CJ for You: space

space

Showing posts with label space. Show all posts
Showing posts with label space. Show all posts

The truth explanation of the first elements of Akash in the panjaboothas system


பஞ்சபூத தோற்றத்தின் முதல் தோற்றமான ஆகாசம் (Space) என்பது குறித்த உண்மை விளக்கம் என்ன?


ஆகாசம் என்பது பஞ்ச பூத தோற்றத்தில் முதன்மையானது ஆகும். அதுவே தமிழில் விண் என்று சொல்லுகிறோம். இதன் இன்னொரு சிறப்பு பெயர்,  உயிர் ஆகும். ஆனால் அது ஜீவன் என்ற உயிரினங்களில் மட்டுமே இருக்கும் நிலையாகும். இந்த ஆகாசம், பல்லாயிரம் கோடி, பரமாணுக்கள் கூடிய ஒரு தோற்றம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆகாசம் சுழன்றுகொண்டே இருக்கக்கூடியது. நிறை மற்றும் எடை அளவில் மிகவும் லேசானது. கண்களுக்கும், கருவிகளுக்கும் எட்டாதது. ஆனால், மனிதன் தன் மனதால், அறியக்கூடியது. சித்தர்கள், இதை சித்து என்றழைத்தனர்.

இந்த ஆகாசத்தின் சுழற்சியினால்தான், அதன் மையப்பகுதியில் இருந்து, காந்தம் என்பது உருவாகி, விரிவலையாக வெளி வருகிறது. பொதுவாக இந்த ஆகாசத்தை, மூன்றாக பிரித்திருக்கிறார்கள். ஒன்று, மகா காசம். இரண்டு, பூதா காசம். மூன்று, சித்தா காசம்.  இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது மகா காசம். இதுதான் வான் காந்தக்களம் என்பதாகும். அதே ஆகாசத் துகள்கள் பொருட்களில் மடிந்தியங்கும் போது, அதைப் பூதா காசம் என்று சொல்கிறோம். அதுவே உயிர்களின் உடலில் எல்லைகட்டி இயங்கும்போது, அதைச் சித்தா காசம் என்கிறோம். 

நம்முடைய உடல், பஞ்ச பூதத்தின் கூட்டு. பிரிதிவி என்ற கெட்டிப்பொருள், மண் நம்முடைய, உடலாகவும். அப்பு என்ற நீர் என்பது இரத்தமாகவும், தேயு என்ற வெப்பம் என்பது உடல் நடத்தும் சூடாகவும், வாயு என்ற காற்று என்பது பிராண சக்தியாகவும், ஆகாசம் என்ற விண் அல்லது உயிர் எல்லாவற்றையும், இணைத்து இயக்கும் சக்தியாகவும் இருக்கிறது. கூடுதல் சக்தியாக, ஜீவகாந்தம் உருவாகி, மனமாக இருக்கிறது. அந்த மனதைக் கொண்டுதான், யோகத்தின் வழியாக, இந்த உண்மைகளை நாம் அறிந்து கொள்கிறோம். மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தையும் பெறுகிறோம்.

வாழ்க வளமுடன்.

What is the purpose of the Human Birth? Why it is not spread worldwide?


பிறப்பின் நோக்கம் என்று சொல்லப்படுகிறதே? அது உண்மைதானா? அப்படியொன்று இருக்குமானால் அது ஏன் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரவில்லை?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! பிறப்பின் நோக்கம் என்று சொல்லப்படுகிறதே? அது உண்மைதானா? அப்படியொன்று இருக்குமானால் அது ஏன் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரவில்லை?


பதில்: 

மனிதனின் பிறப்பு, பரிணாமம் என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது. அதன் ஆராய்ச்சியில், மனிதனும் கூட விலங்கினங்கள் போலவே வாழ்ந்து வந்திருந்த நிலையை, பல்வேறு அகழ்வாராய்ச்சி மூலமாக அறிந்துகொண்டது. உலகம் முழுவதும் அப்படியான கற்கால மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிரூபணமும் செய்கிறது. இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் ‘நம்முடைய’ வளர்ச்சி நிலையையும், சிந்திக்கும் ஆற்றலையும், இயற்கையை பயன்படுத்திக் கொள்வதையும், சில நேரங்களில் அந்த இயற்கைக்கு மாற்றாகவும் செயல்படுவதையும் ‘ஆறாவது அறிவு’ என்று எடுத்துக்கொள்கிறது இன்றைய நவீன விஞ்ஞானம்.

