CJ for You

Life and Sin


ஒரு மாலை என் இல்லம் திரும்பிக்கொண்டிருக்கிறேன். திருச்சி உறையூரின் பகுதி வழியாகவே செல்வது வழக்கம். திருச்சியின் பரபரக்கும் தில்லைநகர் எம்.எஸ். மணி சாலை வழியாக நான் வருவதில்லை.

காரணம் எந்த ஒரு வாகன ஓட்டிக்கும் சாலைபோக்குவரவு, நடைபயணிகள் பற்றிய அறிவு அறவே இல்லை. இதை நான் சொல்வதுபோலவே எல்லா வாகன ஓட்டிகளும் சொல்லுவார்கள் என்பது நிச்சயமான உண்மை...  நான் முந்தி, நீ முந்தி என்றும், கிடைத்த இடைவெளியில் நீ போகிறாயா, இல்லை நான் போகவா என்ற ரீதியில் முன்னே செல்பரை வேகப்படுத்தி தான் விரைய தயாராகின்றனர். நேரம் சேமிப்பதாக எண்ணி, வரிசையாக செல்லாமல், ஆட்டுமந்தையை விட மோசமாக படர்ந்து, சாலையில் எதிர்பக்கம் வரும் வாகனங்களை நிறுத்தி, தனக்கும் வழிகிடைக்காமல் நின்று, எதிர்வரும் அந்தவாகனமும் தன்னை கடந்துசெல்லவிடாமல் பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். இதில் ஒருவருக்கும்ப்பின் செல்லும் ஒரு நல்ல மனிதனையும் ஏளனம் செய்து பிரச்சனையை உண்டாக்குகின்றனர்.

எல்லோருக்கும் “தலை போகிற” அவசரம். அநியாத்திற்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று எஞ்சியிருக்கும் வாழ்க்கைக்கு முடிவுகட்டுகிறார்கள். இதிலே கைபேசி பேச்சும், தடவிக்கொண்டிருத்தலும் கூடவே.

சரி விசயத்திற்கு வரலாம்...



அப்படி என் வீட்டிற்கு வரும் வழியில் இரண்டு டாஸ்மாக் கடைகளிருப்பதால் நாம் கவனமாக வண்டியை செலுத்தவேண்டிவரும். இல்லையே யாரேனும் குடிமகன் மீது மோதவேண்டிவரும் அல்லது அவர்களே மோதிவிடக்கூடும். ஒரு கடை அகலமான சாலையில் இருப்பதால் இப்படியான சம்பவம் எனக்கு நேரவில்லை. இரண்டாவது கடை கொஞ்சம் குறுகலான தெருதான். அப்படிவருகையில் ஒருகுடிமகன் என்னை குறுக்கே கடக்க நினைத்தது கண்டு நான் என் வேகத்தை குறைத்து மெதுவாக செல்கிறேன். ஆனால் அந்த குடிமகன் மிக நிதானமாக குறுக்கே நடந்துசெல்கிறார். நான் அவரின் அருகே வந்துவிட்டதை கவனித்து....

“டேய்... நில்றா”அவர், அந்த குடிமகன்தான்!
நான் அப்படியே காலூன்றி நின்றேன்.  என்னை கடந்தும் சில வாகனஓட்டிகள் செல்ல நான் மட்டும் நின்றேன். அந்த குடிமகன் சாலை ஓரத்தில் வந்து, உறையூரின் வடக்குபக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நானும் மெல்ல நகர ஆரம்பித்தேன்...

என்னைப்பார்த்து சொன்ன அந்த வார்த்தை என் நினைவுக்குள் சுழன்றது... இவ்வளவு வாகனங்கள் கடந்துசென்றபோதும் என்னை கைகாட்டி சொன்னதின் அர்த்தம் என்ன? புரியாதுபோனாலும், அந்த வசையை எந்தக்கோபமும் இல்லாமல் நான் ஏற்றுக்கொண்டதுகுறித்து ஆச்சரியமாகவும் இருந்தது.

