CJ for You: usual

usual

Showing posts with label usual. Show all posts
Showing posts with label usual. Show all posts

Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?


யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


பதில்:

        சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின்,  தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

        உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது,  அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.

        ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.

        எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம்  பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற  தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.

        இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’

        எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும். 

வாழ்க வளமுடன்

-

Why getting allergies and pain on my regular simplified exercise?


எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


பதில்:

வாழும் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் எப்படி உடலையும், மனதையும் பழக்கி வைத்திருக்கிறார்களோ அந்த தன்மைக்கு அவர்களின் உடலும், மனமும் பழகிக் கொள்ளும். ஆற்று நீரும், மழை நீரும் எப்படி அதன் பாதை போகிறதோ அதுபோல தானாக போகும் அளவுக்கு, மனிதர்களுடைய உடலும், மனமும் செயல்படும். நீண்டநாளாக இது தொடரும் நிலையில், உடலில் வலு இருக்கும் வரையிலும், குறிப்பிட்ட வயது வரையிலும் இந்தக்குறைபாடுகள் தெரியாது. உண்ணும் உணவாலும், பொழுதுபோக்குகளினாலும், கவனமின்மையாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். தீடீரென ஏதேனும் ஒருநாள் தலைவலியோ, காய்ச்சலோ, சளி பிடித்தலோ, விபத்தோ நடந்தால்தான் மொத்த நிலையும் குழப்பமடைந்து நிற்கும். என்ன செய்வது என்று தெரியாமல், மருந்துகளை நம்ப வேண்டிய நிர்பந்தம் அமையும். அதில் மருந்தும் உதவும், சில அறுவை சிசிச்சையும் உதவும். எனினும் முன்போல செயல்பட முடியாத கட்டுப்பாடுகள் உங்களுக்குத் தரப்படும் என்பது உறுதி.

நாம் ஏன் அந்த அளவுக்கு, இந்த உடலையும் மனதையும் விடவேண்டும்? இப்போது இருக்கும் ஆரம்ப நிலையிலேயே, கவனமும் அக்கறையும் கொண்டு திருத்தி அமைக்கலாம் அல்லவா? ஆனால் எங்கே தவறு நேர்கிறது என்றால், வழக்கமாக நாம் செய்கிற செயல்களில் இன்னமும் திருத்தம் பெறவில்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. நீங்கள் எளியமுறை பயிற்சியை கற்று, தொடர்ந்து செய்வதற்கு ஆர்வம் கொண்டால், உங்கள் வழக்கமான செயலையும், நடவடிக்கைகளையும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் எளியமுறை உடற்பயிற்சி செய்வேன், ஆனால் வேலையின் காரணமாக இரவு இரண்டு மணி வரை கண் விழித்து வேலை பார்ப்பேன், சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு பார்ப்பேன் என்று இருக்கக்கூடாது.

வேதாத்திரியத்தில், நிறைவான, இன்பமான வாழ்க்கைக்கு ஐந்து ஒழுக்க பண்பாடு என்ற ஒரு நிலை உண்டு. அது உணவு, உறக்கம், உழைப்பு, உடலின்பம், எண்ணம் ஆகிய ஐந்திலும் அளவும், முறையும் மீறாமல் இருக்கவேண்டியது அவசியமாகும். உணவு உடலுக்கு முக்கிய தேவைதான், அதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? அதுபோலவே மற்ற நான்கும். இந்த ஐந்தோடு, வழக்கமான உங்கள் அன்றாட செயல்பாடை கவனியுங்கள். எந்தெந்த வகையில் உங்கள் உடலும், மனமும் அதன் போக்கில் செல்கிறது? நீங்கள் அதை உணராமல் பழக்கத்தால் சிக்கிக்கொள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த திருத்தங்களை பெற்று மாற்றிட முயற்சி செய்யுங்கள். இந்த விளக்கம் உங்களுக்கு கிடைத்துவிட்டால், எளியமுறை உடற்பயிற்சி உண்மையாகவே உங்களுக்கு பொருந்துவதை உணர்வீர்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, எளிமையாக உடலுக்கும், உடலுறுப்புகளுக்கும் இயக்கம் தந்து சிறப்பாக செயல்பட வைப்பதும், இதுவரை இருக்கின்ற குறைகளை திருத்தி அமைப்பதும்தான் என்பதை நினைவில் கொள்க. உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல், எளியமுறை உடற்பயிற்சி செய்வதால்தான், அந்த எளிமையே உங்களுக்கு கடினமாக தோன்றுகிறது. ஒரு பெரிய பொருளை கைகளால் தூக்கவேண்டும் என்றால், ஏற்கனவே கையில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை விட்டுவிட வேண்டும்தானே? நான் அதையும் வைத்துக்கொண்டே இந்தப்பெரிய பொருளையும் தூக்குவேன் என்றால், முடியாது, முடிந்தாலும் கைகள் வலிக்குமே? எனவே, உங்கள் அன்றாட பழக்க வழக்கம், செயல்பாடுகளில் இருந்து முதலில் மாற்றம் பெறுக. இதற்கு துணையான விளக்கங்களை, உங்கள் ஆசிரியரிடம் கலந்தாலோசித்து பெறலாம்.

