CJ for You: marga

marga

Showing posts with label marga. Show all posts
Showing posts with label marga. Show all posts

Please explain Dvaita, Advaita, Vishishtadvaita philosophies?


துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

சுவாமிஜி, துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் உணவுப் பெட்டியில் (Tiffin Box) உணவை எடுத்து செல்கிறீர்கள். இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு. பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை; உங்களுக்குள் சென்று விட்டது. இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (Essence) தானே?


அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும், உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு, நீங்கள் வேறு அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக்கிரமம் (Process) இருக்கிறதே அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்குச் சென்றடைகிறான். இந்தச் செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத்வைதம். அதற்குத் தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், “த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் “அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. “எல்லாம் ஒன்று” என்பது அத்வைதம், “ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று “மாறுபடுகிறது” என்பதை த்வைதம், “எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகிப் பின்னர் பரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.


வாழ்க வளமுடன்.

Why often noted yoga only is the best way? Any other way not truly work?


எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


பதில்:

யோகம்தான் சிறந்தது என்று சொல்லுபவர் உண்டுதான். ஆனால் அது அவர்களின் அனுபவம் சார்ந்த பதில் மட்டுமே. மெய்பொருள் உண்மை உணர்ந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகிய யாருமே யோகம் தான் சிறந்தது என்று சொல்லியதே இல்லை. சொல்லுவதும் இல்லை. ஆனால் ‘யோகம் ஒன்றுதான் முழுமையானது’என்று மட்டுமே சொல்லுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் இருக்கும் எந்த நிலையிலும், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு சுலபமானதுதான் அது. எளிமையாக நீங்களாகக்கூட சிலவேளை புரிந்து கொள்வீர்கள். ஆனால் அது உணர்வாக நிலைக்காது. தொடராது. காட்சியாகாது. அதுதான் இங்கே உங்களுடைய கேள்வியில் தொக்கி நிற்கிறது. மற்றபடி யோகம்தான் சிறந்தது என்றோ, யோகம் மட்டுமே முழுமையானது என்று கூறுவதற்கில்லை. என்னுடைய இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து கொள்வோரும் உண்டு. அவர்கள் அவர்களின் அனுபவத்தில் இருந்து கருத்து சொல்கிறார்கள். நான் ஆராய்ச்சியின் வழியில் சொல்லுகிறேன்.

இதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வண்டியில் பூட்டிய மாடுகள், வயற்காட்டில் இருந்து விட்டிற்குச் செல்வதும், வீட்டிலிருந்து வயற்காட்டிற்குச் செல்வதும் தானாக நடக்கும். நீங்கள் அந்த மாடுகளை வழிநடத்த வேண்டியதில்லை. பழக்கபட்ட மாடுகள் தானாகவே வழி கண்டு நடந்து செல்லும். ஆனால் குதிரை அப்படியல்ல. என்னதான் பழக்கினாலும் அது தன் போக்கில்தான் நடந்து செல்லும், நடக்கும் என்பது கூட உண்மையல்ல, ஓடும் என்பதுதான்  உண்மை. மேலும் குதிரைக்கு அதன் பக்கவாட்டு பார்வையை மறைக்கவும் வேண்டும் அல்லவா? நீங்கள் அதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஆனாலும் இந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான மாடுகள், குதிரைகள் அருகிவிட்டன. இதில் மாடுகளுக்கும், குதிரைக்கும் இடையிலான ஆற்றல், வெளிப்பாடு, காலம், தூரம் கூட அடங்கி இருக்கின்றன அல்லவா? அந்த குதிரையை, அதன் இயல்பிலேயே பக்குவப்படுத்திவிட்டால் சிறப்புத்தானே? அதைத்தான் யோகம் தருகிறது.

ஒருவர் பக்தியில் ஈடுபாடு கொண்டவரா? அதிலும் பிரிவுகளில் நிற்கிறாரா? கடவுள் நம்பிக்கையற்று இருக்கிறாரா? எல்லாம் மறுத்து இயற்கையே என்ற முடிவில் இருக்கிறாரா? விஞ்ஞானம்தான் எல்லாவற்றிற்கும் விடை என்று கருதுகிறாரா? வேதாந்தத்தில் ஆர்வமாக இருக்கிறாரா? சித்தாந்தம் தான் எனக்கு என்று நினைக்கிறாரா? கர்மயோகமே எனக்கு போதும் என்று கருதுகிறாரா? வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒத்தும் உதவியும் வாழ்ந்தால் போதும் என்று விரும்புகிறாரா? மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருந்தாலே சரிதான் என்று நினைக்கிறாரா? இப்படி எந்த வகையினரும் மெய்ப்பொருள் உண்மையை ‘யோகம்’ ஒன்று இல்லாமல் அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உணர்ந்து கொள்ள, தனதாக்கிக் கொள்ள, முழுமையில் நிறைய ‘யோகம்’மட்டுமே துணை. இல்லையேல் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதைதான் உண்மையாகும்.

