும் வாள்’ என்றுதான் ஆசான் திருவள்ளுவர் தன் குறள் வழியாக சொல்லுகிறார். அதுவும் உண்மைதான்.

வாழ்நாளின் காலம் முடிந்துவிட்டால், காலன் வந்துவிட்டான்  என்று சொல்லுவார்கள். வடநாட்டில் காளி என்றும் சொல்லுவார்கள். உயிர் உடனடியாக நம் உடலை விட்டு வெளியேறிவிடும். உயிரின் தன்மை எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது. உடனடியாக வெளியேறி, உடலுக்கு அப்பாலுள்ள, விண் துகள்கள் களத்தோடு இணைந்துவிடும். ஏன்? வெளியே விண்ணாக (ஆகாஷ்) இருப்பதுதான் உடலளவில் உயிராக இருக்கிற உண்மை அறிவீர்களா? மற்றபடி உயிர் எங்கேயும் போய்விடுவதில்லை. 

என்ன? ஏதேனும் என்னோடு வாள் சுழற்ற தயாராக இருக்கிறீர்களோ? பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-

Please explain the good, bad and problems on the trick of body to body transformation!


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


பதில்:

இன்னமும் உங்களுக்கு இந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கும் ஆசை தீரவில்லை போலிருக்கிறதே? நல்லவேளையாக எப்படிச் செய்வது என்று என்னிடம் கேட்காமலிருப்பது குறித்து மகிழ்கிறேன். அடுத்த கேள்வி அதுவாகவே இருந்தாலும் இருக்கலாம்தானே? யார் கண்டது? இப்பொழுது இந்த கேள்விக்கு வரலாம், முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

என்னுடைய ஆரம்ப நாட்களில், வேதாத்திரிய யோகத்தில் இணைவதற்கு முன்பாகவே கூட, சித்தர்களின்பால் நான் ஆர்வமோடு இருந்தேன். இதற்கு காரணமாக என்வீட்டில், பரணில் மூட்டைகட்டி வைத்திருந்த, என் தந்தைவழி தாத்தாவின் நூல்கள் உதவின. என்வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறை, ஏனோ எனக்கு யோகத்தின்மேல் ஏற்பட்டது. மேலும், நகரில் இருந்த நூலகமும், உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைத்த நூல்களும் உதவியது. ஒரு சிறிய கிழிந்த துண்டு காகிதத்தைக்கூட படிக்கக்கூடிய ஆரவம் மிகுந்த காலம் அது. அப்படியாக, பதினென்கீழ்கணக்கு சித்தர்கள் முதலாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி என்று பலரையும் தெரிந்துகொள்ள நூல்கள் பல கிடைத்தன.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை குறித்தும் நான் அறிந்தேன். சித்தர் பெருமகான் திருமூலர், காட்டுவழியே செல்லும் பொழுது, மேய்ப்பனை இழந்த மாடுகள் வீடுதிரும்பாமல் இருந்தபொழுது, இறந்து போன அந்த மேய்ப்பனின் உடலில், தன்னுயிரைப் பாய்ச்சி, மேய்ப்பனாக மாறி, அம்மாடுகளை வீட்டிற்கு வழிநடத்தி உதவியதாக படித்திருக்கிறேன்.  சித்தர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காகவே இவ்வித்தையை செய்திருக்கிறார்கள். பேரதிசயமாக இருந்ததும் உண்மை. இது எப்படி என்பதுதான் அந்த 14 முதல் 17 வயதில் எனக்கு அறியமுடியவில்லை. 18 வயது நிறைவில்தான் ‘வேதாத்திரிய தீட்சை’ பெற்றேன். அந்த வயதிலே ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' மையமாகக் கொண்டு கதைகள் கூட எழுதினேன் என்றால் மிகையில்லை. ஏதேனும் சில நேரம், நானே வேறு யாராகவோ இருப்பதாகவும், என்முகத்தை நானே வேறு ஆளாக கண்ணாடியில் பார்ப்பது வரையிலான கனவுகள் கூட கண்டதுண்டு. ஆனால் அந்த கனவுகளின் உண்மை நான் மட்டுமே அறிவேன்.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில், இறந்த உடலில் புகுவது என்று சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் உயிர் பிரிந்த உடலில் எல்லாமே இறந்து கொண்டே இருக்கையில், அதை மீண்டும் புதுப்பிப்பது இயற்கைக்கு முரணானது. (உடனே வாளை தூக்கி சண்டை போடவேண்டாம்). அப்படியானால், உயிரோடு இருக்கும் ஒரு மனிதனோடு கலக்கமுடியுமா? முடியும். அதிலும் சிக்கல் உள்ளது. அந்த உயிர் தனித்தன்மையாக இருந்தால், கூடுவிட்டு கூடுபாயும் நம்மை ஏற்றுக்கொள்ளாது. பிறருக்கும், சமூகத்திற்கும், உலகுக்கும் நன்மை தரதக்க வகையில் இதை செய்யலாம் என்பது ‘சித்தர்களின் கருத்து’. தனிமனித, சுயநல, பறித்தல் நோக்கோடு இதைச் செய்தால், உங்கள் உயிர் வீணாகிவிடும். கவனம்.

முக்கியமாக, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை செய்வதென்றால், நீங்கள் உங்கள் உயிரை தனியே பிரித்துப் பழகவேண்டும். உயிரில் குறிப்பிட்ட அளவு பிரிந்து சென்ற உங்கள் உடல், மிகச்சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிர்ச்சியும் இங்கே நேரக்கூடாது. கிட்டதட்ட நீங்கள் இறந்தபோன தன்மைபோலத்தான் இருப்பீர்கள். அது உண்மை ஆகிவிடாமல் இருக்க கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உயிர்த்துகள் என்பது மிகமிக நுண்ணியது, சக்தி வாய்ந்தது. அதற்குரிய மதிப்பளித்து செயல்படுவது முக்கியம். கொஞ்சம் பிசகினாலும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. உங்கள் உடலுக்கே மீண்டும் திரும்புவதில் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.

