CJ for You: energy particle

energy particle

Showing posts with label energy particle. Show all posts
Showing posts with label energy particle. Show all posts

Do you know the true secret of the great life force you receive? Do you know how to protect it?


உங்களுக்கு கிடைக்கும் மகத்தான உயிர்சக்தியின் உண்மை ரகசியம் அறிவோமா? அதை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?


இந்த உலகில் நிலையாக இருப்பதை, அசையாமல் இருப்பதை பொருள் என்கிறோம். ஆனால் அசையும் ஒவ்வொன்றையும், உயிர் என்று அழைக்கிறோம். அசையும் ஒரு கருவிக்கு, மின்சாரம் என்ற சக்தி அவசியமாகிறது. அதுபோல ஜீவன்களுக்கு, உயிர் சக்தி அவசியமாகிறது. மனிதனுக்கும் அவ்வாறு தான். எனினும், மனிதனுக்கு மட்டுமே அந்த சக்தியை, இன்னும் அதிகமாக கூட்டிக்கொள்ளவும், இருப்பாக்கி வைக்கவும் முடிகிறது. இந்த சக்தியால் தான், நாம் தினமும், இயங்குகிறோம், உழைக்கிறோம், சேவை செய்கிறோம், இன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சக்தி நான்கு வகையாக கிடைக்கும். 

நாம் உண்கின்ற உணவு வழியாகவும், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், வானில் உலாவுகின்ற நட்சத்திரங்கள், கோள்கள் வழியாகவும், பூமியின் மையத்தில் எழுகின்ற அணுக்களின் வழியாகவும், உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது. இதை நாம் தினமும், உடலுக்குள்ளாக தக்கவைக்க வேண்டும் அல்லவா? அதற்காகவேதான், தூக்கம் என்பது அமைகிறது. அந்த தூக்கம் ஆழ்ந்த அமைதியான, கனவுகள் இல்லாத, அரை விழிப்பு இல்லாத, தூக்கமாக இருக்க வேண்டியது அவசியம். உயிர் சக்தியை கூட்டுவது மட்டுமில்லாமல், நம்முடைய சக்தி இழப்பையும் கூட, தூக்கம் சரி செய்கிறது.

இந்த உயிர்சக்தி, நமக்கு இருப்புக்கு மேலே இருந்தால், மகிழ்ச்சி என்பது உங்களோடு இருக்கும். கவலை, வருத்தம், சோர்வு, அசதி, வலி இப்படி எதுவுமே உங்களை அணுகாது. அதோடு யாருக்காவது உதவலாமே? என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். முதலில் நீங்கள் மகிழ்வாக, சந்தோசமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மற்றவர்களை சந்தோசப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி மகிழலாம். அன்பை பெருக்கலாம். உங்கள் நண்பரோடு நட்பை பாராட்டலாம். சமூகத்திற்கும் உங்களுடைய பங்கை அளித்து, நீங்களும் பயன்பெறலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.

ஆனால், நாம், ஏற்கனவே இருக்கிற, உயிர்சக்தியை இழந்துகொண்டே, ஒவ்வொரு நாளும் தடுமாறுகிறோம். தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். காரணமில்லாமல் சினம் கொள்கிறோம். நம்மோடு இருப்பவர்களிடமே கோபத்தை காட்டுகிறோம். அடிக்கடி கவலை, குழப்பம், தடுமாற்றம் நிகழ்கிறது. உடல் சோர்வாக இருக்கிறது. மிச்சமிருக்கும் சக்தியை, ஆர்வத்தாலும், ஆசையாலும், எதிர்பார்ப்பாலும், தவறாகவும் பயன்படுத்தி, சிக்கிக் கொள்கிறோம். வாழ்வே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம் தானே? இதற்கெல்லாம் ஒரே வழி, உயிர்சக்தி விளக்கமும், சிந்தனையுமே ஆகும்.

வாழ்க வளமுடன்.

