CJ for You: circumstances

circumstances

Showing posts with label circumstances. Show all posts
Showing posts with label circumstances. Show all posts

Does the occasion and the situation automate? If not, do we create ourselves?


சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


பதில்:

நல்ல மிக சிந்தனைக்குரிய கேள்வியை கேட்ட உங்களை பாராட்டுகின்றேன். பொதுவாகவே உலகில் வாழும் மனிதனை ‘சூழ்நிலைக் கைதி’ என்று பொருள்பட சொல்லுவார்கள். நினைத்தை செய்யமுடியாத தன்மையில் சிக்கிக் கொண்டவன் என்ற உண்மையான அர்த்தத்தை அது தருகிறது எனலாம். அப்படியான சூழ்நிலை கைதி என்றால், மனிதானனவனுக்கு, வாழ்கின்ற இந்த உலகில் அவனுக்கு நிகழ்வது, வந்து சேர்வது ஆகிய எல்லாமே தானாகவே வந்து அமைவதுபோன்ற நிலைதான் இருக்கிறது என்ற பொருளையும் உருவாக்கும். இது ஓரளவு உண்மைதான் எனினும் மற்றொரு தன்மையும் உண்டு.

மனித வாழ்வியலில், எந்த ஒரு மனிதரும் தனித்த வாழ்க்கைமுறையை கடைபிடிக்கவழியில்லை. எப்படியாயினும், ஒரு குடும்பத்தின் வழியாக, சமுகத்தின் வழியாக, நாட்டின் வழியாக, உலகின் வழியாகவேதான், அப்போதுள்ள வழக்க பழக்கங்களை ஏற்றுத்தான் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. தனித்து வாழ்ந்தாலும், விலகி வாழ்ந்தாலும் அது சமூக குற்றமாகவும் ஆகிவிடும். அதற்கு அவன் வாழ்கின்ற நாட்டின் சட்டமும், விதிமுறைகளும் இடமளிக்காது. மேலும் தண்டனையும் தந்துவிடும் என்பது உறுதி.

இதனால், மனம்போன போக்கில் என்பதுபோல ஒரு மனிதன் தற்சார்பாக, தன்னியல்பாக வாழமுடியாது. எந்தவகையிலாவது, இன்னொருவரோடு, பிறமனிதர்களோடு, இந்த சமுகத்தோடு இணைந்து வாழ்ந்தே ஆகவேண்டும். ஒருவருக்கொருவர் பகிர்வும் இருந்திடவேண்டும். இந்த வாழ்வியல் அடிப்படையில் கவனித்தால், சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைவதும் உண்டு, தேவையின் காரணமாக, நாமும் உருவாக்கிக் கொள்வதும் உண்டு என்ற ‘இரட்டை நிலைப்பாடு’ இருப்பதை அறியலாம்.

ஐந்தறிவு உயிரினங்கள் வரையிலும், அவை ‘இயற்கைச் சூழலின் கைதி’ என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் ஐந்தறிவு உயிரினங்கள் ‘இயற்கையை மீறுவதில்லை’. இந்த இடத்தில்தான் ஆறாவது அறிவான மனிதன் வித்தியாசப்படுகிறான். தான் இயற்கைக்கும் அப்பாற்பட்டவன் என்று கருதிக்கொண்டு, இருக்கின்ற / அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையை தாண்டி, தானாக ஒன்றை உருவாக்குகிறேன் என்று, தனக்கும், பிறருக்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் சிக்கலை உண்டாக்கிக் கொள்கிறான். மேலும் இந்த இயற்கையையே பாழ்படுத்திவிட்டு அவனும் அதில் சிக்கி அழிந்தும் போகிறான் என்பதில் மாற்றுக்கருத்துண்டா?

எனவே, மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால், இயற்கையின் மிகப்பெரும் ஒத்துழைப்போடு,  தனக்கும் பிறருக்கும்  பயனளிக்கும் வகையிலே, இயற்கையை மீறாத நிலையில், பலனளிக்கும் வழியிலே, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து உருவாக்கிக் கொள்ளலாம். தானாக அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையையும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய திறமை மனிதனுக்குமட்டுமே உண்டு என்றும் சொல்லமுடியும்.

வாழ்க வளமுடன்

-

Why does when practice meditation my body get to tremble and anxiety?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுதெல்லாம், உடல் நடுக்கமும், பதட்டமும் உருவாகிறது. நீண்ட நேரம் உட்காரவும் முடியவில்லை ஏன்?


பதில்:

தவம் இயற்றுவதற்கான பொதுவான நேரம் குறைந்தபட்சமாக 15 நிமிடம் தேவைப்படும். பஞ்சபூத நவக்கிரக தவம் இயற்றினால் மட்டுமே அதிகபட்சமாக 45 நிமிடம் தேவைப்படுகிறது. இத்தகைய தவத்தில் அதற்கான நேரத்தை நாம் மாற்றி அமைக்கலாமா? குறைத்துக்கொள்ளலாமா என்றால் கூடாது என்பதுதான் பதிலாகும். ஏனென்றால், நம்முடைய மனதை அந்தந்த நிலைகளில், ஆதாரங்களில் செலுத்தி கவனத்தில் நிலைப்பதற்கும். மனம் பழகுவதற்கும் தகுந்த நேரம் வழங்கியே ஆகவேண்டும். சும்மா வெறுமனே, ஆக்கினை துரியம் என்று மனதையும் வார்த்தைகளையும் ஓட்டுவதில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உங்களால், தவம் இயற்றும் பொழுது நீண்ட நேரம் உட்காரமுடியவில்லை என்றால், உங்கள் உடல் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம். தவம் இயற்றுவதற்கு முன்பாக, எளியமுறை உடற்பயிற்சியை முழுதுமாக செய்துவிட்டு, பிறகுதான் தவம் என்று மாற்றிக்கொள்க. மேலும், தூக்க கலக்கத்தில் தவம் செய்யக்கூடாது. படுக்கையில் உட்கார்ந்தும் தவம் செய்வதை தவிர்க்கலாம். முக்கியமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு தவத்திற்கு செல்லுதலே நன்று. தவம் இயற்றும் நேரத்திற்கு முன்பாக நேரத்தில், உற்சாகப்படுத்தும், தேனீர், காஃபி, பழரசம் ஆகியன தவிர்த்தாக வேண்டும். அடுத்தடுத்து வரிசையாக வேலைகளை வைத்துக்கொண்டு தவம் செய்ய அமரவேண்டாமே. மேலும் உங்கள் சூழல் தவம் இயற்ற பொருத்தமானதா என்பதை நன்கு சோதனை செய்துகொள்க.

சிலருக்கு தவம் இயற்றுவது புதிய அனுபவமாக இருப்பதால்தான், உடல் நடுக்கமும், பதட்டமும் தோன்றும். இவர்கள் அடிக்கடி அருகில் உள்ள தவமையங்களுக்குச் சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அப்படியாக கூட்டுத்தவத்தில் நன்கு பழகிக்கொண்ட பிறகு, தனியாக தவம் செய்தால் உடல் நடுக்கமும், பதட்டமும் வருவதற்கில்லை. இன்னும் தவம் செய்யலாமே என்ற ஆர்வமும், உற்சாகமும் பிறக்கும் என்பதே உண்மை. உடனடியாக் உங்கள் மாற்றிக்கொள்ள ஆரம்பியுங்கள். நலம் பெறுங்கள், தவத்தில் உயருங்கள்.

வாழ்க வளமுடன்.