CJ for You: simplified

simplified

Showing posts with label simplified. Show all posts
Showing posts with label simplified. Show all posts

What is wave motion? Where does it start? give the true explanation.


வாழ்க வளமுடன் ஐயா. அலை இயக்கம் என்பது என்ன? அது எங்கிருந்து தொடங்குகிறது? உண்மை விளக்கம் தருவீர்களா?

அலை இயக்கம் என்பது, விஞ்ஞானம் சொல்லுகின்ற டார்க் மேட்டர் (Dark Matter)என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. ஆனால் இன்னமும் அந்த விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேட்டர் என்பதையே ஒன்றுமில்லாதது என்கிறபொழுது, அதனையும் கடந்த டார்க் மேட்டரை என்ன சொல்லும்? இப்படித்தான் சொல்லுகிறது. ‘ hypothetical form of matter that is believed to make up 90 percent of the universe; it is invisible (does not absorb or emit light) and does not collide with atomic particles but exerts gravitational force. 

    இதன் விளக்கம், ‘பிரபஞ்சத்தின் 90 சதவிகிதம் என்று நம்பப்படும் பொருளின் கற்பனையான, அனுமானமாக வடிவம்தான் இந்த கருமைப் பொருள். இது பார்வைக்கு அகப்படுவதில்லை. ஒளியை ஏற்காது, பிரதிபலிக்காது. எந்த அணுக்களோடும், அணுக்கூட்டங்களோடும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஈர்ப்பு ஆற்றலை செலுத்துகிறது’. 

இந்த கருமைப்பொருள்தான், அலை இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அது அணுக்களின் சுழற்சியில் இருந்துதான் வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தில் எங்கோ தொடங்கும் அலை, இங்கே வரலாம். இங்கே உருவாகும் அலை, அங்கேயும் போகலாம். இனி, அலை இயக்கம் ( Wave Theory) குறித்த உண்மைகளை காணலாம்.  

எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல் அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே அலை என்பது தோன்றிக் கொண்டேயிருக்கிறது.இந்த அலை தன்னைச் சுற்றியுள்ள பொருள்மீது தாக்குமல்லவா? அந்தத் தாக்குதல்தான் மோதுதல் (Clash) என்று சொல்லலாம். 

அப்படி மோதும்பொழுது ஒவ்வொரு பொருளிடத்தும் அதே ஆற்றல் உள்ளதால், அதிலிருந்துவரக்கூடிய அலையோடு, இந்த அலையும் மோதும்பொழுது பிரதிபலிக்கிறது (Reflection). அதனால் அது திரும்பிவருகிறது. 

ஒரு பொருளிலிருந்து போன அலை முழுவதும் திரும்புவதில்லை. அங்கு மோதுதல் ஏற்படுவதால் சிதறுதல் (Refraction) உண்டாகிறது. 

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் அலைகளின் கூட்டு இயக்கமாகவே இருப்பதால், அதோடு மற்றொரு அலை மோதும்பொழுது ஊடுருவியும் (Penetration) போகிறது. 

அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக் கொண்டேயும் (Interaction) இருக்கும். 

ஆகவே எந்தப் பொருள்களிடத்தும் தோன்றக்கூடிய அலைக்கு மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், அவையிடையே முன்பின் ஓடுதல் என்ற ஐந்து வகையான இயக்கங்கள் உண்டு.

நாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம். எல்லோரிடத்திலும் ஒரு அலையியக்கம் இருக்கிறது. அந்த அலை மற்றவரிடத்தில் மோதும். ஓரளவு சிதறும். ஓரளவு ஊடுருவிப் போகும். பிறகு இரண்டு பேர்களுக்கிடையே ஓடிக்கொண்டுமிருக்கும். இதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

அலை இயக்கத்தின் மூலமாக எந்தப் பொருளிலும் ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக அது கருமையத்தில் (Genetic Center) ஒரு பதிவு ஏற்படும். 

அந்த பதிவு அதன் தன்மையாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் அதே பதிவு பிரதிபலித்துக் கொண்ட இருக்கும். நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாகத் தூண்டும். இவ்வாறு எந்த செயல் செய்கின்றோமோ அந்தச் செயல் வினைப்பதிவாக (Imprints) மாறி நாம் மீண்டும் மீண்டும் அதையே செய்து அதே துன்பத்தையோ, இன்பத்தையோ அடைகிறோம். 

ஆகவே நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில், அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இது தான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு. 

இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் (Wave Theory) என்ற ஒரு நியதியை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடல் அலைபோல ஒயாது, எழும்பி, இறங்கி முடிந்து, மீண்டும் வந்து கொண்டே இருக்கக்கூடிய, இந்த அலை இயக்கம் வழியாக, மெய்ப்பொருள் உண்மையை, நாம் மிக எளிதில் புரிந்து கொள்ள வழி இருக்கிறது. அந்த வழி, மனவளக்கலை மன்றத்தில் தொடங்குகிறது. விருப்பமுள்ளோர் அந்த வழியாக, ஆன்மீக பயணத்தை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

கட்டுரையின் மூல வடிவம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

-

How the meditation is helping to our mind in yoga?


தியானம் என்ற அகத்தவம் எப்படி நம்முடைய மனதுக்கு துணை செய்து உதவுகிறது என்பதை விளக்கமுடியுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் எப்படி நம்முடைய மனதுக்கு துணை செய்து உதவுகிறது என்பதை விளக்கமுடியுமா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

மனம் உள் ஒடுங்கவும் பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது.  மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று.  மனதின் புலன் இயக்க வேகத்தை எல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்றுபடுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது. 

எல்லைக்கு உட்படாத மனம் ஒன்றில்தான் எல்லையற்ற சுத்தவெளியை  பரம்பொருளை பரவெளியை உணர முடியும்.  அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் உள்ளதே அகத்தவம் (Simplified Kundalini Yoga - SKY) எனும் குண்டலினி யோகமாகும். 

அகத்தவப் பயிற்சினால் தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும்.   அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்க முறையான உளப்பயிற்சி (Systematic Psychic Practice) அவசியமாகிறது.  ஆன்மாவிற்கு மேல்நோக்கு வேகமூட்டும் தியானப்  பயிற்சியை குருவின் மூலம் தான் பெற வேண்டும்.  

அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால் ரங்க ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல இந்த பிரபஞ்சத்தில்  இந்த உலகில்  நடப்பில் உள்ள உண்மை நிலைமைகளை மனதால் உணர முடியாது. 

எனவே மனதினுடைய (Mind) இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும்.  இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னதமான உளப்பயிற்சியே குண்டலினியோகமாகும்". 

வாழ்க வளமுடன்.

-

What is the easy way to understand the Vethathiriyam, if we feel as difficult?


வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


பதில்:

பொதுவாகவே கல்வி என்ற நிலையில் உள்ள எந்த உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கும். அவற்றை அனுபவமாக்கிக் கொள்ளும் பொழுது அவை முழுமையாக புரிந்துவிடும் என்பதே உண்மையாகும். எந்த ஒரு நபரை எடுத்துக் கொண்டாலும். அவரின் வயது, அனுபவம், கல்வி அறிவு, ஏற்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவை அளவில் மாற்றம் பெற்றே இருக்கும். ஒருவருக்கு எளிமையாக இருப்பது, இன்னொருவருக்கு கடினமாக இருக்கும். இதனோடு ஆராய்ச்சிப் பார்வை, ஒத்துப்பார்த்தல், அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற தன்மைகளும் மாறுதலாகவே இருக்கும். எழும் சந்தேகங்களும், அதற்குறிய கேள்விகளும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.

        இதற்கெல்லாம் காரணம், அவர்களின் வயதும், அவர்களின் வாழ்க்கை சூழலும், ஏற்புத்திறனும், வாழ்வில் அவர்கள் கண்ட குடும்ப, சமூக, உலக வழக்க பழக்கங்களுமே ஆகும். எந்த வகையிலும் யாரையும் இங்கே குறை சொல்லுவதற்கு வாய்ப்பில்லை. பொதுவாகவே, என்னுடைய எல்லாவகையான பதிவுகளிலும், ‘நான் சொல்லுவது உங்களுக்கு புரிகிறதா?’ என்று முட்டாள்தனமாக கேட்பதே இல்லை. அது கேட்போரை கீழாக நினைத்து கேட்கக்கூடிய மனோநிலை என்பதை சில ‘விற்பனர்கள்’ புரிந்து கொள்வதில்லை. தன்னைமட்டுமே மேலாக நினைத்து, தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு நிலையில் இருப்பதுண்டு. ஒருவேளை ‘எனக்கு சுத்தமாக புரியவில்லை ஐயா’ என்று ஒருவர் எழுந்து கேட்டால், அந்த விற்பனரின் நிலை என்ன? மறுபடி முதலில் இருந்து பாடம் நடத்துவாரா? தனியாக கவனம் வைத்து பாடம் தருவாரா?

