CJ for You: solution

solution

Showing posts with label solution. Show all posts
Showing posts with label solution. Show all posts

Sir, the burden of my anxiety seems to be increasing every day. Due to this, I could not concentrate on any work. Is there a solution to this?


ஐயா, ஒவ்வொரு நாளும் என் கவலையின் சுமை கூடிக்கொண்டே இருப்பதாக தெரிகிறது. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கு தீர்வு உண்டா? எந்தெந்த வகையில் என் கவலையை போக்கமுடியும்? எனக்கு விளக்கம் தருக.

கவலை என்பது மனிதர்களின் அடிப்படை குணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நீங்களும் நானும் இன்னும் பலரும் அந்த வரிசையில்தான் இருக்கிறோம் எனலாம். எனினும் இந்த கவலை என்பது, நிஜமாகவே மனிதனின் அடிப்படை குணமா? என்று கேட்டால் அதற்கு பதில், ஆமாம் என்று சொல்லுவதற்கில்லை. மகிழ்ச்சி, பயம், நிறைவு, சினம் என்ற இயற்கை குணங்களோடு, கவலை,  ஏக்கம் என்று சில கலந்துவிட்டது. நாமும் அதை விட்டுவிடுவதாக இல்லை.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே கவலை வந்துவிட்டது. aவர்களும் நமக்கு போட்டியாக கவலையை எடுத்துகொண்டுவிட்டார்கள். நமக்கு பெரிய பெரிய என்றால், அவர்களுக்கு அவர்களளவில் சிறிய சிறிய என்பதாக இருக்கிறது. இந்த கவலை குறித்து வேதாத்திரி மகரிஷி, தனியாக பாடமே அமைத்துவிட்டார். அதுதான் தற்சோதனை எனும் அகத்தாய்வில் ‘கவலை ஒழித்தல்’ என்று வைத்திருக்கிறார். கவனியுங்கள். கவலையை தீர்த்தல் அல்ல, ஒழித்தல் ஆகும்.

இந்த கவலை குறித்து எந்த ஆன்மீக, யோக பெரியோர்களும் தனியாக சொன்னதில்லை. இறையிடம், மெய்ப்பொருளிடம் முறையிடு. தீரும் என்றுதான் சொல்லுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியோ அதை, அந்த கவலையை ஆராய்ந்து அலசிப்பார் என்கிறார். அதை வகைப்படுத்தி புரிந்து கொண்டு, விளக்கம் பெற்று கவலையை ஒழித்துவிடு என்று அறிவுறுத்துகிறார்.

உங்கள் கவலை எத்தகையது என்பதை, உங்கள் கேள்வியிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால் எதனால் அது ஆரம்பமாகிற்று? என்பதை தனியாக நீங்கள் மட்டுமே அறிவீர்கள். எனினும். அந்த கவலையை தீர்க்க, இல்லையில்லை ஒழிக்க வழி உண்டு. மனவளக்கலையில், நீங்கள் கவலை ஒழித்தலை பாடமாகவும் படிக்கமுடியும். கட்டுரையாகவும் படிக்கமுடியும். உங்களிடம் உள்ள மனவளக்கலை புத்தகம், பாகம் ஒன்றில், இருக்கும் ‘கவலை ஒழித்தல்’ தலைப்பிலான பதிவை படித்துப்பாருங்கள். கூடுதலாக. இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.

மன ஆற்றலை, நம்பிக்கையை அகற்றும் கவலை தேவையா? 

வாழ்க வளமுடன்.

-

My stomach often gets into trouble. There is no interest in food. There is also sluggishness without appetite. What is the solution?


என்னுடைய வயிறு அடிக்கடி பிரச்சனைக்குள்ளாகிறது. உணவில் நாட்டம் இருப்பதில்லை. பசி இல்லாமல் மந்தமாகவும் இருக்கிறது. வீட்டில் சாப்பிட்டாலும், வெளியே சாப்பிட்டாலும் பிரச்சனையே. இதற்கு தீர்வு என்ன?

உணவு என்பது ஜீவன்களின், உயிர்களின் அடிப்படையானது. உயிர்வாழ்வதிலும், உடலை வளர்த்துக் காத்து, மனதையும் உயிரையும் காத்துக்கொள்வதிலும், உணவு தான் முக்கியமானது ஆகும். மேலும் இந்த உணவுதான் ஏழு தாதுக்களாகவும் மாறி, வாழ்வை, வாழும் பொழுது வளமாக்குகிறது. இப்படி முக்கியத்துவமான உணவை, நாம் கையாளும் விதம், சிறப்பாக இல்லை என்பது உண்மை. ஆனால், உணவு கலாச்சாரம், அதற்குரிய மதிப்பு, உலகெங்கும் உள்ளது. அது, ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு உணவு விடுதியிலும் இருக்கிறது.

உணவு என்பதைக் கொண்டே, அதை பரிமாறுபவர்களின் குணாதசியத்தை அறியலாம். அந்த உணவை செய்தவரின் அக்கறையை, அன்பை அறியலாம். அதுபோலவே அந்த உணவை உண்பவரின் நடவடிக்கையைக் கொண்டு, அவரின் குணாதசியத்தையும் அறியலாம். இங்கே ஒரு உணவின் வழியாக, எப்படியான தொடர்புகள் நம்மையறியாமல் உருவாகிறது என்று சிந்தித்து தெரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இதையெல்லாம் அறிந்துக் கொள்ளக்கூடிய சூழலை நாம் கைக்கொள்வதில்லை. ஏனென்றால் அப்படியான அவசர உலகில் நாம் வாழ்கிறோம். அப்படியான நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அதுபோலவே, அமைதியாக, பொறுமையாக, ரசித்து, ருசித்து, அனுபவித்து சாப்பிடுபவர்கள், மிகமிகக் குறைவு. இந்த பிரச்சனை, உங்களுடைய உணவால் வந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது மிக குறைவே. அப்படியென்றால், இந்த பிரச்சனையின் மூலம் என்ன என்றால், உங்களுடைய மனமும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் ஆகும். அப்படியா? என்று திகைக்கிறீர்களா? ஆம், அதுதான் உண்மை.

ஆனால், இந்த பிரச்சனையை, மருத்துவரின் வழியாக தீர்க்கவே நான் வழிமொழிகிறேன். என்றாலும். உங்களுடைய இந்த உணவு தொடர்பான பிரச்சனையை தீர்க்க காயகல்ப யோக பயிற்சி உதவும். இதைக்குறித்த சில உண்மைகளை, இந்த காணொளி வழியாக காணலாம்.

உணவுக்கும் முன்பும், நீர் அருந்தும் முன்பும் காயகல்ப பயிற்சி செய்யவேண்டுமா? ஏன்? Kayakalpa Yoga!

வாழ்க வளமுடன்

-

Do you know how to treat a lifelong partner, lover and better half?


உங்களின் மனதை கவர்ந்தவரிடம், வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவருடன், வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா?


உலகில் மனிதனின் பிறப்பு, என்றுமே தனியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஆண், பெண் என்றான அன்பு, காதல், அதன் வழியான திருமண பந்தம், குடும்பம் என்ற அமைப்பு ‘பெரும்பான்மையாக’ அமைந்திருக்கிறது. அதுதான் சமூகத்தின், உலகின் நடைமுறையாகவும் இருக்கிறது. பிறக்கும் ஆணும், பெண்ணும் தனக்கு பருவம் வந்த காலத்தில், அடுத்த நிலையான வாழ்வைத் தொடங்க, ஆண் ஒரு பெண்ணையும், பெண் ஒரு ஆணையும் துணையாகக் கொண்டு, திருமணம் வழியாக, குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் பெற்றோரும், உற்றோரும், நண்பர்களும் துணையாக இருந்து, இதை வழிநடத்தியும் தருகிறார்கள். இந்த குடும்பம் என்ற அமைப்பு எனக்கு, அமையவில்லையே? என்று கேட்கிறீர்களா? இதோ அதற்கான விளக்கமும் காண்போம்.

தனி நபரான வாழ்க்கை, ஓர் முழுமையை தருவதில்லை. எனினும், அது கடமையை தீர்த்தல் என்பதாக நிகழ்ந்துவரும். இந்த தனி நபர் என்ற நிலை, தன் விருப்பத்தாலும், சூழ்நிலையாலும், சந்தர்ப்பங்களாலும் அமைந்துவிடும். ஆனால், எந்த நொடியிலும், இதை அவரே விரும்பி, தன் முயற்சியாலும், மற்றவர்களின் துணை மற்றும் உதவியாலும், நிச்சயமாக மாற்றம் கொள்ள முடியும். அப்படி இருக்கும்பொழுது, யார்மீதோ பழி சொல்லுவதில் அர்த்தமில்லை. உலகின் நடைமுறைக்கு ஏற்றபடி, கல்வி, வழக்க பழக்கம், வேலை, பொருளாதாரம் என்ற வகையிலும், உங்களை தகுதியாக்கிக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். முக்கியமாக காத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இயற்கை எந்தவகையிலும், பழி கொள்வதாக கருத இடமில்லை. எனவே தனி நபருக்கும் இயல்பாக, இல்லறம் அமையும்.

எந்த வகையில், ஆண், பெண் என்று இருந்தவர்கள், கணவனும் மனைவியாக, ஒருவருக்கு ஒருவர் துணையாக, சடங்குகள், சம்பிரதாயம், வழக்கம் வழியாகவோ, ஒப்பந்த பதிவு வழியாகவோ, திருமணமாகி, இல்லறத்தை தொடங்குகின்றனர். அந்த இல்லறம் சிறப்பாகவே தொடர்கிறதா? என்று கேள்வியை முன்வைத்தால், 

‘சிறப்பாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறது’ என்போருக்கு, என்னுடைய நல்வாழ்த்தை பகிர்கின்றேன். ‘அது, சிறப்பாக தொடங்கியது உண்மைதான். ஆனால் இன்றோ தடுமாறுகிறது’ என்பது பெரும்பாலோரின் பதிலாகும். 

