Home » way of live » Is death the only freedom from pleasure and pain? Or is it possible to be liberated while alive by some other means? Give an explanation.
இந்த கேள்வியின் வழியாக, இரண்டு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதான, புரிதல் விடுதலை. இன்னொன்று முழுமையான விடுதலை. வாழும் பொழுதுதான் விடுதலை என்பது, தற்காலிகமானது. ஆனால், அதை புரிந்துகொண்டால், அடுத்து வரக்கூடிய அல்லது நிகழக்கூடிய இன்ப துன்பங்களை, விழிப்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை இயல்பாக கடந்து போகவும், பழகிவிடலாம். நாம் வருத்தப்படவும் வழியில்லை.
ஆனால், அப்படியில்லாமல், முழுமையான விடுதலை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள், இப்படியான பதில் தருகிறார். ‘இந்த உலகில், தனியாக, நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரும் பிறந்தோம். வாழ்கிறோம். இறப்போம். இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை தினமும், நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் பதிவாகின்றன. அது தொகுப்பாகவும் இருந்து விடுகிறது. உண்மைதானே?’
‘எப்போது நினைத்தாலும், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. கூடுதலும் உண்டு, பிரிதலும் உண்டு. இழப்பும் உண்டு, பெறுவதும் உண்டு. எனினும் அவையெல்லாம், நடந்து முடிந்தவைதானே? அது இப்போது இல்லை. இந்த நொடியில் அது இல்லை. நம் வாழ்க்கையில் நடந்துதான். நாம் அனுபவித்ததுதான். என்றாலும், நம்மைவிட்டு கடந்துவிட்டது தானே? புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், உண்மை இதுதான். உறங்கும் பொழுது, கனவு வருகிறது. ஆனால் அதை கனவு என்று கடந்துவிடுவதில்லை. அதிலும் எல்லா உணர்வும் உண்டு.’
‘நாம் கனவு காணும் போது, அதில் காணும் காட்சிகள், உண்மையாக, நடப்பவையாக தோன்றும். ஆனால் விழித்த பின்பு? மாயை என்று சொல்லும்படி ஒன்றுமே இருக்காது. எந்த ஒரு குறிப்பும், அடையாளமும் இருக்காது. அது போன்றே நம் வாழ்வை, நிரந்தரமானதாக நினைத்து, புலனலவில், அறிவில் கட்டுப்பட்டுச் செயல் புரியும் போதும் பல நிகழ்ச்சிகள் தொடர்பாக, உருவாகின்றன. பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கு பின்னும், உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால், உலக வாழ்க்கையில், நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கள் எல்லாம், என்னவாகும் தெரியுமா?’
‘எல்லாமே, கனவில் நடந்த நிகழ்ச்சிகள் போல, வலுவற்றுப் போகும். எல்லா உயிர்கட்கும், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும், விடுபட, இயற்கை ஒழுங்கமைப்பால் அமைந்துள்ள, ஒரு நல்வரம் தான், இறப்பு. ஆம். மரணம்தான், சீவ இன இன்ப துன்ப, மாகடலைத் தாண்டும், உயர் நிகழ்ச்சி. என்று கவிதையில் எழுதியுள்ளேன்’ என்று வேதாத்திரி மகரிஷி பதில் தருகிறார்.
இந்த உலகில், ஆறாம் அறிவாக உயர்ந்து வாழும் நாம், அறியாமையில் சிக்கிவிடக்கூடாது. எனவே, அந்நிலை வரும்வரை காத்திருக்காமல், விட்டுவிடாமல், உண்மையை, சிந்தித்தும், யூகித்தும் அறிந்து, விழிப்புணர்வு பெறலாம். நமக்கு நிகழும் நிகழ்ச்சிகளை, ஒவ்வொடு கணமும் ஆராய்ந்து, விளங்கிக் கொண்டால், போதுமானதாகும்.
இந்த உண்மையை காணொளி பதிவாகவும் அறிந்து கொள்க!
வாழ்க வளமுடன்.