புத்தர் சொன்னதுபோல “ஏற்பின்றி தீ அண்டாது” என்பதாகவும், வேதாத்திரி மகரிஷி சொன்னதுபோல எனக்கான பழி இப்படியான வசை பெற்றுக்கொள்வதால், மொத்த பழிபதிவுகளில் ஒன்று அதன் தன்மை மாறுவதாகவும் நினைத்துக்கொண்டேன். ஓஷோ சொல்வதைப்போல யாரோ செய்தபழிக்கு நீ காரணமில்லாத நிலையில் அதற்காக வருந்துவதிலும், அதை திருத்தநினைப்பதிலும் காலம்கடத்தவேண்டியதில்லை என்றாலும்... நம் வாழ்க்கையிலே, நாம் வாழும்காலத்திலேயே கூட பெற்ற பழியாக இருக்கவும்செய்யலாம் தானே!

தொடர்வேன்...

Mango and Me


நினைவுகளை மீட்டும் மாம்பழம்


Mango Tree - Snap from web

என் புதிய அலுவலகத்தில் (வனீசா ஆர்ட் அகாதமி) உயர்ந்த ஒரு மாமரம் உண்டு. தன் பருவத்தில் நிறைய மாங்காய் தருவதுண்டு. நான் சென்ற வருடமிருந்துதான் அதன் காய்களை சுவைத்துவருகிறேன். எங்களுக்கு முன்பாகவே, அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆட்களை வைத்து நீண்ட கம்பு (தொரட்டி) வைத்து மாங்காய்களை பறித்துக் கொண்டு விடுவார்கள். அதுபோக மீதமிருப்பது இங்கே கிடைக்கும்.

நான் பருவத்தில் அதிகபட்சமாக 10 மாங்காய் வாங்கினாலே அதிகம். சில மாங்காய் பச்சடிக்கும், சாம்பருக்கும் போக, சாப்பிடவும் தீர்ந்துவிடும். மாமரம் பூ பூக்க ஆரம்பித்தாலே, காற்றில் மா வாசனை ஆளை இழுக்கும்... என் இன்னொரு அலுவலகத்தின் அருகில் மாமரம் இருந்தாலும், அதன் கனிகளை பார்க்க இயலுமே தவிர பறிக்க இயலாது. இத்தனைக்கும் நான் இருப்பதும் இரண்டாம் மாடி, மரமும் அந்த உயரத்திற்கு வளர்ந்தாலும் என் அலுவலக ஜன்னல் ஓரமாக வரும் கிளைகள் கைக்கெட்டா தூரத்திலேயே வளர்ந்துவருவது கவலைக்குரிய விசயம்தான்.

சென்ற ஞாயிறு, நான் என் புதிய அலுவலகம் வந்ததும், அப்போதுதான் விழுந்த நிலையில் இரு மாங்காய் அங்கொன்றும், இங்கொன்றுமாக தரையில் விழுந்துகிடந்தன. எடுத்துப்பார்க்கையில் நல்ல பழுத்த நிலையில் இருந்தன. ஆனால் வெளிப்புறம் கொஞ்சமும் மஞ்சள் கலக்காத பச்சை நிறத்திலேயே இருந்தன. இரண்டையும் எடுத்து கழுவிவைத்துக்கொண்டேன். இனி மதியம் சாப்பாட்டிற்கு இதை சாப்பிடலாம் என்று நினைத்தேன்.

அதுபோலவே அதை துண்டுகளாக்கி வைத்துக்கொண்டேன். மா கொட்டையும், அதை சுற்றிய தோலை அப்படியே விட்டுவிட்டேன். இது என்ன ரகம் என்று என்னால் வேறுபடுத்திப்பார்த்து எனக்கு பழக்கமில்லை. மாம்பழம் என்றால் மாம்பழம் என்றுதான் நான் பார்த்துக்கொள்வது வழக்கம். இதன் சுவை ஆஹா, அருமையாக இருந்தது. தானாக கனிந்த பழமல்லவா!. இந்த மாம்பழம் நான் சிறுவனாக இருந்தபொழுது, நான், என் தந்தை, சகோதரர், சகோதரிகள் ஆகியோரோடு இணைந்து தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட அந்த சூழலுக்கு என்னை கொண்டுசென்றது...