வாழ்க வளமுடன்

-

Can we change the day, time, place for the yoga practice? Is it Okay?


தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?


பதில்:

சாதாரணமாக  கண்கள்மூடி தவம், தியானம் செய்வதற்கும், குருவிடம் தீட்சை பெற்று, யோகவழி தவம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதுபோலவே நாம் இயற்றும் வேதாத்திரிய தவங்களுமாகும். பொதுவாகவே யோகவழி தவங்களுக்கு, உங்களுக்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்வது மிக நல்லது. அப்போதுதான் மனம் அமைதியில் இருக்கும். தவமும் சிறக்கும்.

இடம் என்பதை, நீங்கள் என்றுமே பயன்படுத்தாத, எப்போதாவது பயன்படுத்துகின்ற இடமாக இருக்கக்கூடாது. வழக்கமான வாழ்வில், எப்போதும் நிறைவாக பயன்படுத்தும் அறையாக, இடமாக இருக்கவேண்டியது அவசியம். உங்கள் வீட்டில் பூஜை அறை இருந்தால் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய படுக்கையறையும் பொருத்தமானதே. பலர் வந்து போகின்ற அறையாகவோ, வரவேற்பறையாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் தவம் இயற்றுகின்ற நேரம் முழுவதும் எந்த தொந்தரவும், தடையும் ஏற்படுத்தாத நிலையும் முக்கியம்.

காலம் என்பது, ஒவ்வொரு நாளும், சூரிய உதயத்திற்கு முன்பான காலம் சிறப்பு. கூடுதலாக காலை, நண்பகல், மாலை வைத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேலாக தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நேரம் என்பதை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தவத்திற்கு 15 நிமிடம் போதுமானது. அதை நீடிப்பது உங்கள் விருப்பம். அதை தடை ஏதும் இல்லை. ஆனால் அந்த நேரம் முழுவது உங்களுக்கு தடையோ, பிரச்சனையோ பிறரால் எழாத தனிமை அவசியமாகும்.

இந்த காலம், நேரம், இடம் இம்மூன்றையும், ஏதேனும் சூழ்நிலை கருதி மாற்றிக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக், உங்கள் இல்லத்தில் விருந்தினர் வருகை என்றால், அவர்களை தொந்தரவும் செய்யாமல், ஏதேனும் மற்றோர் இடத்தில் தவம் செய்யலாம். ஆனாலும் உங்களுக்கு பொருந்தாத இடத்தில் தவம் செய்வதை தவிர்க்கலாம். தவம் இயற்றுவதற்காகவே வெளியிடங்களுக்கு, இன்னொருவர் வீட்டிற்கு செல்வதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம். ஏனென்றால் அது உங்கள் மனதிற்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அருகில் உள்ள மனவளக்கலை தவமையத்திற்கோ, அறிவுத்திருக்கோவிலுக்கோ செல்வது மிகச்சிறந்த வழியாகும்.

ஏதேனும் சூழலில், நீங்கள் வெளியூரில் இருந்தால், அங்கே தவம், தியானம் இயற்றுவதை தவிர்க்கலாம். புதிய இடங்கள் எப்படிப்பட்டவை என்ற அனுபவம் நமக்கு இல்லை என்பதால் விட்டுவிடலாம். அதுபோல பொது இடங்களில் தவம், தியானம் இயற்றுவதும் நல்லதல்ல.

