CJ for You: relatives

relatives

Showing posts with label relatives. Show all posts
Showing posts with label relatives. Show all posts

Why do we have problems with our relationships?


நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுவது எதனால்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுவது எதனால்?


பதில்:

நீங்கள் சொல்வது ஓரளவில் உண்மைதான். நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுகிறது. எல்லோருடைய குடும்ப வாழ்விலும் இத்தகைய பிரச்சனைகள் உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லமாட்டார்கள். இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்படாமல், குடும்பம் என்ற அமைப்பும் சிதறி, கலைந்துபோனதும் உண்டு. இதனால் ஊரைவிட்டு விலகி வேறு ஊருக்குச் சென்று வாழ்பவர்களும் உண்டு. அதனால்தான் பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரியவருகிறது.

உறவுகள், சொந்தம், பந்தம் என்பது ஏதேனும் ஒருவகையில், பாதுகாப்பும், அணுசரணையும் கிடைக்கும் என்பதற்காகவே முன்னோர்கள் உருவாக்கிய குடும்பம் என்ற வாழ்க்கை முறையில் அமைந்தது. அந்தக்காலத்தில் கூட்டுக் குடும்பமும் இருந்தது என்பதை மறவாதீர். இன்றைய கால திருமண விழா சாப்பாடு போலவே, ஒவ்வொடு கூட்டுக் குடும்ப வீட்டிலும் நிகழ்ந்து வந்தது என்று சொன்னால் நாம் வியந்து நிற்போம் என்பதே உண்மை.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால், அந்த வீடே அவருக்கு உதவும். ஒரு குழந்தைக்கு பிரச்சனை என்றால் எல்லோருமே கலங்கி தவிப்பார்கள். அப்படியான உறவுகள் சூழ்ந்த வாழ்க்கைமுறை அது. ஆனால் இன்றோ,  கணவன், மனைவி, குழந்தை என்ற மூவர் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட்டது. அந்த குழந்தை வளர்ந்து ஆளாகி நின்றால், அவரின் திருமணம் வழியாக ஒரு உறவு உருவாகிவிடும். ஆனால், அவரும், அவரின் வாழ்க்கைத்துணையும் தனிக்குடும்பமாக உருவாகிவிடுவார்கள். இப்படியான சிதறிய, சுருங்கிய குடும்ப வாழ்க்கையிலும்,  நம்மோடு இருக்கும் உறவுகள் சிக்கலை ஏற்படுத்துவதான் இப்போதைய பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் நாம்தான். அந்த அளவிற்கு அவர்களோடு நம்மை வெளிப்படுத்திக் கொண்டோம். அந்த வெளிப்பாடுகளில், நாம் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து, சமயம் பார்த்து நம் காலை வாருகிறார்கள்.

எனவே நாம் செய்யவேண்டியது, நம்மைக்குறித்து என்ன பிறரிடம் பகிரவேண்டுமோ, அதை மட்டுமே பகிரவேண்டும். மற்றதை ரகசியம் காக்கவும் வேண்டும். உங்கள் முடிவு சரியாக இருக்கும்படி, விமர்சனங்கள் எழாதபடி அதை செயல்படுத்தவும் வேண்டும்.  உங்கள் முடிவு சரியாக் இருக்கும்படி, விமர்சனங்கள் எழாதபடி அதை செயல்படுத்தவும் வேண்டும். உங்கள் செயல் தாமதிக்காது, உடனடியாக நிறைவேற்றிடவும் வேண்டும். இன்று நாளை என்று நாட்களை மட்டுமல்ல, நேரத்தையும் வீணாக கடத்தக்கூடாது.

இன்னொருவரின் துணை, உதவி தேவையில்லை என்பதை உங்கள் திட்டத்திலேயே உருவாக்கி இருக்கவேண்டும். ஆலோசனை கேட்கலாம் ஆனால் அவர்கள் முடிவில், உறவுகளின் முடிவில் பயணிக்கக் கூடாது. அதேநேரத்தில் ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்று அவர்களை உதாசீனம் செய்யவும் கூடாது. ஏனென்றால் உறவுகள் எப்போதும் நமக்கு தேவைதான்!

இப்படியான உறவு சிக்கல் எழுந்தால், நீங்கள் அவர்களை ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்துங்கள். தனியாக சிக்கல் குறித்து ஆராயுங்கள். அகத்தாய்வும், தற்சோதனையும் செய்துவாருங்கள். எளிதாக தீர்க்கலாம்!

வாழ்க வளமுடன்.

-

Why some of my problems has not a solution? How to fix it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கமாட்டேன் என்கிறதே ஏன்? அதை எப்படித்தான் சரி செய்வது?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எந்த வகையில் முயன்றாலும் அதை சரி செய்வது தள்ளிப்போகும் அல்லது ஒன்றுமே செய்யமுடியாது. மேலும் அந்த பிரச்சனை உறுத்திக்கொண்டே இருக்கும். பலவழிகளில் நம் மனதை வருத்தும். அதை நினைத்தே நாம் நேரமெல்லாம் வீணாக போகும், பெரும் கவலையும் நம்மை சூழ்ந்துகொள்ளும்.

