I am suffering from debt. But yoga has nothing to do with money, has nothing to do with it, even if it is opposite, can there be any explanation through you? I am asking this question in anticipation. It doesn't matter if some others make fun of me. Tell me the way to get rid of debt.
வாழ்க வளமுடன் ஐயா. கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். ஆனால் யோகத்திற்கும் பணத்திற்கும் தொடர்பில்லை, சம்பந்தமில்லை, எதிர் எதிரானது என்றாலும், உங்கள் வழியாக ஏதேனும் விளக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தே இந்த கேள்வியை கேட்கிறேன். வேறு சிலர் என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. கடன் தொல்லை தீர வழி சொல்லுங்கள்.
உங்கள் கேள்வியில் எந்த தவறுமே இல்லை. யோகத்திற்கு எதிரானது இந்த உலக இன்ப வாழ்வும், அதுதொடர்பான பணமும், பொருளும் என்ற கருத்தை விட்டு விலகுங்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த உலகில் யார் வாழ்ந்தாலும், பணமும், பொருளும் அவசியமானது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்.
ஒரு ஞானியும், மகானும் கூட பணமும் பொருளும் இல்லாமல் வாழமுடியாது. அவர்கள் மக்களை அருள் துறையில் உயர்த்திட பாடுபடுவார்கள். மற்றவர்கள், அதாவது பொருள் துறையில் இருப்பவர்கள், அந்த ஞானிகளை, மகான்களை ஏற்று பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான் உண்மை.
உதாரணமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் காலத்தில், அதற்கு பணம், பொருள் ஈட்ட முடியாது. எனினும் அதன் தேவை இல்லாமல் இருக்கமுடியுமா? அந்த தேவையை, அக்குழந்தையின் பெற்றோரும், சமூகமும் ஏற்கும் அல்லவா? அதுபோலவே, வயதான நம் பெற்றோரை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது. உண்மைதானே?
இந்நிலையில், யோகம் இதற்கெல்லாம் எதிரானது என்று நினைத்துக் கொள்வது, அறியாமை ஆகும். எல்லாவற்றையும் விட்டு விட்டு யோகத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அடுத்த வேளை பசியாற என்ன வழி? யோசித்தீர்களா? அப்படி ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா’என்று யார் உங்களை அழைத்தார்கள்? எனவே, யோகம், உலகில் வாழ்வுக்கு எதிரானது அல்ல. உண்மையாகவே பொருந்தி, உங்கள் உலக வாழ்வை, அனுபவமாக்கி உயர்த்தக்கூடியதே ஆகும்.
கடன் தொல்லை எல்லோருக்கும் உண்டு. அது அளவில் சிறிதாக, பெரிதாக இருக்கலாம் என்பதுதான் உண்மை. பல்வேறு சூழ்நிலைகளில், திட்டமிடாத பல வேலைகள், செயல்கள் வழியாக இழப்பு நேரிடலாம். இயற்கை சீரழிவு வழியாகவும் நாம் பாதிக்கப்படலாம். கோவிட்19 தொற்று போல இருக்கலாம். எனினும் கடனை தீர்த்திட வழிதேடி பயணிக்க வேண்டும். அது எப்படி என்பதை குருமகான் வேதாத்திரி மகரிஷியே விளக்கமும் தருகிறார்.
உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி, தான் வாழும் காலத்தில், பெரும் தொழில் அதிபர். பல்வேறு மக்களுக்கு வேலை கொடுத்து, நிர்வாகம் செய்தவர். அவருக்கும் கடன் தொல்லைகள் இருந்தது. அந்த அனுபவத்தை, தன் வாழ்க்கைப்பயணம் எனும் நூலிலும் தருகிறார். அவருக்கு நேர்ந்திட்ட அந்த சூழ்நிலை, நிச்சயமாக நாம் அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனினும் அதை நான் இங்கே விளக்கவில்லை. அதை அவருடைய நூலில், அவருடைய கருத்தாகவே படித்து அறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கான, தன்னம்பிக்கை கூடும். வேதாத்திரி மகரிஷியின் அனுபவ கருத்தை இதோ, இந்த காணொளி, உங்களுக்கான விளக்கமாக அளிக்கும்.
வாழ்க வளமுடன்.
-