சிறப்பாக தொடங்கியது ஏன் தடுமாறுகிறது? என்று அதில் சிக்கிக் கொண்ட கணவனும், மனைவியும் சிந்திக்கின்றனர். அதை விலக்கிட, தீர்த்திட முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களே அறியாமல், மேலும் மேலும் சிக்கிக் கொள்கின்றனர். இதற்குப் பிறகு, அந்த தடுமாற்றம், அவர்களை பாதை மாற்றி, திசைக்கு ஒருவராக பிரித்தும் வைக்கிறது. இந்த தடுமாற்றம், சிக்கல், பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வு என்ன? என்று வேதாத்திரி மகரிஷியிடம், அன்பர்கள் கேட்கிறார்கள். அவர் ஓர் துறவி ஆயிற்றே? என்று கேள்வி எழுந்தாலும், அதற்கு அவரே பதிலும் சொல்லுகிறார். ‘நான் துறவியாகவே ஆன்மீகத்தில் நுழையவில்லை. உங்களைப்போல, நானும் இல்லறத்தில் வாழ்ந்து, அந்த நிறைவில்தான், யோகத்தில் நின்றேன். அதனால், அந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் உங்களுக்கு வழிகாட்டிடவும் முடியும்’ என்கிறார்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி? இதோ, வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டுதலை காண்போம். சிறப்பான குடும்ப வாழ்க்கைக்கு, மூன்று பண்புகள், 1.  விட்டுக் கொடுப்பது, 2.  அனுசரித்துப் போவது, 3.  பொறுத்துப் போவது ஆகிய குணங்கள் அவசியம். இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!’ எல்லோரும் ஆவலோடு, மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா? மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

‘யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.’ என்கிறார்.

அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது. ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார். ‘அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம். அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள்.  அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!’

இல்லறத்தை விட்டு விலகிடாமல், அதில் ஓர் நிறைவைகண்டு, முழுமை செய்துவிட்டு, தன் வாழ்நாள் முழுவதும், யோகத்தின் வழியாக, பருவம் வந்த அனைவருமே, மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், நான் யார்? என்ற தன்னையறிதலும், பிரம்மஞானமும் வழங்கி, தனிமனித விடுதலையும், அமைதியும் தந்து, அதன் வழியாக, உலக சமாதானமும் தந்து வழிநடத்தும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறதுதானே?

விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது. அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்றும் குறிப்பிடுகிறார் மகரிஷி. அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம். 

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம்.

அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிக்கு இடம் தரும்.

மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.

7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி 

யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

How to solve the problem of life and get peace of mind? What is the solution and the way?


வாழ்க்கைச் சிக்கலை தீர்த்து, மன அமைதியை பெறுவது எப்படி? தீர்வும் வழியும் என்ன?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிக்கல் மிகுந்த வாழ்க்கையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்பது போல உள்ளது. மனமும் அமைதியில் இல்லை. இதற்கு வழி என்ன? இறைவழிபாடுகளிலும் கவனமில்லை, அதில் மாற்றமும் நிகழவில்லை. என் சிக்கல் தீர வழி என்ன? உண்மை விளக்கங்களை தருக.


பதில்: 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கை என்பது இனிமையும், அமைதியும் நிறைந்துதான் என்பதில் ஐயமில்லை. இயற்கையின் பரிணாம எழுச்சியில், வந்த முழுமையாக, தன் மூலமான இயற்கையையே, முழுதாக அறிந்து கொள்ளும்படியான, ஆறாம் அறிவின் நிலை பெற்றவன், இந்த மனிதன். அது உண்மைதானே? எங்கேயோ ஒர் அணுவாக தோன்றி, முழு மனிதனாக வந்து நின்ற பயணம், நிறைவு பெறுவதற்கு பதிலாக, சிக்கிக்கொண்டு தவிக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மகான்களும், மெய்யுணர்வாளர்களும், பல்லாண்டு காலமாக விளக்கம் அளித்தும் கூட, யாரோ ஒரு சிலர்தான், அந்த மாற்றத்தை விருப்புகிறார்கள். அந்த தன்னையறியும் பாதையில் பயணித்து நிறைவடைகிறார்கள்.

இதில் விருப்பமின்றி, மாற்றம் ஏற்காத, ஒதுக்கித்தள்ளும் மனிதர்கள், வழக்கமான வாழ்வில், இருக்கும் சிக்கலோடு, இன்னும் பல சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். அதிலிருந்து விடுபட போராடுகிறார்கள். யாரேனும் உதவ மாட்டார்களா? என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே பலர், பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதை இவர்கள் ஏற்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.

இவர்களை பொறுத்தவரை, வாழ்க்கைச் சிக்கல்கள், தானாக வந்து, எங்களை ஆட்கொண்டு விட்டது. எப்படி ஒரு மலைப்பாம்பு தன் இரையை சுற்று வளைத்து, நெருக்கி, நசுக்குகிறதோ, அதுபோலவே எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் நெருக்கி, நசுக்குகிறது என்பார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த சிக்கல்களுக்கு வழியும் என்ன? இந்த கேள்விகளுக்கு, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், தரும் விளக்கத்தை இங்கே தருகிறேன். இதோ.

‘வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப்போராட்டமாகும்.  உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே.  அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம்.  சில சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகிவிடும்.  சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது.  அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில் எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான்.’

‘தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதிவிலக்கு.  நாமாகச் சிக்கல்களை உண்டு பண்ணிக்கொள்வதைத் தவிர்த்தால் வாழ்க்கையில் எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல்களின் எண்ணிக்கை குறையும்.’

‘சரி நம்மாலோ பிறராலோ உண்டாகிவிட்ட சிக்கல்களை என்ன செய்வது? சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நம் மனம்தான் செய்தாக வேண்டும். 

தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனதின் தரத்தையும் மனதின் திறத்தையும் அதாவது மனதின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.  தன்நிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த சிந்தனை ஆற்றல் கொண்ட மனவளக்கலைஞனுக்கு தேர்ந்த குண்டலினியோகிக்கு கவலை என்பது எவ்விதத்தும் வர வாய்ப்பே இல்லை.’

வேதாத்திரி மகரிஷியின் இந்த விளக்கம், போதுமானதாக இருக்கும் என்று, நம்புகிறேன். இத்தகைய மாற்றத்தை, இன்றே, இப்பொழுதே தொடருங்கள். நிறைவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why felt tired on the yoga journey? How long need to move and what is the solution?


வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?


பதில்:

நீங்கள் இப்படி கேட்பது நியாயமானதுதான். இன்றைய வாழ்வுக்கான சூழல் மட்டுமல்ல, பொதுவாகவே மனிதர்களின் வாழ்வில், குண்டலினி யோகம் என்பது தனித்துத்தான் நிற்கிறது. அது ஒரு வாழ்வியல் மாற்றாக, நம்முடைய வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியமான மனவளக்கலையின் வழியாகவே வந்திருக்கிறது எனலாம். யோகம் என்பது, குடும்பஸ்தனுக்கு ஆகவே ஆகாது என்ற நிலையில், அப்படி இல்லவே இல்லை என விளக்கமளித்து, இல்லறத்திலே யோகம் என்ற மாற்றத்தை கொண்டுவந்து, தகுந்த விளக்கமும், பயிற்சியும் அளித்தது ‘வேதாத்திரியம்’ மட்டுமே என்றால் அது மிகையில்லை.

யோகத்தின் வழியாக, தனிமனித விடுதலை பெற்று, நான் யார்? எந்த சிந்தனையின் ஊடாக, உண்மை அறிந்து, இறையுணர்ந்த தெளிவோடு, தன்னுடைய எண்ணம், சொல், செயல் வழியே, மிகத்தெளிவான வாழ்வியலில், இன்பம் மட்டுமே அனுபவித்து, தனக்கும் பிறருக்கும் துன்பமில்லாது வாழ்வதற்கு வழி சொல்வதுதான் ‘வேதாத்திரியம்’. அதுதான் இங்கே பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. படித்து பட்டயம் பெற்று, தகுதிச்சான்று அடைந்த உடனே, அந்த நிலையை நாம் அடைந்துவிட முடியாது என்பதை, நாம் மறந்துவிடுகிறோம்.

கற்றுக்கொண்ட பயிற்சிகளான, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம், தற்சோதனை, அகத்தாய்வு, மௌனம் ஆகிய எல்லாவற்றையும் தொடர்ந்து செய்துவருவது முக்கியம். இது எவ்வளவு காலம் செய்யவேண்டும்? தொடரவேண்டும்? என்பது, நம்முடைய / நமக்கு கிடைக்கும் விளக்கத்தை மட்டுமே பொறுத்தது. பிறர் சொல்லக்கேட்டு விளங்கிக்கொள்வது என்பதை விட, அந்த விளக்கத்தை, உளப்பூர்வமாக தானாக உணர்வதுதான் ‘உண்மை விளக்கமாகும்’ ஒரு பலா பழத்தின் சுவையை என்னதான் மற்றவர் சொன்னாலும், அந்த பலா பழத்தின் சுவையை நீங்கள் அறிந்ததாகுமா? அந்த பலா பழத்தை, நீங்கள் பெற்று, சாப்பிட்டால் அல்லவா? அந்த சுவையும் ருசியும் நீங்கள் அறிந்ததாக கொள்ளமுடியும். அதுதானே உங்களுக்கு திருப்தியும், மன நிறைவும், இன்பமும் அளிப்பது இல்லையா? இதை எப்படி நீங்கள், பிறர் சொல்லும் வார்த்தைகளால் அறிந்துவிட முடியும்?

வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? என்று கேட்பதற்கு, முக்கியமான காரணம் ‘உங்களிடமிருக்கும் ஓர் எதிர்பார்ப்பு’ ஆகும். சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஒர் பாத்திரத்தை, ஒரே நாளில் புதிதாக, விளக்கி வைக்க முடியுமா? ஆனால் தினமும் செய்தால், ஒர் நாளில் அது, புத்தம் புதிதாக காட்சியளிக்கும் தானே? அதுபோல, எதிர்பார்ப்பு இல்லாமல் தொடர்ந்து, வேதாத்திரியத்தில் பயணியுங்கள். ஒருபோதும் ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.

உங்கள் வாழ்வில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தால், அதை இந்த யோகத்தோடு முடிச்சு போடாதீர்கள். யோகம் பொருளாதாரத்தை கெடுப்பதில்லை என்பதை நினைவில் கொள்க. நீங்கள், இன்னமும் பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்றல், நிறைவு பெறவேண்டும் என்றால் அதில் ஈடுபடுங்கள். அதற்காக யோகத்தில் ஏமாற்றம் கொண்டு, கைவிட்டுவிட முயற்சிக்காதீர்கள். ஒரு ஓட்டப்பந்தய விளையாட்டில், பாதியில் நின்றுவிடுவதும், விலகிப்போவதும் ஒருபோதுமே பலனளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இறையருளும், குருவருளும் உதவட்டும். நானும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். 

வாழ்க வளமுடன்.

-

Vethathiri Maharishi's Advice for better health and long life!


உலகில் வாழும் நாம், நலமோடும், வளமோடும், நீண்டநாள் வாழ, வேதாத்திரி மகரிஷி அவர்கள் தந்த அறிவுரைகள் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் வாழும் நாம், நலமோடும், வளமோடும், நீண்டநாள் வாழ வேதாத்திரி மகரிஷி அவர்கள் தந்த அறிவுரைகளை தொகுத்துத்தருக!


பதில்:

  1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. 

        இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. 

இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும். 

விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும்.

பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். 

மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. 

        மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வாழ்க வளமுடன்

-

* பதிவின் மூலம்: குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Why can't I achieve economic fulfillment? Let me know the any solutions!


தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை. நான் வேதாத்திரிய யோகத்தில் வாழ்த்திக்கொண்டும் வருகிறேன். இதை எப்படி சரி செய்வது?


பதில்: 

இப்போதைய வாழ்க்கைச் சூழலில், நம் எல்லோருக்குமே எழக்கூடிய கேள்வி என்பதில் ஐயமில்லை. வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு,  வாழ்த்திக்கொண்டும் வருகிறேன் என்பது சிறப்பு. சிலர், அதனால் இப்படி ஆகிற்று என்று வெட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு, சரியாக விளங்கிக்கொள்ளாமை ஆகும். எல்லாவற்றை விட்டுவிடு, அப்போதுதான் யோகம் சிறக்கும் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்? நீங்களாகவே தவறான முடிவில் இருந்திருக்கலாம்தானே? வேதாத்திரியம், இல்லறத்திலேயே நல்லறம் என்பதைத்தான் வழியுறுத்துகிறது என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். அதற்கு உதாரணம் யார்? என்றால், நம்முடைய குரு மகான் வேதாத்திரி மகரிஷியே ஆகும். அவரும் நம்மைப்போலவே வாழ்ந்து, தன் வாழ்வின் நிறைவில், நமக்கெல்லாம் யோகத்தை பரப்பிட, வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

இப்பொழுது உங்கள் கேள்விக்கு வரலாம். ‘தனிமனித பொருளாதார நிறைவு ஏன் என்னால் அடைய முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கவும் இல்லை’ என்று தனிநபர், சுயதொழில், சார்பு தொழில், வியாபாரம் செய்பவர்தான் இப்படியான நிலையில் இருப்பார். நீங்களும் இதில் ஒன்றாக இருக்கலாம். அரசு வேலைகள், தனியார் தொழில், வியாபார, வேலை நிறுவனம் என்றால், இந்த கேள்வியும், குழப்பமும் தேவை இருக்காது என்பது பொதுவான கருத்து. எனினும், அவர்களுக்கும் கூட, சூழ்நிலை காரணமாக, பொருளாதார நிறைவு கிடைப்பதில்லை.

இதற்கு என்னவழி? இங்கே ஔவையாரின் தனிப்பாடல் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என விரும்புகிறேன். 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...

மனிதராக இந்த உலகில் பிறப்பது கடின வாய்ப்பானது என்று ஆரம்பித்து, உடல்குறையின்றி, கண்பார்வை பாதிப்பாகவும், செவி குறைபாடு கொண்டும் பிறக்காமல் இருப்பதும் கடினம். இதையும் நீங்கி பிறந்துவிட்டாலும் கூட, ஞானமும் கல்வியும் தகுந்த காலத்தில் கிடைப்பதும், அதை கற்றுத்தேர்வதும் கடினம் என்று ஔவையார் தொடர்கிறார்.

இப்படி, உங்களுக்கு தகுந்த காலத்தில், இந்த உலகில் கல்வி நிச்சயமாக கிடைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உலகம் முழுவதுமே, கல்வியை தொழில்சார்ந்து அமைத்துக்கொண்டு விட்டது. அந்தக்காலம் போல, பிறவித்திறமை, அடிப்படைத்திறமை என்பதற்கெல்லாம், வேலை வாய்ப்பை வழங்குவதில்லை. இந்த மாற்றத்தை நாம் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி நம்மை கல்வியில் நிறைவு செய்துகொள்வது அவசியம். ஐயா, எனக்கு அப்படியான கல்வி இல்லையே? என்றால், மக்களின் தேவையறிந்து சேவையோ, வேலையோ, தொழிலோ, வியாபாரமோ செய்து பொருளாதார நிலையை பெறலாம். இது அன்றாட பிழைப்பைச் சார்ந்த நிலையாக இருக்கும். நீங்கள் இன்று உழைத்தால், அது உங்களுக்கான வருமானம் தரும் என்பது உறுதி. ஆனால் நிறுவனம் சார்ந்த வேலை என்றால், அந்த கவலை இன்றி, மாதம் முழுவதும் உழைத்தால், சம்பளம் உறுதியானது. இந்த வித்தியாசம் உணர்ந்து கொள்க.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பிறரை எதிர்பார்த்தல், தான் செய்யவேண்டிய கடமையை செய்யாதிருத்தல், அதை உணர்ந்தும் கூட செய்யாதிருத்தல்’ ஆகிய மூன்றுமே, வாழ்வில் துன்பம் எழுவதற்கு காரணமாக இருக்கிறது என்கிறார். மேலும் போட்டி மிகுந்த இவ்வுலகில், தனிமனித பொருளாதார நிறைவு உடனடியாக கிடைக்க வழியேதும் இல்லை. உங்களால் முடிந்த அளவில், தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். முக்கியமாக ஏற்கனவே சொன்னபடி, மக்களின் தேவை அறிந்து, சேவையாகவும், உதவியாகவும் இருக்கக்கூடிய தொழில், வேலை, வியாபாரம் என்பது முக்கியம். அப்போதுதான் அம்மக்கள் உங்களுக்கும் உதவி, உங்களின் உழைப்புக்கும் மதிப்புத்தந்து, உங்களை பொருளாதாரத்தில் உயர்த்திட துணை நிற்பார்கள்.

வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு வாழ்த்துவது பலனளிக்கிறதா? என்றும் சிலர் நினைப்பார்கள். ஆம் நிச்சயமாக பலன் தருகிறது. உங்களைச் சூழ்ந்து இருக்கும் தேவையற்ற குழப்பம், கவலை, துன்பம் இவற்றை நீக்கி, இன்னமும் உற்சாகமாக செயல்பட உங்களுக்கு உதவுகிறது. உங்களைச் சூழ்ந்து நல்ல அலைகள் இருக்கச் செய்கிறது. அதன் வழியாக மக்களின் நட்பை பெற வழி கிடைக்கிறது. உங்களின் உயர்வுக்கு துணையாகிறது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தே போதுமானது. மேலும் உங்களுக்கு வாய்ப்பிருந்தால், சர்வ வஸ்ய தனாஆகர்ஷண சங்கபம் வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்று பூஜையாக செய்து வரலாம் என்பது என்னுடைய பரிந்துரையாகும். இதற்கான இணைப்பையும் இங்கே தருகிறேன்.

https://www.youtube.com/watch?v=kEe1HiHyjsg&list=PLQQJZk6S322n6isludZDiMAAWLiErCYAl&pp=iAQB

வாழ்க வளமுடன்.

-

The best way and solution for the perfect and complete life!


உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?


பதில்:

ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் கேள்வியை வரவேற்கிறேன். இந்த உலகம், ஒவ்வொரு தலைமுறையிலும், தன்னளவிலும், வருங்கால சந்ததிக்கு உதவும் வகையிலுமான முன்னேற்றங்களை உருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு மெய்ஞானம் பெருமளவில் உதவியது. முழுமையான அந்த மெய்ஞானம் இன்றும் ‘பொலிவோடு’ திகழ்ந்துகொண்டும் இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சூரியன் என்று ஒளிர்ந்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் பலகோடி ஆண்டுகளாக, பூமிக்கு ஒளிவீசிக்கொண்டு இருக்கிறதே, அதுபோலவே ‘மெய்ஞானமும்’ ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய உலகில், விஞ்ஞானம் அணுவியல், வானியல், மண்ணியல் என்று பலவகைகளிலும் விரிந்து நின்று, மனித வாழ்வின் நிலையை, கற்பனைக்கும் அப்பாற்பட்டு உயர்த்திருக்கிறது. நாம் எல்லோருமே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  நம் தலைமுறையினரும் அனுபவிக்கிறார்கள். இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்க போகிறார்கள். ஆனால், இங்கே மெய்ஞானத்தை அப்படியே விட்டுவிட்டார்களே?

