Suddenly, one day, I took initiation and learned penance. But I couldn't keep up. My living situation is not good, there is no peaceful place. Shall we leave it at that? What other way? Give an explanation.
வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒருநாள் திடீரென, தீட்சை எடுத்துக்கொண்டு, தவம் கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை. என்னுடைய வாழ்க்கை சூழ்நிலை சரியில்லை, அமைதியான இடமும் இல்லை. அப்படியே விட்டுவிடலாமா? வேறு என்ன வழி? விளக்கம் தருக.
எல்லோருமே, தீடீரென ஒருநாள் தான், மாற்றத்தையும், உண்மையையும் உணர்ந்து, இனியாவது, வாழ்வில் திருத்தம் பெறவேண்டும் என்று, குருவை நாடி சரணடைகிறோம் என்பதுதான் உண்மை. நாம் தேர்ந்தெடுத்தது எதுவேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் குருவை நாடினால், அவரின் வழிகாட்டுதல் எந்தவகையிலும் நமக்கு துணை நிற்கும் என்பது உறுதி.
நீங்கள் மனவளக்கலை அன்பர் என்றால், உங்களுக்கான அடிப்படை பயிற்சிகள் போதுமானது. அதை உங்கள் வாழ்நாள் முழுவதுமே கடைபிடிக்கும் வகையில்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்திருக்கிறார். அந்த நிலையில் இருந்து நீங்களாகவே, உயர வேண்டும் என்று தீர்மானித்தால், அதற்கு அடுத்த பயிற்சிகளில் நீங்கள் இணைந்து, அகத்தாய்வு, பிரம்மஞானம், அருள்நிதி என்ற வகையில் உயரலாம். அது உங்கள் விருப்பம் மட்டுமே தவிர, கட்டாயம் இல்லை.
பொதுவாகவே, நீங்கள் சொல்லுவது போல, சிலர் தொடர்ந்து செய்வதில்லை. ஏதோ வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்றுதான் போகிறது. காரணம், நீங்கள் சொன்ன அதே வாழ்க்கை சூழ்நிலைதான். இந்த பொருள்முதல்வாத உலகில், எல்லோருக்குமே நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரம் உறங்கி எழுவதற்கு கூட போதாமல் இருக்கிறதுதானே? வேறுவழியும் இல்லை.
ஆனால், இந்த உழைப்புக்கும், ஓட்டத்திற்கும் நம்முடைய உடல், மனம், உயிர் ஈடு கொடுக்க வேண்டுமே? அது முக்கியமாயிற்றே? அதற்கு வழி என்ன? அதற்குத்தான் இருக்கிறது வேதாத்திரிய மனவளக்கலை. அதனால், ஏதேனும் ஒரு வகையில் அரைமணியோ, ஒருமணியோ நேரம் ஒதுக்கி, பயிற்சி மற்றும் தவம் செய்ய முறைப்படுத்திக் கொள்ளவேண்டும். அது மிக மிக அவசியம். எனவே இன்றே திட்டமிடுங்கள்.
இந்த காணொளியும் உங்களுக்கு உதவக்கூடும்.
தீட்சை எடுத்துக்கொண்ட பிறகும் தவம் செய்யாமல் தவிர்க்கலாமா? #vethathiriyayoga #meditation #thavam
வாழ்க வளமுடன்.
-