கனவாக கண்ட காட்சிகளை நிஜமாக்கிடவும் செய்கிறது, என்றாலும் சிலவற்றிற்கு விடை அறியமுடியாமல் தவிக்கிறது. மனிதர்களிடையே கலந்து உலவி வரும் கற்பனை கதைகளை அகற்றிடவும் செய்கிறது. நிலவுக்கும் மனிதர்களை அனுப்பி, நிஜமாக்கியது. அப்படியாக கோள்களை மட்டுமல்ல, சூரியன் முதலான எல்லா நட்சத்திரங்களை எல்லாம் ஆராய்ந்து உண்மை தெரிவிக்கிறது. பூமிக்கு மேலே துணைக்கோள் போலவே, ஒரு விண்வெளி கப்பல் (Internation Space Station) உண்டாக்கி, அதில் மனிதர்குழு பயணித்துக்கொண்டும், ஆராய்ச்சி செய்துகொண்டும் இருக்கிறதையும் நாம் அறிவோம். என்றாலும், மெய்ஞானத்தில் சொல்லப்படுகின்ற உண்மையினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆதாரம் கேட்கிறது.

விஞ்ஞானத்தின் பார்வையில், பூமியில் இருக்கும் நாம், பூமியின் ஈர்ப்பு விசையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறோம். இந்த பூமி, வான்வெளியில் தானும் சுற்றி, சூரியனையும் சுற்றி உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை என்று சொல்லுகிறது. இங்கே சூரியன், பூமி, நிலவு, சூரியக்குடும்ப கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாமே வான்வெளியில் மிதந்துகொண்டிருக்கிறதே? அது எப்படி என்று கேட்டல் அது ஒரு ஆற்றல் சக்தியினாலும், பிரபஞ்ச ஈர்ப்பினாலும் என்று சொல்லுகிறது. Matter and Gravity என்ற இரண்டுக்குமேல் விஞ்ஞானத்தில் பதில் ஏதும் இல்லை.

மெய்ஞானம் இதையெல்லாம் கடந்து, மூலமான ஆற்றல் எது? அது எப்படி இருக்கிறது? இந்த பிரபஞ்ச பரிணாமம் எப்படி உருவானது? அந்த பிரபஞ்சத்தில், உருவான சூரிய குடும்பத்தில் உள்ள, பூமியில் உயிரின பரிணாமம் எப்படி வந்தது? மனிதன் என்பவன் யார்? என்று உண்மை அறிந்த விளக்கம் கண்டது. அதை அறிவதற்கான வழியை யோகம் என்றது. ‘நான் யார்?’ என்ற கேள்வியோடு பயணிக்கச் சொன்னது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தியை வழங்கியது. மெய்ஞானம் கருத்துக்களால் ஆனது, விஞ்ஞானம் கண்களால் பார்க்கும் பொருளால் ஆனது. அதனால் விஞ்ஞானம், மெய்ஞான கருத்துக்களுக்க மதிப்பளிக்கவில்லை. பொய் என்கிறது.

ஆனால், உண்மை மறுப்பதால் மாறுவதில்லையே? விஞ்ஞானத்தின் மறுப்பு பரவலாகப்பட்டதால், மெய்ஞானத்தின் முழுமை விளக்கம், மனிதர்களிடம் பரவினாலும் மக்கள் அதை ஏற்று, உண்மை பெறவில்லை, ஒதுக்கிவிட்டார்கள்.

இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இப்படியாக விளக்குகிறார். ‘ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம் அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும்.  எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை மனதால் உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.  இதுதான் பிறவியின் நோக்கம் (This and this alone is the purpose of life). போனபோக்கிலே பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை பழக்கம் சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்) இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம்.  இவற்றிலிருந்து விளக்கம் பெற்று விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது.  பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடவும் முடியாது’ என்கிறார்.

என்றாலும், மனிதர்களின் வாழ்வில், இயற்கையே வாய்ப்பு தந்து, உண்மை அறிக என்று சொல்லுகிறது. வெகு சிலர் அதை ஏற்று, உண்மை விளக்கம் பெற பயணிக்கிறார்கள். சிலர் கொஞ்ச காலம் கழித்து, நிச்சயமாக வருவார்கள்.