ஒரு ஜீவனின் பிறப்பும், ஒரு மனிதனின் பிறப்பும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு மனிதனின் நோக்கம் வேறானதாகிற்றே? அம்மனிதனுக்கான ஆறாவது அறிவின் முழுமையை அவன் உணர மறுக்கிறான். அவனுக்குள்ளாக அதற்கு ஓர் எல்லை கட்டி, இந்த அளவுகளின் நான் இயங்கினால் போதும் என்றும் முடிவு செய்துவிடுகிறானே?! அது சரியானது தானா?

மனிதனின் வாழ்வு இதுதான், இப்படித்தான் வாழவேண்டும் என்பது இரண்டு நிலைகளில் நாம் எடுத்துகொள்ள முடியும். முதலாவது, பெயர், புகழ், செல்வாக்கு, இன்பம் துய்த்தல் என்ற் வகையில், வெளிப்பார்வையாக, உலகியலில் வாழ்கிற வாழ்க்கை ஆகும். இரண்டாவது, உள்முகமாக, மனதையும், நம்மையும், இந்த இயற்கையையும், தெய்வீகம் என்று போற்றப்படுகின்ற பேராற்றலையும் உணர்ந்து அறியதக்க வாழ்க்கை என்பதாகும். இதில் முதலாவது வாழ்க்கை முறையைமட்டுமே நாம் ‘கெட்டியாக’ பிடித்துக்கொண்டோம். அதையே நம் தாத்தா தொடர்ந்தார், தந்தை தொடர்ந்தார். நாம் தொடர்கிறோம். நம் பிள்ளையும், பேரப்பிள்ளைகளும் தொடர்வார்கள். அதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

ஆனால் இந்த ‘மெய்ஞான’வாழ்க்கை மாற்றம் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. என்றாலும், மெய்ஞான வாழ்க்கைதான், இந்த மண்ணில், தமிழகத்தில் நிலைத்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. உலகுக்கே வழிகாட்டியாக இன்னமும், தமிழக சித்தர்களின் மெய்ஞானம் இருந்தது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. அவை எல்லாமே, கால மாற்றத்தில், அந்நியர்களின் படையெடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் அங்காங்கே சிதறிப்போனது. என்றாலும் கூட உலகெங்கும் அது பரந்து நிலைத்தது. இந்த மண்ணிலும் அவ்வப்பொழுது, ஞானிகளும், மகான்களும், யோகியர்களும் வந்து, ‘மெய்ஞானத்தை’ விளங்கச்செய்கிறார்கள். வாழும் மக்களாகிய நாம்தான், அதில் ஈடுபடாமல் விலகி நிற்கிறோம். தேவையில்லை என்று உதறுகிறோம். உண்மைதானே?

உண்மையாகவே, நீங்கள் கேட்ட கேள்வியை தனக்குள்ளாக, கேட்டு, உண்மை அறிய நினைத்தவர்களின் தாக்கம், அவர்களின் வாரீசுகளின் வழியாக ‘மெய்ஞானம்’ நோக்கி நகரவைத்தது. ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடை பெற தூண்டியது. குருவை தேடும் சீடனும், சீடனைத்தேடும் குருவும் இவ்வுலகில் இருந்துகொண்டுதான் உள்ளார்கள். அப்படியாக, ஒவ்வொரு தனிமனிதனும், தன் பிறவியின் நோக்கத்தையும், தன்னைக்குறித்த உண்மையையும் உணர்ந்து அறிந்துவிட்டால், தன்னிலையில் ‘விடுதலை’பெறுவான். இந்த உலகில், இயற்கையோடு இணைந்த, எங்கும் இன்பமே நிறைந்திக்கும் வாழ்வில், நிறைவாக வாழ்ந்து வருவான். அவனைக்கடந்து வரும் அவனின் தலைமுறைகளும் அதை, கடைபிடிக்கும். தனிமனிதன், குடும்பம், சமூகம், ஊர், நாடு, உலகம் என்று எல்லாமும் முழுமையாகும் என்பது உறுதி. இந்த நோக்கம் நிறைவேறிட, தனிமனிதனுக்கு உதவிட வந்ததே, இவ்வுலகில், யோக சேவையாக பல்வேறு மையங்களும், அதன் செயல்பாடுகளும் ஆகும். 

மாற்றத்தை தன்னளவில் பெற விரும்புவோர், தங்களை அங்கே இணைத்துக்கொண்டு உயரலாம். உண்மை விளக்கம் பெறலாம். அப்படியான மையங்களில் ஒன்றுதான், வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷியின் செயல்பாடும் ஆகும். அதுவே மனவளக்கலையாக, எளியமுறை குண்டலினி யோகமாகவும் மலர்ந்திருக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

How the practice of silence is the solution for the purity of mind?


மௌனம் என்பது மனதூய்மை பெறுவதற்கான பயிற்சி என்று சொல்லுகிறீர்களே? அது எப்படி என்று விளக்கம்தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மௌனம் என்பது மனதூய்மை பெறுவதற்கான பயிற்சி என்று சொல்லுகிறீர்களே? அது எப்படி என்று விளக்கம்தருக.


பதில்:

மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சி மவுனம்(Silence) 
ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும். அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.  மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்ட கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம். 

இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்?  நாம் கொடுக்கிறோம்.  நமக்கு இறைவன் கொடுத்த மௌனம் ஒன்று இருக்கிறது. அதுதான் ராத்திரியில் தூக்கம். அங்கே மறந்து விடுகிறோம்.  அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.  

எனக்கு வேலையில்லை.  அதனால் ஒரு மாதம் மௌனத்தில் உட்கார்ந்தேன். முடிந்தவர்கள் ஒருநாள் இரண்டு நாள் உட்கார்ந்தார்கள்.  சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது.  அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.

யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள்.  அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இதற்கு நேரம் தேவையில்லை.  இந்த மவுனத்தை எல்லோரும்பண்ண வேண்டும்.

ஒரு நாளைக்கு மவுனம் என்று சொல்லிவிட்டு  வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பத்துப்பேர் இருக்கிற  வீட்டில் நீங்கள் மௌனமாக இருந்தீர்களானால் அவர்களுக்கு அது பொருந்தாது.  ஒருத்தர் உட்கார்ந்து மௌனமாக இருக்கிறார்களே இருக்கட்டும் என்று அவர்களால் இருக்கவும் முடியாது. எப்படியாவது தொந்திரவு (disturbance) வரும். 

அப்போது ஒருவர் வந்து "ஐயா இருக்கிறார்களா?" என்று கேட்பார்.  "அதோ உட்கார்ந்து கொண்டு இருக்கு பாருங்கள்" என்பார்கள் !.  ஏன் என்றால் அவர்களுக்கு சுயகவனம் (attention) வேண்டும்.  அங்கே சுயகவனம் (attention) இல்லை.  ஆகையால் அனேகருக்கு வீட்டில் மௌனம் இருக்க முடியாது என்று எல்லோரும் சேர்ந்து "அறிவுத் திருக்கோயில்" என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் வரும்போது ஒருநாளைக்கு இங்கு வந்து மௌனம் இருக்கலாம்.  இந்தக் காலத்தில்தான் இருக்கலாம் என்று இல்லை.  இருப்பதற்கு இங்கு இடம் இருக்கிறது.  என்றைக்கு வந்தாலும் மவுனம் இருக்கலாம்.  

        நீங்கள் இரண்டு மூன்று நாள் மௌனம் இருக்கும்  வரைக்கும் மேலாக இருக்கிற அலையெல்லாம் வந்து கொண்டிருக்கும்.  போகப் போக ஆழமாகவுள்ள பதிவுகளெல்லாம் வரும்.  அதற்கும் மேலே போனால் இயற்கை உண்மைகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.

ஏனென்றால் நீங்கள் பேசாதிருக்கும் போது இறைவன் பேசுகிறான்.  இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.  அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் அதற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மவுனம் இருக்க வேண்டும். 

மவுனத்தை உணர்ந்து, அதன் பெருமையை, நன்மையை உணர்ந்து செய்யுங்கள்.  பிறர் கருத்தை ஒத்துக் கொள்ள முடியாதபோது அவர்களிடம் எரிந்து விழாமல் அந்த இடத்தில் மவுனமாக இருப்பது நல்லது.  எல்லோரும் தூங்கும்போது மவுனமாகத்தான் இருக்கிறார்கள்.  தூங்கும்போது மவுனமாக இருந்தால் அமைதி வந்துவிடுகிறதே தவிர அந்த அமைதியினால் அறிவு விருத்தி ஆவது இல்லை.  எனவே இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மவுனத்தில் அதன் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மவுனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி (Bio-Magnetic force) அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும்.  அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும்.  எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.  

இத்தகைய பெருமையெல்லாம் தரக்கூடியது மௌன நோன்பு.  இரண்டு நாள், மூன்றுநாள் என்று புள்ளி விபரம் (statistics) கொடுக்காமல் மவுனத்தில் சாதித்தது என்ன? என்று பாருங்கள். வீட்டிற்குச் செல்லும்போது மௌனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும். 

அப்படியில்லாமல் "நீங்க எங்கே போய்விட்டு வந்தீர்கள் எட்டு நாளா?.. என்றால், "நான் மௌனத்திற்காக அறிவுத் திருக்கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன்". "ஆமா, அறிவுத்திருக்கோயிலில் என்ன பண்ணினீர்கள்?"

"ஆ, அதையெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது".  உனக்குத்தான் ஒன்றும் புரியாது" என்று கூறி உடனே ஒரு சண்டை. இது என்ன மவுனம்?