        எனவே, என்னைப்பொறுத்தவரை, இனிமேல் யாரும் ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' செய்யவேண்டியதும் இல்லை, அதை பழகிட வேண்டியதும் இல்லை' என்றே நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் நேரில் கேட்கவும்.

வாழ்க வளமுடன்

-

Why the enlightenment is late through the yoga? How long it takes?


யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


பதில்:

உலகில் பிறந்த நாம், பக்தி வழிபாட்டின் வழியாக, இயற்கையின் உன்னதமான பெரும் பொருளை, மெய்ப்பொருளை அறிந்துகொள்கிறோம். நம்மைவிட, நம்மிலும் பெரிய, சக்திவாய்ந்த ஒன்று இறையாக, தெய்வமாக இருக்கிறது என்று நம்புகிறோம். அதற்கு மதிப்பு கொடுத்து வளர்ந்து வந்து, இளைஞர்களாக உலக வாழ்க்கையை ஏற்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறோம். சிலர் அது பொய், இல்லவே இல்லை என்ற ரீதியில் மாற்றுப்பாதையில் சென்றுவிடுகிறார்கள். நாம், இதுவரை வழிபட்டுவந்த அந்த இறையை, தெய்வீகத்தை உண்மையாக அறியும்பொருட்டு, யோகத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம்.

அப்படியான யோகத்தில், எளிமைப்படுத்தப்பட்ட வேதாத்திரியத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இப்படி சொல்லுவதால் மற்ற யோக அமைப்புக்களை குறைசொல்லுவதாக நினைத்திடக்கூடாது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையான சிறப்பை கொண்டதுதான் என்பதால், இங்கே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அப்படி யோகத்தில் பயணிக்கும் பொழுது, குருவின் அன்பினாலும், கருணையாலும், உண்மை தத்துவ விளக்கங்களை பெறுகிறோம். கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் நமக்கு புரிந்தாலும், அது நடைமுறைக்கு எளிதில் வந்துவிடுவதில்லை.

இதற்கு ஒரு மனிதனிடம் உள்ள, மூன்றடுக்கு கர்ம வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் காரணமாகின்றன. கருவழியாக, முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த வினைகள் பதிவாகி, கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அது நமக்கும் பகிரப்பட்டு இருக்கும் நிலையில், நாம் அதை தூய்மை செய்யாது, நமக்கு ஒரு குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கும் பகிரப்படும் என்பது இயற்கை விதி. அத்தகைய கர்மா என்ற வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதை தீர்ப்பதற்காக நம்முடைய, யோக பயண முயற்சி தொடரவேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு 20 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 30 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு 50 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு இன்னும் கூடுதலாக ஆகலாம்.

எனினும், யோகத்தின் வழியாக ஏற்படும் வளர்ச்சியை நாம் முடிவு செய்யவும் முடியாது. கணித்துப்பார்க்கவும் முடியாது. இந்த இடத்தில் நாம் அதை இயற்கையின் வசமும், தெய்வீகத்தின் வசமும் ஒப்படைத்து விட்டு, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். ஆனால், அந்த மாற்றங்களும், உயர்வுகளும் நாம் அறிந்திடவும் முடியும் என்பதே உண்மை. சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்கூட மாற்றம் உண்டாகிக்கொண்டே வருவதை நாம் உணரமுடியும்.

தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள், நிறைவடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

-

How connect with loved one who died, and I need Vallalar too?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

 


கேள்வி:

1. சுவாமிஜி! நாம் அதிகம் விரும்பியவர்கள் இறந்து விட்டால் அவர்களுடைய உயிர் நம்மோடு இணைய என்னென்ன செய்ய வேண்டும்? 

2. வள்ளலாரை நான் அதிகம் நேசிக்கின்றேன். அவர் உயிர் என்னிடம் இணைய முடியுமா? 

 

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். யாரிடம் ஒத்த பதிவுகள் உள்ளனவோ அவர்களிடம் இறந்தவர்களுடைய உயிர் தானாகவே இணைந்து கொள்ளும். 

 உங்கள் உயிரைவிட வள்ளலார் உயிர் சிறந்த நுட்பம் வாய்ந்தது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது போல் இன்னும் 1000 பேர் 10,000 பேர் ஏற்றுக் கொள்ள விருப்பமுற்று முயன்று கொண்டிருப்பர். 

 எந்த உயிர் பொருந்துமோ, எந்த உயிரின் அறிவு பொருந்துமோ அவ்வுயிருடந்தான் அவரின் உயிர் இணையும். விரும்புகிற எல்லோருடைய உயிரோடும் இணைய முடியாது. எப்பொழுதும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தால் – இயல்பூக்க நியதியின்படி – அவருடைய அறிவைப் பெறலாம். 

வாழ்க வளமுடன்.

-

அருட்பிரகாச வள்ளலார், வேதாத்திரி மகரிஷியோடு தன்னை இணைத்துக்கொண்ட அந்த நிகழ்வை பார்க்கலாமா?! குண்டலினி யோகம் கற்று, அதன் சிந்தனையிலேயே அன்றாடம் வாழ்ந்து, குறிப்புக்களை பதிந்துகொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள், கூடுவாஞ்சேரியில் உள்ள தன் வீட்டுத்திண்ணையில் படுத்திறங்கியுள்ளார். அந்த நாள் ஒரு பூரண சந்திரநாள் அதாவது பௌர்ணமி தினம். அந்த திண்ணைக்கு அருகே ஒரு பிரகாசமான ஒளி மிதந்து தெரிந்து கண்டு வியப்பில் ஆழ்ந்தார் வேதாத்திரி மகரிஷி. திடீரென்று அவருக்கு நா எழவில்லை, பேசவும், அசையவும் வழியின்றி அமைதியாக இருந்தார். வந்திருப்பது அருட்பிரகாச வள்ளலார் என்பதையும் உணர்வால் அறிந்துகொண்டார்.

‘நான் உன்னோடு பத்தாண்டுகள் இருக்கிறேனப்பா! இப்போது இதை யாரிடமும் சொல்லாதே’ என்று அருட்பிரகாச வள்ளலாரின் குரலாக, வேதாத்திரி மகரிஷிக்குள் ஒலித்தது.