The truth explanation of the first elements of Akash in the panjaboothas system


பஞ்சபூத தோற்றத்தின் முதல் தோற்றமான ஆகாசம் (Space) என்பது குறித்த உண்மை விளக்கம் என்ன?


ஆகாசம் என்பது பஞ்ச பூத தோற்றத்தில் முதன்மையானது ஆகும். அதுவே தமிழில் விண் என்று சொல்லுகிறோம். இதன் இன்னொரு சிறப்பு பெயர்,  உயிர் ஆகும். ஆனால் அது ஜீவன் என்ற உயிரினங்களில் மட்டுமே இருக்கும் நிலையாகும். இந்த ஆகாசம், பல்லாயிரம் கோடி, பரமாணுக்கள் கூடிய ஒரு தோற்றம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆகாசம் சுழன்றுகொண்டே இருக்கக்கூடியது. நிறை மற்றும் எடை அளவில் மிகவும் லேசானது. கண்களுக்கும், கருவிகளுக்கும் எட்டாதது. ஆனால், மனிதன் தன் மனதால், அறியக்கூடியது. சித்தர்கள், இதை சித்து என்றழைத்தனர்.

இந்த ஆகாசத்தின் சுழற்சியினால்தான், அதன் மையப்பகுதியில் இருந்து, காந்தம் என்பது உருவாகி, விரிவலையாக வெளி வருகிறது. பொதுவாக இந்த ஆகாசத்தை, மூன்றாக பிரித்திருக்கிறார்கள். ஒன்று, மகா காசம். இரண்டு, பூதா காசம். மூன்று, சித்தா காசம்.  இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது மகா காசம். இதுதான் வான் காந்தக்களம் என்பதாகும். அதே ஆகாசத் துகள்கள் பொருட்களில் மடிந்தியங்கும் போது, அதைப் பூதா காசம் என்று சொல்கிறோம். அதுவே உயிர்களின் உடலில் எல்லைகட்டி இயங்கும்போது, அதைச் சித்தா காசம் என்கிறோம். 

நம்முடைய உடல், பஞ்ச பூதத்தின் கூட்டு. பிரிதிவி என்ற கெட்டிப்பொருள், மண் நம்முடைய, உடலாகவும். அப்பு என்ற நீர் என்பது இரத்தமாகவும், தேயு என்ற வெப்பம் என்பது உடல் நடத்தும் சூடாகவும், வாயு என்ற காற்று என்பது பிராண சக்தியாகவும், ஆகாசம் என்ற விண் அல்லது உயிர் எல்லாவற்றையும், இணைத்து இயக்கும் சக்தியாகவும் இருக்கிறது. கூடுதல் சக்தியாக, ஜீவகாந்தம் உருவாகி, மனமாக இருக்கிறது. அந்த மனதைக் கொண்டுதான், யோகத்தின் வழியாக, இந்த உண்மைகளை நாம் அறிந்து கொள்கிறோம். மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தையும் பெறுகிறோம்.

வாழ்க வளமுடன்.

Is there such a thing as fate? Is it true that wisdom can conquer fate?


விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?


பதில்: 

இதற்கு முன்பாகவும், பலவிதமாக இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளேன் எனினும். மீண்டும் சொல்லுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இங்கே குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களின் கவிதையின் கருத்தாக, எனக்கு கிடைத்த உண்மையைக் கொண்டு விளக்குகிறேன்.

        விதி என்பது இயற்கையின் நியதி ஆகும். நியதி என்பது என்ன? அடிப்படையாக இருப்பது என்று அர்த்தமாகிறது, அப்படியானால் விதி இருக்கிறதா? என்றால் அது நிச்சயமாக இருக்கிறது என்பது ‘அடித்துச் சொல்லக்கூடிய்’ உண்மைதான். ஆனால் அதைபின்பற்றி ‘தலையெழுத்து’ ஒன்று இருக்கிறது. அதன்படிதான் நீ வாழ்வாய் என்றால், நம்பாதீர்கள். விதி உண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் தலையெழுத்து என்பது இல்லவே இல்லை.

