Home » youtube service » Do people benefit from this service called Vethathiriyam or not? Is there truth in the records? Can't you give it away for free? What is this Vethathiriya journey like?
வழக்கமாக, ஒரு கேள்விக்கு பதில் தருவதற்கு பதிலாக, கருத்து பதில் தருவது இந்தப்பதிவாகும். மேலே நீங்கள் படித்த கருத்து, ஒருவர் தந்ததல்ல. என்னுடைய வேதாத்திரிய காணொளி பதிவுகளை கண்டுவிட்டு, சில அன்பர்கள் தந்த பின்னூட்டத்தின் தொகுப்பு இது. பல்வேறு காலங்களில் இப்படியான பின்னூட்டங்களும், இதைவிட பலமான பின்னூட்டங்களும் வந்தன. இப்போதும் ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் இப்படி வருவதுண்டு. அவைகளை, நான் பொதுவெளிக்கு வரமால் தடுத்து அழித்துவிடுகிறேன். ஆனால் குறிப்பாக எடுத்து வைத்துக் கொள்வேன்.
இத்தகைய நபர்கள், தங்களின் ஈகோ என்ற தன்முனைப்பை, இப்படி பொதுவெளியில் காட்டிக் கொள்கிறார்கள். கூடுதலாக, ஏன் இணைய பிச்சை எடுக்கிறாய்? என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லுவது, எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போலாகும். என்னுடைய கைபேசி எண் பொதுவெளியில் தான் இருக்கிறது. அதோடு, கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக, உலக அளவில், இணைவழியில்தான், என் ஓவிய வேலைகள், கட்டண சேவையாக நடந்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், காசுக்காக, இந்த வேதாத்திரிய சேவை என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கைபேசி எண் கொடுத்தால், நான் பேசி பதில் தரவும் தயார், ஆனால் அவர்கள் அதை தருவதில்லை.
வேதாத்திரியத்தில், என்னுடைய பதினெட்டு வயதில், இணைந்து தீட்சை பெற்றுக்கொண்டு, இன்றுவரை (2024 வரை) கிட்டதட்ட, முப்பத்தியாறு ஆண்டுகள் அனுபவம் எனக்குண்டு. சும்மா வெறுமனே, வேதாத்திரியா காணொளி சேவை ஆரம்பிக்கவில்லை. அப்படி இருக்குமானால், நான் உங்களோடும், வேதாத்திரியாவோடும் ஏழு ஆண்டுகள் பயணத்தை பெற முடிந்திருக்குமா? ஆம். வேதாத்திரியா ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது.
வேதாத்திரி மகரிஷியிடம் ஒரு அன்பர் கேட்டார். ‘சுவாமிஜி, நீங்கள் ஆரம்ப காலத்திலே சொன்னதிற்கும், இப்போது சொல்லுவதற்கும் மாற்றமே இல்லையே. அதே கருத்தையே விளக்கிச் சொல்லுவதாகவே அமைகிறதே எப்படி?’
இதற்கு வேதாத்திரி மகரிஷி ‘நான், எல்லாமே முழுமையாக உணர்ந்த பிறகுதான், எழுதினேன், சொன்னேன். அதனால் அதில் உண்மை மட்டும் தான் இருக்கிறது. அதுதான் இன்னமும் தொடர்கிறது. மற்றவர்கள், தங்கள் ஆரம்ப காலத்தில் ஒருவகையிலும், உண்மை உணர்ந்த பிறகு மற்றொருவகையாகவும் சொல்லுவார்கள். ஆனால் நான், உண்மை உணர்ந்து கொள்ளாமல் எதையுமே பகிரவில்லையே’ என்று சொல்லுகிறார்.
இந்த அடிப்படையில்தான். நானும், 1988ம் ஆண்டு தீட்சை பெற்று, 1991ல் ஆசிரியர் பயிற்சி பெற்று, 1993 வரை, கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக சேவையில் இருந்தும், பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை. 2018ம் ஆண்டு, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொண்ட பிறகுதான், வேதாத்திரியா எனும் காணொளி தளத்தை ஆரம்பித்து, என் பதிவுகளை தந்தேன். எனக்கு இணையத்தில் கிடைத்த ஏமாற்றம், மற்ற அன்பர்களுக்கு கிடைக்கவேண்டாமே? என்ற நோக்கத்தில்தான், வேதாத்திரிய அன்பர்களுக்கு உதவும் வகையில், பதிவுகளை தந்துகொண்டு இருக்கிறேன்.