அதோடு, யாரோ ஒருவர் நட்டுவைத்த இந்த மாமரத்தின் கனியை நானும் உண்ணுகிறேன் என்ற எண்ணமும் எழாமலில்லை. இந்த உலகமே யாரோ செய்த உழைப்பின் பலனைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறது என்பது உண்மையோ உண்மை. இதனாலேயே நான் எனக்கான கடமையை சரியாக செய்யவேண்டியது அவசியமாகிறது. தானாக கிடைத்த இந்த மாம்பழத்தை ஆசீர்வாதமாகக்கூட நினைக்கத்தோன்றியது.


சில தகவல்கள்.
..

மாம்பழம் முன்னெல்லாம், மாங்காயாக வாங்கி ஒரு இருட்டு அறையில், வைக்கோல் புல்லுடன் சேர்த்துவைத்து, எதாவது வகையில் புகை மூட்டி வைத்து பழுக்கவைத்துத்தான் பார்த்திருக்கிறேன். மஞ்சளோடு, சிகப்பு, பச்சை கலந்து மாம்பழம் கூடையில் வைத்தோ, அழகாக அடுக்கியோ விற்பனைக்கு வைத்திருப்பார்கள். இப்பொதென்றால் கார்பைடு கட்டிகளை கட்டி மாங்காளோடு போட்டு செயற்கையாக, விபரீதமாக பழுக்க வைக்கிறார்கள். உடலுக்கு கேடுவிழைவிக்கும் முறை இது. பல ஆயிரம் கிலோ கணக்காக திருச்சியில் கூட, மாவட்ட ஆட்சியரே இதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, குப்பையில் கொட்டி அழித்து, அவர்கள்மீது குற்றமும் சுமத்துகின்றனர், எனினும் இது ஓவ்வொரு பருவத்திலும் தொடர்கதையாகவே நிகழ்கிறது.

இந்த மாங்காய், மாம்பழம் தோல் உண்பதில் சிலருக்கு ஒவ்வாமை. மிக நேர்த்தியாக தோலைமட்டும் சிறு கத்தியால் சீவி எடுத்து, அதன் பிறகு துண்டுபோடு உணவுக்கு வைத்துக்கொள்வர். என் நண்பரின் இல்லத்தில் இது வழக்கமான ஒன்று. ஆனால் மா ஒரு சக்கை பழம். தோலோடு சாப்பிடும்பொழுது அது ஜீரணத்திற்கும், குடலுக்கும் உதவும். சிலர் கொட்டைகளை சாப்பிடுவதில்லை. அதை சுற்றி கத்தியாலேயே அதன் சதைகளை எடுத்துவிட்டு எறிந்துவிடுவர். ஆனால் மா கொட்டைகளை தனியே சாப்பிடுவதில் ஒரு தனிசுவை இருக்கும். என்ன, சாப்பிடும்பொழுது வாயின்பக்கமெல்லாம் மா சதைகள் ஒட்டி, அதன் சாறு ஒழுகவும் செய்யும். பெரும்பாலும் நான் இப்படி சாப்பிடுகையில் யாரையும் கிட்டவைத்துக்கொள்ளமாட்டேன்  :-)

ஆனால் இந்த தலைமுறைதான் வெட்கமறியாமல், ஐஸ்கிரீம் வாங்கினால், பிசா வாங்கினால், கோக், ஆப்பி, ஆகியவற்றை ஸ்ட்ரா போட்டு வாங்கினாலும் கைக்கும் வாய்க்கும் அசைத்தபடி வெளியே அலைகிறது... குழந்தைகளும் லேஸ், சாக்லெட் பார், ராப்பர் பார் என்றெலாம் வாயில் அதை ஒழுகவிட்டவாறே திரிகின்றனர். ஒருவரேனும் மாம்பழம் சுவைத்தபடி இல்லை...