அந்த நிகழ்வுக்குபிறகும் அந்த நாளுக்குப்பிறகும் பத்து ஆண்டுகள், தன் ஆராய்ச்சிக்கு விடைதரும் விதமாக, பலநூறு கவிதைகளை எழுதிக்கொண்டே வந்தார். அந்தக்கவிதைகள். ஞானக்களஞ்சியம் நூலிலும் பதிக்கப்பட்டது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த நிகழ்வை, தன் குரலால் சொல்லியும் உள்ளார். தன் வாழ்க்கை விளக்க நூலிலும் எழுதியுள்ளார். அன்பர்கள் கேட்டு, படித்து உண்மை அறிக, உணர்வில் தெளிக!

வாழ்க வளமுடன்! 

Is soul and life force (uyir) the same?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதானா? 


பதில்:

பொதுவான வழக்கத்தில் இரண்டும் ஒன்றே என்று புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. எப்படியென்றால், உலகில் வாழும் வாழ்க்கை வரை உயிர் என்றும், அதுவே இறந்துவிட்டால் ஆன்மா என்றும் சொல்லிவருகிறார்கள். ஆனால், உயிர் என்பதும், ஆன்மா என்பது வேறுவேறு என்பது உறுதியானது.

உயிர் என்பது நுண் துகளாகிய, விண் என்ற ஆகாஷ் துகள்கள் ஆகும். இவை நாம் கருவானது முதல், உடல் வளர்ந்து, அந்த உடலில் சிறைபட்டு, உடல்முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது தன்னுடைய சுழற்சியில் மாற்றம் கொள்ளும். அதாவது, மனிதனின் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு வெளியேறிடவும் வாய்ப்பு உண்டாகிவிடும். இந்தக்குறையை உடனடியாக சரி செய்துவிட முடியாது எனினும், மன அமைதி, நற்சிந்தனை, தெய்வீக வழிபாடு, தவம், தியானம், தகுந்த உணவு முறைகள், மகான்களை சந்தித்து ஆசிபெறுதல் வழியாக சரி செய்யலாம்.

இந்த உயிரை அடிப்படையாகக்கொண்டே ஆன்மா செயல்படுகிறது. அதாவது உயிரின் படர்க்கை நிலையாக, மனமும் ஆன்மாவுமாக. மேலும் ஆன்மா என்பதே வாழும் பொழுதும், வாழ்க்கை முடித்த பிறகும், எக்காலத்தும் நிலைத்தும் இருக்கும் என்பதும் உண்மை. இந்த ஆன்மாவின் மேலோட்டமான இயக்க நிலையையே ஒவ்வொருவருடைய மனம் என்றும் சொல்லலாம்.

எனவே ஆன்மா என்பதும், உயிர் என்பது தனித் தனியானதுதான்.

வாழ்க வளமுடன்.

If we are died after spirit separated. so are we sprit?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உயிர் நம்மை விட்டு பிரிந்ததும் இறந்துவிடுகிறோம் என்றால், நாம் உயிரா? 


பதில்:

சிந்தனைக்குரிய கேள்விதான், வாழ்த்துகிறேன். முக்கியமாக நீங்கள் உடல் அல்ல என்ற உண்மையை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது நல்லது. நீங்கள் சொல்லுவது போல உயிர் நம்மைவிட்டுப் பிரிந்தால் நாம் இறந்துவிடுகிறோம். ஆனால் இந்த புரிதலில் தவறும் உள்ளது. உயிர் நம்மைவிட்டு என்று சொல்லும் பொழுதே, உயிரோடு நாம் என்று வாழ்வதையும் அறிந்துகொள்ளத்தானே வேண்டும். அதாவது உயிர், நாம் என்று இரண்டாக உள்ளது அல்லவா? அப்படியானால் நாம் தனியாக இருக்கிறோம்தானே?!

இங்கே இன்னும் தெளிவாக அறிய, உடல், உயிர், மனம், நாம் என்று நான்காக கலந்து இருக்கும் உண்மைதான் உள்ளது. இந்த உடல் நாம் இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டீட்கள். இந்த உயிர் நாம் இல்லை என்ற உண்மையும் இப்போது விளக்கம் கிடைத்திருக்கும். அப்படியானால் மனம் என்பது நாமா? அல்லது அந்த நாம் என்பது யார்? என்று அறிந்துகொள்ள வேண்டும். 

மனதைக் கொண்டுதான் உலகில் வாழ்கிறோம், இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம் அல்லவா? அத்தகைய மனதின் துணைகொண்டுதான், நாம் யார் என்று அறிந்திட வேண்டும். இந்தக் கேள்விதான் ‘நான் யார்?’ என்று விசாரணையை உருவாக்குவதாக, பகவான் ரமணமகரிஷியும் சொல்லுகிறார். அவர்தான் இந்த கேள்வியை நமக்குள் விதைத்தவர் எனலாம்.

குருமகான் வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, அந்த கேள்வியை நோக்கியே பயணிக்கிறோம். முதலில் மனதை மனதால் அறிய தவம் இயற்றுகிறோம். பிறகு மனதை உயிரில் நிலைத்து தவம் இயற்றுகிறோம். அடுத்ததாக, உயிருக்குள் அறிவாக இருக்கும் நிலையில் நிலைத்து தவம் இயற்றுகிறோம். அதற்குப்பிறகுதான் பேராற்றலோடும், பேரறறிவோடும் துரியாதீத தவத்தில் விரிகிறோம். அந்த நிலையில்தான் உங்களுக்கான விடை கிடைக்கும். அதை நாம் வார்த்தையால் இங்கே விளக்கிடுவது கடினம்! தொடர்ந்து தவத்தில் நிலைத்து உண்மையை உணர்வாகப்பெற வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

Athma and it's Imprints



 கேள்வி: 

ஆன்மா எப்படி களங்கமடையும்? அது தூய்மையானது அல்லவா?


பதில்:

நான் யார்?