இந்த விதி எங்கே தொடங்குகிறது? என்று ஒரு கேள்வி எழுந்தால், அது, பஞ்ச பூதத்தின் முதல் பரிணாமத்திலேயே உருவாகிவிட்டதாக, மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். பரமாணுக்களின் கூட்டாக விண் என்ற ஆகாஷ் உருவான பொழுதே, அதனூடாக விதி என்பது அமைந்திருக்கிறது என்கிறார். அந்த விண் மிகமிக விரைவான சுழற்சி கொண்டது. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையில் இருப்பதும் ஆகும். அதனைத் தொடர்ந்த அடுத்த பரிணாமான காற்றையும் நாம் காணமுடிவதில்லை. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத விண் என்ற ஆகாஷ் தான், ஜீவன்களிலும், மனிதரிடத்திலும் ‘உயிர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருக்கிறது. அதன் உள்ளடக்கமாக தோற்றம், இருப்பு, கலைதல் என்ற மூன்று கட்டமாக விதியை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அது அதனுடைய இயற்கை தன்மையாகவும் உள்ளது. இங்கே விதி என்பதை பார்த்தோம்.

அந்த விதியை கொண்டிருக்கும் உயிர், தன்னுள்ளே, அதன் மையப்புள்ளியிலே அறிவாக, உணரும் ஆற்றலை பெற்றிருக்கிறது அல்லவா? அதுவே மதி என்றும் மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார். (உங்களுக்குப் புரிகிறதா? என்று நான் கேட்கவே மாட்டேன். புரிகிறதா என்று கேட்பவன் விளக்கத்தெரியாத முட்டாள்) இதை இன்னும் விளக்கமாக, எப்படியாக புரிந்துகொள்ளலாம் என்பதையும் பார்க்கலாமா? தனக்குள் விதி என்ற இன்று இருப்பதால், அந்த விண் என்ற ஆகாஷ் துகள் நின்றுவிடவில்லை, அழிந்துவிடவில்லை.தனக்குள் அமைந்திருக்கும் அந்த விதியை மீறி, அதனூடாக இருக்கும் மதியின் வழியாக, தன் வாழ்நாளின் தன்மை கருதி, திட்டமிட்டு, அதற்குள்ளாக, தன் காலத்திற்குள்ளாக, பலகோடி துகள்களோடு கூடி, அணுக்களாகவும், தன்னைப்போன்ற பல உயிர்த்துகளோடும் கூடியே,  மூலக்கூறுகளாகவும், தோற்றங்களாகவும், பொருட்களாகவும், ஜீவன்களாகவும், மனிதராகவும் வந்து நிற்கிறதே? அது விதியைக்கடந்த மதியின் செயல் அல்லவா? அதை நாம் ‘பஞ்சபூத நிலையிலேயே’ புரிந்துகொள்ள வேண்டும் என்று, குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்கு உணர்த்துகிறார்.

விண் / ஆகாஷ் / உயிர் ஆகிய இத்துகளே, விதியை மதியால் வென்று வெற்றிபெறும் பொழுது, அந்த உயிரைக்கொண்டே உலகில் வாழும் நாம், நம்மை விதியின் கீழ், குறைபட்டுக் கொள்ளலாமா? கவியின் கருத்து வழியாக, சொன்ன இத்தகைய விளக்கம் உங்களுக்கு, உண்மையை தந்திருக்கும் என்று நம்புகிறேன்.

-

வாழ்க வளமுடன்.

-

How to understand the pattern, precession and regularity?


தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        நாம்  வாழும் இந்த நவீன அணுவியல், வானியல் விஞ்ஞான உலகில், மேட்டர் என்ற நிறையையும், எனர்ஜி என்ற ஆற்றலையும், தனிப்பட்டு விளக்கிட முடியாமல், இருப்பதை அப்படியே ஏற்று, எல்லாவகையான முன்னேற்றங்களையும் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆன்மீக வழியில், உண்மை உணர்ந்த மெய்ஞானிகள், இந்த மேட்டர் மற்றும் எனர்ஜியில் என்ன உள்ளது என்பதையும், அதை எப்படி உணர்ந்தும் கொள்ளலாம் என்றும் விளக்குகிறார்கள். இதோ வேதாத்திரி மகரிஷி, அதனில் இருக்கும் உள்ளடக்கத்தை விளக்குகிறார்.

உலகம் என்று எடுத்துக்கொண்டால், அதன் அளவு என்ன? இரசாயனங்களில் அளவு என்ன? என்பதனை இன்றுள்ள விஞ்ஞானிகள் ஓரளவிற்கு உணர்ந்துள்ளார்கள். அந்தக் காலத்தில் இருந்தவர்களும் ஓரளவிற்கு இந்தக் கிரகத்தில் இன்னின்ன சக்தி அதிகம் என்று சொல்லியிருக்கிறார்கள். எந்தப் பொருளால் ஒன்று ஆக்கப்பட்டதோ அது அதன் தன்மை. 

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரு சுற்று தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனைச் சுற்றும் பாதையில் மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சென்று 365¼ நாளில் அதை வலம் வருகிறது. இது சிறிதும் காலம் தவறாமல் சரியாக அமையும். இதுவே அதன் துல்லியம். 

இரசாயனப் பொருட்களிலுள்ள நுண்ணணுவின் சுழல் விரைவுக்கேற்ப காந்தத் தன்மாற்ற வேறுபாடுகள் உண்டாகின்றன. அதே விண்துகள்களின் சுழல் விரைவுக்கேற்ப அதன் திணிவும் வடிவமும் அமைகின்றன, இதுவே வடிவம். 

        பரமாணு நிலையிலிருந்து அவை கூடி ஒரு சிறு வடிவமாக மாறி, குறிப்பிட்ட விரைவில் இயங்கும்போது ஏற்பட்டு மாறிக்கொண்டே வரும் ரசாயனத் தன்மைகளும் மற்ற சிறப்புகளும் துல்லியம் அல்லது தன்மைகள் ஆகும். 

இந்த இயக்க நியதி மாறாது. பூமி தன்னுடைய மற்ற இயல்பூக்கத்தையும் நடத்திக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. இச்செயல்பாட்டைத்தான் இயக்க ஒழுங்கு என்கிறோம். இதுவே காலம் அல்லது இயக்கச்சீர்மை ஆகும். 

        பூமி அதிக அளவு சூடு ஆகிவிட்டதென்றால் வெப்பக் குழம்பை “எரிமலை” யாக வெளியேற்றுகின்றது. இது காலத்தால் நடக்கும் இயக்க ஒழுங்காகும். இதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்று குணங்களும் உண்டு. 

ஒரு ரோஜாச்செடியை எடுத்துக் கொண்டால் அதன் இலை, தண்டு இவ்வாறுதான் இருக்கும் என்பது அதன் தன்மை. 

        ஒரு விதையைப் போட்டால் இத்தனை நாட்களில் செடி வளரும். இத்தனை நாட்களில் பூ பூக்கும். அந்தப் பூவை உண்டால் இன்னது ஏற்படும். இது விளைவு. இவை துல்லியம். அது பூத்தவுடன் அதன் இதழ்கள் வாழும் காலம், அது குறிப்பிட்ட காலத்தில் தளர்ச்சியுற்று இலையுதிர்வது, அது இத்தனை நாட்கள்தான் வளரும், வாழும் என்பது, அந்தச் செடியின் முடிவு இவையெல்லாம் காலத்தை ஒட்டி நடைபெறுவது இயக்க ஒழுங்காகும். 

