CJ for You: vethathirya

vethathirya

Showing posts with label vethathirya. Show all posts
Showing posts with label vethathirya. Show all posts

We welcomes you for the Vethathiriya Discussion


வேதாத்திரிய கலந்துடையாடல் நிகழ்வுக்கான அழைப்பு!


வேதாத்திரியம் குறித்து...

நீங்கள், கலந்துரையாட விரும்புகிறீர்களா? அந்த கலந்துரையாடலில் உங்களுடைய 

கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புகிறீர்களா?

சந்தேகங்களில் தெளிவு பெற விரும்புகிறீர்களா?

மெய்ஞானத்தில் உயர்ந்திட விரும்புகிறீர்களா?

வேதாத்திரியத்தில் முழுமை விரும்புகிறீர்களா?

அறிந்த உண்மையை பகிர விரும்புகிறீர்களா?

உங்கள் அனுபவத்தை சொல்ல விரும்புகிறீர்களா?

ஆம் என்பது உங்கள் பதிலானால் வேதாத்திரியச்சேனல் உங்களை வரவேற்கிறது!

-

கலந்துகொள்ள தகுதியுடையோர் யார் என்று அறிவோமா?

வேதாத்திரியத்தில்,  ஒரு ஆண்டு, அதற்கு மேலான ஆண்டுகள் முன்னதாக, பிரம்மஞானம் முடித்து, ஆசிரியர் பயிற்சி வழியாக அருள்நிதி பட்டயம் பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியில் நிறைவுபெற்ற ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள். 

(மனவளக்கலை மன்ற செயல்பாடுகளில் இருப்போர் தவிர்க்கலாம்).

உதவி பேராசிரியர்*, பேராசிரியர்* தகுதியுள்ளோரும் வரவேற்கப்படுகிறார்கள்.

(*கலந்துகொள்வதில் பிரச்சனைகள் எழுமென்றால் தவிர்க்கலாம்).

நல்ல குரல் வளம், பொறுமை, பக்குவம், வேதாத்திரிய பயிற்சிகளில் அனுபவம் அவசியம். தொடர்ந்து காயகல்பம், உடற்பயிற்சி, தவம், அகத்தாய்வு தினமும் தவறாமல் செய்துவருபவராக இருக்க வேண்டியதும் முக்கியம். மௌனம் அனுபவம் இருந்தாலும் சிறப்பு. தகுதியுடைய பெண், ஆண் இருபாலரும் நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.

-

இந்த நிகழ்வின் நோக்கம் என்ன?

உங்கள் ஓய்வு நேரத்தை பயன்படுத்திக்கொண்டு, ‘வேதாத்திரியச்சேனல் இயக்குனர், சுகுமார்ஜெ’ அவர்களோடு கலந்துரையாடலாம். இந்நிகழ்வு நேரடியாகவும், கைபேசி வழியாகவும், இணையம் வழியாகவும் நடக்கலாம். ஒவ்வொரு நிகழ்வும், குறைந்தது பத்து நிமிடங்கள் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

நிகழ்வு ‘ஒலி / ஒளி’ பதிவு செய்யப்பட்டு, வேதாத்திரியச்சானலில் காணொளியாக வெளியிடப்படும்.

-

பதிவேற்றப்படும் பதிவுகளில், கலந்து கொண்ட அன்பரின் பெயர், தகுதி, வசிப்பிடம், ஊர், ஒளிப்படம், காணொளி இணைத்து, வேதாத்திரியச்சானலில் வெளியிடப்படும். பதிவின் உரிமை வேதாத்திரியச்சானல் பெற்றுக்கொள்கிறது.

-

இந்நிகழ்வின் பயன்கள்

சேவை நோக்கத்தோடு செய்யப்படும் பதிவு என்பதால், கலந்து கொள்ளும் அன்பர்கள், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, சேவை நோக்கத்தோடு இருத்தல் வேண்டும். உங்களை பயன்படுத்தி நாங்கள் உயர்கிறோம் என்ற மாற்றுச்சிந்தனைக்கு இடமில்லை. வேறெதும் எதிர்பார்ப்புக்கும் இடமில்லை. இங்கே நிகழ்வது, வேதாத்திரியத்தின் வழியாக மெய்ப்பொருள் உண்மை கருத்துப்பரிமாற்றம் மட்டுமே!