அமைதியாக இருந்து இன்னும் இரண்டு தடவை யார் கேட்டாலும் சரி. அதற்கு நல்ல பதிலைச் சொல்லி, முடிந்தவரைக்கும் சொல்ல வேண்டும்.  முடியாதபோது நான் இன்னும் விளக்குகிறேன். மீண்டும் விளக்குகிறேன்.  என்று சொல்லலாம் அல்லவா?

 "மவுனத்தின் பயனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மவுனத்திலே ஒரு பெரிய ஆத்ம சக்தி உருவாவதை உணர வேண்டும்.

மனிதனுடைய கருமையத்தை தூய்மையான எண்ணங்களால் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஆயிரமாயிரம் பங்கு விளைவுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும். மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் மவுனம்.

வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்!
-

Is the human fate on the Horoscope or astrology chart and available solution for that?


ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?


பதில்: 

வானியலில் சூரியன், நிலவு இவற்றின் அருகாமையையும், தூரத்தில் தெரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டு மகிழ்ந்த மனிதன், அவற்றின் ஒளியையும், அவற்றின் அலைகளையும் அது தரும் தூண்டுதலையும் அறிந்து தொகுத்து தந்த விளக்கமே ஜோதிடம் ஆகும். பன்னெடுங்காலமாக, பல குறிப்புகள் வழியாக, ஜோதிட உண்மைகள் உலகில் நிலவிவருகிறது. ஜோதிடம் பெருங்கடல் என்று சொல்லுவார்கள். அதுபோலவே முழுமையாக எல்லாமே அறிந்த சோதிடர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வழியின்றி, அவரவர் அவர்வாழ்வில் கற்றுத்தேர்ந்த நிலையில்தான், ஜோதிட உண்மைகளை சொல்லிவருகிறார் என்பதுதான் உண்மை. பெரும்பாலான ஜோதிடர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும். 

ஒரு ஜோதிடம் என்பது, குழந்தை பிறக்கும் நேரத்தில், பூஉலகைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரகம், கோள்கள், நட்சத்திரங்களின் நிலை ஆகும். இதில் கரு உருவான நாள் முதலாகவே அவற்றின் அலைவீச்சு துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் அறியமுடியும். ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ப்பச்செல் என்ற கணக்கின் வழியாக இதை, ஜோதிடர்கள் குறிப்பார்கள். இந்த குறிப்புகள் வழியாக, எங்கும், எவ்விடத்திலும் அக்குழந்தையின் ‘தலையெழுத்து’ என்று எதுவும் இல்லை. அப்படியான தாக்கங்களை  கிரகம், கோள்கள், நட்சத்திரங்கள் தருவதும் இல்லை. தலையெழுத்து என்பது இல்லையானால், எல்லாமே பொய்தானே? என்ற எதிர்கேள்விக்கும் இங்கே இடமில்லை. மண்ணில் விதைக்கும் எந்த ஒருவிதைக்கும் கூட, எங்கோ இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் தூண்டுதலை தருகிறது என்று நிரூபிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு குழந்தையின் ஜாதக குறிப்பின் வழியாக, அக்குழந்தையின் இயல்பு, குணாதசியம், வளர்ச்சி என்பதை சொல்லமுடியும். அடிப்படையாக அக்குழந்தையின் ‘அக நிலை’ என்ன என்பதையும் சொல்லமுடியும். குழந்தை பிறந்த அந்த குடும்பத்தின், பரம்பரையின் சூழல் யூகமாக சொல்லவும் முடியும். கர்மா என்றா வினைப்பதிவுகளின் தொடர்ச்சியை கணித்தும் சொல்லமுடியும். என்ன மாற்றங்களை கற்றும், பழகியும், உலகியலில் நன்மையை பெறலாம் என்பதையும் சொல்லமுடியும்.

அந்த வகையில், ஒரு குழந்தையின் தலையெழுத்து, ஜோதிடத்தில் இல்லை. பரிகாரம் என்பதும் இல்லவே இல்லை. மனதிற்கு திருப்தி அளிப்பதாக, அந்த நேரத்திற்கு ஏதெனும் செய்யலாமே தவிர, வேறெதும் நன்மை இல்லை. பரிகாரம் என்பதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை. செயலுக்கு தகுந்த விளைவு என்ற இயற்கையின் நீதியில் இருந்து, தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

        ஜோதிடம் என்பது ஒரு குறிப்பு. ஒரு திட்ட வரையறை. இயற்கையின் பிரித்தறியமுடியாத, ஒரு பாகமாகவே உலகில், தாவரம் முதல் மனிதன் வரை எல்லா ஜீவன்களும் பரிமாற்றம் பெற்றவை என்பதை மறவாதிருங்கள். அந்த நிலையில் மனிதனுக்கு தன்னுடைய ஆறாம் அறிவின் முழுமையில் கிடைத்த ஒர் ஆராய்ச்சி தான் இந்த ஜோதிடம். இதை தவறாக பயன்படுத்துவோர் ஏராளம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம்.

வாழ்க வளமுடன்.

-

How I can relieve from the suffering, difficulties, tired and disappointments in life?


வாழ்க்கை முழுவதும் சோர்வு ஏமாற்றம் துன்பங்கள் நிரம்பியுள்ளன. அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. மேலும் சிக்கலில் வருந்துகிறேன். மாற்றம் பெறுவதற்கு வழி என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  என்னுடைய வாழ்க்கை முழுவதும் சோர்வு ஏமாற்றம் துன்பங்கள் நிரம்பியுள்ளன. அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. மேலும் சிக்கலில் வருந்துகிறேன். மாற்றம் பெறுவதற்கு வழி என்ன?


பதில்*:

இதற்கெல்லாம் காரணம் பிறரிடம் கற்பனையாகவே எதிர்பார்ப்பதுதான் (Imaginary Expectation). கற்பனை என்றால் அளவு மீறிய ஆசை.  அளவு மீறிய ஆசையை வைத்துக்கொண்டு அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும்  இன்னதைத் தரவேண்டும் இன்ன அளவில் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால்  அவரவர்களுக்கு அறிவு இருக்கிறது.  அவர் அவர்களுக்குத் தேவையிருக்கிறது. அவரவர்களுக்கு வாழ்க்கைச் சுதந்திரம் இருக்கிறது.  இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது. நமக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் நமக்கு அடங்கி நமது அதிகாரத்திற்கு உட்பட்டு நாம் சொன்னதையே செய்து கொண்டிருப்பார்களா? செய்வதே இல்லை செய்ய முடியாது செய்யவும் மாட்டார்கள்.

நாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து 'என் கணவர் இப்படித்தான் செய்ய வேண்டும்  இதைத்தான் செய்ய வேண்டும், இந்த அளவில்தான் செய்ய வேண்டும்.  என் மனைவி இதைத் தான் செய்ய வேண்டும்.  இதற்கு மேல் செய்யக்கூடாது என்ற அளவில் நமது ஆசையை முன் வைத்து எல்லை கட்டி கற்பனையை உருவாக்கிக் கொள்கிறோம்.  நிகழ்ச்சிகள் (செயல்) என்று வரும்போது இவர்கள் கற்பனையாக எதிர்பார்த்து இருந்தார்களே அதற்கு ஒன்றுகூட ஒத்து வராது. என்றைக்கு அமைதியாக இருக்க முடியும்? முடியாது.

ஆகையால்  எதிர்பார்ப்பதை அடியோடு விட்டு விட வேண்டும்.  அமைதி வேண்டும்  மகிழ்ச்சி வேண்டும்  நிறைவு வேண்டும் என்று சொன்னால் நான் சொல்லும் பயிற்சியைச் செய்து பாருங்கள். அதற்காகப் பணம் தேவையில்லை.  மனம் தான் தேவை.  தெளிவோடும் தீரத்தோடும் செய்ய வேண்டும். 

கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும்  மகனாக இருந்தாலும் தாயாக இருந்தாலும் அவர்களிடம் நான் எதிர்பார்க்க வேண்டியதே இல்லை. அவரவர்கள் செய்வதைச் செய்யட்டும். ஆனால்  மனைவி என்ற முறையில் கணவன் என்ற முறையில், மகன் என்ற முறையில் தாய் என்ற முறையில் வயதில், பொருளில், ஆற்றலில், அதிகாரத்தில் எந்த இடத்தில் இருக்கிறேன்? இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சிந்தனை செய்து அவரவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?  என்று உதவி செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் இன்னதை செய்ய வேண்டும் என்பது இல்லை.

அப்படி நீங்கள் எதிர்பாராது இருப்பதனால் உங்களுக்கு வர வேண்டியது நிற்காது வர வேண்டியது சரியாக வரும்.  அப்படி வரும்போது எதிர்பார்ப்பதில் ஒரு கற்பனை மூட்டையைக் கட்டி வைத்திருந்தோமே அதுவும் இதுவும் இடிபடாது.  என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வதற்கு அந்நேரத்தில் மனம் தயாராக இருக்கும்.

எந்நேரமும் கற்பனையான எதிர்பார்ப்பு என்ற ஒரே ஓர் வியாதியால் தான் இன்று மனித குலத்தில் துக்கம் சோர்வு துன்பம் பகை பிணக்கு எல்லாம் வருகின்றன. நான் என்ன செய்ய வேண்டும்? என்று கடமையை உணராது அதில் ஓர் உரிமை கோரும் போது துன்பங்கள் தான் வரும்.

மனிதனிடம் இருக்கும் அறிவைக் கொஞ்சம் சிந்தனையில் திருப்பிக் கொண்டு, எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, கடமை செய்வதில் முனைந்து நிற்போம். முயன்றால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் முழுமையான ஓர் மாற்றம் கிடைக்கும் அமைதி கிடைக்கும்.  அதாவது செல்வந்தனாக இருக்கக்கூடிய உணர்வு வந்துவிடும்.

