CJ for You: kids

kids

Showing posts with label kids. Show all posts
Showing posts with label kids. Show all posts

Why is such a change taking place in the conditions of the growing youth in this age?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வளரும் குழந்தைகள் சமூக கட்டமைப்பை உடைத்து, உறவுகளை, பெரியோர்களை, பெற்றோரையும் கூட மதிக்காத நிலை ஏன்?


பதில்:

மிக நுட்பமான, ஆராய்ச்சிக்குறிய கேள்வி. இந்த கேள்வியைக் கேட்கின்ற உங்கள் வயது என்ன என்றும் இங்கே குறிப்பிடவில்லை. அதனால் இந்த கேள்விக்கான முகாந்திரம் என்ன என்பதும் அறியமுடியாது. என்ன வகையான பாதிப்பை நீங்கள் குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்பதும் தெரியவில்லை. முக்கியமாக இதற்கு மிக எளிதில் பதில் தந்துவிடவும் முடியாது. உலகில் ஒவ்வொரு மாற்றமும், முன்னேற்றமும், வாழ்கின்ற, வளர்கின்ற, வரப்போகிற மக்கள் சமுதாயத்தை பாதிக்கும் என்பது உண்மை. விஞ்ஞான, அணுவியல், வானியல், தகவல் தொழில் தொடர்பு முன்னேற்றங்கள் முன்னைவிடவும் இக்காலத்தில் மிகவும் ஏற்றம் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தன்னளவில் அப்படியேதான் இதனை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் உண்மையே. 

இந்தக்கால தலைமுறை குழந்தைகள் உலகம் முழுவதும் அப்படி இருப்பதாக சிலர் சொன்னாலும் கூட, இல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிப்பவர்களும் நிறைய உண்டு. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு மாற்றுக்கருத்து உண்டு என்பதை மறுக்க இயலாது. பொதுவாக, ஒன்றை குறை சொல்லுபவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பார்கள். அவ்வகையில், இப்படி குறையாக சொல்லுபவர்கள், பழமைவாதிகள், வாழ்ந்துமுடித்தவர், பொறாமையில் சொல்லுகிறார் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இளைய சமுதாயத்தோடு, வாழத்தெரியாத, பிற்போக்குவாதிகள் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள்.

எனவே இந்தக்கேள்விக்கான பதிலை, தனியே தருதல் தகாது. இதை ஒரு குழுவாக ஆராய்ந்து உண்மை அறியலாம். அந்த வகையில் விவாதமும் செய்யலாம். அதில் வரும் அல்லது கிடைக்கும் முடிவுகளை வரிசைப்படுத்தி, அதற்கு மாற்றாக நல்ல மாற்றங்களை செயல்படுத்தவும் முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் அல்லது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே! ஏனென்றால் கேள்வி கேட்பவருக்குக்கூட என்ன பதில் என்பது தெரியும் அல்லது என்ன பதிலாக வரும் என்பதும் தெரியும். அந்த வகையில் உங்கள் கருத்தையும் பதியலாம்!

வாழ்க வளமுடன்.

Wife Appreciation Day, Annai Logambal Birthday on August 30


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனைவி நல வேட்பு நாளின் சிறப்பு என்ன? 


பதில்: 

இதற்கான பதிலை, குரு மகான் வேதாத்திரி மகரிஷியே கூறுகின்றார்.

 உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நலவேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள். மனைவி நலவேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய [அருள் அன்னை லோகாம்பாள்] பிறந்த நாள் 30-8-ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆவது நாளை மனைவி நலவேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன்.

அதுபோலவே, மனவளக்கலை மன்ற அன்பர்களும், அவர்களைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

மேலும் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், வாழ்க்கைத்துணையாக வரும் மனைவி குறித்தும், இந்த நாள் குறித்தும் கவியாக சொல்லுகிறார்.


பெற்றோரைப் பிறந்தகத்தைப்

பிறந்த ஊரை விட்டுப்

பிரிந்து வந்து,

பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,

பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்

பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு

என் நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப்

பெண்மை  நல நோக்கில் அன்போடு கருணை

இவை கொண்டு மற்றவர்க்கும் தொண்டாற்றும்

மாண்புமிக்க எந்தன் மனைவியை

நான் மதிக்கின்றேன்

வாழ்த்தி மகிழ்கின்றேன்.


நீங்கள் மிகச்சிறந்த கணவன் எனில் அல்லது அத்தகைய மதிப்பை பெறுவதற்காகவும் கூட, தன் அன்புமிக்க மனைவியை வாழ்த்தி மகிழவும், தன்னுடை அன்பை, அவள்மீது கொண்ட நட்பை, மதிப்பை வெளிக்காட்டவும், இல்லத்தில் இன்பம் பொங்க, வாழ்நாள் சிறக்கவும் இந்த மனைவி நல வேட்பு நாளை மிகச்சிறந்த வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.