பொதுவாக ஆன்மா என்பதுகுறித்து அறியாவிட்டாலும், நாம் ஆன்மா என்று “எவ்வகையிலோ” அறிந்திருக்கிறோம். இதற்கு பல ஆன்மீக நூல்களும், ஆன்மீக தலைவர்களும், யோகிகளும், சித்தர்களும், குரு மகான்களும் துணை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் சொன்னதை கேட்டதோடு சரி, தன்னை அறிவதற்கான “பாதையில்” செல்வதற்கு மட்டும் யாருக்கும் ஆர்வமில்லை என்பதுதான் உண்மை. 


என்ன வித்தியாசம்?

பொருளியல் சார்ந்த இப்புவி வாழ்வில், தன்னையும், தன் பொருளாதர நிலையை உயர்த்தி, அதை தக்கவைப்பதற்கே பெரும்பாடாகி இருக்கின்ற நிலையில், தன்னை உணர்ந்தால் என்ன? உணராவிட்டால்தான் என்ன? என்றும்,

உணர்ந்தவன் மட்டும் என்ன, காலம் காலமாக நிலைத்து வாழ்ந்து விடுகிறாரோ? அவரும் நம்மைப்போல செத்துத்தானே போகிறார், சரித்தான், அவரும் போகிறார், நானும் போகிறேன் போ, போ. என்று சொல்லி, இறந்தும் வாழ்வது குறித்த உண்மை அறியாமல் பேசி, தன்னை அறியாமலேயே, மகத்தான இந்த வாழ்வை, இறை அறிவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தெரியாமல், இன்னும் பேரின்பமாக இந்த வாழ்வை ரசிக்கத் தெரியாமல், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். 


பேரின்பம்?!

என்ன? இறை உணர்ந்தால் பேரின்பமாக வாழலாமா? என்னாய்யா சொல்றீங்க? இறை உணர காட்டுக்கு போகனும், கல்யாணம் செய்யாம, பிரம்மச்சாரியா இருக்க வேண்டும், சுகங்கள் அனுபவிக்க கூடாது. சிற்றின்பமான உடலுறவு செய்யக்கூடாது, பச்சையாக சொன்னால் “விந்து” வெளியிடக்கூடாது, சில நேரம் நிர்வாணமா வாழவேண்டிவரும், இல்லையென்றால் காவி உடுத்த வேண்டும். மீசை, தாடி, மயிர் மழிக்க கூடாது, பிச்சை எடுத்து உண்ண வேண்டும். மொத்தத்திலே பரதேசி மாதிரி வாழனுமே?! நீ என்னமோ பேரின்பம்னு சொல்லுறியே?!

அப்படி சொன்னது யார்? உன்னை, தனிமனிதனை ஏமாற்றி, நீ உழைத்து சம்பாதித்த பொருளையும், பணத்தையும் பிடிங்கித் தின்று, தன் உயிர் வளர்க்கும் கூட்டமே. அவனுக்கு உழைக்க தெரியாது. நீ உழைத்தால் உன்னிடமிருந்து பிடிங்கிக்கொண்டால் அவனுக்கு சுலபம். அதனால் உன்னை அந்தப்பக்கம் போகாதே என்று சொல்லிவிட்டான். 

உண்மையாக, இந்த பூமியில், உனக்கு கிடைத்திருக்கும் பிறப்பு, இந்த உலக இன்பங்களை எல்லாம், அளவோடும், முறையோடும் பெற்று அனுபவித்து, இன்பம் அனுபவிப்பதற்கே. இன்பமாக இந்த இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால், இன்பம் மிகுந்து பேரின்பமாகும், அதன் தொடர்ச்சியாக அமைதியும் கிடைக்கும். 


அவன் யார் என்று எனக்கு சொல்லுங்களேன்?

உன்னை எமாற்றி பிழைத்து, உனது பொருள், சொத்து, பணம், உழைப்பு இப்படி எல்லாம் பறித்துக்கொண்டு, யார், தன் உயிரும், உடலும் வளர்க்கிறானோ அவனே அவன்.


இதற்கு பதில் என்ன?

ஐயா, இதை எழுதிய நான் கேட்கிறேன். ஒருவேளை நீங்கள் பரதேசி மாதிரி போகாமலும், வாழாமலும், உங்கள் இஷ்டப்படி இப்போது இந்த வாழ்க்கையில், நீங்கள் சுகவாசியாக வாழ்கிறீர்களா? 

பதில் கிடைக்குமா?


மனிதனின் பரிணாமம்

ஒவ்வொரு மனிதனும், (மனிதன் என்றாலே, மனம்+இதன் என்று வேதாத்திரி மகரிசி அவர்கள் சொல்லியுள்ளார்) தனக்குள்ளாக நான்கு பரிணாமங்களை உள்ளடக்கியிருக்கிறான் (ள்). அம் மூன்று பரிணாமங்கள்...

1) உடல்

2) உயிர்

3) மனம்

4) ஆன்மா


ஆன்மா

நாம் கேள்விப்பட்டது போலவே, ஆன்மா நீரில் நனையாது, நெருப்பில் எரியாது, காற்றில் கரையாது என்பது உண்மைதான். ஆனால் ஆன்மாவை அம்மாபெரும் சுத்த வெளி என்கிற இறைதன்மையோடு ஒப்பிட முடியாது. அதோடு இரண்டும் வேறு, அதன் நிலைகளும் வேறு ஆகும். 

சுத்தவெளி தனைஅறிய நினைத்த பயணத்தில், ஆன்மாவாக மலர்ந்தது. ஆனால் தன்னை அறிந்துகொள்வதற்குள் பலகோடி உயிரினங்களாகவும், அதன் வழியில் மன இதனான, மனிதனாகவும் மலர்ந்தது. மனிதனுக்குள்ளாக, கருமையம் அமைந்து, தன் சரித்திரத்தை பதிந்துகொண்டும் விட்டது. அப்படியாக பிறவி, பிறவியாக ஆன்மாக்களாக வந்தவேளையில் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய வினைப்பதிவுகளை பெற்று, ஆன்மாக்களில் களங்கம் ஏற்பட்டுவிட்டது. 

