Will you explain briefly but clearly the real truth of Brahma Gnana? | CJ

Will you explain briefly but clearly the real truth of Brahma Gnana?

Will you explain briefly but clearly the real truth of Brahma Gnana?


பிரம்ம ஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை, சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கித் தருவீர்களா?


பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்களே, மிக எளிமையாக, தன் எளியமுறை குண்டலினி யோகமான, மனவளக்கலை வழியாக, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மையை விளக்கித் தருகிறார். இதை யாவரும், வார்த்தையால் விளங்கி கொள்ளுதல் சிறப்பு எனினும், அதை அனுபவபூர்வமாக, தனக்குள்ளாக, உணர்தலாக அறிந்து கொள்வதுதான், முழுமையான பலனைத் தரும். மனிதனாகப் பிறந்த, நோக்கமும் நிறைவேறிடும். வாழும் இவ்வுலக வாழ்வின் சிறப்பு அனுபவிக்க முடியும். அந்த பலனையும், அனுபவத்தையும் விளக்கிடுதல் எளிதன்று. உதாரணமாக சொல்லப்போனால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை ஆகிவிடும். ஒரு யோக சாதகரின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி என்ற வகையிலும், உண்மைகள் அவரை ஊக்குவிக்கும். இதோ, வேதாத்திரி மகரிஷியின் உண்மை விளக்கம் காண்போம்.
சுத்தவெளிதான் இறைநிலை. இதுவே தான் கடவுள் ஆகும். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப் பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து, அதன் சூந்தழுத்தும் ஆற்றலாலேயே மிக விரைவான தற்சுழற்சி பெற்ற நுண்துகள்தான் முதல்நிலை விண் எனும் பரமாணு. இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும்.
முதல் நிலை விண்களின் விரைவான தற்சுழற்சியானது அதைச் சுற்றியுள்ள தின்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும் போது எழுகின்ற நுண் அலைகள் தான் காந்தம் எனும் நிழல் விண்கள்.
நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தைத் தாங்க முடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகும். இறைவெளியானது முதல்விண், நிழல்விண், காந்தம், காந்தத் தன் மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை, இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால், ஆராய்ந்தால் பேரியக்க மண்டல தோற்றம் இயக்கம் விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும். 
பரமாணு முதல் கொண்டு, எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது.
இந்த ஒவ்வொரு நிலைகளையும், நமக்குள்ளாக, கடந்து உள்ளே அறிவதின் வழியாகவே அறிந்து உணர்ந்து கொள்ள முடியும். இந்த உண்மையை அறிவதற்காகவே, தன் மாற்றமாக, பரிணாமத்தின் எழுச்சியாக, மனிதன் வந்தான். இந்த பிரம்மத்தை இறைவன் என்ற மதிப்பில் எளியமக்களுக்கு அறியத்தருவதுதான் பக்தியாக, யோகத்திலிருந்து மலர்ந்தது. ஆனால், பக்தி பலரிடம் சிக்குண்டு, பிரம்மம் இறைவனாகி, மனிதன் படைப்புத்தத்துவமாகி, தூரத்தையும், பிறப்பையும், வாழ்க்கையையும், காலத்தையும் அதிகமாக்கிவிட்டது. என்றாலும்கூட, இயற்கையே, அவ்வப்பொழுது அத்தகைய, பக்தி வழியில் ஆழ்ந்து, நிறைந்து, அடுத்த நிலை என்ன? என்று தேடும் மனிதர்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், வான்காந்தம் என்ற பேராற்றலில் தன்னை இணைத்துக்கொண்டு வழித் துணையாகவும் இருக்கிறார்.
வாழ்க வையகம்,  வாழ்க வளமுடன்.