ஒருவேளை ஒருவருக்கும் தெரியாமல் என்னைபோல சுவைத்து சாப்பிடுபவர்களாக இருக்கலாமோ!?


தொடர்வேன்...





Facebook and Duty


நீண்ட நாளுக்குப்பிறகு...

என் கேரிகேச்சர்லைவ்ஸ் (Caricaturelives - www.caricaturelives.com) நிறுவனத்திற்கான வலைத்தளம் மாற்றிஅமைக்கவேண்டியிருந்ததால் கொஞ்சம் இடைவெளி. கிடைக்கும் நேரத்திலும் பேஸ்புக்கில் ஆழ்ந்துவிடுவதாலும் இங்கே பதிவுகள் இடாமல்போயிற்று. பேஸ்புக்கின் வாயிலாக நம் நண்பர்களும், நிறைய ரசிகர்களும் எப்பொழுதும் இருப்பதால் நம் பதிவுகளுக்கான பாராட்டும், வசையும் அங்கேயே கிடைத்துவிடுகின்றன. ஓவ்வொரு நாளும் புதியநாளாக, புதுப்புது பதிவுகளோடு எல்லோரும் வலம் வருவதால் இந்த நாட்கள் அப்படியேவும் கடந்துவிடுகிறது.



ஆனால் சில ஆர்வக்கோளாறுகள், எளிதில் உணர்ச்சிவசப்படுவோர், எழுத்துமூலம் திடீர்விளம்பரம் தேடுவோர், சமய, மத, நாடு, இனம், சாதி, ஆண்பால், பெண்பால், நடிகர், நடிகை, திரைப்படம், அரசியல், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியம், இலக்கியவாதிகள் இப்படி கிடைக்கும் எல்லாவற்றிலும் புகுந்து, இவற்றிலான சண்டைகள் மூலம் தன்னை நிரூபிக்க நினைக்கும் சிலர், குழப்பம் விளைவிக்க நினைக்கும் சிலர் செய்யும் பதிவுகளாலும், விளம்பரங்களாலும் பேஸ்புக் நம்மை சோர்வடையவைப்பது உண்மைதான்.

என்னைப்போல சிலர் தொழில்ரீதியாகவும் செயல்படுகின்றனர். சிலர் ஓய்வுநேரத்தை பயன்படுத்தியும், சிலர் தன் அலுவலகத்தின் இடைஞ்சலுக்கு நடுவேயும் பேஸ்புக்கில் செயலாற்றி சந்தொசமோ, துக்கமோ அறுவடை செய்கின்றனர். வாழ்வில் இழந்த நட்பை அங்கே பெறமுடிகிறது, புதிதாக நட்புக்கொள்ளமுடிகிறது, நீண்டநாள் பழகிய நிலைக்கு சென்று அவர்களோடு கலந்துரையாடமுடிகிறது. இதுவே இன்னும் நம்மை பேஸ்புக்கில் ஒட்டவும், ஓடவும் வைத்துக்கொண்டிருக்கிறது.

தொடர்வேன்...

Drawing-Master-Helps


என் பகுதி நேரத்தில் Vaneesa Art Academy ல் ஓவிய ஆர்வமுள்ளோர்க்கு ஓவிய வகுப்புக்கள் நடத்திவருகிறேன்... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து பாடங்கள் பயிலுகிறார்கள்....

இங்கே, தினமும் என்னை சந்திக்க வரும் நபர்களிடமிருந்து கிடைக்கும் அனுபவங்கள் ஓவ்வொரு விதமாக இருக்கும்...

அதை நீங்களும் பாருங்களேன்...










swindle-the-artist


ஓவியரை ஏமாற்றும் வித்தை

என் வாடிக்கையாளர்கள், (Customer) கஷ்டமராக மாறிவிடுவர். எப்படி ஒரு தேள் தன்னை காப்பற்றுபரைக்கூட தன் கொடுக்கால் கொட்டி வலியையும், விஷத்தையும் தருமோ, அதுபோலவே நானும் கடிபெற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைதேடிவரும் ஓவ்வொரு தேள்களால்...