ஏன் இப்படியாக மாற்றிக்கொள்ளக்கூடாது? அதற்கு சில காரணங்கள் உண்டு. தினமும் உங்கள் வீட்டில் ஒரே இடத்தில், தவம், தியானம் செய்துவந்தால், அந்த அறை, இல்லம் முழுவதும் நல்ல ஆற்றல்களம் நிறைந்திருக்கும். தவத்திற்கு அமர்ந்த உடனே மனம் லயித்து செய்யவும் முடியும். உங்கள் யோக பயணத்தில் நல்ல வளர்ச்சியை தந்துவிடும் எனலாம். பொதுவாக உங்கள் மனதில் தோன்றும் ‘உள்ளுணர்வுக்கு’ மதிப்பு கொடுங்கள். உங்களுக்கு பொருந்தாத இடம், காலம், நேரம் என்பதை தானாகவே உணர்த்திவிடும் என்று சொல்லலாம். அதை கணித்து மாற்றம் செய்து கொள்க.

வாழ்க வளமுடன்

-

Why is such a change taking place in the conditions of the growing youth in this age?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வளரும் குழந்தைகள் சமூக கட்டமைப்பை உடைத்து, உறவுகளை, பெரியோர்களை, பெற்றோரையும் கூட மதிக்காத நிலை ஏன்?


பதில்:

மிக நுட்பமான, ஆராய்ச்சிக்குறிய கேள்வி. இந்த கேள்வியைக் கேட்கின்ற உங்கள் வயது என்ன என்றும் இங்கே குறிப்பிடவில்லை. அதனால் இந்த கேள்விக்கான முகாந்திரம் என்ன என்பதும் அறியமுடியாது. என்ன வகையான பாதிப்பை நீங்கள் குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்பதும் தெரியவில்லை. முக்கியமாக இதற்கு மிக எளிதில் பதில் தந்துவிடவும் முடியாது. உலகில் ஒவ்வொரு மாற்றமும், முன்னேற்றமும், வாழ்கின்ற, வளர்கின்ற, வரப்போகிற மக்கள் சமுதாயத்தை பாதிக்கும் என்பது உண்மை. விஞ்ஞான, அணுவியல், வானியல், தகவல் தொழில் தொடர்பு முன்னேற்றங்கள் முன்னைவிடவும் இக்காலத்தில் மிகவும் ஏற்றம் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தன்னளவில் அப்படியேதான் இதனை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் உண்மையே. 

இந்தக்கால தலைமுறை குழந்தைகள் உலகம் முழுவதும் அப்படி இருப்பதாக சிலர் சொன்னாலும் கூட, இல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிப்பவர்களும் நிறைய உண்டு. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு மாற்றுக்கருத்து உண்டு என்பதை மறுக்க இயலாது. பொதுவாக, ஒன்றை குறை சொல்லுபவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பார்கள். அவ்வகையில், இப்படி குறையாக சொல்லுபவர்கள், பழமைவாதிகள், வாழ்ந்துமுடித்தவர், பொறாமையில் சொல்லுகிறார் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இளைய சமுதாயத்தோடு, வாழத்தெரியாத, பிற்போக்குவாதிகள் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள்.

எனவே இந்தக்கேள்விக்கான பதிலை, தனியே தருதல் தகாது. இதை ஒரு குழுவாக ஆராய்ந்து உண்மை அறியலாம். அந்த வகையில் விவாதமும் செய்யலாம். அதில் வரும் அல்லது கிடைக்கும் முடிவுகளை வரிசைப்படுத்தி, அதற்கு மாற்றாக நல்ல மாற்றங்களை செயல்படுத்தவும் முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் அல்லது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே! ஏனென்றால் கேள்வி கேட்பவருக்குக்கூட என்ன பதில் என்பது தெரியும் அல்லது என்ன பதிலாக வரும் என்பதும் தெரியும். அந்த வகையில் உங்கள் கருத்தையும் பதியலாம்!

வாழ்க வளமுடன்.