வாழ்க வளமுடன்

-

Why the enlightenment is late through the yoga? How long it takes?


யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


பதில்:

உலகில் பிறந்த நாம், பக்தி வழிபாட்டின் வழியாக, இயற்கையின் உன்னதமான பெரும் பொருளை, மெய்ப்பொருளை அறிந்துகொள்கிறோம். நம்மைவிட, நம்மிலும் பெரிய, சக்திவாய்ந்த ஒன்று இறையாக, தெய்வமாக இருக்கிறது என்று நம்புகிறோம். அதற்கு மதிப்பு கொடுத்து வளர்ந்து வந்து, இளைஞர்களாக உலக வாழ்க்கையை ஏற்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறோம். சிலர் அது பொய், இல்லவே இல்லை என்ற ரீதியில் மாற்றுப்பாதையில் சென்றுவிடுகிறார்கள். நாம், இதுவரை வழிபட்டுவந்த அந்த இறையை, தெய்வீகத்தை உண்மையாக அறியும்பொருட்டு, யோகத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம்.

அப்படியான யோகத்தில், எளிமைப்படுத்தப்பட்ட வேதாத்திரியத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இப்படி சொல்லுவதால் மற்ற யோக அமைப்புக்களை குறைசொல்லுவதாக நினைத்திடக்கூடாது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையான சிறப்பை கொண்டதுதான் என்பதால், இங்கே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அப்படி யோகத்தில் பயணிக்கும் பொழுது, குருவின் அன்பினாலும், கருணையாலும், உண்மை தத்துவ விளக்கங்களை பெறுகிறோம். கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் நமக்கு புரிந்தாலும், அது நடைமுறைக்கு எளிதில் வந்துவிடுவதில்லை.

இதற்கு ஒரு மனிதனிடம் உள்ள, மூன்றடுக்கு கர்ம வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் காரணமாகின்றன. கருவழியாக, முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த வினைகள் பதிவாகி, கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அது நமக்கும் பகிரப்பட்டு இருக்கும் நிலையில், நாம் அதை தூய்மை செய்யாது, நமக்கு ஒரு குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கும் பகிரப்படும் என்பது இயற்கை விதி. அத்தகைய கர்மா என்ற வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதை தீர்ப்பதற்காக நம்முடைய, யோக பயண முயற்சி தொடரவேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு 20 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 30 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு 50 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு இன்னும் கூடுதலாக ஆகலாம்.

எனினும், யோகத்தின் வழியாக ஏற்படும் வளர்ச்சியை நாம் முடிவு செய்யவும் முடியாது. கணித்துப்பார்க்கவும் முடியாது. இந்த இடத்தில் நாம் அதை இயற்கையின் வசமும், தெய்வீகத்தின் வசமும் ஒப்படைத்து விட்டு, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். ஆனால், அந்த மாற்றங்களும், உயர்வுகளும் நாம் அறிந்திடவும் முடியும் என்பதே உண்மை. சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்கூட மாற்றம் உண்டாகிக்கொண்டே வருவதை நாம் உணரமுடியும்.

தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள், நிறைவடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

-

Why I can't give up the Bhakti worship?


பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


பதில்:

பக்தி வழிபாடுகளில் இருந்து விடுபடுங்கள் என்றும், அதை விட்டுவிட்டு மீண்டுவாருங்கள் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? யார் அப்படியான அறிவுரையை கொடுத்தார்கள்? யார் அதுதான் சிறந்தது என்று வழிகாட்டினார்கள்? 

உண்மையாக பக்தி வழிபாடுகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ள வேண்டியது குறித்து கவலைப்படாதீர்கள். பக்தியும் வழிபாடும் இருக்கட்டும். அதில் இருக்கின்ற உண்மை, சொல்லப்பட்ட உண்மை என்ன என்பதை தேடுங்கள். ஏன்? எதனால்? எதற்காக? என்ன பலன்? என்ன நன்மை? என்ற கேள்விகள் வழியாக ஆராய்ச்சி செய்யுங்கள். அதற்கான விடை என்ன? என்பதை அந்த ஆராய்ச்சியின் முடிவாக கண்டுபிடியுங்கள். உங்கள் முடிவு என்ன? என்பதை வேறு யாருக்கும் சொல்லவும் வேண்டியதில்லை. சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்பதோடு, அது எனக்கு தேவையில்லை என்று ஒதுங்கிக் கொள்வார்கள். உங்களைபோல அவர்களும் ஏதோ ஒருநாள், நீங்கள் கண்டுபிடித்த அதே உண்மையை, தானாக ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டுமே!