எதிர்பார்ப்பவன் எப்போதும் பிச்சைக்காரனாகத்தான் இருப்பான்.  எந்த நேரமும் யார் என்ன கொடுப்பார்களோ? என்றுதான் இருப்பான். எதிர்பார்ப்பவனாக இயற்கை நம்மைப் படைக்கவில்லை. அத்தகைய முழுமையோடு இயற்கை நம்மை உண்டாக்கி வைத்திருக்கிறது.  நம்மிடம் எல்லாம் இருக்கிறது. கற்பனையான எதிர்பார்ப்பு சிறுமையைச் செய்து விடுகிறது. வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முதலாவது  -  எதிர்பார்த்தல் தவிர்ப்பது.

இரண்டாவது  -  பிறருக்கு என்ன செய்ய முடியும்? என்பது.

மூன்றாவது  -  எந்தச் செயல் செய்தாலும் அந்தச் செயலின் விளைவு பிறருக்குத் துன்பம் இல்லாது நட்டம் இல்லாது இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்வது.

இம்மூன்று கொள்கைகளைக் கடைபிடித்து மனதை வளப்படுத்தி குடும்பநலம் பெறலாம்.அப்போது உலகமே நம்முடையதுதான். பக்கத்தில் இருப்பவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லோருமே நண்பர்களாகத்தான் இருப்பார்களே தவிர எதிர்ப்பு என்பது இருக்கவே இருக்காது.

வாழ்க வளமுடன்.

*பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

How to control the unwanted thoughts that arise in the mind?


மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது தேவையில்லாதது எல்லாம் மவுனத்தில் உட்காரும் போது வெளியில் வரும்.  இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். 

இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன்,  இவரது பேரில் விரோதம் இருக்கிறது அது தேவைதானா? தேவையில்லை எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது. 

அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும்.  அப்போது மனம் தூய்மையாக இருக்கும்.  மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.

மனம் வெளுக்க மருந்து உண்டு:

வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மவுனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.

எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம்.  அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள்.  பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும். 

மவுன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மவுனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்.

-

What is the reason of body pain and disease on our lifetime?


நன்றாக இருக்கும் உடலில் தீடீரென வலியும், தொடர்ந்த நோயும் வருவதற்கு காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

        வாழ்க வளமுடன் ஐயா, நன்றாக இருக்கும் உடலில் தீடீரென வலியும், தொடர்ந்த நோயும் வருவதற்கு காரணம் என்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உடல் இயக்கத்தில் உள்ள நுட்பத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம், மன நலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். 

        அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். 

        அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகி விடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

        அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (Short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். 

        இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்தசக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். 

வாழ்க வளமுடன்

-

How we can act free from problematic activities with family members and others?


வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?

பதில்:

நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். 

ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?

 வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.

அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Why mind recalling at morning all that we like to forget before sleeping?


ஒரு நாளின் இரவில், தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளின் இரவில், தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது ஏன்?

பதில்:

ஓவ்வொருக்கும் இருக்கின்ற மனதின் தன்மையே அதுதானே? இயற்கையின் அற்புதம் இது. மேலு மனிதனும் மனமும் பிரித்துப்பார்த்திட முடியாது அல்லவா? உங்களை விடவும் மனம் எப்போதும் விழிப்பில்தான் இருக்கும். நீங்கள் மறந்தாலும் மனம் மறக்காது. அதுபோலவே நீங்கள் விரும்பும் பொழுதெல்லாம் அது எடுத்தும் காட்டாது. அதற்கென்று இயற்கை நியதி இருக்கிறது. அதன்படிதான் மனமானது செய்படுகிறது. இரவு தூக்கத்தில் மனம் இல்லை என்று யாராவது உங்களுக்கு சொன்னார்களா?  தூக்கத்தில் மனம் தன்னுடைய செய்ல்பாடுகளை குறைத்துக் கொள்கிறது என்பதுதான் உண்மை. இன்னொருவகையில், அது நடுமனமாகவும், ஆழ்மனமாகவும் கூட செயல்படுவதற்கான வாய்ப்புகள் அங்கே இருக்கிறது. உங்களுக்கு எழும் கனவுகளும், காட்சிகளும் அந்தவகைதான். இதை நடுமன, ஆழ்மன நிலைகளை மனசாட்சி என்றும் சொல்லுகிறோம்.

எப்போதும் நம்மோடு யாரும் துணை இருக்கமாட்டார்கள். அப்படி எதிர்பார்ப்பதும் தவறுதான். ஆனால் நம்மோடு நம் மனம் எப்போதும் இருக்கும். நாம் செய்வதையும், பிறர் செய்வதையும் கவனிக்கும், அதை பதிந்து வைக்கும். அவ்வப்பொழுது எடுத்துக் காட்டும். சரி தவறு என்பதெல்லாம் அதற்கில்லை. அதை சரி தவறு என்று தீர்மானிப்பதும், இனம் பிரிப்பதும் நாம்தான். நீங்கள் தனியாக கட்டளை இட்டு ‘இதையெல்லாம் பதிந்து கொள்ளாதே, கண்டும் காணாமல் விட்டுவிடு’ என்று சொல்லமுடியாது. தாஜா செய்யவும் முடியாது, மிஞ்சினாலும், கொஞ்சினாலும் உங்கள் மனம் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளாது. இயற்கையின் பெருநிதி அல்லவா?!

ஆனால் மனதின் துணை கொண்டு நீங்கள் வாழ்வது போலவே, அதனோடு இணைந்து ஆராய்ச்சி செய்து, உங்கள் வாழ்க்கையை சீர் செய்திட முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் உலகில் வழங்கப்படும் எந்த மன பயிற்சி கற்றாலும், மனதை மாற்றிடவோ, தள்ளிவைத்து பழகவோ, சும்மா இருக்கவிடவோ முடியவே முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படியென்றால் வேறு வழியே இல்லையா? என்று கேட்டால், யோகம் என்பது தான் சிறந்த வழி. ஆனால் இங்கேதான் யாருக்குமே யோகத்தில் ஆர்வமில்லையே? நேரடியாக ஞானம் வேண்டும் என்கிறார்கள், ஆனால் யோகம் தேவையில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். சரி அது அவர்கள் பாடு.

இரவில்  தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது இயல்பு. நீங்கள் என்ன செய்யலாம் என்றால், மறக்க நினைப்பதற்கு பதிலாக, என்னென்ன நடந்தது? அதில் என்ன தவறு நான் செய்தேன்? மற்றவர்கள் பங்கு என்ன? அதை நான் தடுத்தேனா? ஆராயாமல் ஏற்றுக்கொண்டேனா? தவறுக்கு காரணம் என்னவாக இருக்கலாம்? என்ற பல கேள்விகளோடு நீங்கள் ஆராய்ந்து பழகலாம். அது காலையில் ஏதேனும் ஒரு தீர்மானத்திற்கு, தெளிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. இது முழுமையான தீர்வு அல்ல, எனினும் கொஞ்சமாவது உங்களுக்கு பயன் தருவதற்கு வாய்ப்பு உள்ளது.

வாழ்க வளமுடன்
-

Is it okay by practice one meditation per day?


ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


பதில்:

வாழ்கின்ற இந்த உலகில், தனி மனிதராக இருந்தாலும், குடும்ப அமைப்பில் இருந்தாலும் அன்றாடம், பரபரப்பாக இயங்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்குமே உண்டு. எந்த வகையிலும் அதை தவிர்க்க முடியாது. சில விடுமுறை நாட்களில் கூட ஓய்வாக இருக்கமுடியாத சூழல் இருப்பதும் உண்மை. அப்படியான நிலையில்,  தவம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவதும் கடினமே.

பொதுவாக ஒரு நாளில், நான்கு தவம் இயற்றுவதற்கான் வாய்ப்புக்கள் உள்ளது. 1) அதிகாலை 2) முற்பகல் 3) மாலை 4) இரவு படுக்கைக்கு முன்பாக என்று பிரித்து விருப்பமான தவங்களை செய்யலாம், இரவில், மற்ற எந்த தவங்களையும் தவிர்த்து, சாந்தி தவம் மட்டும் செய்துவருவது சிறப்பு. அப்படியில்லை என்றால், அன்றைய உறக்கம் கெடும், உடலும், மனதும் துன்புறும் என்பது உறுதி.

என்றாலும், இன்றைய சூழலில், எனக்கு தவம் செய்யவே நேரமில்லை என்று ஒதுக்கிவிட்டு, உலகோடு ஓடாமல், ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்ய முடிகிறது என்பதே சிறப்புத்தான். அதற்காக பாராட்டவும் செய்யலாம். ஆனால், நம்முடைய உடலும், மனமும் ஓடுகின்ற பரபரப்பான ஓட்டத்திற்கு அமைதி கொடுக்கவும், யோகத்தின் வழியாக நாம் உயரவும், ஒரு நாளைக்கு ஒரு தவம் மிகதாமதமாகவே உதவும். உதவாது என்று சொல்லுவதற்கு வழியில்லை. எனினும் இந்த யோக பயணம் நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும். 

அதனால், வேலை நாட்கள் என்று எடுத்துக்கொண்டால், ஐந்து நாட்களுக்கு, நாளில் ஒரு தவமும், விடுமுறை நாட்களிலாவது, மூன்று முதல் நான்கு தவம் செய்வதற்கு திட்டமிட்டுக்கொள்ளுதல் சிறப்பானதாகும். அப்படியாக உங்கள் சூழலை மாற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம். இன்றே உடனடியாக திட்டமிட்டு தொடங்கிடுக. நிச்சயம் உதவிடும், மாற்றமும் வரும்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், நீங்கள் செய்கின்ற அந்த ஒரே ஒரு தவத்தை, அருகில் உள்ள நண்பர்களோடு, தவ மையத்தில் அன்பர்களோடு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் அதை பயன்படுத்திக் கொள்க. மிகுந்த பயன் தருவற்கு வழி உண்டாகும். மேலும் நீங்கள் வீட்டிலே அதை செய்வதாக இருந்தால், அதிகாலை என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவும். ஏதெனும் வகையில் அந்த அதிகாலைத் தவம், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு உங்களை செயலாற்ற  வைக்கலாம் அல்லவா? அப்படி சிறப்புற உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

How the yogi can understand the simply human problems and life struggles?


மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?


பதில்:

இதே கேள்வியை, இப்போது மட்டுமல்ல, எக்காலத்திலும் வாழும் மக்கள், அவர்களை வாழ்விலும், தரத்திலும், பிறவியிலும் உயர்த்த வழிகள் சொல்லும் உயர்ந்த யோகிகளை, ஞானிகளை, மகான்களை பார்த்து அப்படித்தான் கேட்கிறார்கள். இனிவரும் காலங்களில் வெகு சிலர் மட்டும் கேட்பார்கள். ஏனென்றால், இப்போது உலக அளவில் நல்ல ஆன்மீக முன்னேற்றம் வளர்ந்து பரவியுள்ளது என்பதே உண்மை.

குரு மகான் வேதாத்திரி மகரிஷியிடமும், இதேபோலான கேள்வியை, வெளிநாடுகளிலும், நம் இந்தியநாட்டின் நகரங்களிலும் அவரின் ஆன்மிக சொற்பொழிவும், மனவளக்கலை பயிற்சியும் அளிக்கும் காலங்களில், அவரிடமே நேரடியாக கேட்டிருக்கிறார்கள். 1986 ம் ஆண்டுகள் வரையிலும், அவர் ஆறு மாதங்கள் உலகநாடுகளில் ஆங்கில மொழிவழியான பயிற்சிகளும், டெல்லி,  மும்பை போன்ற இந்திய நகரங்களிலும் பயிற்சியை வழங்கிவந்தார். அதன்பிறகுதான் நிலையாக, ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் இருந்தே தன் பயிற்சிகளை வழங்கிவந்தார்.

‘ஒரு யோகியாக, எல்லாவற்றையும் விடுத்து, தனித்து வாழ்கின்ற ஒருவருக்கு, எங்களுடைய கஷ்டங்களெல்லாம் எப்படி தெரியும் என்றுதான் அன்பர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள். நான் ஒன்றும் நேரடியாகவே யோகியாக பிறக்கவில்லையே. உங்களைப்போலவே நானும் பிறந்து வாழ்ந்து, வாழும் பொழுதே குடும்ப கஷ்டங்களை அனுபவித்து, கல்வி படிக்க முயன்று முடியாமல், வேலை பழகி, இரவும் பகலும் உழைத்து, என்னளவில் பணம் சம்பாதித்து, இறை என்பது என்ன? ஏன் இந்த கஷ்டம்? என்ற கேள்விக்கு விடைதேடி அலைந்து, திரிந்து, யோகம் கற்றுக்கொண்டேன். ஒருவேலை பார்த்தால் போதாது என்று, கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வேலை பார்த்து சம்பாத்தியம் பெற்றேன். பார்க்கும் வேலையிலும் கிடைத்த மனம் ஒவ்வாத பிரச்சனைகளை சமாளித்தேன். சொந்தமாகவும், குழுவாகவும் தொழில் துவங்கி நடத்திய அனுபவமும் கண்டேன், அதில் நல்ல உயர்வும், தீடீர் நஷ்டமும் கூட உண்டுதான். இதற்கிடையில் திருமணமும் செய்துகொண்டேன். அதுவும் ஒன்றல்ல இரண்டு. அதில் கணவன் மனைவிக்கு இடையிலான குடும்ப பிரச்சனைகள், வருத்தம், கவலை, மகிழ்ச்சி எல்லாம் உண்டு. வறுமையும், செழிப்பும், வேலையும், வேலையின்மையும், உழைப்பும், அதற்கேற்ற உயர்வும், உதவியும், ஏமாற்றமும், தாழ்வும், பழிவாங்கப்படுதலும் இப்படியாக எல்லாமும் நானும் அனுபவித்திருக்கிறேன்’ என்றுதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தன்னுடைய பேச்சிலும், எழுத்திலும், கவிதைகளிலும் இத்தகைய குறிப்பை அவர் பதிவும் செய்திருக்கிறார்.

இதைவிட வேறென்ன வாழ்க்கை குறித்த அனுபவம் வேண்டும்? சொல்லப்போனால் நம்மையும் விட கொடுமையான வாழ்க்கை அனுபமாக அல்லவா இருக்கிறது? நாம் ஏதோ பராவாயில்லையே என்றுதான் நமக்குத் தோன்றும். பொதுவாக சொல்லுவார்கள் அல்லவா? இக்கரைக்கு அக்கரை பச்சை என்று, அதுபோல பார்ப்பதற்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அக்கரைக்குச் சென்றால்தான் அங்கேயும் இதேபோல வறட்சியும் உண்டுதான் என்று தெரியவரும்.  எப்போதும், யாரும், எவரும் எடுத்த எடுப்பிலேயே நீதி போதனை செய்யமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்களுடைய மனமே அவர்களை தண்டித்துவிடும் என்பது இயற்கை நீதி. வாழ்ந்து கெட்ட மனிதர் என்றொரு சொற்றொடரும் நாம் அறிவோம். அப்படியான வாழ்க்கை அனுபவத்தை பெற்றவர்தான் நமக்கு வழிகாட்டவும் முடியும். இப்படிப்போகாதே, பாதையில் முட்கள் இருக்கிறது என்று யாராவது போதனை செய்தால், நீ உன் வேலையைப்பார், எல்லாம் எனக்குத் தெரியும் நீ சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அந்த முட்பாதையில் கால்வைத்து நடப்பீர்களா? ஆனால் அப்படித்தான் இந்த உலகில் மனிதர்கள் பயணிக்கிறார்கள்.

ஆனால், உண்மையான ஞானியும், யோகியும், மகானும் ‘நான் சொல்லுவதை கடைபிடியுங்கள்’ என்று கட்டாயப்படுத்தவே மாட்டார்கள்.

வாழ்க வளமுடன்

-

In our life mind is very problematic, any easy solution for that? can we live without mind?


வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!

பதில்:

உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. மேலும் நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவர் என்பதும், ஏதோ ஓர் ஆர்வத்தில் உள்ளே காலடி எடுத்து வைத்துவிட்டதும் தெரிகிறது. விட்டால் வேறே எங்கேயாவது தப்பி ஓடிவிடவும் யோசனையாக இருப்பதும் யூகிக்க முடிகிறது. உங்களுக்கான தெளிவான பதிலாகவே தருகிறேன்.

மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன் என்று அர்த்தமாகிறது. மனதையும், மனிதனையும் பிரிக்கவே முடியாது. பிறக்கும் பொழுது இல்லாத மனம், மூன்று வயதிற்குப் பிறகு துணையாக நின்று, நாம் வாழும் காலம் வரை கூடவேதான் இருக்கும் பிரிவதே இல்லை. பிரிக்கவும் முடியாது.

வேதாத்திரிய யோகத்தில் இருக்கின்ற நீங்கள், உங்கள் மனதைக் கொண்டுதான் தியானமும், தவமும் செய்யமுடியும். அதே மனதைக் கொண்டுதான் புலன்களை கடந்து நிற்க முடியும், மனமே மனதை அறியச்செய்யவும் முடியும். அந்த மனதால்தான் நம்முடைய உயிரையும் அறியமுடியும். அதே மனதால்தான் உயிருக்குள்ளாக நிற்கின்ற அறிவை, மெய்ப்பொருள் நிலையாகவும் உணரமுடியும். அத்தகைய மனதை விட்டு விலகிவிடவும், சும்மா இருக்க வைக்கவும், தள்ளிவைக்கவும், தூரவைக்கவும் விரும்பினால் எப்படி அது நியாயமாகுமா?

உங்கள் வாழ்நாளில் உங்களை குழப்புவதே உங்களின் மனம் தான். ஏன் குழப்புகிறது? நீங்கள் அப்படி அதை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால், நான் எங்கேய்யா அதை வளர்த்தெடுத்தேன்? என்று என்னிடமே எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி நீங்கள் அதை செய்யவில்லை என்றால், உங்கள் தாய் தந்தையர், அவர்களின் தாய் தந்தையர், அவர்களின் அவர்களின் தாய் தந்தையர் இப்படி, பரம்பரை பரம்பரையாக செய்திருக்கலாம் அல்லவா? அதெல்லாம் எனக்கு ஏனய்யா வந்தது? என்கிறீர்களா? நீங்கள் தானே வாரீசு? உங்களிடம் தானே அது வந்து தங்கி நிற்கும்? சரிதானே?

அந்தவகையில் தங்கி நிற்பதெல்லாம், கர்மா என்ற வினைப்பதிவாக இருக்கிறது. அது எல்லாமே தீர்க்கவேண்டிய, அகற்றவேண்டிய, கழிக்கவேண்டிய பதிவுகள். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். அது இயல்பு. இயற்கையின் வினை விளைவு நீதி அதுவாகும். அதை நீங்கள், இந்த யோகத்தின் வழியாக, அறிந்து, திருத்தி அமைக்கவேண்டும். அதற்காகத்தான் தற்சோதனையும், அகத்தாய்வும் இருக்கிறதே? அதைச் செய்யலாமே?