இவ்வாறு ஒவ்வொரு சடப் பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும் அதன் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற முத்தன்மைகளையும் காணலாம். 

வாழ்க வளமுடன்.

-

Is soul and life force (uyir) the same?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதானா? 


பதில்:

பொதுவான வழக்கத்தில் இரண்டும் ஒன்றே என்று புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. எப்படியென்றால், உலகில் வாழும் வாழ்க்கை வரை உயிர் என்றும், அதுவே இறந்துவிட்டால் ஆன்மா என்றும் சொல்லிவருகிறார்கள். ஆனால், உயிர் என்பதும், ஆன்மா என்பது வேறுவேறு என்பது உறுதியானது.

உயிர் என்பது நுண் துகளாகிய, விண் என்ற ஆகாஷ் துகள்கள் ஆகும். இவை நாம் கருவானது முதல், உடல் வளர்ந்து, அந்த உடலில் சிறைபட்டு, உடல்முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது தன்னுடைய சுழற்சியில் மாற்றம் கொள்ளும். அதாவது, மனிதனின் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு வெளியேறிடவும் வாய்ப்பு உண்டாகிவிடும். இந்தக்குறையை உடனடியாக சரி செய்துவிட முடியாது எனினும், மன அமைதி, நற்சிந்தனை, தெய்வீக வழிபாடு, தவம், தியானம், தகுந்த உணவு முறைகள், மகான்களை சந்தித்து ஆசிபெறுதல் வழியாக சரி செய்யலாம்.

இந்த உயிரை அடிப்படையாகக்கொண்டே ஆன்மா செயல்படுகிறது. அதாவது உயிரின் படர்க்கை நிலையாக, மனமும் ஆன்மாவுமாக. மேலும் ஆன்மா என்பதே வாழும் பொழுதும், வாழ்க்கை முடித்த பிறகும், எக்காலத்தும் நிலைத்தும் இருக்கும் என்பதும் உண்மை. இந்த ஆன்மாவின் மேலோட்டமான இயக்க நிலையையே ஒவ்வொருவருடைய மனம் என்றும் சொல்லலாம்.

எனவே ஆன்மா என்பதும், உயிர் என்பது தனித் தனியானதுதான்.

வாழ்க வளமுடன்.

If we are died after spirit separated. so are we sprit?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உயிர் நம்மை விட்டு பிரிந்ததும் இறந்துவிடுகிறோம் என்றால், நாம் உயிரா? 


பதில்:

சிந்தனைக்குரிய கேள்விதான், வாழ்த்துகிறேன். முக்கியமாக நீங்கள் உடல் அல்ல என்ற உண்மையை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது நல்லது. நீங்கள் சொல்லுவது போல உயிர் நம்மைவிட்டுப் பிரிந்தால் நாம் இறந்துவிடுகிறோம். ஆனால் இந்த புரிதலில் தவறும் உள்ளது. உயிர் நம்மைவிட்டு என்று சொல்லும் பொழுதே, உயிரோடு நாம் என்று வாழ்வதையும் அறிந்துகொள்ளத்தானே வேண்டும். அதாவது உயிர், நாம் என்று இரண்டாக உள்ளது அல்லவா? அப்படியானால் நாம் தனியாக இருக்கிறோம்தானே?!

இங்கே இன்னும் தெளிவாக அறிய, உடல், உயிர், மனம், நாம் என்று நான்காக கலந்து இருக்கும் உண்மைதான் உள்ளது. இந்த உடல் நாம் இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டீட்கள். இந்த உயிர் நாம் இல்லை என்ற உண்மையும் இப்போது விளக்கம் கிடைத்திருக்கும். அப்படியானால் மனம் என்பது நாமா? அல்லது அந்த நாம் என்பது யார்? என்று அறிந்துகொள்ள வேண்டும். 