அது என்னுடைய தவறுதானே!

ஒரு வேலைகொடுத்தால், அதை ஆர்வத்தோடுதான் செய்யவிழைவது வழக்கம். இதற்கு இவ்வளவு பணம் கொடுத்தால்தான் செய்வேன், செய்யமுடியும் என்று சொல்லுவது என் வழக்கமில்லை...

சிறிய, பெரிய நிறுவனங்களும், சில தனிமனிதர்களும் தான் கேட்டவேலைகள் செய்துமுடித்தபின்னரே அதற்கான பணத்தை காசோலைகளாக தருவது வழக்கம். இதற்கு கிட்டதட்ட 15 நாட்கள் நான் காத்திருக்க வேண்டியதுவரும். அப்படியும் சிலர் காசோலையோ, அல்லது தாமதத்திற்கான பதிலோ கூட தருவதில்லை...


செய்துகொடுத்த வேலைக்கான கூலி, நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சொன்னது போல “உஊஊஊ” தான்...

இந்த ஓவியம் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கானது...



ஆனால் இதனாலெல்லாம், இந்த மனிதர்களாலெல்லாம் நான் சலிப்படைந்துவிடுவதில்லை... மக்களில் சிலர் அப்படித்தான் இருப்பார்கள்... இவர்களுக்காக நல்ல மனிதர்களை இழக்கமுடிவதில்லை. ஓவ்வொரு முறையும் நான் கவனமாக இருக்க நினைப்பதும், பிறகு ஏமாற்றபடுவதும் தொடர்கதை...

அதில் நிறைய ஓவியங்களும், என் உழைப்பும், நேரமும் வீணாகபோயிருக்கின்றன. இந்த கார்டூனும் இதில் சேர்த்திதான்... கார்டூன் என் பணி இல்லை என்றாலும், செய்வதில் ஆர்வமிருந்ததால் “கேட்ட ஒருவருக்காக” செய்தேன்... இதுவரை ஒரு பதிலும் இல்லை...






இதில் வேடிக்கை... இந்த கார்ட்டூன் அந்த அரசியல் தலைவர்களை படம்பிடித்து காட்டவில்லை என்றும் எனக்கு பதில் கிடைத்தது...

ஆக நான் இன்னமும் பாடம் படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படி ஏமாறக்கூடாது என்று, ஓவ்வொரு ஏமாற்றப்படுவதிலும்.

You-are-sexiest


இந்த உலகம், இணையதளங்களால் ஒரே கிராமமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இணையத்தில் இருக்கிற சமூகவலைத்தளங்கள் இந்த சேவையை சிறப்பாக செய்துவருகின்றன...



முதன்மையாக பேஸ்புக்... எனக்கு இரண்டு பெயர்களில் கணக்கு இருக்கிறது. Caricaturist Sugumarje, Sugumarje Caricaturist என்று மட்டுமே. என் ஓவியங்களும், என் கருத்துக்களும், பின்னூட்டங்களும் இதில் வலம் வந்துகொண்டிருக்கிறது... எனக்குப்பிடித்த கருத்துக்கள் இருந்தால் அதை என் பக்கங்களில் பகிர்ந்துகொள்வதும் உண்டு... நான் ஓவியன் என்பதால், என் ஓவிய நண்பர்கள், வளரும் ஓவியர்கள் எனக்கு தன் ஓவியங்களை தெரிவிப்பார்கள். அதில் என் கருத்துக்கள் இடம்பெறும்.

66A தீவிரமாக்கப்பட்ட பிறகு என் கருத்துக்களை பல முறை சோதனை செய்தபிறகே பதிப்பது வழக்கம். நான் ஓவியராக இருந்தபோதும் அரசியல், தனிமனித நையாண்டி தவிர்த்துவருகிறேன்... பொதுவாகவே சிரிப்பை மறந்த நம் மனிதர்களுக்காக, மனதை பாதிக்காத வகையில் கேலி, கிண்டல் செய்து பின்னூட்டமும், தகவலும் தருவது என் வழக்கம். ஆனபோதிலும் அதை தவறாக சுட்டிக்காட்டினால் அதை அழித்துவிடவும் தயங்குவதில்லை.