இப்படி எதுவுமே முயற்சிக்காமல், மனதை புரிந்தும் கொள்ளாமல், வெறுமனே ஒதுக்கி வைக்கிறேன், தள்ளி வைக்கிறேன், சும்மா வைக்கிறேன் என்றால் அது நகர்ந்துவிடுமா? நீங்கள் விலக்க விலக்க இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். மேலே சொன்ன பயிற்சிகளை தொடருங்கள், தவத்தையும் தொடருங்கள், மனம் தெளிவு பெறும், நீங்களும் தெளிவு பெறுவீர்கள்.

வாழ்க வளமுடன்
-

Why no one give a solution for my problems? How I can get it?


எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?


பதில்: 

இது பொதுவான நிலைமைதான். மனிதர்களுடைய சிந்தனையும், செயலும், எதிர்பார்ப்பும் கூட ஒன்றாக இருந்துவிட நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனால் எழுகின்ற விளைவுகளும், பிரச்சனைகளும் தனித்தனியானவை தான் என்பது பிரபஞ்ச இயற்கை விதி என்றுதான் சொல்லவேண்டும். கூடவே ஒவ்வொரு தனிமனிதனிடம் உள்ளமைந்த, சமீபகால மக்கள் ஏற்றுக்கொள்ளாத, கர்மா என்ற வினைப்பதிவும் காரணமாக அமைந்து விடுகிறது.

இரண்டு நபர்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட, ஒரே வயது, ஒரே ஊர், ஒரே படிப்பு என்று பல ஒற்றுமைகள் இருந்தாலும் கூட அவர்களுக்கான பிரச்சனை என்பது, ஒரே மாதிரி இருப்பதே இல்லை. சிலர் பேசிக்கொள்ளும் பொழுது, ‘நான் நினைச்சேன், நீ சொல்லிட்ட’ என்று மகிழ்வோடு பாராட்டுவார்கள். அப்படியாக ஒருவர் நினைப்பதைக்கூட, பிறரால் சொல்லிவிட முடிகிறபொழுது, பிரச்சனை என்றால் மட்டும், தனித்தனியாகத்தான் பிறக்கிறது/ இருக்கிறது. மனிதனின் சிறப்பும் இதுவேதான்.

ஆனால் இதற்காக, ‘எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது' என்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சனைகள் பல இருந்தாலும், அவற்றை முதலில் ஒழுங்கு செய்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லா பிரச்சனைகளையும் ஒரே தொகுப்பில், அடுக்கில் வைத்துக்கொண்டு புலம்பக்கூடாது. தீர்க்கமுடியாதது, தீர்க்க முடிந்தது, தீர்க்கவேண்டியது, விட்டு விலக்கவேண்டியது என்று அதில் வகைகளை பிரிக்கவேண்டியதும் அவசியம். நீங்கள் அகத்தாய்வு எனும் தற்சோதனை பயிற்சி குறித்த விளக்கம் பெற்றிருந்தால், அதை செய்யமுடியும். ஒரு அரைநாள், இதற்காக ஒதுக்கிக்கொண்டு, துரிய தவம் இயற்றி, அதன் நிறைவில், ஒரு காகிதத்தில் வரிசையாக, ஒவ்வொரு பிரச்சனைகளாக எழுதிக் கொண்டு, அதை பட்டியலிட்டு, சீர்தூக்கிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான மனக்குறை, இந்த பயிற்சியின் வாயிலாகவே தீர்க்கமுடியும், பிரச்சனைகளின் தாக்கம் குறையும் என்பது உண்மை.

மேலும், ஒரு குருவோ, மகானோ, ஞானியரோ, இதை விளக்கிக் கொண்டிருக்கும் நானோ, தனியாக, ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஒன்றை சொல்லுவதற்கு வழியில்லை. நீங்கள் அவர்களை நேரடியாக பார்த்து கேட்டால்தான் உங்களுக்கான தனியான ஆலோசனையும், தீர்வும் அவர்களிடம் இருந்து கிடைக்கும். அது இல்லாமல், யாருமே எனக்கு தீர்வு தரவில்லை என்று வருந்துவதில் பயனில்லை. ஆனால், பொதுவாக கிடைக்கும் செய்திகளில், எழுத்துக் கட்டுரைகளில், கவிகளில், உண்மை விளக்கங்களில், பேச்சுக்களில் கூட உங்களுக்கான தீர்வு அங்கே பொதிந்து மறைந்து இருக்கும். இது உறுதியான உண்மையே. ஆனால் நாம்தான் எதையுமே ‘தனி கவனத்துடன்’கவனிப்பதே இல்லையே? பிறகு எப்படி நமக்கான தீர்வு கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்களை ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு காரணமாக, சந்திக்கும், பேசும், நபர்கள் வழியாகக்கூட உங்களுக்கான தீர்வு கிடைக்கலாம். நாம் தான் அதற்கு தயாராகாமல், விழிப்பாக இல்லாமல் இருப்போம். கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், பல வழிகளில் அந்த உண்மையை, வழியை, கருத்தை, ஆலோசனையை பெறாமல் இழந்திருப்போம்.

எனவே உங்களுக்கான தீர்வு கிடைக்க, தீர்வைப் பெற வழிகள் மூன்று உள்ளன. நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுங்கள், அகத்தாய்வு எனும் தற்சோதனை செய்யுங்கள், உங்களைச்சுற்றி நிகழ்வதை கவனியுங்கள். போதுமானது. நீங்கள் தெளிவு பெற, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்

-

I want to share my grievances with someone. How to solve this?


என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


பதில்:

உண்மையிலேயே வருத்தம் தரக்கூடிய கேள்விதான். என்றாலும் கூட இதை தீர்க்க எளியவழி உண்டு. உங்களின் வயது சொல்லவில்லை, எனினும் எல்லா வயதினருக்கும் இந்த பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. பருவ வயதினரும், நடுத்தர வயதினரும், வயது முதிந்தோர்க்கும் என்றவகையில், அவரவர்களுக்கான அளவில் மனக்குமறல்கள் உண்டு. முதலில் மனக்குமறல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். 

‘தான் நினைத்ததை, தான் விருப்பத்தை, தன்னுடைய நிலையை, தன்னுடைய திட்டத்தை, எதிர்பார்ப்பை சொல்லமுடியாமல், தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளுதல்’ என்பதுதான் மனக்குமறலாக நாம் கருதமுடிகிறது. இதன் அளவு அன்றாடம் கூடிக்கொண்டே போக, தன்னுடைய எந்தக்கருத்தும் செயல்படாது என்ற எண்ணமும் கூடி, மன அழுத்தம் அதிகமாகிவிடும். அந்த மன அழுத்தம், தான் வாழ்கின்ற வாழ்க்கையையே, அர்த்தமில்லாதாக மாற்றி, இனி ஒன்றுமில்லை என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது. அந்த நிலையில்தான், யாரிடமாவது இதை சொன்னாலாவது ஒரு ஆறுதல் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து பிறரிடம் சொல்ல துடிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, எல்லோருமே இத்தகைய மன அழுத்தத்தில் இருப்பதால், ‘ஏற்கனவே என்கிட்ட நிறைய இருக்கு, நான் வேறே உன் மனக்குமறலை கேட்டு வாங்கிக்கனுமா?’ என்ற சிந்தனையில் தவிர்த்து விடுவார்கள். நகர்ந்துபோய்விடுவார்கள்.

இத்தகைய மன அழுத்தம் காரணமாகவே, போதைப்பொருட்களை நாடுவதும், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவதும் நிகழ்ந்துவிடும். பொது கவனத்தில் இருந்து விலகி, தனிமையும் கூடி, மன அழுத்தம் தாங்காமல், இனி வாழ்வதில் பிரயோஜனம் இல்லை என்ற அளவில், தற்கொலை முடிவுக்கும் வந்துவிடுவதுதான் சோகம்.

உண்மைத்தெளிவு வந்துவிட்டால், இதற்கெல்லாம் அவசியமில்லை. முக்கியமாக, ஒரு ஆறுதலாக யாராவது இருந்தால் நல்லது என்ற நிலை சிறப்பு. ஆனால் அது யார்? இந்த கேள்வி உங்கள் முன் நின்றால், நீங்கள் உங்கள் குருவை தேர்ந்தெடுங்கள். நம்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் நம்முடைய குரு மட்டுமே என்பது உறுதியான உண்மை. யோகத்தில் இருக்கின்ற நமக்கு, குருவின் அக்கறையும், அணுசரனையும் உண்டு. எனவே மிக எளிமையாக, உங்களுக்கு ஆறுதல் தர குரு தயாராக இருக்கிறார்.

எப்போதுமே, உங்களுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதை கேட்கத்தான் வெளியிலே யாருமே தயாராக இல்லையே?! அதனால் குருவை மட்டுமே நாடுங்கள். தினமும் தவம் செய்து, அகத்தாய்வின் வழியாக, தற்சோதனையில் உங்களை பரிசோதனை செய்யுங்கள். உங்கள் மனக்குமறல்களை பட்டியலிடுங்கள். எதையும் விட்டுவிடாமல் எழுதுங்கள். ஒருவாரம், பத்து நாட்கள், ஒருமாதம் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் வெளியே கொட்டி, பட்டியலில் கொண்டுவாருங்கள்.

மீண்டும் தவமும் அகத்தாய்வும் செய்து, எதனால்? ஏன்? எப்படி இதை கடக்கலாம்? அவசியமானதா? அவசியமற்றதா? விட்டு விலகவேண்டியாதா? என்று கேள்விகள் கேட்டு பகுதி பகுதியாக பிரித்து அலசுங்கள். உண்மை விளக்கம் பெறுங்கள். உங்கள் குரு, ஆசிரியரிடம் தொடர்பில் இருங்கள். அவர்களின் ஆலோசனையை கேட்டு மாற்றம் பெறுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள். மன உறுதியோடு, இன்றே இந்த மாற்றத்தை துவங்கி வெற்றி காணுங்கள்.

வாழ்க வளமுடன்

-