மனதைக் கொண்டுதான் உலகில் வாழ்கிறோம், இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம் அல்லவா? அத்தகைய மனதின் துணைகொண்டுதான், நாம் யார் என்று அறிந்திட வேண்டும். இந்தக் கேள்விதான் ‘நான் யார்?’ என்று விசாரணையை உருவாக்குவதாக, பகவான் ரமணமகரிஷியும் சொல்லுகிறார். அவர்தான் இந்த கேள்வியை நமக்குள் விதைத்தவர் எனலாம்.

குருமகான் வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, அந்த கேள்வியை நோக்கியே பயணிக்கிறோம். முதலில் மனதை மனதால் அறிய தவம் இயற்றுகிறோம். பிறகு மனதை உயிரில் நிலைத்து தவம் இயற்றுகிறோம். அடுத்ததாக, உயிருக்குள் அறிவாக இருக்கும் நிலையில் நிலைத்து தவம் இயற்றுகிறோம். அதற்குப்பிறகுதான் பேராற்றலோடும், பேரறறிவோடும் துரியாதீத தவத்தில் விரிகிறோம். அந்த நிலையில்தான் உங்களுக்கான விடை கிடைக்கும். அதை நாம் வார்த்தையால் இங்கே விளக்கிடுவது கடினம்! தொடர்ந்து தவத்தில் நிலைத்து உண்மையை உணர்வாகப்பெற வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

What is VithuNatham as Sanskrit? As woman have it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வித்துநாதம் என்றால் என்ன? அது பெண்களுக்கும் உண்டா?


பதில்:

நாம் இந்த உலகில் பிறப்பதற்கு காரணமே, வித்து நாதம் சேர்க்கைதானே?! வித்து என்பது ஆண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும், நாதம் என்பது பெண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும். ஆனால் பிரித்துச்சொல்லாமல், வித்துநாதம் என்றுதான் அக்காலம் முதல் சொல்லுவது வழக்கம். பெண்களுக்கும் உண்டா? என்று கேட்பது உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக பெண்களுக்கு, காம இன்பத்தின் உச்சத்தில், ஆண்களுக்கு வெளிப்படுவது போலவே வெளிப்படுவது இல்லை. ஏனென்றால் பெண்களுக்கான பாலுறவு சக்தி என்ற நாதம், ஆண்களுக்கான பாலுறவு சக்தியான வித்து (விந்து) போல இல்லை என்பதே உண்மை. இதனால் வெளிப்பட்டாலும் கூட அதை நாம் தெரிந்துகொள்வதும் கடினமே. இதன் காரணமாக, பெண்களுக்கு இல்லை என்று கருதுவிடக்கூடாது.

பெரும்பாலும் அது ஏதும் நிறமற்ற நீர் போல, திரவம் போல வெளிப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

இந்த நாதமும், வித்துவும் கூடி, சக்திபெற்று, அதன்வழியாகவே கருமுட்டையை அடைந்து ஜீவனாக வளரும்படி இயற்கை வியத்தகு நிகழ்ச்சியை நடத்துகிறது. எனவே வித்து நாதம் என்பது, ஆண், பெண்ணுகான பாலுறவு சக்திதான் என்பதை அறிந்து கொள்க.

முக்கியமாக, இந்த வித்துநாதம், இயல்பாக திணிவு பெற்றால்தான், பாலுறவில் ஆர்வம் வரும். ஆனால் இக்காலத்தில், அப்படியல்லாது ஆர்வத்திலும், பழக்கத்திலும், விருப்பத்திலும் அதை வெளியேற்றி இன்பம் அடைவது என்று பருவ வயதினரும், இளம் வயதினரும் வாழ்கிறார்கள். வித்துநாதம் வீணாக வெளியேறினால் அது உடலையும், மனதையும், உயிரையும் பாதிக்கும். எனவே அப்பழக்கத்தை, தகுந்த ஆலோசனையோடு மாற்றிடவேண்டியது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.