சமூக வலை என்பதால், எந்த நாட்டினரும் நம் நண்பராகும் சாத்தியம்  நிறைவேறுகிறது. அப்படி சில பெண் நண்பர்களும் என் நட்புவட்டத்தில் இருக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் எந்த பதிவையும் நான் செய்ததில்லை. சில் நண்பர்கள் ஒருசில அரைகுறை பதிவு போட்டால் அதையும் அவர்கள் பக்கமே கேலி செய்வதுண்டு. முரண்பாடான படங்களோ, கருத்தோ என் நட்புக்களில் காணப்பட்டால், என்னை தொடரும் பெண் நண்பர்களுக்கும் பாதிக்குமே என்பதால், அதை சுட்டிக்காட்டி திருத்தமுயல்வேன். இல்லையேல் என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிடுவேன். அப்படியான ஒருவரை என் நட்பாக இணைப்பதும் இல்லை.

ஒரு பெண் நண்பர் தன் ஒளிப்படங்களை பதிவிட்டபோது, வழக்கம்போலவே வேடிக்கையாக...

 “உங்கள் முகம் தெளிவில்லாமல் இருக்கிறது?!”
 “நீங்கள் ஏன் நல்ல போட்டோகிராபரை தேர்ந்தெடுக்க கூடாது?”
 “இதில் அழகாக இருக்கிறீர்கள்!”
 “இந்த போட்டொவில் இருப்பது நீங்களா? அடையாளமே தெரியவில்லை”

இப்படியெல்லாம் பின்னூட்டமிட்டிருந்தேன்... இந்த வாரத்தின் முதல்நாள் அந்த பெண் நண்பர் தன் பக்கத்தில் பதிக்கிறார்...

“சிலர் என் ஒளிப்படத்தில் எனக்குப்பிடிக்காத சிலவற்றை பின்னூட்டமிடுகின்றனர். எது சொன்னாலும் சந்தேகம் அவர்களுக்கு... நான் இறைவனை வணங்குகிறேன்... இனிமேல் அவர்கள் என் ஒளிப்படங்களின் மீது ***** ***** நிறுத்திக்கொள்ள வேண்டும். 

இனிமேல் இப்படி செய்தால் அவர்களை நீக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. என் தனிவாழ்க்கையில் நுழைய இவர்கள் யார்?

**** ***

இப்படி சொன்னதிற்கு மன்னிக்கவும்!”

இதற்கு நான் “இப்படி செய்வது வருந்ததக்க ஒன்று... அவர்களை நீக்கிவிடுங்கள்” என்றேன்..

அதற்கு அவர் “இந்த கூட்டத்தில் நீயும்தான் இருக்கிறாய்... இதை சொல்ல வருத்தமாக இருக்கிறது” என்றார்.

இதை படித்தவுடன், நான் “சரி, இனி இவரிடமிருந்து விலகிக்கொள்ளலாம்” என்று முடிவு செய்து, அந்தப்பக்கம் இனி போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்...

ஒரு அரைமணிக்குப்பிறகு என் தகவல் பலகைக்கு, அந்த பெண் நண்பரே பேச ஆரம்பித்தார்...

என் மீது குற்றச்சாட்டை அடுக்க ஆரம்பித்தார்.... கடைசியாக... “நட்பாக இருப்பதென்றால் இரு, இல்லையேல் வெளியேறு” என்றார்...

“சரி. இனிமேல், இந்த நொடிமுதல் நான் உங்கள் நண்பரில்லை. வணக்கம்” சொல்லிவிட்டு அவரை எந்தகாரண,கருத்தும் சொல்லாது என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிட்டேன்....

கடைசியாக அவர் சொன்னது இதுதான் - “You are a Sexiest!"


Pen-ink-gift-caricature


Personal Caricature - Free Gift to facebook friends
by Caricaturist Sugumarje