வேதாத்திரிய தத்துவ உண்மை மாறாமல், அதன் வழியிலே மட்டும் நின்று, வேறெந்த யோக, வேத, புராண, இதிகாச, யோகி, முனிவர், ஞானி, மகான், சாதனையாளர், தத்துவமேதை இப்படி எந்த கருத்துக்களையும் இணைக்காமல், எடுத்துக்காட்டாமல் பதிவுகளை தருவது வழக்கம். அந்த வகையில்தான். இந்த ஏழு ஆண்டு பயணம் தொடர்கிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில்தான், கிட்டதட்ட 38 ஆயிரம் அன்பர்கள், பகிர்வாளர்களாக இருக்கிறார்கள்.
வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை தருவதில், இது பத்தோடு பதினொன்றுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு தோன்றுவதை சொல்லாமல், என் அனுபவத்தை, வேதாத்திரியத்தோடு சொல்லுகிறேன். அதுதான் உண்மை. நான் யார்? என்று எனக்குத் தெரியும். நான் எளியவன். எனக்கென்று பிம்மத்தை கட்டிக்கொண்டிருப்பவன் அல்ல. பதிவுகள் பிதற்றல் என்றால், ஏழு ஆண்டு பயணம் இருக்கமுடியுமா? அன்றாடம் வளரமுடியுமா?
கர்ம வினை குறித்த ஜோதிட ஆய்வு என்பது நன்கொடை சேவை. இதில் என்னுடைய பல்லாண்டுகால அனுபவ அறிவு, நேரம், ஆராய்ச்சி, முடிவு, திருத்தம், அதை ஒழுங்கு செய்து, கட்டுரையாக மாற்றுதல் என்று பல்வேறு செலவுகளும், வேலைகளும் இருக்கின்றன. உங்களுக்கு சும்மா தந்தால், எனக்கு கிடைப்பதெல்லாம் சும்மா இல்லையே?! அதற்கு நீங்கள் மாற்றுவழி செய்வீர்களா? விருப்பம் உள்ளோருக்கான அழைப்பு என்றுதான் தலைப்பு தந்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையா?!
வேதாத்திரிய பதிவுகள், முன்கூட்டியே பார்க்க, உறுப்பினர் சேவை உண்டு, இது யூடுயூப் தரும் சேவைதானே தவிர நான் ஏற்படுத்தவில்லை. என்வழியாக, யூடுயூப் நிறுவனமும் காசு பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
யோகம் இலவசமாக எல்லோருக்கும் போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இந்த கருத்தை, நீங்கள் ஆழியார் சென்று, அங்கே உள்ள தலைமை குழுவிடம் சொல்லுங்களேன். நான் ஒரு சாதாரணன். என்னிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை.
முகத்தை காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமும் முடிவும். ஆனால், என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை தீர்மானிக்க முகம் அவசியம் என்பது எனக்குத்தெரியும். உங்களுக்கு சகிக்கவில்லை என்பதற்காக, நான் முகத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாது. நீங்கள் இனி பார்க்காதீர்கள், என் முகத்தை இணையத்திலும், நேரிலும் கூட. போதுமா?!
இப்படியெல்லாம் பதில் சொல்லி, ஏனெய்யா உன் நேரத்தை வீணாக்குகிறாய்? என்று என் நண்பர் கேட்டார். ஆனால் இந்த பதிலை எல்லாம், அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த தூண்டுதலும், URGEம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இனி அவர்கள் திருப்தி அடையலாம். இனி பின்னூட்டம் தந்தாலும், அதற்கும் பதில்தர நான் தயார்.
வேதாத்திரிய காணொளி சேவையின் பயணம் குறித்த காணொளி, இதோ.
வேதாத்திரியாவும் நீங்களும் உண்மை தத்துவ விளக்கமும் ஏழாமாண்டு பயணமும் Vethathiriya & Your Realization
வாழ்க வளமுடன்.
-