வாழ்க வளமுடன்.

-

What is the meaning of twin seven worlds?


பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும்  ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நாம் வசிக்கும் பூமியில் இருந்து சூரியனை நோக்கிய வரிசையில் பூமி, சந்திரன், சுக்கிரன், புதன், சூரியன், ராகு, கேது ஆகிய ஏழு கோள்களின் வரிசை அமையும். இதை மேலேழுலகம் என்றார்கள் முன்னோர்கள்.

பூமியிலிருந்து மறுபக்கம் நோக்கினால் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்சியூன், புளூட்டோ ஆகிய ஆறு கோள்களும் உள்ளன. அதற்கப்பால் சுத்தவெளிதான் உள்ளது என்றெண்ணிய முன்னோர்கள் ஏழாவதாக உள்ளதைப் பாழ்தளம் (பேச்சு வழக்கில் இன்று பாதாளம்) என்றனர். இதைக் கீழேழுலகம் என்றார்கள், இன்றைய விஞ்ஞானக் கூற்றுப்படியும் இவைதான் காணமுடிகிறதே தவிர வேறு மேலேழு, கீழேலுலகங்கள் இல்லை.

மக்களுக்கு மெய்ப்பொருள் உண்மைகளை சொல்லும் வழியில் சில கதைகளை சொல்லிவைத்தார்கள். அந்த கதைகள் பின்னாளில் பலராலும் கட்டுக்கதைகளாகி, நம்முன்னால் வளர்ந்தும், பெருகியும், உண்மையை மறைத்துக்கொண்டும் நிற்கிறது. எதுவென்றாலும் அதில் இருக்கிற உண்மையை ஆராய்ந்து பார்க்கும் விழிப்புணர்வு அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.

Hope we can understand the secret of the beyond universe by science. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நவீன அறிவியல் வழியாக மனிதனின் மூலத்தை, பிரபஞ்சதிற்கு அப்பால் உள்ள ரகசியத்தை அறிந்துகொள்ள முடியாதா?


பதில்:

நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவரா? நீண்டநாள் வேதாத்திரிய சாதகரா என்று தெரியவில்லை. எனினும் விளக்கமாகவே சொல்லுகிறேன். குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ற பாமர மக்களின் தத்துவஞானி, தன்னுடை மெய்ப்பொருள் விளக்கத்தை விஞ்ஞானப் பார்வையில்தான்தான் விளக்கிச் சொல்லுகிறார். சந்தேகம் இருந்தால், அவரின் மனவளக்கலை நூலின் மூன்று பாகங்களும் உடனடியாக படியுங்கள். வேதாத்திரி மகரிஷி அவர்களின் காணொளி பதிவுகளை கேளுங்கள். உங்களுக்கே அது புரியவரும்!

நீங்கள் சொல்லும் நவீன அறிவியல், இன்னமும் சூரிய மண்டலத்தையே கடக்கவில்லையே?! சரி, அது ஏன் அறிவியல் என்று சொல்லாமல் விஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது என்றால், அணு, அண்டம், விண், விண்வெளி குறித்த ஆராய்ச்சியை விண்ஞானம் என்று தானே சொல்லமுடியும்? ஆனால் ஏதோ அறிவியல் என்று தவறாக தமிழ்ப்படுத்தி விட்டார்கள் என்றே கருத்து நிலவுகிறது! இங்கே நாமும் விஞ்ஞானம் என்றே சொல்லிப்பழகுவோம்.

‘முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்

மொழிவதற்கு வார்த்தையின்றி முட்டிமோதி நின்றனர்

இந்தநாள் விண்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை

இயங்கிடும் மின்சாரம்மூலம் எல்லோர்க்கும் உணர்த்தலாம்’

என்று தன்னுடைய ஞானக்களஞ்சியம் கவி வழியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தத்துவமாக மெய்ப்பொருளை குறிப்பிடும் பொழுது, மொழியால், வார்த்தையால், விளக்கத்தால் அங்கே ஓர் முழுமை கிடைப்பது கடினம். உள்ளதை உள்ளவாறு அறிய நீண்டகாலமும் எடுத்துக்கொள்ளும். அதனால்தான், அந்தக்கால கடினமான யோகத்தின் வழியாக உயிரின் உண்மையையும், இறையுண்மையையும் கண்டறிந்த சித்தர்கள், எளிய மக்களுக்காக பக்தியை உருவாக்கினார்கள். அதாவது வார்த்தையின்றி, விளக்கமின்றி, வணங்கும் கருத்தின் வழியாக நாளடைவில் உண்மை அறியலாம் என்ற வகையில் அதை அமைத்தார்கள். ஆனால் தற்காலத்தில் அதன் நோக்கம் திசைமாறிவிட்டது.