அதில் ஒருசில ஆன்மாக்கள் தன் வாழ்நாளில் தன் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய வினைப்பதிவுகளை தூய்மைசெய்து “இறை” உணர்ந்தன. பிற ஆன்மாக்கள் தன் வினைப்பதிவுகளை கழிப்பதற்காக மீண்டும் மீண்டும் பிறந்தன.  இறை உணர்ந்தவர்கள், அதை, தன்னைச்சார்ந்த மனித குலத்தின்மீது அக்கறைகொண்டு, அவ்வழியை சொல்லியும் எழுதியும் வந்தனர். அவர்களில் நம் குருமகான் வேதாத்திரி மகரிசியும் ஒருவர். 

குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் உருவாக்கித்தந்த, உலக சமாதான சேவா சங்கம் வழங்கும், மனவளக்கலை பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அன்பர்கள் அனைவரும், இறை உணர, குருமகான் அவர்களை சரணடைந்து விட்டோம். இனி அவ் வினைப்பதிவுகளை தீர்த்து தூய்மை செய்துகொள்ள வேண்டும். அதுவே நாம் கடமை என்று வாழ்ந்து வருகின்றனர்.


இறை மற்றும் ஆன்மா

தாமரை இலை தண்ணீர் போல பாதிக்கப்படாதது சுத்தவெளி மட்டுமே. ஆனால் ஆன்மாவில் எல்லா களங்கங்களும் மையம் கொண்டு, வினைப்பதிவுகளாக பதிந்துவிடும். இதனால்தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்று திருவள்ளுவரும் சொல்லியுள்ளார். 

ஆனால், நான் என்ற கேள்வியோடு தன்னை அறிய வாய்ப்பில்லாமல், பிறவித் தொடர் வழியாக, ஓவொருவருக்கும் ஆன்மா களங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு மறுபிறவி இல்லை என்பதை, அறிவியல் ரீதியாக ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அவன் ஆவியை நம்புவான். அது நம்மை பழிவாங்கும் என்றும் சொல்லுவான். இறந்தவன் ஆவியாக இருப்பது ஏன் என்று கேட்டால் பதிலிருக்காது. 

ஓவ்வொரு மனிதனுக்கும் மறுபிறவி தன் குழந்தைகளே, தான் இறை உணர முடியாத நிலையில்தான், 

1) உங்கள் பெற்றோர்கள் உங்களை பெற்றெடுத்தார்கள்

2) நீங்கள் உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கிறீர்கள்

3) உங்கள் குழந்தைகள் உங்கள் பெயரன், பெயர்த்திகளை பெற்றெடுக்கிறார்கள்

ஆனால் யாரும் இறை உணர தயாராக இல்லை.


முடிவு?!

ஆன்மாவில் களங்கம் என்பதற்கு மட்டுமே இந்த பதிவு தரப்பட்டது. இது புரியவில்லை என்றால், முழுமையான விளக்கம் வேண்டுமென்றால், உங்கள் அருகில் உள்ள, வேதாத்திரி மகரிசி மனவளக்கலை மன்றங்களை அணுகலாம். 

அல்லது உங்களுக்கு கேள்விகள் இருந்தால் இங்கே, பின்னூட்டம் இடுங்கள், அதற்கான பதிலை அடுத்த பதிவுகளில் தருகிறேன். வாழ்க வளமுடன். 

-------------

Thanks to Image: Omid Armin @omidarmin

Athma Goes to


 ஆத்மா எங்கே போகிறது?


ந்த கேள்வி குறித்து சிலர் கேட்டிருந்ததமையால், அதுகுறித்தும் சில உண்மைகளை அறியத்தருகிறேன். கடந்த பதிவுகளின் வழியாக, ஆத்மா என்பது குறித்து தொடர்ச்சியாக பார்த்திருப்பதால், இந்த பதிவும் சுலபமாக புரிந்துவிடும் என்று நம்புகிறேன். ஆத்மா என்பது நமது பிம்பம் என்று உதாரணமாக வைத்துக் கொள்வோம் எனில் நம்முடைய எண்ணங்கள், விருப்பம், வெறுப்பு, செயல்கள், கவலை, கோபம் இப்படி எல்லாமும் ஆத்மாவிலும் இருக்கும். ஆத்மா என்பது சுத்தமானது என்ற பொது கருத்துக்கு வந்துவிடக்கூடாது. நாம் எப்போதோ செய்த தவறுகளைக்கூட, நாம் மறந்திருந்தாலும் கூட, தானாகவே செயலுக்கு வந்து நம்மை ஆட்கொண்டுவிடும் தன்மை கொண்டது நம் ஆத்மா. எனவே உங்களினின் 100% முழுமையான பிரதி ஆனால் உங்களையும் இயக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


சரி, நல்ல ஆத்மா இல்லையா? கிடையாதா?

நல்ல ஆத்மா இருக்கிறது, யோக சாதனை முலமாக, தவத்தின் வழியாக, தன் சஞ்சித, பிராரப்த, ஆகாமிய (மும்மலங்கள்) (இருவினை என்று சித்தர்கள் சொல்லுவர்) கர்மங்களை, வினைப்பதிவுகளை தன் வாழ்நாளிலேயே போக்கி, இறைநிலையில் முழுமை அடைந்தவரே நல்ல ஆத்மா. அப்படியானால் வினைப்பதிகளை போக்க நாம் வாழும் இந்த பிறவிக்காலமே போதுமானது ஆகும். நாம் இந்த உலகில் பிறப்பதின் காரணமே வினைப்பதிவுகளை, போக்கிக் கொள்வதற்குத்தானே! ஆனால் பிறந்தபிறகு நாம் அதை மறந்துவிடுகிறோம்.


எனக்கு வினைப்பதிகள் இல்லை

இறை மறுப்பாளர்களும், பகுத்தறிவு சிந்தனையாளர்களும் இதை ஏற்றுக்கொள்வதில்லை. யாரோ செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பாளியா? எனவே எனக்கு வினைப்பதிவுகள் இல்லை என்று சொல்லிக் கொள்வார்கள். ஒரு மனிதனை யாரும், இரசாயன ஆராய்ச்சி கூடங்களில், “ஒரு பொம்மைகள் போல” உருவாக்குவதில்லை. தாயும், தந்தையும் இணைந்து உறவின் மூலமாக, கருவாகி வளர்ந்து வருகிறோம். எனவே, அவர்கள் இருவரின் வினைப்பதிவுகள் நம் சொத்தாகி விடுகிறதே? கூடவே நாம் வாழும் பொழுது நாமாக சேர்த்துக் கொண்ட வினைப்பதிவுகள் உண்டு. இந்த விதை, நல்ல மாங்கனிகளை கொடுத்த மரத்தின் விதை என்ற எதிர்பார்ப்போடுதானே விதைக்கிறோம். அப்படியென்றால், மாங்கனியின் தன்மை விதையில் உள்ளடக்கமாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே நமக்குள் வினைப்பதிவுகள் உண்டு.


வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை

இந்த உலகில், நமக்கு எப்படி வாழப்பிடிக்குமோ அப்படியே வாழ்ந்து, நினைத்ததை சாதித்து, நேர்மையாகவோ, பக்திமார்க்கமாகவோ, இறைமறுப்புடனோ, பகுத்தறிவுடனோ, இயற்கையை மதித்தோ, அவமதித்தோ, பொய், சூது, களவு, கொலை, செய்தும்கூட, மத, இன, ஜாதி பேதம் காட்டி சக மனிதர்களை, இயற்கை வளம், சமூகம், அரசியல் எல்லாம் கெடுத்து, நான் சுத்தமானவன், என்னிடம் தவறே இல்லை என்று இப்படி சொல்லித்தான் வாழ்ந்து, ஒரு நாள் செத்தும்போகிறோம். வினைப்பதிவு தீர்க்க "IDEA" இல்லை. நமக்கும் தெரியவில்லை. யாரும் சொன்னாலும் தெரிந்துகொள்வதில்லை. அதுகுறித்து ஆர்வம் கொண்டதும் இல்லை. நிதம் தேடிச்சோறு தின்று, கை நிறைய, அலமாரி நிறைய, தேவைக்கு மீறிய காசும், ஒருத்தருக்கும் கடனோ, அன்பளிப்போ கொடுக்காது சேர்த்து,  நோய்பட்டு, மருத்துவத்திற்கே செலவு செய்து, கிழடுதட்டிப்போய், முரட்டு கௌரவத்தோடு, இன்னும் வாழ முடியவில்லையே, சுகம் அனுபவிக்கவில்லையே, காசு சேர்க்கவில்லையே, இப்படி ஆகிவிட்டதே எனும் வருத்தத்தோடு, செத்துவிடுவோம். நம் உடல் மண்ணோடு மண்ணாகவோ, மாநகராட்சி மின் மயானத்தில் சாம்பலாகவோ மாறிவிடும். ஆனால் நம்முடைய வினைப்பதிவுகளும், அதை தாங்கி நிற்கக்கூடிய ஆத்மாவும் (நாம் தான்) அப்படியே இருக்கும். அதாவது நம் வினைப்பதிவுகள் தீர்ந்து நாம் முழுமை அடையும் வரை.


வினைத் தீர்க்க வழி ஏது?

செத்தாகிவிட்டது. அமைதியாக இருந்தால் ஆத்மா, ஆர்ப்பாட்டமாய் இருந்தால் ஆவி. 

ஆட்டத்தில் அவுட் ஆனதுப்போல, வினைப்பதிவு தீர்க்க வந்த வாழ்வில், அதை தீர்க்காமலேயே வாழ்வு முடிந்துபோனது. இருந்த உடலும் இல்லை. ஆனால் வினைப்பதிவு சுமையால் “ஆத்மா” இயற்கையோடு ஒன்ற முடியாது. அது இயற்கையின் வினை விளைவு நீதியாகும். இப்போது உடல் வேண்டுமே? என்ன செய்வது?


இப்படி உடலுமில்லாத, குடலுமில்லாத ஆத்மாவுக்குத்தான், மகனோ, பேரனோ பணம் செலவு செய்து, விற்பனர்கள் மூலமாக பிண்டம் வைத்து, சாந்தி அளிக்கிறார்கள்.


இயற்கை, ஆத்மாவுக்கு உதவுகிறது

ஆனால் இங்கேதான் இயற்கையே, ஆத்ம சாந்தி அடைய, அந்த ஆத்மாவிற்கு உதவி செய்கிறது. அவ்வழியில் ஆத்மா, தனக்கு விருப்பமானவர்களோடு இணைகிறது. தன்னை பகிர்ந்து கொள்கிறது. தன்னுடைய வாழ்க்கை துணை, மகன், மகள், பேரன், பேத்தி இப்படியாக, அவர்கள் உயிரோடு தானுமாய் ஒட்டிக்கொள்கிறது. தான் பெற்ற வினைப்பதிவுகளை, இவர் மூலமாக தீர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு அமைகிறது. அந்தோ பரிதாபம், இறந்துபோனவரின் வழக்கம், பழக்கம் தானே அவர் குடும்பத்தார்க்கும் இருக்கும்?! பிறகு எப்படி வினைப்பதிவுகளை தீர்ப்பார்கள்? பத்தோடு ஒன்றாகி, பதினொன்றாக வினைப்பதிவுகளின் சுமை இன்னும் ஏறிவிடும். பிறகு?! இப்படியே தொடர்கதைதான்.


இதன் பாதிப்பு என்ன? வினைப்பதிவு இருந்தால்தான் என்னவாம்?

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், வாகன விபத்துக்கள், கூடுதல் இறப்பு, நோய், மன நிம்மதியின்மை, வேலை, தொழில் கெடுதல் ஆகியன போல, ஓவ்வொன்றாக பெற்றுக்கொண்டே வாழ்ந்து, சாகவேண்டியதுதான்.


அப்படியானால் தீர்வு?!

ஆனால், இறந்தவருக்கு, பிண்டம் வைத்து சாந்தி அளிக்காமல், தன்னோடு அந்த ஆத்மா கலந்திருக்கிறது என்பதை உணர்ந்து, தன் வாழ்க்கையில் தன்னையும் திருத்தி, யோக சாதனைகளில் இணைந்து, தவம், தற்சோதனைகள் மூலம் வினைப்பதிவுகளை களைந்தால், தன் தகப்பனின் வினைப்பதிவு மட்டுமல்ல, இதுநாள் வரையில் தொடர்ந்திருந்த எல்லா வினைப்பதிவுகளும், தன் வினைப்பதிவுகளும் கலந்தே தீர்ந்துவிடும். அதோடு தான் மட்டுமல்லாது, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும்.