இதற்கு சில விளக்கங்களை நாம் அறிய முயற்சிப்போம். அமைதியாக உட்கார்ந்து யோசிக்கலாம். நீங்கள் யோகத்தில் இருந்தால், பதினைந்து நிமிடம், துரிய தவம் இயற்றிவிட்டு. அந்த மன நிறைவில் இந்த ஆராய்ச்சியை செய்யலாம். தீர்க்கமுடியாத இந்த பிரச்சனையின் மூலம் என்ன? எந்த வழியில் இது ஆரம்பித்தது? என் மூலமாகவா? பிறர் வழியாகவா? என்ற கேள்வியில் ஆராய்ந்து அதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எவ்வளவு காலம் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது? இந்த பிரச்சனை தீர்வுக்காக இதுவரை நாம் எடுத்த முடிவுகள் என்ன? அதில் சிறிதளவு முன்னெற்றமோ, மாறுதலோ கிடைத்ததா? இல்லையா? வேறு யாரேனும் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி உதவக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் எனக்கு உதவுவார்களா? என்ற கேள்விகளையும் கேட்டு அதற்கான பதிலையும் குறிப்பெடுத்துக் கொள்க.

அப்படி பிறர் உதவினால், பிரச்சனை எப்படி தீரும்? முழுதாக தீர்க்கப்படுமா? அல்லது குறையாக தீருமா? எவ்வளவு காலம் அடுத்தவரின் உதவி தேவைப்படும்? இதை நானே வேறொரு வழியாகவும் தீர்க்க முடியுமா? என்றும் ஆராய்ந்து தெளிவு பெறுக.

இந்த பிரச்சனை நீடிப்பதால், என்னுடைய அன்றாட நடவடிக்கை பாதிக்கிறதா? வருமானமோ, தொழிலோ பாதிப்படைகிறதா? குடும்பத்தின் அமைதி குலைகிறதா? சுற்றத்தார், நட்பு வட்டம் சிதைகிறதா? குழந்தைகளின் வளர்ச்சியில் தடை தருகிறதா? என்றும் சிந்தித்து அதற்கான பதிலையும் குறித்துக் கொள்க.

இத்தகைய அகத்தாய்வு, தற்சோதனை வழியாக கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில், பிரச்சனையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று அறியலாம். சில பிரச்சனைகள் அதன் தீவிர அழுத்தத்தின் காரணமாக, அதற்கான காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்பது முக்கியமானது. ஆனால் நாம் அதற்கான முயற்சியை கைவிடாமல், தகுந்த காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

இயல்பான வாழ்வை நாம் கெடுத்துக்கொள்ளாமல், மன உறுதியோடு எப்படியாவது இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியோடு, இப்போதைய வாழ்வையும், அதன் அமைதியையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் முக்கியமாக இப்பிரச்சனை குறித்து, உங்கள் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், உங்களை ஏற்று மதிக்கக்கூடிய சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொண்டு விளக்கம் சொல்லி, ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக மாற்றுவழியை அவர்கள் தருவார்கள்.

வாழ்க வளமுடன்.

Why is such a change taking place in the conditions of the growing youth in this age?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வளரும் குழந்தைகள் சமூக கட்டமைப்பை உடைத்து, உறவுகளை, பெரியோர்களை, பெற்றோரையும் கூட மதிக்காத நிலை ஏன்?


பதில்:

மிக நுட்பமான, ஆராய்ச்சிக்குறிய கேள்வி. இந்த கேள்வியைக் கேட்கின்ற உங்கள் வயது என்ன என்றும் இங்கே குறிப்பிடவில்லை. அதனால் இந்த கேள்விக்கான முகாந்திரம் என்ன என்பதும் அறியமுடியாது. என்ன வகையான பாதிப்பை நீங்கள் குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்பதும் தெரியவில்லை. முக்கியமாக இதற்கு மிக எளிதில் பதில் தந்துவிடவும் முடியாது. உலகில் ஒவ்வொரு மாற்றமும், முன்னேற்றமும், வாழ்கின்ற, வளர்கின்ற, வரப்போகிற மக்கள் சமுதாயத்தை பாதிக்கும் என்பது உண்மை. விஞ்ஞான, அணுவியல், வானியல், தகவல் தொழில் தொடர்பு முன்னேற்றங்கள் முன்னைவிடவும் இக்காலத்தில் மிகவும் ஏற்றம் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தன்னளவில் அப்படியேதான் இதனை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் உண்மையே. 

இந்தக்கால தலைமுறை குழந்தைகள் உலகம் முழுவதும் அப்படி இருப்பதாக சிலர் சொன்னாலும் கூட, இல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிப்பவர்களும் நிறைய உண்டு. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு மாற்றுக்கருத்து உண்டு என்பதை மறுக்க இயலாது. பொதுவாக, ஒன்றை குறை சொல்லுபவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பார்கள். அவ்வகையில், இப்படி குறையாக சொல்லுபவர்கள், பழமைவாதிகள், வாழ்ந்துமுடித்தவர், பொறாமையில் சொல்லுகிறார் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இளைய சமுதாயத்தோடு, வாழத்தெரியாத, பிற்போக்குவாதிகள் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள்.

எனவே இந்தக்கேள்விக்கான பதிலை, தனியே தருதல் தகாது. இதை ஒரு குழுவாக ஆராய்ந்து உண்மை அறியலாம். அந்த வகையில் விவாதமும் செய்யலாம். அதில் வரும் அல்லது கிடைக்கும் முடிவுகளை வரிசைப்படுத்தி, அதற்கு மாற்றாக நல்ல மாற்றங்களை செயல்படுத்தவும் முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் அல்லது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே! ஏனென்றால் கேள்வி கேட்பவருக்குக்கூட என்ன பதில் என்பது தெரியும் அல்லது என்ன பதிலாக வரும் என்பதும் தெரியும். அந்த வகையில் உங்கள் கருத்தையும் பதியலாம்!

வாழ்க வளமுடன்.