-

கூடுதல் விபரங்கள் அறிக

நிகழ்வு குறித்த விபரங்கள், முன்னதாகவே வழங்கப்படும். போதுமான நேரத்தை, வழங்க ஆர்வமாக இருத்தல் அவசியம். அதற்காக உங்களை பிற பிணைப்பிலிருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளலாம். ஆர்வமில்லை என்றாலோ, நேரமில்லை என்றாலோ, வேறேதும் காரணம் என்றாலோ முன்கூட்டியே தெரிவித்தல் நன்று. நிகழ்வு குறித்த விளக்கங்களை, தகவல்களை எப்போது வேண்டுமானாலும், கேட்டு அறியலாம். 

மேலும் விபரங்கள் அறிய https://wa.me/9442783450

-

வாழ்கவளமுடன்.

Can simplified exercise will solution for my all physical problems?


 வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு சில உடல்பிரச்சனைகள் உள்ளது! வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் முழுமையாக தீர்வு கிடைத்துவிடுமா?


பதில்:

நமக்கு வரும் உடல் பிரச்சனைகள், தொந்தரவுகள் பெரும்பாலும் மனரீதியில் உருவானவையாகவே இருப்பதை நாம் அறியலாம். உதாரணமாக நாம் கவலைப்பட்டால் கூட அது மனதையும் உடலையும், உடல் உறுப்புக்களையும் பாதிக்கும். சினமும் அத்தகைய தன்மை கொண்டதே. ஆனால் பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையில் இருந்தால் அது ஆரம்ப நிலை என்று சொல்லலாம். அதுவே காலத்தால் நீண்டு, முற்றிப்போனால் அது, பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையை மீறி நோயாக மாறிவிடும். அந்தந்த உறுப்புக்களையும் பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இதனால் உங்களுக்கு இருப்பது, உடல் பிரச்சனைதானா? அல்லது நோயா? என்பதை முதலில் தெளிவு செய்து கொள்ளுங்கள். இங்கே மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். பார்வைக்கு திடமாக இருக்கும் மனிதர்கள் பலர், நீண்டகால நோயை தன்வசம் பெற்றவராக இருப்பார் என்பதே நிகழ்கால உண்மை. மேலும் உடல் பருமனாக இருப்பது நல்லது என்றும், ஒல்லியாக இருப்பது நோய்தன்மை என்ற தவறான கணிப்பிலிருந்து மாறிவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி தந்த எளியமுறை உடற்பயிற்சி என்பது, உடலை, மனதை, உயிர் வளத்தை தக்கவைக்கவும், ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிடவும், உடலுக்குள்ளாக இயங்கும் காற்றோட்டம், வெப்ப ஓட்டம், ரத்தவோட்டம் ஆகிய சீராக பாய்ந்தோடவும், குறைவுபடாமல் இருக்கவும் உதவும் என்பதே உண்மையாகும். மேலும் நோய்தாக்கம் பெறாத விழிப்புணர்வும், தடுப்பு சக்தியும் தந்து காத்திடும்.

இங்கே ஏற்கனவே, உடலில் நோய் என்ற நிலை இருந்தால், அந்த நோய்தன்மையை கொஞ்சம் குறைத்திட வழி பிறக்குமே அன்றி, முழுதாக தீர்த்திட வழியில்லை. நோய் தன்மையை பொறுத்து, மருத்துவரின் வழிகாட்டலும், மருந்துகளும் முக்கியம் ஆகும். ஏனென்றால் இது உடற்பயிற்சி தானேதவிர, உடல் உறுப்புகளை திருத்திட, மாற்றி அமைக்க மருந்து அல்ல என்பதை புரிந்துகொள்க. அப்படியானால், ‘எளியமுறை உடற்பயிற்சி என்பது வீண் தானே?!’ என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், அது உங்களுடைய கருத்தேயன்றி உண்மையல்ல.

எப்போதுமே, வருமுன் காப்பதுதானே சிறப்பு, அதன்படி, நாம் இளமையில் நன்றாக இருக்கும்பொழுதே, அப்படி உணரும் பொழுதே, எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்தால், வாழும்நாள் வரையில், நோயின்றி சிறப்பாக வாழ வழியுண்டாகும். அதுதான் குருமகான் வேதாத்திரி மகரிஷி தந்த விளக்கமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.