குரு மகான், வேதாத்திரி மகரிசி அவர்களின் வேதாத்திரியத்தின் வழி இக்கட்டுரை எழுதப்பட்டது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால், இந்த WhatsApp Group வழியாக கேட்கலாம். வாழ்க வளமுடன்.




வேதாத்திரிய இறையுணர்வு


----------------

Photo Thanks to: Miguel Bruna, @mbrunacr


Compansation and Athma Shanti


பரிகாரமும், ஆத்மா சாந்தியும்

Arulmigu Magudeshwarar Temple - Kudumudi - Erode Distric, Tamilnadu, India.


நேற்று கொடுமுடி (Kodumudi) , மகுடேஷ்வரர் திருக்கோவில் (Magudeshwarar Sivan Temple) காவிரி (River Cauvery) ஆற்றங்கரைக்கு செல்லும் பயணம் நேர்ந்தது.  அந்த கோவிலுக்கு செல்லும் எல்லா வீதிகளிலும், பரிகார் (ஹிந்தி) கடை இருக்கிறது. அங்கே இறந்தவர்களுக்கு கருமாதி எனப்படும் ஆத்மா சாந்தி, வாழ்க்கை வசதி தடை விலக்கல். திருமண வாய்ப்பு உருவாக்குதல் என்ற  வகையில் பரிகாரம் செய்வதற்கான எல்லா பொருட்களும், செட் செட்டாக (ஒரே தொகுப்பாக) விற்கப்படுகிறது. பூக்கடைகளும், வண்ணப் பூமாலை கடைகளும் நிறைய இருக்கின்றன.

வீதியின் வழியே செல்லும் எல்லோரையும்,

“வாங்க பரிகாரமா? நான் செய்து தருகிறேன்” என்று கை பிடித்து அழைக்காத குறையில் பரிகாரம் நடத்தும் விற்பனர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்றல்லாது எல்லோரும் இதில் இறங்கிவிட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொடுமுடியின் இந்த ஸ்தலம், பரிகாரத்திற்கு மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். மனித ஆத்மாவின் வாழ்க்கை முடிவுக்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் தொடக்கமான திருமணமும் இக்கோவிலில் நிகழ்த்தப்படுகிறது. 

Ritual athma santhi parikar at Cauvery river - Kodumudi


திருச்சி மாவட்டத்திற்கும் நுழையும் காவிரி, அகண்ட காவிரி என்று அழைக்கப்படும். ஆனாலும், இங்கே கொடுமுடியிலும் அகண்ட காவிரியாகத்தான் ஓடிவருகிறாள். இப்போதும், முழங்கால் நீரில் மூழ்கும் அளவில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்துவரும் காவிரி ஆறு, கொடுமுடியில்தான் கிழக்கு நோக்கி பாய்ந்து, கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக, தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களை அடைந்து கடலில் தஞ்சமாகிறது. கொடுமுடி காவிரியில் குட்டியாக நிறைய மீன்களும் வலம் வருகின்றன. இதுவரை இப்பெரும் ஆற்றை கண்டிராத குழந்தைகள், மீண்டும் மீண்டும் நீரில் இறங்கி எழுவதை காணமுடிந்தது. இப்படியெல்லாம் குழந்தை குழந்தையாகவே இருப்பதை இங்கேதான் கண்டேன்.

படித்துரை முழுதும், யாரோ அவிழ்த்துப்போட்ட துணிகளும், உள்ளாடைகளும் கவனிப்பாரற்று கிடந்தன. உன் வாழ்க்கை சோகத்தோடு, இதையும் அங்கே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு என்று யார் பரிகாரம் சொன்னது என்று தெரியவில்லை. 

பரிகார ஸ்தலம் என்றால், புண்ணியத்தை வேண்டிப்பெரும் இடம்தானே?! அதை எப்படி தூய்மையாக, சுகாதாரமாக, மற்றவர்களும் வந்துபோகவேண்டும் என்ற கவனத்தோடு, பெரும் நோக்கத்தோடு உபயோகப்படுத்தும் நிலை, நம்மிடம் அறவே இல்லை, அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளும், நாற்றங்களும், ஆற்றின் கரையில் மிதக்கும் வேண்டாத பொருட்களும், பரிகாரத்திற்குப்போய் வந்து நமக்கே பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் போலிருக்கிறது.

பரிகார விற்பனர்கள் அங்கங்கே குடில்கள், வீடுகள் அமைத்திருக்கிறார்கள். அதன் வாசலில் தற்காலிக பந்தல் அமைத்து, வேண்டுவோருக்கு பரிகார சடங்குகள் செய்துதருகிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் அவர்கள் மட்டுமே உட்காரும், பிளாஸ்டிக் இருக்கைகள் உள்ளன. நாம் உட்கார்ந்தால் அடுத்த நொடி “அங்கே போய் உட்காருங்க” என்று கிளப்பிவிடுகிறார்கள். செருப்பைக்கூட அங்கே தனிப்பட்ட ஓரிடத்தில்தான் கழற்றி வைக்கவேண்டியுள்ளது. 