        வேதாத்திரியம் மிக எளிமையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வேதாத்திரியத்தின் உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமானதும் அல்ல. வேதாத்திரியத்தை தந்த, வேதாத்திரி மகரிஷி ‘பாமர மக்களின் தத்துவஞானி’ என்றுதான் போற்றப்படுகிறார். அவரின் எழுத்துக்களும், கட்டுரைகளும், கவிகளும், பேச்சுக்களுமே சான்றாக இருக்கின்றது. அதை எடுத்துச் சொல்லுபவரும் அத்தகைய உண்மையை, தானாக புரிந்து கொண்ட பிறகு சொன்னால்தான், அது மற்றவர்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்கும். தனக்கே புரியாத ஒன்றை, பிறருக்கு பாடமாக, கல்வியாக தரமுடியுமா? எனவே இங்கே, ஒரு குறிப்பிட்ட உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புதிய ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றால், கற்றுக்கொடுப்பவர் நன்கு புரிந்து கொண்ட தன்மையில், அனுபவமானவராக இருக்கவேண்டியதும் அவசியம்.

        உங்களைப்போல, ஒரு தனிமனிதராகவே ஒவ்வொருவரும் இருப்பார். அவரவர்களுக்கு ஏற்றவகையில், தனித்தனி கவனம் கொண்டு உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும்  தரமுடியும் என்பதும் உண்மையே. பொதுவெளியிலும், கல்வி, பாட மையங்களிலும் அதை தரும் பொழுது, ஒரு பொதுவான நிலையில்தான் வழங்கமுடியும். அது எல்லோருடைய அறிவிற்கும் போய்ச்சேரும்படி ‘எளிமையாக’ இருக்கவேண்டியதும் அவசியமாகும். அனுபவமிக்க ஆசிரியர்கள் அதை கடைபிடிக்கிறார்கள் என்பதும் உண்மையே. படித்ததை பேசுவதற்கும், உணர்ந்ததை பேசுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே?

        உங்களுக்கு இங்கே வழங்கப்படும் வழி, தீர்வு என்ன? என்றால் வேதாத்திரிய தத்துவத்தை மட்டுமல்ல, வேறு எந்த தத்துவமாக இருந்தாலும், அந்த வகுப்பில் உங்களுக்கு புரியவேண்டும் என்று நினைக்காதீர்கள். கல்வி பாடங்களை, விளக்கங்களை கேட்கும்பொழுது, குறிப்பு எடுத்துக்கொள்வது மிகச்சிறந்த வழி. உங்கள் சிறப்பான மூளையையும் காதுகளையும் மட்டுமே நம்புவது தவறு. சிந்தனைக் கவனம் சிதறிவிட்டால், அந்த விளக்கங்கள் உங்களின் இன்னொரு காதுவழியாக வெளியே ஓடுவிடும். அன்றைய பாடங்களை அன்றைக்கே, தனியாக அமர்ந்து, உங்கள் குறிப்புக்களோடு ஞாபகப்படுத்தி, ஆராய்ந்து பாருங்கள், எளிதாக புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

        கேள்வி நேரத்திலேயே, உங்கள் குறிப்பின் வழியாக, உங்களுக்கு புரிந்து கொள்ள கடினமானதை, சந்தேகத்தை கேள்வியாக கேட்டு பதில் பெற மறவாதீர்கள். ‘உங்களுக்கு புரிகிறதா?’ என்று ஆசிரியர் கேட்டால் ‘எனக்கு புரியவில்லை ஐயா’என்று உடனடியாக சொல்லிவிடுங்கள். பிறகு அந்த ஆசிரியரே உங்களுக்கு ஏற்றபடியாக தன்னை மாற்றுக்கொள்வார் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்

-

Why the changes are low level within people based on yoga even it is simplified?


உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


பதில்:

யோகம் என்பது எளிமையாக்கப்பட்டு, மனிதர்களின் பிறவி நோக்கத்தை அறியவும், பிறவிக்கடன் தீர்த்திடவும் வழிகளாக, பயிற்சிகளாக பல கிட்டதட்ட 100 ஆண்டுகளாக உலகில் எத்தனையோ ஞானிகளால், மகான்களால், யோகிகளால், உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாகவும் இருந்தன எனினும் கடின முறைகளும், துறவு கட்டாயம் என்ற நிலையும்கூட மக்கள் ஏற்றுக்கொள்ள தயக்கத்தோடு இருந்தனர். என்றாலும் அதையும் விரும்பி ஏற்று கற்றுக்கொண்டு, தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்த நினைத்த அத்தகைய உயர்ந்த நோக்கமும் எண்ணமுமே, பிற்காலங்களில் யோகத்தை எளிமையாக்கிடவும் வகை செய்தது எனலாம்.