பக்தி என்பது நிச்சயம் வேண்டும். அது இல்லாது ஒரு மனிதனுக்கு தனித்தன்மைகள், மனிதனுக்கே உரித்தான உயர்ந்த தன்மைகள் மலர்ச்சி பெறுவதில்லை. அறிவின் முழுமையை அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தன்னை முழுதாக அறிந்துகொள்வதற்கு, அந்த வழியே செல்வதற்கு, தன்னை தகுதியாக மாற்றிக்கொள்ள சிறந்த வழிதான் பக்தி, ஆனால், அதில் நின்றுவிடாது, உண்மையையும் அறிய முயற்சிக்க வேண்டும். அப்படியாக முயற்சித்தால், யோகத்திற்கு நுழையமுடியும்.

யோகத்திற்கு நேரடியாக வரமுடியாத பாமர மக்களுக்காகவே, அவர்களுக்கு துணை செய்யவே, யோகத்தில் உயர்ந்த சித்தர்களால், ஞானிகளால், மகான்களால், குருமார்களால்தான் பக்தி கொண்டுவரப்பட்டது.

அதில் ஏற்பட்ட குழப்பங்கள்தான் அதை வேறுவழிகளில் திசை திருப்பிவிட்டது. இன்னும் அந்த திசையில்தான் போய்க்கொண்டும் இருக்கிறது. அதுகுறித்து நமக்கு கவலை ஏதுமில்லை. நாம் இங்கே விழிப்பாக, உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் போதுமானது. எனவே பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே என்று வருந்தாமல், உண்மையை ஆராய்ந்து அறிய தயாராகுங்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன்.

Is it true to say that there is a purpose in the birth of man?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு நோக்கம், மனிதனின் பிறப்பில்  இருப்பதாக சொல்லுவது உண்மையா?


பதில்:

இந்த கேள்விக்கான பதிலை நீங்கள், உங்களுடைய வாழ்க்கையிலேயே புரிந்துகொள்ள முடியும் என்பதே உண்மை. நான் தனியாக விளக்கிச் சொல்வதற்கு தேவையே இல்லை என்று நினைக்கிறேன். உங்களைப்போலவே எல்லோருமே இந்த சந்தேகத்தில்தான் இருந்திருப்பார்கள். நாளடைவில், தங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்கள், அது தொடர்பான துன்பம், இன்பம், குறை, நிறை இப்படி பலவகைகளில் அனுபவம் பெறும்பொழுது, நம்முடைய வாழ்வில், இப்படியான சராசரி வாழ்வையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்ற கேள்வி பிறந்துவிடும்.

ஒருசிலர் தானாகவே அதற்கான பதிலை கண்டுபிடித்து அதற்கான வழியில் செல்ல தயாராகிவிடுவார்கள். ஒருசிலர் பக்தி, வேதாந்தம், ஆன்மீகவாதிகள், மகான்கள், ஞானிகள் தருகின்ற விளக்கங்களின் வழியாக தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். சிலர் தன்னுடைய வாழ்வில் கிடைக்கக்கூடிய விளக்கத்திற்காக, யோகத்தில் தன்னை இணைத்துக் கொள்வார்கள்.

ஆனாலும் பெரும்பாலோர், நம்முடைய பிறப்பில் எது இருந்தால் என்ன? இப்போது வாழ்வோம், அதெல்லாம் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்து, வழக்கமான வாழ்வையே வாழ்ந்து அனுபவிக்க தயாராகிவிடுவார்கள். நான் பிறந்தே தப்பு, நான் பிறந்த நேரம் சரியில்லை, என் ஜாதகம் பிரச்சனை, கிரகக்கோளாறு, போன பிறவியில் நான் செய்த பாவம், தெய்வத்திற்கு என்மீது இரக்கமே இல்லை, கடவுளே இல்லை, எல்லாம் பொய், வாழ்க்கையும் பொய் என்பதாக அப்படி இப்படி என்று புலம்பிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களை வேறொன்றும் செய்யவேண்டாம், அவர்கள் தேர்ந்தெடுத்தது அது என்றால் நாம் என்ன செய்யமுடியும்?