Tree around the snake stones and deities


பெரிய ஆலமரமும், நாக சிலைகள் அடுக்கப்பட்ட கல் மேடையும், ஆற்றின் கரையெங்கும் இருக்கிறது. அதைச்சுற்றியுள்ள தரைப்பகுதியில்தான், பரிகார சடங்குகள் நிகழ்த்தித் தரப்படுகின்றன. சிலர் வேண்டுதலாகவே நாக சிலைகள் வாங்கி வணங்கி, அந்த ஆலமர மேடையில் வைத்துவிடுகிறார்கள். பரிகாரத்திற்கு நாங்கள் அங்கே விசாரித்தவகையில், பரிகார சடங்கு செய்ய தொகை, குறைந்தபட்சமாக மூவாயிரம் ரூபாய் என்று கேள்விப்பட்டேன். அதுபோக அங்கே விரித்துவைத்திருக்கும் சடங்கு பொருட்களும், நவதானியங்களும், மளிகை சாமான்களும், காய்கறிகளும், பழங்களும், வாழை இலைகளும் கூட, பரிகார விற்பனர்களுக்கே சென்றுவிடும். கூடுதலாக ஒரு பித்தளை சொம்பு, ஒரு பட்டுக்கரை வேட்டியும் தானம் உண்டு. வசதி இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக செய்யலாம். அந்தக்காலத்தில் பசுமாடும், கன்றுக்குட்டியும் தானம் தருவார்கள். கொடுமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் என்று சொல்லுகிறார்கள். ஆகவே இத்தகைய பரிகாரமும் அக்காலம் முதற்கொண்டே நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

எல்லாம் சரிதான், ஆனால் முக்கியமான உண்மை என்ன தெரியுமா? பரிகாரத்தால் ஒரு பயனுமில்லை. பரிகாரம் செய்வதால், இறைவனும் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆத்மாவும் சாந்தியடைவதில்லை. 

இறை மனிதர்கள் செய்யும் எந்த தந்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதல்ல. நமக்கென்று நம் கருமையத்தில் ஏற்கனவே இருக்கிய வினைப்பதிவுகளையும், நாமே வரவழைத்துக்கொண்ட வினைப்பதிவுகளை அவ்வப்போது ஆராய்ச்சி செய்து, மனதையும், உடலையும், தூய்மை செய்து கொள்வதுதான் சரியான வழி. இதற்கு யோகமும், தவமும் முக்கிய தேவை. உடற்குறைகளை போக்கிக்கொள்ள அதற்கான உடற்பயிற்சியும் தேவை. அதன்றி,  உனக்கு, இது செய்கிறேன், அது செய்கிறேன் என்மீது கருணைமழை பொழி என்று வேண்டுவது அபத்தம். இறைக்கு படைக்கும் பொருளனைத்தும் இறை படைத்ததே தவிர, உனதானது எது?!

ஒரு ஆத்மா சாந்தி பெற, இறந்தவரின் நினைவில் நின்று, வாழ்த்தி வணங்கி, அவர் விட்டுச்சென்ற நற்செயல்களை செய்வதும், அல்லது  உறவினர்கள், உதாரணமாக, வாழ்க்கை துணைவர், மகன், மகள், பேரக்குழந்தைகள் ஆகியோர், அவரின் பெயரில் நன்மைகளை மக்களுக்கு செய்வதுமே, இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வழி செய்யும். குலதெய்வம் என்று சொல்லப்படுகிற முறையும் இதுவே. காலம் காலமாக, ஒருகுடும்பத்தில் குலதெய்வம் வழிபாடு, வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைந்து வழிபடும் முறையாகவே இருந்துவருவது உண்மை. 

இந்த பரிகார சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களில் இருக்கும் பொது அர்த்தம் என்ன தெரியுமா? 

“சிவம், சக்தி, விநாயகன், கந்தனுக்கான இறைத்துதிகளும், வணக்கங்களும், பிறகு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, இராகு, கேது ஆகிய கிரங்களுக்கான வணக்கங்களும், நான்கு தலைமுறை பாட்டனார், கொள்ளுதாத்தா, தாத்தா, தந்தை, இறந்து போன நபர் ஆகியோரின் பெயர் சொல்லி அவர்களை நினைத்து வணங்கி, உங்கள் பெயரில் இதை நடத்தி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டியும், உங்களுக்காக இதை தானமாக வழங்கவும் செய்கிறோம். எங்களோடு கலந்திருந்து நீங்கள் உன்னதம் அடைவீர்களாக. உங்கள் பெயரில் பிண்டம் வைத்து ஆற்றில் விடுகிறோம். (மீன், காகம் போன்ற) உயிரினங்களாக வந்து பசி தீர்த்துக்கொள்வீர்களாக. இனியும் நாங்கள் தானம், தருமம் செய்து எங்களை திருத்திக்கொள்கிறோம்” என்பதாக அமைந்திருக்கிறது.  

பிண்டம் வைத்து வணங்கி, சமைக்காத அவ்வுணவை ஆற்றில் விடும்பொழுது, மீனுக்கும், காகத்திற்கும் இரை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆத்மாவுக்கு என்ன? என்று விடைதருவார் யாருமில்லை. ஒரு நபர் செய்யும் பரிகார சடங்கு, நான்கு தலைமுறை ஆத்மாவுக்கு சாந்தி தரும் என்பது வியப்புக்குரிய செய்தி. இது குறித்த தெளிவு யாரிடமும் இல்லை. கேள்வி கேட்கவும் தயங்கி, எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன் என்றே பதில் கிடைக்கும். இதை செய்யாவிட்டாலும் குற்றம் என்று புலம்பவும் செய்வார்கள். பிறர் ஏதேனும் கேள்வி கேட்டு ஏளனம் செய்வார்கள் என்ற பயமும், இதைக்கூட செய்யமுடியாத என்ன என்ற கிண்டலும், ஒருவேளை “சாந்திபெறாத ஆத்மாவால்” தங்கள் குடும்பத்தில் ஏதேனும் தீங்கு நேருமோ என்ற குழப்பமுமே காரணம். ஆனால் உண்மை என்னவெனில், வாழ்ந்த மனிதரின் இறப்பு பற்றிய விளக்கம் தெரியவில்லை. வாழும் மனிதருக்கு தன் வாழ்வு குறித்தும் அக்கறை இல்லை. தானும் இறப்போமே அப்போது என்ன ஆகிவிடுவோம் என்ற உள் தேடல் கேள்வியும் இல்லை. அக்கேள்விக்கான பதிலைத்தேடவும் ஆர்வமில்லை.

“இறந்தவனை சுமந்தவனும், இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்”

பின்குறிப்பு: இப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. யோகம், தவம், உடற்பயிற்சி என்ற சிந்தனை தூண்டுதலுக்காகவே எழுதப்பட்டது. இறை, ஒருகுறிப்பிட்ட இன மறுப்பாளர்கள் இக்கட்டுரையை மேற்கோள் காட்டக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. 

photos thanks to: tripadvisor, Tamilnadu Tourism and June3 studio