அந்தக்கால கடின முறைகளும், கட்டாய துறவும் இப்பொழுது இல்லை. பயிற்சியில் எளியமுறையும், வாழும் வாழ்க்கையில் அளவும் முறையும் கொண்டு யோகத்தின் வழியாக உயரலாம். தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் அறியலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவே இன்றளவும் தொடர்கிறது.

எத்தனையோ யோக பயிற்சி மையங்களும் உலகெங்கிலும் உருவாகிவிட்டன. நோக்கம் ஒன்றாகக் கொண்டு பலவாறாக பயணிப்பது மக்களுக்கும் உதவும். அந்தவகையில்தான் மொழி, இனம், நாடு என்ற பிரிவுகள் இன்றி அனைவரும் யோகத்தில் பயணிக்கின்றனர் என்பதுதான் உண்மை. எனினும் சில குறுமதியர்கள், தங்களின் சுய லாபத்திற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பிறரிடமிருந்து பொருள் பறிக்கவும் திட்டமிட்டு, மக்களுக்கு  தவறான பாதையையும், அச்சுறுத்தலையும் பரப்புகின்றனர். மிகையாகச் சொல்லி அதை மனிதர்களால் முடியாது என்றும் சொல்லுவார்கள். மனிதர்களாகிய நமக்குத் தேவையும் இல்லை என்றும் சொல்லுவார்கள். இப்படியான மனிதர்களுக்கும் பெரும்கூட்டம் பின்னால் செல்லுகிறது என்பதுதான் நாம் நேரில் பார்க்கின்ற உண்மையாகும்.

தகவல் தொடர்பு உலகம் முழ்வதும் எளிமையாகிவிட்ட இந்த நிலையிலும் கூட, இப்படியான உண்மைக்குப் புறம்பான மாற்றுக்கருத்துக்கள் வலிமையாக பரவி வருவது கண்கூடு. ஆனால் இதை உடனடியாக மாற்றிவிட முடியுமா? முடியாதுதான். வேகமாக நகரும் ஒரு விசையை, பொருளை, தடுப்பதில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுவது இயற்கை விதி. ஆனால் அதுவாகவே ஒர்நாளில் ஓரளவில் நின்றுவிடும் அல்லவா? அதுவரை காத்திருந்து பிறகு அதை மாற்றி அமைக்க நாம் முயற்சிக்கலாம்.

பொதுவாகவே யோகம் குறித்து எது பேசினாலும் ஏற்கும் மனநிலை, எந்த மனிதருக்கும் இல்லை என்பதுதான் இப்போதுள்ள தலைமுறைக்கும், அடுத்த இரண்டு தலைமுறையினருக்கும் இருக்கிறது. தவறில்லை. எல்லா மனிதர்களுமே உலகில் இன்பத்தை நுகர்ந்து அனுபவித்து வாழவே பிறந்தோம் என்ற உண்மையில், அவர்கள் பயணிக்கிறார்கள்.  யோகத்தின் வழியாக, இப்படியாகத்தான் அந்த இன்பத்தை நுகர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று மற்றோர் பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் எங்கே பிரச்சனை வருகிறதோ? தடை வருகிறதோ? குழப்பம் வருகிறதோ? அப்போது தானாகவே மாற்றம் நிகழும் என்பதே உண்மை. இயல்பான பாடமும், திருத்தமும் மனித சிந்தனையில் அமைந்துள்ளது. இயற்கையானது நமக்கு வழிகாட்டியது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டும் என்பதே உண்மையாகும். காத்திருக்கலாம் தவறில்லை.

வாழ்க வளமுடன்

-

Why most people says as a secret in yoga, almost it is simplified?


யோகம் எளிமையாக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவது ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகம் எளிமையாக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவது ஏன்?