அப்படியானால், விஞ்ஞான விளக்கம் மெய்ப்பொருளை, இறையுண்மையை சொல்லிவிடுமென்றால், யோகமே தேவையில்லையே என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்ப்பீர்கள் தானே? அதற்கும் பதில் உண்டு. ஒரு உண்மையை 1) அறிந்து கொள்ளுதல் 2) புரிந்துகொள்ளுதல் 3) உணர்ந்துகொள்ளுதல் என்ற மூன்று வழியாக நமக்குள் எடுத்துக்கொள்ளலாம். விஞ்ஞானம் இந்த முதல் இரண்டுக்கு மட்டுமே உதவுகிறது. உதவ முடியும். அதுதான் அதனுடைய எல்லை. அதற்குமேல் விஞ்ஞானம் நகராது. அப்படியெல்லாம் இல்லீங்க, அறிவியலால் என்னென்ன உண்மையகள் அப்பட்டமாக தெரியவருகிறது என்று நீங்கள் அறிவீர்களா? என்று நீங்களே சொல்லலாம். அப்படியானால், உங்களால் முடியுமானால் கூட நகர்த்திப்பாருங்கள். (இதை ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், நீங்கள் என்றால் நீங்கள் அல்ல. எதைச் சொன்னாலும் எடக்குமுடக்காக எதிர்கேள்வி கேட்பதற்கு சிலர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்காக!)

இன்னொரு விளக்கத்தையும் சொல்லி முடிக்கிறேன், கன்னியாகுமரி என்ற ஊர், இந்தியாவின் தென் கோடியில், தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கிறது. அந்த ஊரில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை NH52 வழியாக, நம் நாட்டின் தலைநகர் டெல்லி வரை செல்லலாம். அங்கே டெல்லி என்ற ஒரு கைகாட்டி இருப்பதாக வைத்துக்கொண்டால், அது டெல்லி அல்ல. அந்த சாலை வழியாக 2860 கிலோமீட்டர் நகர்ந்தால்தான் டெல்லி என்ற நகரம் கிடைக்கிறது. அதுபோல விஞ்ஞானம் வழியாக மெய்ப்பொருள் நிலையை அறியலாம், புரிந்தும் கொள்ளலாம். ஆனால் தத்துவத்தின் வழியாக மட்டுமே உணரமுடியும்!

கடைசியாக, விஞ்ஞானமில்லா மெய்ஞானம் நொண்டி, மெய்ஞானமில்லா விஞ்ஞானம் குருடு என்ற பழமொழியும் நம்மிடையே உண்டு.

வாழ்க வளமுடன்.

What is your reply someone corner you on your past post?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீங்கள் ஜோதிடர் என்றால் அதை பார்க்க வேண்டியதுதானே? எதற்காக வேதாத்திரியத்தை அதனோடு இணைக்கிறீர்கள்? மகரிஷி ஜாதகம் குறித்து தனியாக சொல்லியிருக்கிறாரா? இல்லையே, அதற்குத்தான் நவக்கிரக தவம் இருக்கிறதே? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்த அன்பருக்கு உங்கள் பதில் என்ன?


பதில்:

ஆம், கடந்த என்னுடை சோதிட ஆராய்ச்சி பதிவில் அப்படியான பின்னூட்ட கேள்வி வந்தது. கேள்வி கேட்ட அந்த அன்பர், பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் என்பதும் அறிந்து கொண்டேன். மேலும் அவர் பக்தி மார்க்கத்தில் செல்லுபவராகவும் இருக்கிறார். ஒரு வேகமான, தன்முனைப்பான நபர் என்பதும் தெரியவருகிறது. சரி இப்பொழுது கேள்விக்கு வரலாம்.