நீங்கள் இந்த கேள்வி கேட்டதே ஒரு நல்ல நகர்வு என்று சொல்லலாம். அதற்காக உங்களை பாராட்டுகிறேன்.

மேலும் தெளிவான விளக்கம் பெற, இந்த காணொளியில் கேட்டு அறியலாம். உண்மைகளை அறிய குரல்வழி விளக்கம் போதுமானது என்பதால், குரல்பதிவாக தந்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்.

-

Get the Truth from the Bhakti


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு என்பதை ஏன் என்னால் ஏற்கமுடியவில்லை?


பதில்:

உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். உண்மையை விளக்கிக் கூறும் வாய்ப்பை இக்கேள்வி உருவாக்குகிறது. இனி பதிலை சிந்திப்போம்.

‘பக்தி என்பது சிறுபிள்ளைகட்கே' என்று ஒருகவிதையில் சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். உடனடியாக அந்த கவிதையை என்னால் இங்கே ஞாபகப்படுத்தவோ, குறிப்பிடவோ முடியவில்லை, கேள்வி கேட்ட நீங்களே குறிப்பிட்டால் நலம். பொதுவாக, கவிதை என்பது, கரும்புச்சாறு போல பெரிய நீண்ட கரும்பை, கசக்கிப் பிழிந்து உருவாக்கிய சாறு. அதை நீங்கள் கரும்பாக நினைக்க முடியுமா? அதுபோலவே ‘பக்தி என்பது சிறுபிள்ளைக்கானது அது ஒரு விளையாட்டுப் போல' என்றால் அதற்கான காரணமும், விளக்கமும் ஆராயவேண்டும், சிந்திக்கவேண்டும் அல்லவா? அதெப்படி இந்தமாதிரி சொல்லலாம் என்று நினைக்கலாமா?

சரி சிறுபிள்ளை விளையாட்டு என்பது என்ன? நீங்கள் அந்த சிறுபிள்ளை விளையாட்டு விளையாடியது இல்லையா? ஞாபகமும் இல்லையா? ஆனால் இப்போதுள்ள சிறுபிள்ளைகளுக்கு படிக்கவும், வீட்டுப்பாடம் செய்யவுமே நேரமில்லை. இன்னும் சொல்லப்போனால், சாப்பிடக் கூட நேரமில்லை என்று வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள் நம் பெற்றோர்களாலும், சமூகத்தாலும், உலகத்தாலும்.

உதாரணமாக பார்க்கலாமே, சிறுபிள்ளைகள், ஆண் பெண் என்ற பேதமற்று பழகி விளையாடுவார்கள். அப்படியான அனுபவம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் வருத்தமே! அந்த விளையாட்டில் அம்மா, அப்பா, பிள்ளை, குடும்பம் என்ற விளையாட்டும் உண்டு. சாமியும், கோவிலும் கூட உண்டு. அப்படி அந்த குடும்பத்தில் அம்மா என்ற குழந்தை சமைக்கும், மற்றவர்கள் உண்டு மகிழ்வார்கள். அதாவது நெருப்பில்லாத சமையல், பொருளில்லாத சாப்பாடு. சிலவேளைகளில் அப்படி எதுவுமே இல்லாமல் நடிப்பார்கள் அவ்வளவுதான். இந்த சாப்பாடால் உங்கள் பசி ஆறுமா? இல்லை ஆனால் இது ஒரு அனுபவ விளையாட்டு. ஒரு பகிர்வு, அன்பு, நட்பு, பழக்கம் என்ற ரீதியில் அமைந்திருக்கும். உண்மையைப் போன்ற பொய். இதைத்தான் இப்போது மெய்நிகர் என்று அழைக்கின்றனர்.

இந்த சிறுபிள்ளை விளையாட்டு போலவேதான் நம்முடைய ‘பக்தி’ இருக்கிறது. அந்த பக்தியில் இருக்கின்ற, சொல்லப்பட்ட, மறைக்கப்பட்ட, மறைந்திருக்கிற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் பக்தியை கடந்து ‘யோகத்திற்கு’ வரவேண்டும். வந்தாகவேண்டும். 

இதைத்தான், இந்த விளக்கத்தைத்தான், கவிதையில் சுருக்கமாக ’பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு’ என்று குறிப்பிடப்படுகிறது. இப்பொழுது உண்மை உங்களுக்கு விளக்கமாவிட்டதா?!

வாழ்க வளமுடன்.

குறிப்பு: இந்தப்பதிவில், பக்தியை குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் எண்ணினால் அது அறியாமையாகும்!