பதில்:

பெரும்பாலன ஊடகவழியிலான தகவல்கள் இப்பொழுது இல்லை. உண்மையை பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கும் பத்திரிக்கை வழியிலான செய்திகளும், ஒரு கூட்டம் தனியாக உட்கார்ந்து திட்டமிட்டு பரப்பும் செய்திகளும், தலைப்புச் செய்திகளும், சுடச்சுட செய்திகளும் இப்போது இல்லை. இப்போது இல்லை என்றால், உங்களுக்கு படிக்கக் கிடைப்பதில்லை அவ்வளவுதான். ஆனால் காலம் மாறிவிட்டதால், கையடக்க மொபைல் ஃபோனில் காட்சியாக வருமளவிற்கு முன்னேறிவிட்டது. உலகில் விஞ்ஞானம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது ஆனால் மனிதன் இன்னமும் பழமையான மனநிலையில்தான் இருக்கிறான். மனவளம் இன்றி தவிக்கிறான். என்றாலும்கூட சாராசரி மனிதனைவிட சிலர் இன்னமும், ஓஷோ ரஜனீஸ் சொல்லுவது போல ‘பழைய கில்லாடிகளாக’ இருக்கிறார்கள். இந்த கில்லாடிகள், மனிதர்களின் மனங்களையும், மனிதர்களையும் பந்தாடுகிறார்கள். அந்த விளையாட்டில் யார்வேண்டுமானலும் சிக்கிவிடக்கூடும். நீங்களும் நானும் விதிவிலக்கல்ல.

ஒரு செய்தியை, விஷயத்தை, உண்மை சொல்லுவதற்கு, மிகையான அலங்காரம் தேவைப்படும் காலம் இது. ஏனென்றால், ஒரு செல்லும் வழியில் பல பொருட்கள், அவைகளை, உங்கள் காலை பற்றி இழுக்கும் பொறிகள் என்று கூட சொல்லலாம். அது தன்னுடைய பொறியாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். தான் சொல்லும் விஷயத்தை, செய்தியை மட்டுமே மற்றவர்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். இது ஒருவகையான தன்முனைப்பின் நிலை என்றும் சொல்லமுடியும். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், ‘அப்படியெல்லாம் இல்லை, இந்த உண்மையை மக்கள் தவறவிடக்கூடாது’ என்றுதான் நாங்கள் விரும்புகிறேன் என்று பதில் தருவார்கள்.

நாம் வழங்குகின்ற வேதாத்திரிய சேனலில் கூட, ரகசியம் என்ற தலைப்பில் சில பதிவுகள் ‘மிக சமீபமாக’ தரப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த விருப்பமில்லை என்றாலும், ஒரு முயற்சியாக, சோதனையாக செய்யப்பட்டது.  ஆனால் நடந்தது என்ன தெரியுமா? உண்மையாகவே, ரகசியம் என்று தலைப்பிட்ட பதிவுகள் அதிக பார்வையை பெற்றன.

இதற்கு நாம் என்ன பதிலை தரமுடியும்? ரகசியம் என்ற வார்த்தையும், அதில் மறைந்திருக்கிற ஏதோ ஒன்றையும் மக்கள் விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகிவிடுகிறது அல்லவா? மக்களின் மனநிலை இப்படியாக மாறிவிட்டது. அதனால், யார்வேண்டுமானாலும், அவர்கள் யோகத்தில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் ரகசியம் என்ற வார்த்தையை இணைத்து சொல்லுகிறார்கள். இவர்கள் மட்டுமா? அரைகுறையாக யோகம் குறித்து தெரிந்துகொண்டவரும், யாரோ சொல்லி புரிந்துகொண்டவரும், பழைமையான நூல்வழியாக படித்து அறிந்தவரும் கூட, யோகத்தில், ரகசியம், அப்படி, இப்படி என்று தலைப்பிட்டு, மக்களை கவர்வதை காணமுடிகிறது.

உதாரணமாக ஒன்றை சொல்லுவார்கள். மூடிய கைக்குள் என்ன இருக்கிறது? என்ற நிலைவரைதான் அது ரகசியம். அது உள்ளங்கை நெல்லிக்கனி என்று சொல்லிவிட்டால், ‘அவ்வளவுதானா?’என்று எல்லோரும் ஓடிப்போய் விடுவார்கள்.

எனவே, மாறவேண்டியது, மாற்றிக்கொள்ள வேண்டியது மக்களும், அவர்களின் மனநிலையும்தான். அதைவிடுத்து, ரகசியம், அப்படி, இப்படி என்று சொல்லி அழைப்பவர்களை குறைசொல்லி ஒரு பலனும் இல்லை. அவர்கள் போய்விட்டால், இன்னொரு கூட்டம் வந்து அழைக்கும். இது உலகில் பலகாலமாக இருந்துவருகின்றது. அழைப்பையும், செய்தியையும் ஆராய்ந்து பார்க்கின்ற பழக்கம், நமக்குத்தான் வரவேண்டும். அதுவரை இப்படி போலியான அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

