Devotion has become obsolete. Where will this end up? That's worrying. Do children and young people grow up without devotion? Is this correct? | CJ

Devotion has become obsolete. Where will this end up? That's worrying. Do children and young people grow up without devotion? Is this correct?

Devotion has become obsolete. Where will this end up? That's worrying. Do children and young people grow up without devotion? Is this correct?


வாழ்க வளமுடன் ஐயா,  இன்றைய காலத்தில், பக்தி என்பது காலாவதி ஆகிவிட்டதே? இது எங்கே போய் முடியுமோ? என்று கவலையாக இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும் பக்தி இல்லாமலேயே வளர்கிறார்களே? இது சரிதானா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது? விளக்கம் தருக.


இந்த கேள்வி, எந்த காலகட்டத்திலும் உருவாக் கூடிய கேள்விதான். பொதுவாக மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதுபோல, இவ்வுலகில் மக்களின் வாழும் முறை, அனுபோகம், அனுபவம் எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும். நேற்றையபோல இன்று இருப்பதும் இல்லயே! அப்டேட் என்று சொல்லக்கூடிய, இருக்கும் நிலைக்கு தகுதி உயர்த்திக் கொள்ளுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த மாற்றங்கள் குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை. நாமும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமே என்றாலும் கூட, தனியாக சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. அதற்குப் பதிலாக, நாம், நம்முடைய குடும்பத்தில் மாற்றத்தை செயல்படுத்திக் கொண்டால் போதுமானது. ஆம், நம்மை எப்படி, நம்முடைய பெற்றோர்கள், வழிப்படுத்தினார்களோ, அதுபோல நாம், நம்முடைய வாரீசுகளை, வழிப்படுத்திட வேண்டும். 

இந்த உலகில் பெரும்பான்யோரும், பெரியோர்களும், பெற்றோர்களும். குழந்தைகளை வழிப்படுத்திட தவறுகின்றனர். தனக்குத் தெரிந்ததை, குழந்தைகளும் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றனர். இப்படியான நிலை கூடாது. எந்தெந்த வயதில் எதை அறிந்துகொள்ள வேண்டுமோ. அவ்வப்பொழுது அறிந்துகொண்டால் போதாதா?

பக்தி என்பது உண்மையாகவே காலாவதி ஆகிவிட்டது என்று தோற்றமளிக்கிறது. ஆனால், தன்னாலும், மற்றவர்களாலும் எதுவுமே முடியாது என்ற நிலை வரும்பொழுது, கைகள் தானாக குவிந்து, ‘கடவுளே’ ‘இறைவா’ என்று வணங்குவதை தவிர்க்க முடியாது. இதை நீங்கள் கூட அனுபவத்தில் கண்டிருக்கலாம். ஆனால், நமக்கு உண்மைகளை உதாசீனம் செய்துதானே பழக்கம்?

நாம் ஏதேனும் விளக்கம் சொன்னால், ‘அப்படியானால், கடவுளை, இறைவனை காட்டு’ என்று நம்மிடம் வம்புக்கு வருவார்கள். விஞ்ஞானம் சொல்லுகிற, ஒரு அணுவைக்கூட உன் கண்ணால், பார்க்கமுடியாதே? விஞ்ஞானிகளும், இன்னமும் அணுவை முழுமையாக பிரித்து பார்த்திடவும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? அணுவிலும் அணுவாய், வெட்டவெளியாக இருப்பதை எப்படி காண்பாய்? உண்மையாகவே, அதை நீ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய்! ஆனால், அதை நம்பவும் மறுக்கிறாய்! சரிதானே? 

இந்த நிலையில்தான், நாம், நம்மளவில், திருத்தங்களை ஏற்படுத்திக்கொள்வது சிறப்பு. இதை வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய கவிதையிலும் சொல்லுகிறார்.


உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும் 

   உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக 

பருவமடைந்தோர்கட்கு பதினெட்டாண்டின் மேல் 

   பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும் 

அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார் 

   அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய 

கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான 

   கறை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும். 


குழந்தைகளை நல்வழிபடுத்த, வருங்காலத்தில் சிறப்பாக வாழ, எது நல்லது தரும்? என்பதை புரிந்து கொண்டு சிறக்கவும், முன்னேறவும், பக்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தபட வேண்டும். இங்கே உருவ வழிபாடு கொஞ்சகாலத்திற்கு அவசியம். தானாக சிந்திக்கும் ஆற்றலும், தெளிவைத்தேடி பயணிக்கும் விருப்பமும் வந்துவிட்டால், குறைந்தபட்சமாக பதினெட்டு வயது எனலாம். இந்த வயதில் அவர்களை பக்தி கடந்த யோகத்தில், பயணிக்கச் சொல்லி வழிகாட்டலாம். எனவே, சமுகம் குறித்த அக்கறை இருந்தாலும்கூட, நாமும் அந்த சமூகத்தில் அங்கமாக இருப்பதால், நம்மளவில் மாற்றம் செயல்படுத்தினால் போதுமானது ஆகும். அதுவே மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.

வாழ்க வளமுடன்.

-