CJ for You: vethathiriya yoga

vethathiriya yoga

Showing posts with label vethathiriya yoga. Show all posts
Showing posts with label vethathiriya yoga. Show all posts

Please explain the Kundalini yoga makes problem or will fix the problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பிரச்சனைகளை தீர்ப்பதற்க்கு யோகமா? அல்லது யோகத்திற்கு வந்தால் பிரச்சனையாகி விடுமா?


பதில்:

நீங்கள் மிகவும் சாதுர்யமான கேள்வியை என்னிடம் கேட்பதாக நினைக்கிறேன். முதலில் யோகம் என்றால் என்ன? என்ற விளக்கத்திற்கு வந்துவிடுங்கள். அதுதான் சரியானது. யோகம் என்றால் வாழும் உலக வாழ்க்கையில் திருத்தங்களைப் பெற்று அறவழியில் வாழ்ந்து, இன்பத்தை மட்டுமே  அனுபவித்து மகிழ்ந்து சிறப்படையும் பயிற்சியாகும். அதில் தன்னையறிதலும், இறையுணர்தலும் இணைந்திருக்கிறதும் உண்மை!

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இருப்பது மட்டுமல்ல, எல்லோருடைய வாழ்க்கையிலும் அவரவர் அளவில் பிரச்சனைகள் இருக்கிறது. காரணம், அவர்கள் வாழ்க்கைமுறையில், இயற்கைக்கும், இயல்புக்கும் மாறான செயல்பாடுகளின் விளைவு. இயற்கையின் வினை விளைவு நீதி அறியாமை என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் வழிவழியாக மனிதர்களின் கருமையம் களங்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் இந்த உலகில் நேர்மையாக, உண்மையாக, நட்பாக இருந்தாலும் கூட, சந்தர்ப்பவசத்தால், சூழலால் தானாகவே பிரச்சனையில் சிக்கி விடுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்.

எனவே பிரச்சனைகளை தீர்ப்பதற்கு யோகம் உதவாது, ஆனால் உங்கள் பிரச்சனைகளின் மூலகாரணம் என்ன என்பதை அறிந்து, முற்றிலும் அதைபோக்கி, உங்கள் வாழ்வை சீரமைக்க யோகம் உதவிடும், அதன்வழியாக உங்களின் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்ற வழியும் உங்களுக்கு சிந்தனையில் உருவாகும். அதை திட்டமிட்டு சரி செய்து தீர்க்கலாம் என்பதே உண்மை.

யோகத்திற்கு வந்தால் பிரச்சனையாகிவிடுமா? என்றும் கேட்கிறீர்கள். உலகில் நிறைய நபர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். மேலும் யோகத்திற்கு போகாதீர்கள், தேவையுமில்லை, அவசியமும் இல்லை என்று அவர்களை தடுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையும், உங்கள் வாழ்வையும் சீரமைத்து, உலக அனுபவங்களில் அளவோடும் முறையும் வாழ்ந்து இன்பமும், நிறைவும், அமைதியும் பெறவேண்டும் என்றால், யோகம் அவசியம் வேண்டும். அப்படியில்லாது யோகத்தை விட்டுவிட்டால் வேறு வழியில்லை என்பதே உண்மையாகும். இனி முடிவு உங்கள் வசம்!

வாழ்க வளமுடன்.

Can we make changes if we feel some problems on the simplified exercise?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியில் சில பிரச்சனைகள் எழுந்தால், நமக்கு நாமே சில மாற்றங்களை செய்துகொள்ளலாமா?


பதில்:

எளியமுறை உடற்பயிற்சி, ஏதோ உடனடியாக, இப்படித்தான் என்ற முடிவில் உருவாக்கப்பட்டது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை வழியாக யோகபயிற்சிகளை தரும் முன்பாகவே, எளியமுறை உடற்பயிற்சி என்பதை படிப்படியாக அமைத்துதந்தார். கிட்டதட்ட 40 ஆண்டுக்கால ஆராய்ச்சியும், செய்துபார்த்த விளைவுகளின் திருத்தங்களையும் கொண்டது ஆகும். 

மேலும், ஒவ்வொரு உலக நாடுகள் பயணத்தின் பொழுதும், அங்குள்ள கால சூழ்நிலைக்கு ஏற்ப, தன் உடற்பயிற்சியால் எழுகின்ற மாற்றங்களையும் குறிப்பெடுத்து, உலகின் எல்லா கால சூழலுக்கும் எற்றவகையில், பாடத்திட்டமாக மாற்றி அமைத்துக்கொண்டார். ஆண்களின் உடலுக்கு ஏற்றவாறும், பெண்களின் உடல் தன்மைக்கு ஏற்றவாரும் பொருந்தமான, திருத்தங்களையும் அமைத்திருக்கிறார், முக்கியமாக அஷ்டாங்க யோகத்தின் மூன்று, நான்கு  நிலைகளான, ஆசனம், பிராணாயாமம் என்பதையும் எளிமையாக்கி, தன் பயிற்சிகளில் இணைத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.

தான் வாழும்வரை, அவ்வப்பொழுது மாற்றங்களை கேட்டு குறித்து அதற்குரிய, திருத்தங்களை சொல்லியிருக்கிறார் என்பதே உண்மை. மேலும் பல்வேறு சிறந்த மருத்துவர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டுதான், முழுமையாக்கினார். எனவே, உங்களுக்கு, எளியமுறை உடற்பயிற்சியில் என்ன கற்றுத்தரப்படுகிறதோ அதை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கையேடு நூலில் என்ன விளக்கப்பட்டுள்ளதோ அதையும் படித்து அறியுங்கள். தினமும் தொடர்ந்து செய்துவாருங்கள்.

எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுது, பிரச்சனை எழுகிறது என்றால், அதன்காரணம், இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யாததாலும், புதிதாக ஒன்றை கற்கும் பொழுது உடலும் மனமும் தரும் சோர்வும், ஒதுக்கிவிடும் நிலையுமே தவிர வேறொன்றும் இல்லை. அதனால், நீங்கள் உங்களை ஆர்வமாக வைத்துக்கொண்டு, உற்சாகமாக, செய்து பழகி வாருங்கள். நாளடைவில் உடலும் மனமும் ஒத்த தன்மைக்கு மாறிவிடும் என்பதால், எந்தபிரச்சனையும் உங்களுக்கு உருவாகாது. ஒரே ஒரு பிரச்சனை எழலாம் எப்படி என்றால், இன்றைக்கு எளியமுறை உடற்பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டேனே? என்ற வருத்தம்தான் அது.

வாழ்க வளமுடன்.