நீங்கள் சொன்னதுபோலவே, யோகம் எளிமையாக்கப்பட்டு ‘வேதாத்திரியமாக’ வளர்ந்து நிற்கிறது. மிக எளிதாக பருவ வயதில் இருந்த கற்றுத்தேர்ந்தால், பிறவியின் நோக்கமும், நான் யார்? என்ற உண்மையும், தன்னையறிதலும், மெய்ப்பொருள் விளக்கமும் பெற்று, உலகில் நிறைவாக வாழலாம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, தனிமனித சுதந்திரமும், ஓர் உலக கூட்டாட்சியும், உலக சமாதானமும் கிடைக்க அதுவே சிறந்த வழியும் ஆகும். ஆனால் இத்தகைய தெளிவுக்குப் பிறகும், எண்ணற்ற கட்டுக்கதைகளை கோர்த்துவிட்டு, யோகத்தையும், அந்த யோகத்தில் இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவதும் வேதனைக்குறியதுதான். 

வாழ்க வளமுடன்

-

Someone told to me, the vasiyoga is the best way. Please explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று என்னிடம் சொல்லுகின்றனர். அது சரிதானா?


பதில்:

சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று அவர்கள் சொல்லுவதில் தவறில்லை. ஆனால், இப்போது அதை கற்றுக்கொள்வது மிக கடினமாயிற்றே. ஏற்கனவே வாசியோகத்தின் வழியாக, குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து மேலேற்றி, ஆக்கினைக்கு கொண்டுவந்து நிறுத்திப் பழகியவர் மட்டுமே, அதை பிறருக்கு சொல்லமுடியும். இந்தப்பயிற்சியில் ஏகப்பட்ட தடைகள் வரலாம். உடல் பிரச்சனைகளும், மன பிரச்சனைகளும் வரக்கூடும். எல்லோருக்குமே முதல் முயற்சியிலேயே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி எழுந்துவிடுவதும் இல்லையே. முதலில் இதற்கான நுட்பத்தை சொற்களால் விளங்கிக் கொள்வதே கடினம்.

சரி, இன்னமும் இந்த வாசியோகம் முறையில்தான், குண்டலினி சக்தியை ஏற்றிக்கொள்ள வேண்டுமா? வேறு ஏதேனும் வழிகளே இல்லையா? கிடையாதா? கிடைத்தாலும் பயன்படுத்தக்கூடாதா? அப்படி பயன்படுத்தினால் என்னதான் சிக்கல்?

சித்தர்கள் காலத்தில், கிட்டதட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட அதே வாசியோகம் தான் இன்னமும் இருக்கிறது என்று எப்படி நம்புவீர்கள்? அதுப்போலவே அந்தக்கால கடின சாதனைகளை இப்போதும் நாம் செய்யத்தான் முடியுமா? அதற்கான உடல் வலுவும், மன வலுவும் கூட இருக்கிறதா? 

ஆனால், இயற்கையும், அந்த தெய்வீகமுமே, சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, ஏற்கனவே தன்னிலை அறிந்து, மெய்ப்பொருள் அறிந்த ஒருவர், தன்னுடைய தவ ஆற்றல் சக்தியினாலேயே, மற்றறொருவருடைய குண்டலினி சக்தியை தொட்டு எழுப்பி, உடனடியாக, ஆக்கினை சக்கரத்திற்கு கொண்டுவந்துவிட முடியும் என்ற விளக்கம் வந்துவிட்டதே?! குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் ஆண்டுக்காலத்திற்கு முன்னேலாயே நடைமுறையில் இருந்திருக்கிறது.  ஆனால் பரவலாக்கப்படவில்லை. ஆனால், வேதாத்திரி மகரிசி தானும் பெற்று, விளங்கிக் கொண்டு, தன்னுடைய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ வழியான ‘மனவளக்கலை’ மூலம் உலகில் உள்ள எல்லோருக்கும் கற்றுத்தந்து இன்னமும், அந்த தொட்டு எழுப்பி உயர்த்தும் முறை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால், இன்னமும் பழமையே சிறப்பு என்று தன்னை வருத்திக்கொள்வதில் பலன் என்ன? காலம்தான் வீணாகும் அல்லவா? ஆனால் உங்கள் விருப்பம்போல தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. அதையாரும் தடுப்பதற்கில்லை!

வாழ்க வளமுடன்.

-

Why does when practice meditation my body get to tremble and anxiety?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுதெல்லாம், உடல் நடுக்கமும், பதட்டமும் உருவாகிறது. நீண்ட நேரம் உட்காரவும் முடியவில்லை ஏன்?