இந்த அன்பர், வேதாத்திரியத்தில் இருக்கிறாரா? வந்து விலகிவிட்டாரா? தொடர்கிறாரா? என்பது தெரியவே இல்லை. இதுவரை நம்முடைய வேதாத்திரிய யோகா காணொளி தளத்தில் என்னென்ன பதிவுகள் கண்டார்? விளங்கிக் கொண்டார்? கருத்து விளக்கம் தருபவர் யார்? அவர் பின்னணி என்ன? இதுவரை அவர் குறித்து புரிந்து கொண்டது என்ன? இந்த சேவை ஏற்கனவே கொடுத்திருக்கிறாரா? எத்தனை ஆண்டுகளாக இந்த காணொளி தளத்தை நடத்திவருகிறார்? என்றெல்லாம் அவர் தெரிந்து கொண்டாரா என்பதும் அறியமுடியவில்லை. இதற்கு முன்பாக அந்த பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் பின்னூட்டம் இட்டதாகவும் அறியமுடியவில்லை.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி, கிரகங்கள் கோள்கள் என்பன குறித்து நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார். அவைகளின் காந்த அலை இயக்கம், கோள்களின் அன்மை, சேய்மை தூரம், அவற்றின் இரசாயன இயக்க, மன இயக்க தூண்டுதல் என்றும் விளக்கி இருக்கிறார். ஜாதகம் எப்படி கணிக்கிறார்கள், அதில் இருக்கிற உண்மை தன்மைகள் குறித்தும் சொல்லியுள்ளார். அதில் போலியான கருத்துக்கள் உள்ளதை சொல்லியும் தெளிவுபடுத்தியுள்ளார். பஞ்சபூத நவக்கிர தவ தத்துவ விளக்கம் கேட்டோர் சில உண்மைகளை அறியமுடியும்.

முக்கியமாக, என் 18 வயதிலேயே வேதாத்திரிய தீட்சை பெற்று 21 வயதில் அருள்நிதி பட்டத்தை வேதாத்திரி மகரிஷியின் கைகளால் பெற்றுக்கொண்டவன். அதற்குப் பிறகு ஆர்வத்தின் வழியாக, ஜோதிடம் பட்டய வகுப்பில் கற்றுத்தேர்ந்தவன். ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை. மேலும் என்னுடைய இந்த சோதிட ஆராய்ச்சி, வருங்காலம் குறித்த தகவல்களை தருவதல்ல. ஏற்கனவே இருக்கிற, கர்மா என்ற வினைப்பதிவுகள் குறித்தான ஒரு ஆய்வு. அதை எப்படி வேதாத்திரிய வழியில், தவமும் தற்சோதனை அகத்தாய்வும் கொண்டு தீர்க்கலாம்? என்ற ஒரு விளக்கமே ஆகும். இதை நான் சும்மா பிறருக்கு தரமுடியுமா? அதற்காக சேவை கட்டணம் சொன்னேன். அதையும் கிண்டலடித்து விட்டார்கள். இவர்கள் விரித்திருக்கின்ற கைகளில் எவ்வளவு சும்மா கொடுத்தாலும் பத்தாது என்று என் நண்பர் சொல்லுவார். அது உண்மையே!

முக்கியமாக, பெண் பெயரில் போலியான கணக்கில் உலவும் ஆண் நபர், அது போன்ற கருத்து பின்னூட்டம் போடுகின்ற பலர், பகல் வானில் நட்சத்திரங்கள் இல்லை என்று வாதிடுகிறார்கள். இருக்கிறது ஐயா, அது சூரியனின் ஒளியில் மறைந்திருக்கிறது என்று நான் சொன்னால், அவர்கள் ‘அப்போ நான் என்ன குருடா? என் கண்ணால் பார்ப்பது பொய்யா? நான் நிஜமாக பார்ப்பதை சொல்லுகிறேனே?! அதை நீ ஏற்காமல், நீ சொன்னால் மட்டும் நான் ஏற்றுக்கொள்வேனா? அவ்வளோ பெரிய முட்டாளா நான்?’ என்று எதிர் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படித்தான் உண்மைகளை புரியவைப்பது?! யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

இந்த கேள்வி பதிலுக்குக் கூட, ‘நான் அப்படியெல்லாம் இல்லை, நீதான் குழப்புகிறாய்’ என்றும் பின்னூட்டம் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்க வளமுடன்.