பதில்:

தவம் இயற்றுவதற்கான பொதுவான நேரம் குறைந்தபட்சமாக 15 நிமிடம் தேவைப்படும். பஞ்சபூத நவக்கிரக தவம் இயற்றினால் மட்டுமே அதிகபட்சமாக 45 நிமிடம் தேவைப்படுகிறது. இத்தகைய தவத்தில் அதற்கான நேரத்தை நாம் மாற்றி அமைக்கலாமா? குறைத்துக்கொள்ளலாமா என்றால் கூடாது என்பதுதான் பதிலாகும். ஏனென்றால், நம்முடைய மனதை அந்தந்த நிலைகளில், ஆதாரங்களில் செலுத்தி கவனத்தில் நிலைப்பதற்கும். மனம் பழகுவதற்கும் தகுந்த நேரம் வழங்கியே ஆகவேண்டும். சும்மா வெறுமனே, ஆக்கினை துரியம் என்று மனதையும் வார்த்தைகளையும் ஓட்டுவதில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உங்களால், தவம் இயற்றும் பொழுது நீண்ட நேரம் உட்காரமுடியவில்லை என்றால், உங்கள் உடல் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம். தவம் இயற்றுவதற்கு முன்பாக, எளியமுறை உடற்பயிற்சியை முழுதுமாக செய்துவிட்டு, பிறகுதான் தவம் என்று மாற்றிக்கொள்க. மேலும், தூக்க கலக்கத்தில் தவம் செய்யக்கூடாது. படுக்கையில் உட்கார்ந்தும் தவம் செய்வதை தவிர்க்கலாம். முக்கியமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு தவத்திற்கு செல்லுதலே நன்று. தவம் இயற்றும் நேரத்திற்கு முன்பாக நேரத்தில், உற்சாகப்படுத்தும், தேனீர், காஃபி, பழரசம் ஆகியன தவிர்த்தாக வேண்டும். அடுத்தடுத்து வரிசையாக வேலைகளை வைத்துக்கொண்டு தவம் செய்ய அமரவேண்டாமே. மேலும் உங்கள் சூழல் தவம் இயற்ற பொருத்தமானதா என்பதை நன்கு சோதனை செய்துகொள்க.

சிலருக்கு தவம் இயற்றுவது புதிய அனுபவமாக இருப்பதால்தான், உடல் நடுக்கமும், பதட்டமும் தோன்றும். இவர்கள் அடிக்கடி அருகில் உள்ள தவமையங்களுக்குச் சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அப்படியாக கூட்டுத்தவத்தில் நன்கு பழகிக்கொண்ட பிறகு, தனியாக தவம் செய்தால் உடல் நடுக்கமும், பதட்டமும் வருவதற்கில்லை. இன்னும் தவம் செய்யலாமே என்ற ஆர்வமும், உற்சாகமும் பிறக்கும் என்பதே உண்மை. உடனடியாக் உங்கள் மாற்றிக்கொள்ள ஆரம்பியுங்கள். நலம் பெறுங்கள், தவத்தில் உயருங்கள்.

வாழ்க வளமுடன்.

Family lifestyle is obstructs to the yoga?


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்ப வாழ்க்கையில் இருப்பதுதான் யோகத்திற்கு தடை என்று சொல்லுகிறார்களே, அது உண்மைதானா?


பதில்:

இல்லவே இல்லை. அப்படி சொல்லப்பட்டது ஒருகாலம். அது எப்போதோ கடந்துபோய்விட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மாற்றம் வேண்டும் என்று, நம் வாழ்க்கை மிக உயர்ந்த நிலையில், உலகமே சுருங்கிய அளவிற்கு மாற்றத்தை பெற்று வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறோம். இது இன்னமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது அல்லவா? அப்படியான மாற்றம், யோகத்திற்கு மட்டும் வராது என்று நினைக்கிறீர்களா? அல்லது வந்துவிடாது என்று முடிவு செய்கிறீர்களா?

யோகத்திற்கும் மாற்றம் வந்துவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் பழங்கால, அந்தக்கால நிலைகளையே மனதில் பதித்து, அதையே பேசிப்பேசி மயக்கத்தில் இருக்கிறார்கள். முதலில் யோகம் என்றால் என்ன? இதற்கு உடனே நமக்கு கிடைக்கும் பொதுவான பதில் என்ன தெரியுமா? இறைவனை அறியும் அடையும் வழி, இதற்கு துறவு ஏற்கொள்ளவேண்டும். வீட்டை, குடும்பத்தை விட்டு விலகி, காட்டில் சென்று தவம் செய்ய வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு, குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லுவார்கள்.

ஆனால், யோகம் என்றால் தன்னை அறிந்து வாழும் நெறி ஆகும். அந்த தன்னை அறிதலில், இறை எனும் மாபெரும் உணர்வையும் புரிந்து கொள்கிறோம். எப்படி நமக்குள்ளாக நிறைந்து இருக்கிறது என்பதையும், இயற்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் நம் கடமை என்ன என்று புரிந்து, எது உண்மையான இன்பமோ அதை மட்டுமே அனுபவித்து, பிறரையும் மகிழ்வித்து வாழப் பழகுகிறோம் என்பதுதான் யோகத்தின் உண்மை விளக்கம் ஆகும்.

தற்காலத்தில் எத்தனையோ யோகம் உலகில் உள்ளன, எனினும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை என்பது எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் ஆகும். இதில் எந்த ஒரு குழப்பத்திற்கும் இடமின்றி, கற்றுத் தேரலாம். இன்னமும் பழங்கதை பேசி காலத்தை வீணாக்கிட வேண்டாம். வாழும் காலத்திற்குள்ளாக, நம் பிறவிக்கடனான, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்த்து, துன்பங்கள் நீக்கிய இன்பமான் வாழ்வில், நான் யார்? என்ற தன்னையறிதலில் உயர்ந்து, யோகவாழ்வில் முழுமைபெறுவோம்.

வாழ்க வளமுடன்.

Why and What the important of the re-touch?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

இன்றுமுதல் வேதாத்திரிய கேள்வி பதில்களும் பதிவாக வழங்கப்படுகிறது. வாழ்க வளமுடன்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மறுதீட்சை என்பது அவசியம்தானா?


பதில்:

மறுதீட்சை என்ற வார்த்தையை நன்கு கவனியுங்கள். கொடுக்கப்பட்ட தீட்சையை, கற்றுக்கொடுக்கப்பட்ட தீட்சையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு நிச்சயமாக, மறுதீட்சை அவசியமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், எளியமுறை குண்டலினி யோகமான மனவளக்கலையைக் கூட, அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழலில் சிக்கி விடுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக வேலைப்பளு, குடும்பத்தில் அன்றாடம் நிகழக்கூடிய நிகழ்வு, பிரச்சனைகள், மனவளக்கலை மன்றத்தை விட்டு தூரமாக விலகி இருத்தல், நீண்ட நோய் தொந்தரவு, ஊர் விட்டு ஊர் மாறிவிடுதல், வெளிநாடு சென்று விடுதல், தவம் செய்யவே நேரம் கிடைக்காமை, விபத்தில் உண்டான காயம், உடல் வலி பிரச்சனை, உடலில் ஏற்றுக்கொண்ட அறுவைசிகிச்சை என்று இருக்கலாம்.

இவர்கள் அனைவரும், முழுமையான யோககல்வி கற்றிருந்தாலும், மறுபடி தவம் செய்ய நினைத்தால், செய்யலாம் என்பது சரிதான். ஆனால் அங்கே ஒரு தடை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாமே?! அந்த தடையினால், குண்டலினி சக்தியின் பாதையிலும் அதன் ஓட்டத்திலும் பிரச்சனை உருவாகலாம். அதனால் ஆக்கினை தவம் செய்தால், மிகச்சரியாக ஆக்கினையில் பொருந்திவர வேண்டுமே? அதுபோல சாந்தி தவம் செய்தால், மூலாதாரத்தில் நிலைபெற வேண்டுமே? அப்படி இல்லையென்றால் அது, பலவித உடல், மன பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். 

எனவே, மறுதீட்சை அவசியம்தானா? என்ற கேள்வியை விட்டுவிட்டு, இத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்கள் காலமாக, தவம் செய்யாததால், வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்கும் பொருட்டு, மனவளக்கலை மன்றத்தை அணுகியோ அல்லது தகுந்த ஆசிரியரைத் தேடியோ, அவரிடம் நேரில், மறுதீட்சை பெறுவது நல்லதுதான்.

தவம் எடுத்துக்கொண்ட எல்லோருமே, மறுதீட்சை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்களா? என்று எதிர்கேள்வி கேட்டு உதாசீனம் செய்தால், அதற்கான பலனை அனுபவிக்கவேண்டியது நீங்களேதான்!

மேலும், மறுதீட்சை என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்பதையும் இங்கே தெள்வுபடுத்திக் கொள்க. உங்கள் விருப்பத்தில் மறுதீட்சை பெற்றுக் கொள்வது சிறந்த வழி. எனவே அக்கறையின் வழியாகவே இதற்கான பதில் தரப்படுகிறது!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில் என்ற இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!